Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இலங்கை கடற்படையினர் எப்போதும் இப்படிதானா..?



ராமேஸ்வர மீனவர்களைப் பற்றிய செய்தி வராமல் ஒரு வாரம் செய்தித்தாள் வந்துவிட்டால் அது உலக அதிசயம்தான். இந்த இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கிக்கொண்டு தமிழக மீனவர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. ஏன் இப்படி மீனவர்கள் இரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகிறார்கள்?

ராமேஸ்வர மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவதும், தடிகளைக் கொண்டு அடிப்பதும், கற்களை வீசுவதும், மீன்கள் மற்றும் வலைகளை பறித்துக்கொண்டு செல்வதும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. 

உண்மையில் கடலுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மீனவர் கூட்டமை'ப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸை சந்தித்தேன்.

என்.ஜே.போஸ்
"மீனவர்களாகிய நாங்கள் முன்பெல்லாம் இலங்கை, இந்தியா என்ற தேச எல்லைகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். நாங்கள் கடலில் மீன் பிடிக்கும் போது படகில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அருகில் இருக்கும் இலங்கைக்கு சென்று சரிசெய்து கொள்வோம்.

கடல் சீற்றம் ஏற்படும் போது வலை காணமல் போனாலோ, மீனவர்கள் வழிதவறி சென்று விட்டாலோ இலங்கை கடற்படையினர் அவர்களை பத்திரமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். நாங்கள் இலங்கை சென்று திரும்புவதும், இலங்கை மீனவர்கள் ராமேஸ்வரம் வந்துவிட்டு போவதும் எங்களுக்குள் சகஜமாக இருந்தது. 

கடல் எல்லைகள் எங்களை எப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. எங்களுக்குள் நிறைய அன்னியோன்யம் இருந்தது. நாங்கள் கையோடு எடுத்துச்செல்லும் பழைய சோற்றையும் கருவாட்டுக் குழம்பையும் சாப்பிட நடுக் கடலில் காத்துக்கிடப்பார்கள் இலங்கைக் கடற்படையினர். எங்களுக்கு அவர்கள் சாப்பிட வைத்திருக்கும் பிரெட்டையும், ரொட்டிகளையும் தருவார்கள். அந்த மேற்கத்திய உணவு எங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எங்களின் சாப்பாடு பிடிக்கும். இப்படி எங்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தோம். 

இந்த நிலையில் 1983-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்கள். எங்களின் எல்லா நட்பும் தடம் தெரியாமல் மாறத்தொடங்கியது. எங்களுக்குள் திடீரென்று தேச எல்லைகள் முளைத்தன. சிநேகம் காட்டிய சிங்களர்கள் சீறத் தொடங்கினார்கள். 

இலங்கைக் கடற்படையினர்
கடலில் எல்லை கடந்தவர்களை சுட்டுத் தள்ளினார்கள். இதுவரை 350 மீனவர்களை துப்பாக்கி சூட்டில் இழந்திருக்கிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து ஊனமாகியிருக்கிறார்கள். படகுகள், வலைகள், மீன்கள் என்று கோடிக்கணக்கான எங்களின் உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் களவாடப்பட்டன. 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் 
சரி, விடுதலைப்புலிகள் பிரச்னை இருக்கும் வரை நமக்கு இதுதான் விதியென்று பொறுமை காத்தோம். விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்த காலமும் வந்தது. மீண்டும் 1983-க்கு முந்தைய வசந்த காலம் திரும்பும் என்று நினைத்திருந்தோம். 

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்
ஆனால், நிலைமை முன்பைவிட மோசமானது. இப்போது சிங்களர்கள் மட்டுமல்ல, சீன ராணுவத்தினரும் சேர்ந்துகொண்டு எங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று புரியாமல் தவித்து வருகிறோம். மீன் பிடிக்கும் தொழிலே எங்களுக்கு வாழ்வா..? சாவா..? என்ற போராட்டமாக மாறியுள்ளது."

விடுதலையாகி நாடு திரும்பும் மீனவர்
"கடல் எல்லையை கடப்பதால்தானே இத்தனை பிரச்னையும், இந்திய கடல் எல்லைக்குள்ளே மீன் பிடிக்கலாமே..? மீனவர்களுக்கு கடல் எல்லை தெரியாதா..?"

"தெரியும்! மீனவர்களுக்கு நன்றாக கடல் எல்லைகள் தெரியும். ஆனாலும் எல்லை கடந்து சென்று மீன் பிடிப்பது என்பதை நாங்கள் பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். இது பாரம்பரியமாக வந்த பழக்கம். அதை விட முடியவில்லை. 

அது மட்டுமல்ல. மீன் பிடிப்பதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இழு வலை முறை. மற்றொன்று தள்ளு வலை முறை. இந்திய மீனவர்கள் பயன்படுத்துவது இழுவலை முறையை. இலங்கை மீனவர்கள் உபயோகிப்பது தள்ளு வலை முறையை. 

இழுவலையில் சில வகை மீன்களும், தள்ளு வலையில் சில வகை மீன்களும் தான் சிக்கும். இயற்கையின் வினோதம் என்னவென்றால், நமக்குத் தேவையான மீன்கள் இலங்கைக் கடற்பகுதியிலும், அவர்களுக்கு தேவையான மீன்கள் இந்திய கடற்பகுதியிலும் இருப்பதுதான். 

மீன்பிடிக்க புறப்படும் மீனவர்கள்
ஒரு இந்திய மீனவன் இந்திய கடற்பகுதியில் மட்டும் மீன் பிடித்து திரும்பினால் அவன் நஷ்டத்தோடுதான் வீடு திரும்புவான். அவன் குடும்பம் பட்டினியோடுதான் போராடவேண்டும். 

மீனவன் ஒருமுறை கடலுக்கு போய்வர 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதைவிட அதிகமான மீன்களைப் பிடித்து கரைக்கு திரும்பினால்தான் லாபம். 

காலை 6 மணிக்கு கடலுக்குப் போய் மறுநாள் காலை 10 மணிக்கு கரை திரும்புவார்கள். ஒருதடவை போய்வர 200 முதல் 300 லிட்டர் வரை டீசல் தேவை. வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் மாதத்திற்கு 12 முறை கடலுக்குள் போய்வருவோம். 
மீன்களுடன் கரை திரும்பும் மீனவர்கள்
அதற்காக அரசு மானிய விலையில் 15,000 லிட்டர் டீசலை வருடத்திற்கு தருகிறது. இது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. வருடத்தில் 10 மாதமும் கடலுக்குள் செல்வதால் 30,000 லிட்டர் டீசல் மானியத்துடன் அரசு கொடுத்தால் நல்லது. 

1983-ல் ராமேஸ்வரத்தில் வெறும் 200 படகுகள் தான் இருந்தன. இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இவற்றில் சில படகுகளில் அனுமதிக்கப்பட்ட திறனைவிட கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துகிறார்கள். 

அதிலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, சுருக்கு மடிவலை முறையை பயன்படுத்துகிறார்கள். இதனால் கடலின் மொத்த வளமும் சுரண்டப் படுகின்றன. 

சாதாரண படகின் மூலம் 12,000 ரூபாய்க்கு மீன் பிடித்து திரும்புவதே பெருங்காரியமாக இருக்கும்போது, தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு, அதிக சக்தி வாய்ந்த படகுகள் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் மீன்களை பிடித்து வந்து விடுகிறார்கள். 

இதேநிலை நீடித்தால் நமது சந்ததிக்கு மீன் கிடைக்காது. வருமானம் முக்கியம்தான். அதைவிட வருங்காலம் மிக முக்கியம். வருங்கால சந்ததியை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும்.

