Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வெடிக்கும் மக்கள் தொகை - சிக்கலில் இந்தியா



சுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன் மக்கள் தொகையும் சேர்ந்துள்ளது.

மனித சரித்திரத்தில் முன் எப்போதும் இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மனிதன் காலத்தை கணக்கிடத் தொடங்கிய கி.பி. முதல் வருடத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடிதான்.

ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து கி.பி.1000-ம் ஆண்டில் 31 கோடியாக உயர்ந்தது. ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 11 கோடிதான் அதிகரித்தது. உலக மக்கள் தொகை 100 கோடியை  எட்டியது 1820-ல் தான்.


மனிதன் பூமியில் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டால் இது மிக நீண்ட காலம். இந்த 100 கோடி என்ற அளவை எட்ட மனிதனுக்கு ஒன்றரைக்கோடி வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் மக்கள் தொகை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.

நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டுள்ளன. மக்கள் தொகை 700 கோடியை தொட்டது 2011-ம் ஆண்டில். இன்றைய நிலவரப் படி உலகின் மக்கள் தொகை 732 கோடி. 2024-ம் ஆண்டில் இது 800 கோடியைக் கடந்து விடும்.


மக்கள்தொகை வளர்ச்சி இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மளமளவென்று உயர்வதற்கு காரணம் மருத்துவத் துறையின் வியத்தகு வளர்ச்சிதான். மனித சரித்திரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போனதற்கு போர்களோ, யுத்தங்களோ காரணம் அல்ல. நோய்கள்தான் காரணம்.

காலரா, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் போதும், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்கள் செத்துமடிவார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவப் புரட்சி, நோய்களால் மக்கள் இறந்து போவதை குறைத்தது. எந்த வகையான நோயானாலும் உடலைவிட்டு விரட்டியடித்தது. உயிரைப் பிடித்து வைக்கும் மருத்துவம் மனிதனை காப்பாற்றியது. மனித ஆயுளும் நீண்டது.

1950-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 40 வயதாகவும், பெண்களின் வயது 38 ஆகவும் இருந்தது. 2001-ல் ஆண்களின் ஆயுட்காலம் 63 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 65 ஆகவும் உயர்ந்தது. 2010-ல் ஆண், பெண் இருவரது சராசரி ஆயுட்காலமும் 75 ஆண்டாக உயர்ந்துள்ளது.

ஆயுள் நீண்டதால் உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை கூடியது. இறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது. இப்போதைய கணக்குப்படி உலகில் வருடத்திற்கு 20 கோடி பிறப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இறப்பு என்பது வெறும் 8 கோடிதான். இதனால்தான் ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.

இதே வேகத்தில் மக்கள் பெருக்கம் இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1,200 கோடியைக் கடந்து விடும். எல்லா உயர்வுக்குமே ஒரு உச்சம் இருப்பதுபோல் இதற்கும் உச்சம் இருக்கிறது. அதைக் கடந்து செல்ல முடியாது. மக்கள் தொகையும் அப்படிதான்..!

இந்த உலகம் 1,400 கோடி மக்களைத்தான் தாங்கும். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. அந்த தாக்குப் பிடிக்க முடியாத அளவை நோக்கித்தான் உலகம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அபாயமும் இந்தியாவிற்குத்தான் மிக அதிகம். 2028-ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கள்தொகையில் முதல் நாடக முன்னுக்கு வந்துவிடும்.

அபாயம் அதுவல்ல..! வேறு..!

நமது உடலில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி சீராக வளர்ந்தால் அது வளர்ச்சி. ஒரு இடம் மட்டும் அபரிவிதமாக வளர்ந்தால் அதற்கு பெயர் கட்டி.  எப்போது வேண்டுமானாலும் கட்டி உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் பெருக்கமும் அப்படிதான்.


அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது உள்ள மக்கள்தொகையே 2050-லும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யாவில் 12 % மக்கள் தொகை குறையும். அப்படியானால், ஆபத்தான மக்கள்தொகை பெருகி வெடிக்கப் போவது இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில். 

வீக்கம் என்பது இந்தியாவிலும் இந்தியாவைச் சுற்றியும் மட்டுமே நிகழ்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்குப்படி உலகின் மக்கள்தொகை 700 கோடி. இந்தியாவில் 121 கோடியே 7 லட்சம் (121,01,93,422), தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் (7,21,38,958) என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2028-ல் 145 கோடி என்ற இலக்கை எட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும்.

உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.5 % தான். ஆனால் மக்கள்தொகையிலோ உலக மக்களில் 16 % மக்களை தன்னோடு வைத்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் மக்கள்தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் சராசரியாக 52 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் 382 பேர், தமிழ்நாட்டில் 555 பேர், அதுவே சென்னையில் என்றால் ஒரு ச.கி.மீ. 27,000 பேர் வசிக்கிறார்கள். அடர்த்தி இந்தியாவிதான் அதிகம். 


இப்போதே இந்தியாவின் மக்கள் நிலை படுமோசம். நாட்டில் வாழும் பாதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. உணவு, மருந்து, வீடு, சுகாதாரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலக வங்கி அறிவித்திருக்கும் புதிய மதிப்பீட்டின்படி சர்வதேச வறுமை கோட்டிற்கு  கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் கூட வருமானம் இல்லாதவர்கள். உலக ஏழைகளில் 33 % பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். அதாவது உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 

2050-ல் இந்தப் பற்றாக்குறை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தனைக்கும் இந்தியாதான் உலகில் முதன் முதலாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறையை கொண்டுவந்த நாடு.  

1952-ல் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. அன்றைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரித்கவுர் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைப் பிறப்பை தடுப்பது அன்று கொடும் பாவமாகக் கருதப்பட்டது. 


அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேச்சுதான் இந்திய அரசையே உலுக்கிப் போட்டது. 

"குழந்தைகளை, பெண்களின் கர்ப்பப்பைக்கு கடவுள்தான் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் குறுக்கிட நமக்கு என்ன உரிமையுள்ளது? என்று சிலர் கேட்கிறார்கள். குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள்தான் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குத்தான் அறிவு. எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவை பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்." என்றார். 

இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய பேச்சு அது! உடனே நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் நேரு தீர்மானித்தார். இதற்காக 65 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை இந்தியா தொடங்கியது. 


அரசின் இந்த முயற்சியால் ஆறேழு குழந்தைகளை பெற்றெடுத்த இந்தியர்கள் ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார்கள். அப்படியிருந்துமே 1947-ல் வெறும் 30 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 121 கோடியைத் தாண்டிவிட்டது. ஒருவேளை பிறப்பை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் இந்தியாவின் நிலை, நினைத்தாலே தலை சுற்றுகிறது...!  




59 கருத்துகள்

  1. ஒவ்வொரு படத்தையும் பார்க்க பார்க்க
    தங்களின் எழுத்தைப் படிக்கப் படிக்க
    ஒரு வித பயம் மனதை சூழ்வதை உணரமுடிகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே! இதன் பாதிப்பு முழுவதும் இந்தியாவுக்குதான். ஆகவே நாம் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.
      நன்றி!

      நீக்கு
  2. பிரமாண்டமான தகவல்களும் பிரமிக்க வைக்கும் பிரட்சினைகளையும் அழகாக விவரித்த விதம் அருமை இதை எல்லா மனிதர்களும் உணர்ந்தால்தான் இந்தப் பிரட்சினைக்கு தீர்வு காண முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அதுவும் இன்னம் சில வருடங்களில் நாம் இழக்கக்கூடும். அந்த அளவிற்கு முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு ஏதாவது செய்தாக வேண்டும்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

    பதிலளிநீக்கு
  4. மயக்கமளிக்கும் + தலைசுற்ற வைக்கும் பல தகவல்களைக்கொடுத்துள்ளீர்கள். நினைத்தாலே + காட்டியுள்ள படங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் உள்ளது. மிக அருமையான புள்ளிவிபரங்களுடனான அலசல் பதிவுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மயக்கமளிக்கும் + தலைசுற்ற வைக்கும் பல தகவல்களைக்கொடுத்துள்ளீர்கள். நினைத்தாலே + காட்டியுள்ள படங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் உள்ளது.//

      மிகவும் அச்சம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தான் இது. தங்களின் கருத்துரை அதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  5. இது ஒரு டிக்கிங் டயம் பாம்
    அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை ...
    தொடருங்கக்கள் செந்தில்ஜி
    தம +

    பதிலளிநீக்கு
  6. எங்கே செல்லும் இந்தப் பாதை....? ஓ பாதையே இருக்காதோ...?

    பதிலளிநீக்கு
  7. பயமுறுத்துகின்ற படங்களும் கருத்துகளும்.

    விழிக்க வேண்டிய நேரம்.

    தம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டே இருப்போம் நண்பரே!

      நீக்கு
  8. இந்தியாவுக்கு நம்பர் ஒன் மிக அவசியம் தேவையான கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட நாட்டு மக்களே வளமுடன் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டன.///

    intha oru variyai purinthu kondale pothum makkal thokai pirachanai evvalvu thiviramaaka pokirathu ena puriyum.
    avaciyamaanathoru katturai sir.
    vazthukkal.

    பதிலளிநீக்கு
  10. இந்த செய்தியை ,மேலும் பலர் அறிய என் ஏழாம் அறிவை (?) பயன்படுத்தி ஏழாம் வாக்கிட்டு மகிழ்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  11. எதிர்கால அபாயம் உணர்த்தும், மிக அவசியமான பதிவு ! படங்களை பார்க்கும் போது இனம்புரியாத ஒரு கிலி பரவுகிறது !!

    சுற்றுசூழல் மாசைவிடவும் மிக வேகமாக நம்மை வந்தடையப்போகும் அபாயம் மக்கள்தொகை பெருக்கம். மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு சார்ந்த நடவடிக்கைகள் பிரச்சார ரீதியாக அமைந்தால் மட்டும் போதாது, பாடத்திட்டங்களிலும் இடம்பெற வேண்டும்.

    மேலும், இன்னும் இத்தனை வருடங்களில் சீனாவை முந்திவிடும் இந்தியா என்ற ரீதியில், மக்கள் தொகை பெருக்கத்தை ஏதோ அளப்பறிய சாதனையாய் மின்னிறூத்தும் ஊடகங்களின் போக்கும் மாற வேண்டும் !

    மிக அருமையான, அவசியமான பதிவு.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விளக்கமான கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  12. பல சமயங்களில் ஆபத்தின் அருகில் இருந்தாலும் அந்த ஆபத்தை உணர மறுக்கிறோம். அப்படி ஒரு பெரிய ஆபத்து இது.. தீர்வு என்ன என்று தான் தெரியவில்லை. அதைவிட, தீர்வை நோக்கி நாட்டை நடத்தக் கூடிய தலைவர்கள் தான் கண்ணுக்குத் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தீர்வை நோக்கி நாட்டை நடத்தக் கூடிய தலைவர்கள் தான் கண்ணுக்குத் தெரியவில்லை!//

      உண்மை. ஆட்சியாளர்கள் உணர்ந்தால் சரி.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  13. பயமாய் இருக்கிறது...செய்திகளும் படங்களும்...நாடு என்ன வாகுமோ...?

    தம +1

    பதிலளிநீக்கு
  14. நாடு நலமுடன் வாழ வளரும் நாடான நமக்கு தேவை மக்கள் தொகை குறைப்பு!
    த ம 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  15. மக்கள் தொகைப் பெருக்கம் என்பதானது இந்தியா எதிர்கொள்ள வேண்டிய ஆனால் கவனம் வைக்கப்படாத பிரச்சினைகளில் ஒன்று. நன்கு ஆராய்ந்து அதிகமான படங்களுடன் விவாதித்துள்ளீர்கள். பெருக்கத்தின் விளைவினை கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெருக்கத்தின் விளைவினை கற்பனை செய்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம்.//

      முற்றிலும் உண்மை அய்யா!

      நீக்கு

  16. அடுக்கடுக்கான தகவல்களோடு பொருத்தமான படங்களோடு ஆணித்தரமான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி! மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தாவிடில் எதிர்காலத்தில் உணவுக்கும், குடிநீருக்கும், இன்ன பிற வசதிகளுக்கும் மக்கள் குறிப்பாக இந்தியாவில் தங்களுக்குள்ளேயே போரிட்டு மடிவார்கள் என நினைக்கையில் பயமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்சனையின் அடிஆழாத்தை புரிந்து கொண்டு கருத்திட்ட அய்யாவுக்கு நன்றி!

      நீக்கு
  17. பயமுறுத்தும் பதிவோடு படங்களும்!

    பதிலளிநீக்கு
  18. எத்தனை கட்டுப்பாட்டு முறைகள் வந்தாலும் சனத்தொகை குறைவதாகக் காணோம்!
    கவலை தரும் நிலைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய இந்தியாவில் உயிரினங்கள் பெருகி வாழக்கூடிய தட்பவெப்பம் சாதகமாக இருக்கிறதே. அப்போது பெருகத்தானே செய்யும்.

      நீக்கு
  19. “என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்” ஒரு பாடல்தான் நிணைவுக்கு வருகிறது.நல்ல மக்கள் அரசு இருந்தால் இந்த பிரச்சனையே எழாது த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் வளமான நாடுதான் அதில் சந்தேகமேயில்லை. முதலில் முகலாயர்கள், அதன்பின் ஆங்கிலேயர்கள், இப்போது நம்ம அரசியல்வாதிகள், என்று இத்தனை ஆண்டுகளாய் மாறி மாறி கொள்ளை அடித்தும் இன்னும் 212 கோடி மக்களுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறதே. இது வளமான நாடுதான்.

      நீக்கு
  20. வாழ்த்துக்கள் நண்பரே,
    தங்கள் வலைதளத்துக்கும் வந்து கருத்திட்டு விட்டேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  21. எச்சரிக்கை தரும் பகிர்வும் படங்களும்.. இறுதியாக தாங்கள் அளித்த பின்னூட்டமும் சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  22. என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. அன்பு நண்பரே அருமையா எழுதி இருக்கிறீர்கள். கூடவே எடுத்துக்காட்ட படங்கள். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் உலகம் ஏதாவது வகையில் சமன் செய்து கொள்ளும் ராதாகிருஷ்ணன் சொல்லி இருந்ததுபோல மக்கள் தங்கள் அறிவையும் உபயொகிக்க வேண்டும் எதுவும் நடக்காவிட்டால் ஆண்டவன் அவதரித்து அதிக மக்கள் தொகையை சம்ஹாரம் செய்து விடுவார். எல்லாமே அவன் விட்ட வழி....!இப்போதெல்லாம் மக்கள் தங்களைத் தாங்களே நம்புகின்றனர். அந்தக் காலத்தில் மனிதர் ஆரோக்கியமாக இருந்தனர் என்று பழங்கதை பேசும் மக்களுக்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் தெரிவதில்லையா. ஆதாரப் புள்ளிகளுடன் உங்கள் பதிவு இருக்கிறதுஎன் தந்தைக்கு நாங்கள் 13 பேர் பிறந்தோம் . என் உடன் பிறந்தவர்களுக்கும் எனக்கும் இருவருக்கும் மேல் இல்லை. என் மக்களுக்கோ ஒன்றும் அதிகம் போனல் இரண்டும் மட்டுமே. அனைவருக்கும் கல்விக்கண் திறந்தால் சமன் ஆகிவிடும் .யார் கண்டது பிற்காலத்தில் எழுபது வயது தாண்டுபவரை மேல் உலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் வரலாம்....1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையாக வந்து எனது தளத்தில் கருத்திட்ட அய்யாவை வணங்கி வரவேற்கிறேன்.

      50 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணின் சராசரியாக குழந்தை பெரும் திறன் 6 ஆக இருந்தது. தற்போது அது 1.8 ஆக குறைந்திருக்கிறது. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலே இப்படி மக்கள் தொகை பெருகுவதற்கு மருத்துவ முன்னேற்றம் மட்டுமே காரணம்.

      இதனால், உலகம் முழுவதுமே முதியோர்களின் எண்ணிக்கை மளமளவென்று கூடியது. ஒரு நாட்டில் supporting ratio எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த நாடு வளமான நாடு. supporting ratio என்பது 15 வயதில் இருந்து 65 வயதுவரை உள்ளவர்களின் எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது. 65 வயதுக்கு மேல் இருப்பவர்களை இந்த 15 - 65 வயதினர் தாங்கி பிடிக்கின்றனர். அதனால் இந்த வயதினரை தாங்கும் பருவத்தினர் என்கிறார்கள். 65 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொருவருக்கும் எத்தனை பேர் 15 - 65 வயதில் இருக்கிறார்கள் என்பதுதான் தங்குதல் விகிதம். தற்போது இந்தியாவின் தங்கும் விகிதம் 10-ஆக உள்ளது. இதுவே இன்னும் 20 ஆண்டுகளில் 1.6 ஆக குறையும் என்று கூறுகிறார்கள். வெளிநாடுகளில் இந்த தாங்குதல் விகிதம் 2-க்கும் குறைவாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் அது 10 என்ற எண்ணிக்கையில் கூடுதலாக உள்ளது. அதனால்தான் இந்தியாவை இளமையான நாடு என்கிறார்கள்.

      இதில் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தாங்குதல் விகிதத்தில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு நாட்டின் முதலீடு. இதை எதற்க்கா இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் உலகம் முழுவதுமே முதியோர்கள் எண்ணிக்கை வெகு வேகமாக கூடுகிறது. மேலும் தற்போது பிறக்கும் குழந்தைகள் 200 வயது வரை வாழ்வார்கள் என்று மருத்துவம் கூறுகிறது. 1940-ல் 40 வயதுக்கு மேல் எனென்ன வியாதிகள் வரும் என்று தெரியாமல் இருந்தது. இப்போது 100 வயதுக்கு மேல் என்னென்ன வியாதிகள் வருமென்று தெரியவில்லை. அது அடுத்த நூற்றாண்டில் தெரியும் என்கிறார்கள். இப்படி பல பிரச்சனைகளை கொண்டதுதான் மக்கள்தொகை வளர்ச்சி.

      நீக்கு

  24. நண்பர் செந்தில்,

    மக்கள் தொகை அதிகரிப்பு, ஓசோன் ஓட்டை, புவி வெப்பமயமாக்கல் இவை எல்லாமே ஜோடிக்கப்பட்ட புனைவுகள் என்று தற்போது ஒரு கருத்து பரவி வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை வீக்கம் பெரிது படுத்தப்பட்ட பிரச்சினை. அப்படி அதிகரிக்கும் மக்கள் பெருக்கம் தானாகவே அழிவை அடையும். இருக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய இயலாத அரசின் கையாலாகத் தனமே இந்த மக்கள் தொகை பெருக்கம் என்ற வெற்றுப் பேச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,
      இவைகள் புனையப்பட்ட கருத்துக்கள் அல்ல. அறிவியல் கூற்று. அதேபோல் இதற்கு எதிராக கருத்து பரப்புபவர்களும் பெரும் நிறுவனங்களின் புகழ் பாடிகள்தான். நம் கண்ணுக்கேதிரே நொய்யல் ஆறு மாண்டு போனதை பார்த்த பின்னும் பனிப் பிரதேசங்கள் உருகி போனதை கண்ட பின்னும் இதையெல்லாம் புனைவு என்று நமக்கு நாமே நம் தவறில் இருந்து விடுபட்டுக் கொள்ளவது என்ன நியாயம்?

      நீக்கு
  25. வணக்கம் நண்பரே. மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு முக்கியமான பிரச்சினைதான். அதைவிடவும் எவ்வளவு மக்கள் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒரு வயிறுதான், கைகள் இரண்டு, கால்கள் இரண்டு,சிந்திக்கும் மூளை ஒன்று இருக்கும்போது அந்த ஒரு வயிற்றுக்கான பிரச்சினையை ஒரு மூளையால் சிந்தித்து, இரண்டு கை, இரண்டு கால்களைப் பயன்படுத்தினால் பட்டினியின்றி வசதியாக வாழ முடியாதா? முடியும் இயற்னை நமக்குத் தந்திருப்பதை மனிதர்களின் செயற்கை திசைமாற்றுகிறது இதுதான் மிக முக்கியமான பிரச்சினை என்றே நினைக்கிறேன்..அதுதான் பங்கீட்டு முறை. இதைப் பற்றிப் பேசினால் அரசியல் பேச நேரிடும். நீங்களே இன்னும் யோசியுங்கள். நன்றி. நீங்கள் எனது வலைப்பக்கத்தை இணைப்பில் கொடுத்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன். நன்றியோடு உங்கள் பக்கத்தை எனது வலைப்பக்கத்தில் இணைத்திருக்கிறேன். நட்போடு நம் கருத்துகளைப் பகிர்ந்து தொடர்வோம். நன்றிகள் பல. வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே,
      தங்கள் வருகைக்கு முதல் நன்றி. நான் சிறுவனாக இருந்த போது பல குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவைகள் எல்லாம் மிக ஏழ்மை நிலையில் இருந்தன. அதற்கு காரணம். குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து ஏழு, எட்டு பேர் சாப்பிட்டனர். இன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் சம்பாதித்து மூன்று அல்லது நான்கு பேர் சாப்பிடுகின்றனர். இன்றைய பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமே வருமானம்தான்.
      இந்த பூமியின் வளமைதான் உலகுக்கான வருமானம். அதை நிறைய பேர் பங்கிட முடியாது என்பதுதான் உண்மை. அதிலும் இந்தியாவில் மட்டுமே மக்கள் தொகை அதிகமாகும் என்ற பொது பாதிப்பு நமது சந்ததிகளுக்குத்தான்.
      எனது வலைப்பக்கத்தை இணைத்தமைக்கு நன்றி. இனி தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் நண்பரே, நன்றி!

      நீக்கு
  26. நண்பரே மீண்டும் ஒரு நல்ல பதிவு! அருமையான பதிவு. அந்த ரயில்கள் ரயில்கள் தானா என்ற சந்தேகத்தை வருவிக்கும் அளவு மக்கள் தொங்கிச் செல்வது அதிர்ச்சியாக இருக்கின்றது. மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு புறம் இருந்தாலும், நம் அரசும் அதற்கு எந்த வழியும் செய்வதில்லையே? இந்தியாவில் என்ன வளக் குறைவு? அரசு நினைத்தால் நிறைய செய்யலாம். மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வரலாம். சைனாவைப் போல சட்டம் கொண்டுவரலாம். இன்னும் நிறைய...

    நான் பொருளாதாரம் பயின்றவள் என்பதால் எம் ஏ முடித்த பிறகு, சில ஆண்டுகள் கழித்து ஹிண்டுவில் ஒரு கட்டுரை வந்திருந்தது, இயற்கைச் சீற்றங்களினால் மக்கள் அழிவது பற்றியும் பூமி நிலைகொள்ளாது போகும் போது இயற்கை அழிவு வரும் என்பதைப் பற்றியும்....அதை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கட்டுரைக்கான குறிப்புகளும் சிறு வடிவத்தில் ஒரு கட்டுரையும் மால்தூசியன் தியரி சொல்லுவது சரியே என்ற வாதத்தில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் சூழல் அதை எல்லாம் அப்போது பகிர முடியவில்லை. ஆனால் மனம் மட்டும் உங்களின் இந்தக் கட்டுரை போல சிந்தித்துக் கொண்டே இருக்கும். இப்போது கூட அந்த மால்தூசியன் தியரிதான் நினைவ்க்கு வந்தது. பாதியில் நிற்கும் அந்தக் கட்டுரையை எப்படியேனும் முடித்து பதிவிட வேண்டும் என்று உங்களது இந்தக் கட்டுரை தூண்டுகின்றது. பார்ப்போம்....எழுதுவதற்கு நல்ல மூடி வந்தவுடன் முடித்து வெளியிட வேண்டும் அப்போது தங்களது பதிவில் ஒரு சில விவரங்களை உபயோகப்படுத்திச் சுட்டிக் காட்ட தங்கள் அனுமதி வேண்டும் நண்பரே!

    அருமையான பதிவு பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாயார பாராட்டும் தங்கள் கருத்துரைக்கும் முதலில் நன்றி செலுத்துகிறேன்.
      மால்தூஸ் தியரியை நானும் ஓரளவு படித்திருக்கிறேன் கீத மேம். அதன் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கட்டுரை. நீங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் அந்த பதிவை விரைவில் வெளியிடுங்கள். எனது பதிவிலிருந்து எந்த விவரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களின் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். நன்றி!

      நீக்கு
  27. 1992 ல் திருப்பூரில் காலை பத்து மணி வரைக்கும் பனிமூட்டம் விலகாமல் ஜில்லென்று இருக்கும். 20 வருடத்திற்குள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தால் கூட சூடு உடம்பை வாட்டுகின்றது. அந்த அளவிற்கு வாகனப் பெருக்கம், மனித நெருக்கம் என்று எல்லாமே மாறி விட்டது. ஒவ்வொரு முறையும் போக்கு வரத்து நெரிசலில் நீந்தி வீட்டுக்கு வந்து சேரும் போதெல்லாம் இனி வரும் காலங்களில் நம் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை யோசித்ததுண்டு. உங்கள் கட்டுரை கவலையை அதிகப்படுத்தியுள்ளது. எடுத்த தலைப்புகளில் மிக சிறப்பாக எழுதுறீங்க. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 20 வருடங்களில் எல்லாமே மாறிவிட்டது. தற்போது மக்கள் மனதில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது, நமக்கு கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. 10 வருடங்களுக்கு முன்னாள் மதுரை நகரின் பலத் தெருக்களில் மருந்துக்குகூட மரம் இருக்காது. இன்று மரம் இல்லாத தெருக்களை மதுரையில் பார்ப்பது அரிது. இதற்கு காரணம் மரம் வளர்க்க வேண்டும் என்ற மனம் மாற்றமே! இந்த மற்றம் சற்று நம்பிக்கையை தருகிறது. ஆனாலும் இது போதாது.

      நீக்கு
  28. இப்படி எல்லாம் போட்டு எங்களைப் பயமுறுத்தலாமா செந்தில்? :)

    இந்தப் பதிவை வாசித்த போது எப்போதோ வாசித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.
    ஒருவர்; இத்தனை பிள்ளைகளைப் பெற்று ஏன் இப்படிக் கஸ்ரப்படுகிறீர்கள். ஆண் உறைகளைப் பாவிக்கலாமே?
    மற்றவர்: குடுக்கிற கடவுள் ஆணுறைகளையும் பிச்சுக்கிட்டு குத்துடுறாரு. அதுக்கு நான் என்ன செய்யட்டும்?

    அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிப்புத் தொகை கொடுத்தார்கள். அவுஸ்திரேலியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. தம் சுதந்திரத்தில் சுகத்தில் அது கைவைத்து விடும் என்று பயந்தார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் பின்னணியைக் கொண்ட இஸ்லாமிய சமூகம் 6 - 9 பிள்ளைகளை வரிசையாகப் பெற்று அரச மானியத்தில் இலவச வீடுகளும் ஏனைய வசதிகளையும் பெற்று பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வேலைக்கு போகாதிருந்ததோடு பிள்ளைகளுக்கான மானியத் தொகையையும் பெற்று சுகபோகம் அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். அரசு பார்த்து விட்டு 2 வருடத்தில் அந்தச் சலுகையை நிறுத்தி விட்டது. இந்தச் சனத்திகைப் பெருக்கத்துக்கு சமயப் பண்பாட்டு ரீதியான நம்பிக்கைகள் ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    இன்னொரு விதத்தில் குழந்தைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா உடனடி பொருளாதார வளத்தை வளங்கக் கூடிய அகதிகளை உள்ளே நுழைய விடாது கதவுகளைப் பூட்டுவது ஒரு வித முரண்.

    சிந்தனையைத் தூண்டும் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமுறுத்தல் எல்லாம் கிடையாது, நிச்சயமான உண்மை. அதற்கு ஏற்ப நம்மை தயார் செய்யாவிட்டால் பெரும் சிக்கல்தான்.
      ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை இப்போது உள்ளதைவிட அடுத்த 50 ஆண்டுகளில் குறையும். பூமியின் ஒரு பகுதியில் மக்கள்தொகை குறைந்தும் மற்றொரு பகுதியில் பெருமளவில் கூடுவதால்தான் அதனை வீக்கம் என்கிறோம். இதுதான் பேராபத்து!

      நீக்கு
  29. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  30. திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது தளத்தில் உங்களை அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தகவல் தந்து வாழ்த்தியமைக்கும் நன்றி அய்யா!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை