பத்மாசனி இந்த பெயரை யாரும் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரை மறக்கமாட்டார்கள். தேசத்தின் விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணிப்பை அளித்தவர். இவரைப் பற்றி படித்ததும் இவரின் புகைப்படம் தேடி அலைந்ததை தனி பதிவாக போடலாம். இறுதியாக சமீபத்தில் மறைந்த தியாகி மாயாண்டி பாரதி அய்யாவிடம்தான் பத்மாசனி படத்தை வாங்கினேன். 2003 சுதந்திரதின சிறப்புமலரில் நான் எழுதிய இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம். 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தின் சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தால் உருவானது.
பத்மாசனி |
மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சோழவந்தானில் 1897-ல் பிறந்தவர் இவர். மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர். மதுரையின் மருமகள்.
சீனிவாசவரதனும் மகாகவி பாரதியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை பாரதியார் 'உன் சொத்தை விற்றேனும் பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு' என்று கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே தனது சொத்தை விற்று பாரதியாருக்கு பணம் அனுப்பிவைத்தவர் வரதன். அத்தனை நெருக்கம்.
இன்றைக்கு வேண்டுமானால் பாரதியார் பாடல்களை நாம் எல்லா இடங்களிலும் கேட்கலாம். ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. பாடல்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அதை தெரு தெருவாக பாடி, பஜனைகளில் பாடி மக்கள் மத்தியில் எழுச்சி ஊட்டியவர்கள் சீனிவாசவரதனும் பத்மாசனியும்தான்.
1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.
அதுவரை கணவருக்கு உறுதுணையாக இருந்த பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைக்காக தனந்தனி ஆளாக போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை இவரை வந்து சேர்ந்தது.
கணவர் சிறைக்கு சென்றபின் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். தன்னுடைய தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டார். தலைக்கு என்னை தேய்த்துக்கொள்ள மாட்டார். ஏகப்பட்ட வசதியிருந்தும் ஒருவேளை மட்டுமே உணவருந்தினார். அதுகூட மோர் சாதமும் பட்டமிளகாய் துவையலும்தான். தான் செல்வந்தராக இருந்தும் அந்த வருவாயில் சாப்பிடாமல் ராட்டையில் நூல்நூற்று அதில் வரும் வருமானத்தின் மூலமே சாப்பிட்டார்.
தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடியபடியே வீடுவீடாகச் சென்று கதர் விற்று வருவார். சுதந்திரத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஆங்கிலேய அரசிடம் வேலைப் பார்ப்பவர்களையும் கூட கதர் வாங்க வைத்துவிடுவார். அவர் பேச்சில் அத்தனை வல்லமை இருந்தது. பெண்கள் என்றாலும் ஒருமுழம் ரவிக்கைத்துணி வாங்க வேண்டும் என்பார்.
பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றார். "சாவித்திரி பிறந்த நாடு. சந்திரமதி, சீதை வாழ்ந்த நாடு, தன்னை மானபங்கம் படுத்திய துரியோதனன் ரத்தத்தை எடுத்து சடை முடிந்து வீரசபதம் நிறைவேற்றிய பாஞ்சாலி வாழ்ந்த நாடு என்று பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. இப்பெண்மணிகள் வாழ்ந்த நாட்டில் பிறந்த நாம் இனி கிழவிகள், தவசிகள் போல் பேசுவதில் மகிமையில்லை. இந்தியா முழுவதும் விடுதலை அக்னி ஜுவாலையில் எரிகிறது. இந்தியப் பெண்களே! இந்த அக்னியில் நீங்களும் இணைந்திடுங்கள்." இவரின் பேச்சு பல பெண்களை சுதந்திர போராட்டத்திற்கு இழுத்து வந்தது.
1930-ல் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சி ராணி பூங்கா முன் பேசிய பொதுக்கூட்டத்தில், "போலீஸார் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசிய இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்." என்றார். இப்படி பேசியதை கேட்ட பின் ஆங்கிலேய அரசு சும்மா இருக்குமா பத்மாசனியை கைது செய்து 6 மாத சிறையில் தள்ளியது.
சிறை உணவு அவருக்கு பிடிக்கவில்லை. மூன்று மாத கர்ப்பம் என்பதால் குமட்டலும் வாந்தியும் இருந்தது. சிறையில் தானே சமைத்துக்கொள்ள அனுமதிகேட்டு ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது.
சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார். அன்றைய காலகட்டத்தில் பொதுக்கூட்டம் என்றால் இரண்டு விஷயங்கள்தான் பெரிதாகப் பேசப்படும். ஒன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை, மற்றொன்று வெள்ளையர்கள் லாலாலஜபதிராயை தடியால் அடித்துக் கொன்றது. இந்த இரண்டு சம்பவங்களுமே இந்தியர்கள் நெஞ்சில் நெருப்பாக கனன்று கொண்டிருந்தன.
இதைப் பற்றி பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருக்கும்.
நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு தன் செல்வங்களை கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.
அப்போது நான்காவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். சுப்பிரமணியசிவம் காவிரி நடையாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்த போது கரு 8 மாதமாக வளர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் குழந்தைப்பிறக்கலாம் என்ற நிலை. தலைவர்கள் எல்லாம் தடுத்தார்கள். நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள்.
விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே வந்தார்.
ஒகனேக்கல் வரை ஒன்றாக சென்ற காவிரி யாத்திரை அதன்பின் இரண்டாக பிரிந்தது. ஒன்று திருப்பத்தூர், வாணியம்பாடிக்கும், மற்றொன்று தர்மபுரிக்கும் சென்றன. பத்மாசனி தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, ஓசூர் வரை சென்று பிரச்சாரம் செய்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார்.
உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார். பத்மாசனியின் பேச்சு மகாத்மா காந்தியடிகளையும் கவர்ந்திருந்தது. பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தி அழைத்திருந்தார்.
விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார். 14.1.1936 அன்று மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றார்.
இப்படி நாம் அறியாத பல தியாகிகளின் மதிப்புமிக்க தியாகத்தால்தான் இந்த சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம் என்ற எண்ணமே மனதை அழுத்துகிறது.
ஜெய்ஹிந்த்!
பத்மாசனி இதுவரை நான் அறிந்திடாத தகவல் என்பதை வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன் இத்தனை தியாகிகள் இன்னுயிர் ஈத்து பெற்ற சுதந்திரம் இன்று துரோகிகளின் கையில் இருக்கின்றதே வேதனைதான்
பதிலளிநீக்குசுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே...
தமிழ் மணம் இணைப்புடன் 1
சும்மா வந்துவிடவில்லை விடுதலை என்பதை இக்கால இளைஞர்களுக்கு தெரிவிக்க பத்மாசினி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை பாடமாக வைக்கவேண்டும். இவரைப்பற்றி பலருக்கும் இதுவரை தெரியவில்லை என்பதே நாம் எந்த அளவிற்கு விடுதலைக்கு போராடியவர்களை நினைவில் வைத்திக்கிறோம் என்பதை சொல்ல வெட்கமாய் இருக்கிறது. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்!
கட்டாயமாக, இவர் பேசிய பேச்சுகள் பிரமாதமாக இருக்கும். பத்திரிக்கைக்கு எழுதியதால் அதை வெளியிடவில்லை. மற்றொரு முறை இன்னும் விரிவாக வெளியிடுகிறேன்.
நீக்குவருகைக்கு நன்றி!
உண்மையில் இவரைப்பற்றி இதுநாள் தெரியாது இருந்தோமே என்று நானும் வெட்கப்படுகிறேன். எத்தனை! எத்தனை! இன்னல்களை இன்பமாக அனுபவித்து சுதந்திரத்திற்காக பாடுபட்டிருக்கிறார் இந்த அம்மையார் இன்றைய நாளில் இவரைப்பற்றி எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குசுதந்திர தின வாழ்த்துகள் தங்களுக்கும்.
இவரைப்போன்றவர்களின் தியாக சிந்தனைகள் பலரையும் வளரும் தலைமுறையினர்களையும் சென்றடைய வேண்டும். தங்களால் அது முடியும் அதற்கான பணியில் தாங்கள் இருப்பது பாராட்டுக்குரியது.
வருகைக்கு நன்றி சகோ!
நீக்குஇவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த பெண். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பது மற்றொரு காரணம்.
அரிய தகவல் தோழர். உங்களைப் பற்றி என் வலையில் இன்று எழுதியிருக்கிறேன்
பதிலளிநீக்குபத்மாசனி அம்மையாரைப் பற்றி விரிவான தகவலை சேகரிக்க முயற்சி எடுத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நல்ல முயற்சி.
நீக்குபல உயிர் பலி கொடுத்து பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்.ஜெய் ஹிந்த்....
பதிலளிநீக்குஜெய்ஹிந்த்!
நீக்குஅறியாத ஓர் போராளி! சுதந்திரத்திற்காக தன்னை மட்டுமின்றி தன் குழந்தைகளையும் பலி கொடுத்த பெண்மணியை பற்றி படிக்கையில் நெஞ்சம் நெகிழ்ந்தது! நன்றி!
பதிலளிநீக்குநெஞ்சம் நெகிழ வைத்த வீராங்கனை!
நீக்குசென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்திருந்தவர்களுக்கு சுதந்திர தாகம் அதிகமாய் இருந்தது. எத்தனை எத்தனை அறியாத போராளிகள். எடுத்துக் காட்டியதற்கு நன்றி .
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அய்யா!
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஇன்னும் எத்துனை போராளிகள் மறைந்து போனார்களோ என்று மனம் கலங்குகிறது. அறியாத தகவல்.
எந்த பலனும் எதிர்பார்க்காமல் போராட்டக் கலத்தில் உயிர் தியாகம் செய்த பெண்,,,,,,,
இன்றும் பெண்,,,,,
அருமையான பதிவு ஒன்றினை நன்னாளில் வெளியீட்டீர்,
வாழ்த்துக்கள்,
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்!
நீக்குஇவ்வாறாக நாம் வரலாற்றை எழுத மறந்தோ, மறைத்தோ, அறியாமையின் காரணமாகவோ பலவற்றை இழந்துள்ளோம் போலிருக்கிறது. வரலாற்று உணர்வு நமக்கு முழுக்க இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது. முதன்முதலாக தற்போதுதான் பத்மாசனி பற்றி அறிந்தேன். தங்களின் இப்பதிவுக்கு வரலாற்றுலகம் கடமைப்பட்டுள்ளது. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவரலாற்று உலகம் கடமைப்பட்டுள்ளது என்பது மிகப் பெரிய வார்த்தை அய்யா! நான் அப்படி ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே என் எண்ணம். நன்ற அய்யா!
நீக்குஎத்தனையோ பெயர் தெரியாத தியாகிகளின் போராட்டத்தால்தான் சுதந்திரம் பெற்றோம் . நல்ல பதிவு அனவைரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பெண் விடுஹ்ட்லை வீரரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
பதிலளிநீக்குஇவரைப் போல எத்தனை எத்தனை தியாகிகள் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருக்கிறார்கள்.....
பதிலளிநீக்குமுதல் முறையாக இப்போது தான் பத்மாசனி பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி நண்பரே.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
நன்றி! தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
நீக்குஇந்தியாவிற்கு ஆண்களும் பெண்களும்
பதிலளிநீக்குதங்களது வியர்வை, இரத்தம் இவற்றைச் சிந்தி,
தங்கள் வாரிசுகளையும் தியாகம் செய்து,
போராடி, பெற்றுத் தந்துள்ளார்கள், சுதந்திரத்தை!
தியாகி பத்மாசனியைப் போற்றுவோம்...
போற்றுவோம் நண்பரே! நன்றி!
நீக்குஅறியாத தகவல். ஆனால் இவருக்கு முன் பெண்கள் யாரும் தமிழகத்தில் சுதந்திரப் போரில் ஈடுபடவில்லை என்ற தகவலை மட்டும் சரிபார்க்க விரும்புகிறேன்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே, அப்போது இதுவே ஒரு பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. சில தலைவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் சொல்வதால் மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்கிறேன். இது 12 வருடத்திற்கு முன்பு எழுதியது.
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குநாம் அறியாத எண்ணற்ற தியாகிகளின்
அப்பழுக்கற்ற சேவைகளால்
உன்னதத் தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இது
ஆனால் இன்றுள்ளவர்களுக்கு
சுதந்திர்த்தின் அருமை தெரியவில்லை
தியாகி பத்மாசனி வணங்குதலுக்கு உரியவர்
வணங்குவோம்
உண்மைதான். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
நீக்குதம +1
பதிலளிநீக்குதமிழ்மண வாக்குக்கு நன்றி நண்பரே!
நீக்குதண்ணீர் விட்டோ வளர்த்தோம்.. இச்சுதந்திரத்தை நம்
பதிலளிநீக்குகண்ணீரால் காத்தோம்.......
அறியப்படாத ஆளுமை பற்றிய அறிய தகவல்கள்..
அறியவும் நெகிழவும்.
த ம 11
தொடர்கிறேன்.
நன்றி
தொடர் வருகைக்கும் கருத்துரை இட்டு வாக்களித்தமைக்கும் நன்றி நண்பரே!
நீக்குதெரிந்து கொண்டேன் .நன்றி
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குதுளசி: கீதா சொல்லி இருக்கின்றார்! இவரைப் பற்றி அவரது உறவினர் மூலம் கேள்விப்பட்டு...அருமையான பதிவு!
பதிலளிநீக்குகீதா: அட! பத்மாசனி அம்மையார்! எனது உறவினரின் புகுந்த வீட்டார்கள் சோழவந்தானைச் சேர்ந்தவர்கள். பத்மாசனி அம்மையாரின் சமூகத்தார் மட்டுமல்ல உறவினர் என்று சொல்லிக்கேட்டதுண்டு. இப்போது எனது உறவினரின் மாமியார் அவர்களும் உயிரோடு இல்லை. பத்மாசனி அம்மையார் மதுரையில் பெண்கள் சங்கம் கூட ஒன்று தொடங்கியிருந்தாராம். அதில் பெண்களுக்கு ராட்டு நூற்பது கற்றுக் கொடுத்தது உண்டாம்...அதன் பின்னர் கூட அந்தச் சங்கம் நடந்ததாகவும் எனது உறவினரின் மாமியார் அவர்கள் வயதை ஒத்தவர்கள் எல்லாரும் கற்றுக் கொண்டு வீட்டில் செய்ததாகவும் சொல்லி இருக்கிறார். மறியல்கள் பற்றியும், சிறை சென்றதைப் பற்றியும் சொல்லியதுண்டு ஆனால் இத்தனை விரிவான விவரங்கள், வருடம் எல்லாம் அவரது நினைவில் அப்போது இருக்கவில்லை. தனது கொள்ளுப் பேத்திக்குக் கூட இவரது பெயரைச் சூட்டி உள்ளார்...நான் கேட்டதே 18 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். எனக்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதால் எழுதவில்லை. மட்டுமல்ல இவர் முதல் பெண்மணி என்றும் சொல்வதற்கில்லை என்றுதான் தோன்றுகின்றது...
மிக்க நன்றி அருமையான பகிர்விற்கு.
நண்பரே! கொஞ்சம் வேலைப்பளு. சென்ற மூன்று தினங்களும், எங்கள் நண்பர் ஒருவரின் குறும்படம் படப்பிடிப்பு அதில் கலந்துகொண்டதால்....தங்களை வலைச்சரத்தில் தொடர இயலவில்லை...மன்னித்துவிடுங்கள்.
பதிலளிநீக்குஅய்யா தங்கள் வெளியிட்டுள்ள பத்மாசனி அம்மையாரின் வீரத்தினை அனைவரும் அறியநாளை கல்லூரில் பேச இருக்கிறேன். நன்றி
பதிலளிநீக்குஜெய் ஹிந்த், நல்ல அற்புதமான பதிவு, இன்றைய இளைய தலைமுறையினர்கள் இது போன்ற பதிவுகளைப் படித்தால், தேச பக்தி ஓரளவுக்காவது மேலோங்கும். அனேகமாக இதுபோன்ற தியாகிகளின் தியாகச் செயல்கள் உலகுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. இன்றைய விஞஞான வளர்ச்சியில், கையில் நெல்லிக்கனிபோல் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் பலவறைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இது போன்ற அரிய குறுந்தகவல்களைப் படிக்க அனைவரும் முன்வருவதோடு மட்டும் நிறுத்தி விடாது, அதை பலருக்கும் சொல்ல, பகிர முன்வரவேண்டும். இதுவே, மறைந்த தேசப்பற்றுடையவர்களுக்கும், தியாகிகளுக்கும் நாம் செய்யும் ஆத்மார்த்த அஞ்சலி ஆகும்..
பதிலளிநீக்குகருத்துரையிடுக