கடலில் மீன் வளத்தை அதிகரிக்க 2 முதல் 3 வருடங்கள் எடுத்துக் கொள்ளாம். அந்த காலங்களில் மீனவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும். இப்படி 3 வருடங்கள் மீன் பிடிக்காமல் பொறுத்திருந்தால் கடலில் ஏராளமான மீன்கள் பெருகும். வருங்காலத்தையும் கடல் வளத்தையும் காக்க முடியும். 

மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மீனவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. உண்மையான அக்கறையோடு அரசு செயல் பட்டால் மீனவர்கள் வாழ்வு உயரும்." என்று உணர்வு பொங்க கூறி முடித்தார் என்.ஜே.போஸ்.



34 கருத்துகள்

  1. உண்மையை உணர முடிகிறது உங்களின் பதிவு மூலம் !
    அங்கேயும் இங்கேயும் ஆட்சி மாறியும் இந்த கொடுமை தீரவில்லையே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நிலையை உணர்ந்து கருத்திட்ட பகவான்ஜிக்கு நன்றி!

      நீக்கு
  2. 2 முதல் 3 வருடங்கள் பொறுமை வேண்டும்... ஆனால் முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி... வருங்காலத்தையும் கருத்தில் கொண்ட என்.ஜே.போஸ் அவர்களுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால், அரசு மனது வைத்தால் எதையும் முடித்து வைக்கலாம். நன்றி!

      நீக்கு
  3. இயற்கை நிலையை அப்படியே பகிர்ந்துவிதம் மனதைத் தொட்டது. தமிழக மீனவர்களின் நிலையை நினைத்துப்பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. கடல் எல்லை என்பது அவர்களுக்குக் கிடையாது, மனமே எல்லை என்ற நிலையில் இருந்த அவர்கள் அரசியல் வலையில் சிக்கி சிரமப்படுவதை நினைவதைப் பார்க்கும்போது கரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தான் என்ற பாடல் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1983-க்கு முந்தைய நிலை மீனவர்கள் வாழ்வில் ஏற்படவேண்டும். என்பதுதான் நமது ஆசையும் கூட.

      நீக்கு

  4. // உண்மையான அக்கறையோடு அரசு செயல் பட்டால் மீனவர்கள் வாழ்வு உயரும்.//

    அது நடக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி?

    பதிலளிநீக்கு
  5. அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மனது வைத்தால் எதுவும் நடக்கும்....

    பதிலளிநீக்கு
  6. இத்தனை தெளிவாக ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை பற்றி இது வரை யாரும் எழுதியதில்லை என்று நினைக்கிறேன்! அருமையான அல‌சல்!

    நீங்களும் ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள், 'கட‌ல் எல்லைகள் தெரிந்தும் நமக்குச் சொந்தமில்லாத இடத்தில் ஏன் போய் மீன் பிடிக்க வேன்டும்?' என்று! அத்தனை கேள்விகளுக்கும் இதிலேயே பதில் இருக்கிற‌து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ,
      மீனவர்களின் உண்மையான பிரச்சனைப் பற்றி யாரும் பேசுவதில்லை. கிரனைட் ஊழல், தாதுமணல் ஊழல் போன்று கடலிலும் மிகப் பெரிய ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டு மொத்த கடல் வளத்தையும் சுரண்டுகிறார்கள். அவர்களை அரசாங்கமே கேள்விகேட்க முடுயாத அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களால்தான் எல்லா மீனவர்களுக்கும் பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.

      நீக்கு
  7. //மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் மீனவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. //
    வேதனையான உண்மை இதுவே

    பதிலளிநீக்கு
  8. அருமையானதொரு பொதுநல பிரட்சினையை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. இதுவரை நிலவிய பல் வேறு ஐயங்களுக்கு தங்களின் பதிவு சரியான பதிலைத் தந்திருக்கிறது! இதை எப்படித் தீர்ப்பது !இரண்டு அரசுகளும் இருநாட்டு மீனவர்களும் ஒன்றா கக் கூடி பேசி , ஓர் ஒப்பந்தம் செய்வது தான் சரியான வழியாகும் . செய்வார்களா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான தீர்வை சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!

      நீக்கு
  10. நிலைமைடிய தெளிவாய் உணர வைக்கும் பதிவு நண்பரே
    நல்ல து நடக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் பதிவு! உண்மையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். உங்கள் தொகுப்பும் அருமை...பல நல்ல கருத்துகள், மிகவும் முக்கியமான விடயம்....நடு நிலைமையுடன் சொல்லி இருப்பது. இரு பக்கத்து நியாயங்களும்...இதை எல்லாம் அரசுகள் ஆதாயம் தேடாமல், பிரச்சனைகளாக்காமல், இரு நாட்டு மீனவர்களும் பயன் பெறும் வகையில்-ஒரு வின் வின் சிச்சுவேஷனைப் பற்றி யோசிக்குமா?யோசித்து தீர்மானம் எடுத்தால் நல்லது பழைய சுமூகமான நட்புறவு துளிர்க்கும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரு நாட்டு மீனவர்களும் பயன் பெறும் வகையில்-ஒரு வின் வின் சிச்சுவேஷனைப் பற்றி யோசிக்குமா?யோசித்து தீர்மானம் எடுத்தால் நல்லது பழைய சுமூகமான நட்புறவு துளிர்க்கும்.....//

      நல்ல வார்த்தைகள். நடந்தால் நல்லது. சிறந்த பின்னூட்டத்திற்கு நன்றி!

      நீக்கு
  12. நிலைமையை அழகாக புரிய வைத்துள்ளீர்கள் எமக்குள் எழும் கேள்விகளையும் அதற்கான பதிலையும் தந்து விட்டீர்கள் . மிக்க நன்றி ! பதிவுக்கு கூடிய விரைவில் அரசு பதில் சொல்லணும்,தீர்த்து வைக்கணும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு பதில் தருகிறதோ இல்லையோ, நீங்கள் நல்ல பதிலையும் கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

      நீக்கு
  13. என்று இந்நிலை மாறும் என்று நினைத்தது உண்டு, இந்நிலை முன்பு இல்லை எனும் செய்தி மகிழ்ச்சி தான், இன்றைய நிலை மாறனும், எப்பவும் போல் மீனவர்கள் தங்களுக்குள் என்ன பாகுபாடு என்று இருக்க முயற்சிக்கனும், நல்ல பதிவு, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுகள் இணைந்து நல்ல முடிவு எடுத்தால் மாறும். அதற்கான வாய்ப்பு வெகு தொலைவில் உள்ளது என்பது மட்டும் நிஜம்.

      நீக்கு
  14. மீனவர்களின் உண்மை நிலையை உணர முடிகின்றது! இந்த நிலை எப்போது மாறும்? அரசுகள் மனது வைத்தால் மாறும்! சிறப்பான பதிவு! உங்களை எனது பதிவில் அறிமுகம் செய்து உள்ளேன். இன்றைய என் பதிவிற்கு வந்து பாருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி!
      தங்கள் தளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
      அரசு எடுக்கும் முயற்சில் தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது.

      நீக்கு
  15. மீனவர்களின் நிலையைப் பற்றியும் உண்மையான சூழலையும் அறிந்துகொண்டேன்..பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ! தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  16. எவ்வித தொலைநோக்கும் இல்லாத அரசியல்வாதிகள் இன்னும் எவ்வளவு காலம்தான் மீணவர்கள் வாழ்வில் விளையாடுவர். உங்கள் பதிவின் மூலம் சில விசயங்களை உணர முடிகிறது. பதிவிற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலாக எனது வலைபக்கத்திற்கு வந்து கருத்து பதிவிட்ட தங்களுக்கு நன்றி.
      உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசுகள் அமைந்தால் பல பிரச்சனைகள் தீரும். ஆனால், அவர்கள் தங்கள் பிழைப்புக்காக தீராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை