• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், மே 26, 2015

  1,500 பேரை தற்கொலை செய்ய வைத்த சாமியார்!


  தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்?

  மனித வெடிகுண்டு எப்படி தன்னையும் மாய்த்து, ஏதும் அறியாத அப்பாவி மனிதக் கூட்டத்தையும் கொல்லச் செய்கிறது?

  இவர்களுக்கெல்லாம் அறிவே இல்லையா...? என்று கேட்டால் இருக்கிறது...! நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட அறிவாளியையும் அடிமுட்டாளாக்கி விடும் சக்தி மூளைச் சலவைக்கு உண்டு.

  சிறந்த முறையில் மூளைச் சலவை செய்தால், எதிராளி உங்களை மரண உலகத்துக்கே அழைத்துப் போகலாம். உங்களை மட்டுமல்ல, உங்களின் அழகான மனைவி அன்பான குழைந்தைகள் எல்லாமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்வார்கள்! மூளைச் சலவை அத்தனை வசீகரமானது.

  இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

  ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்
  நம்மூர் சாமியார்களைப் போல் வெளிநாடுகளிலும் சாமியார்களின் பின் அலையும் பித்துப் பிடித்த கூட்டம் உண்டு. இந்த வகை சாமியார்களையும் அவர்களின் இயக்கங்களையும் வெளிநாடுகளில் 'cult' என்று அழைக்கிறார்கள். 'கல்ட்' என்றால் புதிய மதம் என்பதுதான் அர்த்தம். ஆனால் இப்போது அந்த வார்த்தை ஏதோ 'கெட்ட' வார்த்தை போல் மாறிவிட்டது.

  வசீகரம் மிகுந்த ஒரு போலிச்சாமியார், தன்னையே கதியென்று வந்து சேர்ந்த பக்தர்களை எந்தளவுக்கு மூளை சலவை மூலம் அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு ஜோன்ஸ் மிக நல்ல (கெட்ட) உதாரணம். 

  அது 1978, நவம்பர் 18. அமெரிக்காவின் தென் பகுதியில் இருக்கும் கயானாவில் இருக்கிறது, 'ஜோன்ஸ்  டவுன்'. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் பரவசத்தோடு காத்துக் கிடக்கிறது. உயரமான மேடை... பக்திப் பாடல்களை ஒலிபரப்பியபடி ஒலிபெருக்கிகள்...

  மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கியபடியே இருந்தன. மேடையில் இருந்த ஜோன்ஸ் தனது கம்பீரமான மனதை இளக்கும் குரலில்...

  ''என் பிள்ளைகளே! இன்று நாள் எந்த நாள் என்று தெரியுமா? நமது சந்திப்பு, கடைசி சந்திப்பு. ஆம்! இந்த பூமியில் நாம் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?  

  இன்றோடு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். தப்பிக்க வழியே இல்லை. நாம் உயிர்த்தியாகம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும். வெளியுலகில் இருந்து எல்லா தீயசக்திகளும், நம்மை அழித்து ஒழித்துவிடுவது என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டன. நம்மை சீரழிக்க வருகின்றன. அவற்றிடம் இருந்து தப்பப் போகிறோமா? அல்லது சிக்கி சீரழியப் போகின்றோமா? இல்லை எல்லாவற்றிலும் மேன்மையான இறைவனை சரணடையப் போகிறோமா?"

  கூட்டம் அமைதியாக இருந்தது. அனைவரின் கண்களிலும் நீர் கசிந்திருந்தது.

  ''என் குழந்தைகளே! நான் உங்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது. பரிசுத்தமானது. அதே போல் என் மீது நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையானால்... நான் சொல்வதை செயல்படுத்துங்கள். என்னோடு உயிர் விட தயாராகுங்கள். இது இறைவனின் இணையற்ற கட்டளை. அதனால் கவலை வேண்டாம்!

  "நம் இறப்போடு நம் பயணம் இங்கேயே முடிந்து போய் விடுவதில்லை. நாம் எல்லோருமே மீண்டும் உயிர்த்தெழுவோம்! அதுவும் நாளைக்கே நடக்கும்! 

  நாம் மீண்டும் பிறப்பெடுப்பது புதியதோர் உலகில்... அது சொர்க்கம் போல் இன்பமான உலகம். அங்கே பசியில்லை... பட்டினியில்லை... துன்பமில்லை... துயரமில்லை... எங்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் உலகம் அது. நமக்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட தனி உலகம். நம்மைத் தவிர வேறு யாரும் அந்த உலகை அடைய முடியாது. புது உலகின் இன்பங்களை மட்டுமே அனுபவிக்க போகும் பாக்கியவான்கள் நாம். பூமியில் நாம் கண்டது எல்லாமே சிற்றின்பங்கள்தான். அங்கே நாம் அடையப் போவது பேரின்பம். சொர்க்கலோகமான அந்த புதிய உலகில் மீண்டும் நாம் நாளை சந்திப்போம். என்னருமைக் குழந்தைகளே! நாளை நம்முடையது... நரகமான இந்த உலகை விட்டு, என்னுடன் சொர்க்கத்துக்கு வருவீர்களா...!'' கல்லும் கசிந்துருகும் பேச்சு ஜோன்ஸினுடையது.

  கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது. சத்தமாக, கோரஸாக,

  ''வருவோம்... வருவோம்...!'' என்று இடிபோல் முழங்கியது. எல்லோரும் மனம் விட்டு அழுதார்கள்.

  துன்பம் நிறைந்த. அழிவின் விளிம்பில் இருக்கும் பூலோகத்தில் இருந்து நம்மை மீட்டுச் செல்லும் மீட்பர் இவர்தான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு கட்டளைக்கு காத்துக் கிடந்தனர். 

  கூட்டத்தின் முன் பெரிய ட்ரம்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அந்த ட்ரம்களில் சயனைடு கலக்கப்பட்ட மினரல் வாட்டர் நிரப்பப்பட்டிருந்தன. சயனைடு என்பது கொடுமையான விஷம். குடித்தால் உயிர் பிழைக்க வழியே இல்லை. 100 சதவீத மரணம் உறுதி.

  அந்த சயனைடு தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலக்கப்பட்டது.

  எல்லாம் தயாராக இருந்தது.

  ''இந்த பானம் சொர்க்க பானம். நம்மை வேறு ஒரு புனித உலகத்துக்கு அனுப்பி வைக்கும் அற்புத பானம். இதைக் குடித்த அடுத்த நிமிடமே பூமியின் விடுதலையான மரணம் சம்பவிக்கும். எனவே, புனிதம் நிறைந்த இந்த நீரை கட்டுப்பாடு குலையாமல் ஒவ்வொரு குடும்பமாக வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குதான் எப்போதும் முன்னுரிமை. அதனால் குழந்தைகளுக்கு முதலில் பானத்தைக் கொடுங்கள். அவர்கள் பூமியில் இருந்து விடுதலையானதும், அடுத்துப் பெண்கள். அவர்களுக்கு அடுத்தே ஆண்கள்...'' ஒலிபெருக்கியில் ஜிம்ஜோன்ஸின் கட்டளை அதிரடியாய் முழங்குகிறது.

  குடும்பம் குடும்பமாக
  கூட்டம் வரிசையில் நின்றது. பெற்றோர்கள் விஷக் குடிநீரை வாங்கி ஏதும் அறியாமல், கள்ளம் கபடமில்லாமல், பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதுக்கு வந்த பெரிய குழந்தைகள் வரை குடிக்க வைத்தார்கள். பால் குடி மறவாத குழந்தைகளுக்கு சிரிஞ்ச் மூலம் சயனைடு நீரை புகட்டினார்கள்.

  ஓரளவு விவரம் தெரிந்த சிறுவர்கள் முரண்டு பிடித்தார்கள். தப்பியோட முயற்சித்தார்கள். அவர்களைப் பிடித்து வந்து வலுக்கட்டாயமாக விஷநீரைக் குடிக்க வைத்தார்கள். பத்து நிமிட நேரத்திற்குள் எல்லா குழந்தைகளும் மரணத்தை தழுவி இறந்தார்கள்.


  அடுத்து பெண்கள் முறை தாய், சகோதரி, மனைவி, காதலி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்து ஆண்கள் விஷ நீரைக் கொடுத்தார்கள். அடுத்த சில நொடிகளிலே பெண்கள் தள்ளாட தொடங்கினார்கள். அவர்களை கைத்தாங்கலாக அழைத்துப் போய் வரிசையாக புல்வெளியில் படுக்க வைத்தார்கள். அதற்கு அருகே ஏற்கனவே இறந்த குழந்தைகளின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டன. 

  பின்பு எஞ்சியிருந்த ஆண்கள் அனைவரும் சயனைடு நீரைப் பருகினர். சில ஆண்களுக்கு இந்த கொடூரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஞானோதயம் தோன்றியது. அப்படிப்பட்டவர்கள் விஷநீரைக் குடிக்க மறுத்தனர். அவர்களை ஜிம்ஜோன்ஸின் சிஷ்யர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் குடிக்க வைத்தார்கள்.

  பக்தர்கள் அனைவரின் உடலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இப்போது ஜோன்ஸின் சிஷ்யர்கள் விஷநீரை சர்பத் போல் ருசித்து அருந்தினார்கள்.

  தன் கண்முன்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் துடிதுடித்து உடல் அடங்குவதை மேடை மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஜோன்ஸ். எல்லோரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வழிந்திருந்தது.


  ''முயற்சித்தேன்... முடிந்தவரை முயற்சி செய்து விட்டேன்'' என்று உரக்கக் கத்திய ஜோன்ஸ், தன் நெற்றி பொட்டில் கைத் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினார். மறுவினாடி மூளை சிதற, ஜோன்ஸ் உயிரும் பிரிந்தது. 

  உலகில் 1,500 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது இங்குதான் நாட்டில் பொருளாதார பிரச்சினைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும்போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகும். மக்கள் திசை மாறிப் போவார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

  இந்தியாவும் இப்படிப்பட்ட சூழ்நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி கவலைப்படாமல், அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் போது இத்தகைய 'கல்ட்'கள் தோன்றும் அபாயம் இருக்கிறது.

  அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளின் மூளைச் சலவையில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
  =====

  குறிப்பு:
  ஜிம் ஜோன்ஸ் பேசும் வசனங்கள் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!' நூலிலிருந்து பயன்படுத்தப் பட்டது.


  42 கருத்துகள்:

  1. என்ன நண்பரே இது கொடுமையாக இருக்கின்றது தாங்கள் சொல்லும் இந்த விடயம் தக்க தருணம்தான் மூளைச்சலவைக்கு உட்பட்டவர்கள் போல்தான் இன்றைய மக்களும் தேர்தல் நேரத்தில் இருக்கின்ரார்கள் உண்மை உண்மை.
   தமிழ் மணம் 1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மூளைச் சலவை எத்தனை வலிமையானது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் கிடையாது.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. மூளைச் சலவை....நம் நாட்டில் சாமியார்கள் நன்றாக இதைச் செய்கிறார்கள்.

   மனிதர்கள் சிலர்....அவர்களின் சுயலத்திற்காகா சிறிய அளவில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியாக பாவம் பரிதாபம் என கெஞ்சுதலாக போசி ஏமாற்றி வருகிறார்கள். வீட்டு அளவில் சில பெண்கள் நன்றாக இதைச் செய்கிறார்கள். பிச்சை எடுக்கும் தொனொயில்
   ( அம்மா தாயே......) மூளைச்சலவை செய்பவர்கள் திரிகிரார்கள்.

   மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்....உண்மையே சகோ

   பதிலளிநீக்கு
  3. நம்ம ஊரில் சொல்லுவார்கள்!
   கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேதான் சாவு என்று!
   அயல்நாட்டிலோ
   மூளைச்சலவை செய்தவனுக்கு மூளை சிதறிதான் சாவு போலும்!
   ஆறாவது அறிவு அயல் நாட்டிலும் அருகி விட்டது போலும்!
   த ம 4
   நட்புடன்,
   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. //நம்ம ஊரில் சொல்லுவார்கள்!
    கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேதான் சாவு என்று!
    அயல்நாட்டிலோ
    மூளைச்சலவை செய்தவனுக்கு மூளை சிதறிதான் சாவு போலும்!
    ஆறாவது அறிவு அயல் நாட்டிலும் அருகி விட்டது போலும்!//

    அருமையான விளக்கமைய்யா!
    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

    நீக்கு
  4. அறிந்திருக்கிறேன்.

   உங்கள் எழுத்துகளிலும் படங்களிலும் மீண்டுமாய்...!


   தொடர்கிறேன்.

   த ம 5

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீண்ட நாட்களுக்கு பின் என் வலைதளைத்திற்கு வந்து கருத்திட்டு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள் நண்பரே!

    நீக்கு
  5. நல்லாப் படிச்சவங்களும் இந்த மூளைச் சலவையில் இருந்து தப்பிக்க முடியலை பாருங்க:-(

   நம்ம ஊர்களிலும் அரசியல்வியாதி, நடிகன், சாமியார்கள் இப்படி சலவை செஞ்சுக்கிட்டுத்தானே இருக்காங்க. கண்மூடித்தனம் என்பது இதுதான்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம்மவூரை விட வெளிநாடுகளில் மூட நம்பிக்கை அதிகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஆவிகள் பற்றிய கதைகள் அதிகம் அங்குதான் உலவுகிறது.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  6. என்னவொரு கொடுமையான மூடப் பழக்கம்?
   படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வசீகரமான மனிதனால் எதுவும் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சி!

    நீக்கு
  7. Children (300) were forced drink poison by parents, hence were murdered. Not all followers were ready to die, but they were given an option of drinking cyanide or get shot by guards.

   பதிலளிநீக்கு
  8. துன்பம் நிறைந்த உலகத்தை போராடிபொன்னுலகமாக மாற்ற சிந்திக்காமல்....மேல் உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து மோசம் போனவர்களை அவதிபடவிடாமல் சாகடித்தாரே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. //துன்பம் நிறைந்த உலகத்தை போராடிபொன்னுலகமாக மாற்ற சிந்திக்காமல்....மேல் உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து மோசம் போனவர்களை அவதிபடவிடாமல் சாகடித்தாரே...//

    சிந்தனை வரிகளை கருத்துரையாக தந்திருக்கிறீர்கள் நண்பரே!
    மிக்க நன்றி!

    நீக்கு
  9. இது கதையல்ல வரலாறு என்றால், இதைவிட முட்டாள் தனம் எதுவுமே இல்லை!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது கதையல்ல. அன்று உலகையே புரட்டிப் போட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று.
    வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  10. நண்பர் செந்தில்,

   இது நடந்த 78இல் நான் பள்ளியில் சிறு வகுப்பு படித்த ஞாபகம். அப்போது செய்தித் தாள்களில் இதைப் படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் ஏராளம்.

   ஜிம் ஜோன்ஸ் ஒரு போலி கிருஸ்துவ போதகன். பீப்பில்ஸ் டெம்பிள் என்ற சபையை ஆரம்பித்து அதில் மதக் கோட்பாடுகளுடன் கம்யூனிஸ சித்தாந்தங்களையும் போதித்து ஒரு பெரிய கூட்டத்தையே மூளை சலவை செய்தவன். இவனுடைய போலித்தனம் அமெரிக்காவில் ஆட்டம் கண்டதும் காயானாவுக்கு தன் peoples temple அமைப்பை நிறுவி, ஜோன்ஸ் டவுன் என்ற செட்டில்மெண்டை உருவாக்கி, தன் விபரீதத்தை தொடர்ந்தான். இவனை விசாரிக்க அங்கே வந்த அமெரிக்க அதிகாரி ஒருவரை (அரசியல்வாதி என்று நினைக்கிறேன்) சினிமா பாணியில் (விமானம் பறக்கும்போது அதை சுட்டு வீழ்த்தி) கொன்றதால் இவன் மீது அமெரிக்கா அரசாங்கம் பாய முடிவு செய்தது. இதை அறிந்து தன் அடிமை பக்தர்களுக்கு சயனைட் விருந்து வைத்து (முக்கால்வாசிபேர் கறுப்பினத்தவர்கள்) மீட்பு நம் மரணத்தில் இருக்கிறது என்று முழங்கிவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். ஏறக்குறைய 800 அல்லது 900 பேர்கள் . 1500 இல்லை என்று நினைக்கிறேன்.

   இத்தனை சாமானியர்கள் ஒட்டு மொத்தமாக இறந்தது அப்போது அமெரிக்காவையே உலுக்கியது. மதம் எத்தனை தூரம் பாயும் என்பதன் எடுத்துக்காட்டு இந்த சம்பவம்.

   மறக்கக்கூடாத நிகழ்வு. பதிவிட்டதற்கு நன்றி.

   ஹிஸ்டரி சானெலில் பேரடைஸ் லாஸ்ட் என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்பு இது ஒரு டாக்குமெண்டரி படமாக ஒளிபரப்பானது.

   விந்தை என்னவென்றால் இந்த மதவாதி கொலையாளி ஜிம் ஜோன்சின் மகன் இந்த மரண சடங்கில் கலந்துகொள்ளவில்லை. உயிர் பிழைத்தான்.

   இறந்தவர்களில் ஏறக்குறைய 300 பேர் குழந்தைகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் நண்பரே!
    தங்களின் விரிவான கருத்துரைக்கு முதலில் நன்றி!
    இணையம் பெரிதாக வளர்ச்சியடையாத காலத்தில் இந்த கட்டுரையை எழுதினேன். அப்போது எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு இதை தொகுத்தேன். அதனால் தவறு நேர்ந்திருக்கிறது. இறந்தவர்கள் மொத்தம் 909 பேர். நீங்கள் குறிப்பிட்டது போல் ஜோன்சின் மகன்கள் மூன்று பேர் இதில் கலந்து கொள்ளவில்லை.

    அன்று பார்த்து மூவரும் பேஸ்கட்பால் விளையாட போய் விட்டார்கள். அவர்களில் ஸ்டீபன் ஜோன்ஸ், டிம் ஜோன்ஸ் இருவருக்கும் அப்போது 19 வயது. மற்றொருவர் ஜிம் ஜோன்ஸ் ஜூனியர் 18 வயது. இந்த மூவரும் தப்பித்து விட்டார்கள். வரலாறு இப்படி பல விந்தைகளை தன்னுள் சுமந்து கொண்டுதான் இருக்கிறது.

    நீக்கு
  11. ஐயோ நெஞ்சம் எல்லாம் நடுங்குகிறது. அப்போ இதை யாரும் கண்டுக்கவே இல்லையா ?ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லையா என்ன ?
   நேற்றே இனைந்து விட்டேன். இனி தொடர்கிறேன்! தொடர வாழ்த்துக்கள் ...!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் சகோ!
    முதல் முறையாக எனது தளத்திற்கு வந்ததற்கு நன்றி, தளத்தில் இணைந்து கொண்டதற்கு மீண்டும் ஒரு நன்றி!
    வருக, வருக!

    நண்பர் காரிகனின் பதிவு உங்கள் கேள்விக்கு பதிலாக அமையும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்ற சேதியை அறிந்து ஹெலிகாப்ட்டர்களில் வந்து சேர்ந்த போது எல்லாமே முடிந்து போயிருந்தது. மேலே வட்டமடித்து கீழே பார்த்த போது பசுமையான புல்வெளிகளில் சடலங்களாக கிடந்தன. போலீசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    தொடர வாழ்த்துக்கள்! நன்றி!

    நீக்கு
  12. இது நடந்தபோது பல இடங்களில் ஒரு உச்சுக் கொட்டலோடு பலர் முடித்துக் கொண்டனர். தோழர் இது நடந்த நாளினை முடியுமானால் சேர்க்கலாம்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் தோழரே!
    வருகைக்கு நன்றி!
    பதிவில் நடைபெற்ற நாளை குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் உங்களுக்காக மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். கூட்டுத் தற்கொலை நடந்த நாள்: 18 நவம்பர் 1978.

    நீக்கு
  13. நல்லவேளை இது நடக்கும் போது நான் இல்லை இந்த பூமியில், இருந்தால் மட்டும் என்ன செய்ய முடியும். எல்லோரையும் போல் உச் கொட்டி,,,,,,,,,,,,,,,,,,,,,
   அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளின் மூளைச் சலவையில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
   முடியுமா?????????
   நெஞ்சம் பதறும் பதிவிது நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம்மைச் சுற்றி ஏமாற்றும் கூட்டம் இருக்கும் போது நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது என்பதை உணர கருத்துரை இட்ட சகோவிற்கு நன்றி!

    நீக்கு
  14. இப்படி முட்டாள்கள் போய் சேர்ந்ததே நல்லது !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அந்தக் கூட்டத்தில் மெத்த படித்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை ஜி!

    நீக்கு
  15. 20 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானியில் இவ்வாறான ஒரு பிரிவினர் வேறொரு உலகிற்கு செல்வதாகக் கூறி 30 பேரோ, 40 பேரோ கூட்டாக ஏதோ ஒரு பானத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்று படித்தேன். இந்நிகழ்வின் மூலமாகத் தாங்கள் சொல்ல வந்த கருத்து அனைவரும் யோசிக்கவேண்டியது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அய்யாவின் வருகைக்கு நன்றி!
    தவறான செயலை மீண்டும் மீண்டும் சொல்லி ஒருவரை மூளைச் சலவை செய்வதன் மூலம் எப்படிப் பட்ட தவறான வழிக்கும் கொண்டு போய் விட முடியும் என்ற உளவியல் விளக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம்.

    நீக்கு
  16. "உலகில் 1,500 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது இங்குதான் நாட்டில் பொருளாதார பிரச்சினைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும்போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகும். மக்கள் திசை மாறிப் போவார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்." என்ற எச்சரிக்கையை மட்டும் நம்மாளுங்க கண்கில எடுப்பாங்களா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்படி கணக்கில் எடுத்திருந்தால் இத்தனை சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  17. சொர்கத்தின் கதவு என்ற அமைப்பு, 1997யில் 39 நபர்கள் கலிபோர்னியாவில் மொத்தமாக தற்கொலை செய்ய காரணமாக இருந்தது.
   தற்சமயம் சர்சைக்கு உள்ளாகியிருப்பது சைண்டாலஜி என்ற அமைப்பு. உறுப்பினர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு.
   இது அமெரிக்காவிற்கு மட்டும் திரும்பத்திரும்ப வரும் சிக்கல் போல தெரிகிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கை அதிகம். அதனாலே இப்படிப் பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

    நீக்கு
  18. மதத்தின் பெயராலும் மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தியும் இந்த மாதிரியான ஆட்கள் இம்மாதிரியான நிகழ்வுகளை ஏற்படுத்திவிடுகிறார்கள்... :(

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆன்மிகவாதிகள் நினைத்தால் நம்மை எந்த எல்லைக்கும் கொண்டு போக முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

    நீக்கு
  19. படித்துக் கொண்டே வந்த போது இது ஒரு விதமான மன நோய் என்று சொல்ல நினைத்ததை நீங்களே அதில் சொல்லி விட்டீர்கள். இங்கும் கூட நமது நாட்டில் சாமியார்களின் பின்னால் கண்மூடித்தனமாக அலையும் கூட்டம் இருக்கின்றதே. அப்படியே நம்பும் கூட்டம்.....இதுவும் ஒரு விதமான மன நோய்தான். தான் கடவுள், சாமியார் என்று சொல்லுவதும் கூட இந்த வகைதான்....எந்தவிதமான மதமாக இருந்தாலும் சரி ஆன்மீகம் என்ற பெயரில் இது போன்ற மூளைச் சலவைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தச் செய்தி அறிந்ததுதான்.

   ...மத வெறியர்களே மன நோய் பிடித்தவர்கள்தான்...கொடுமையிலும் கொடுமை!! பகுத்தறிந்து ஆராயத் தெரியாத அறிவிலிகள் இருக்கும் வரை இது போன்ற மத போதகர்கள்/சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வழக்கம் போல் தெளிவான கருத்துரை இட்டு மகிழ்வித்து இருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்