• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், செப்டம்பர் 30, 2015

  இதுவும் இனப்படுகொலைதான்..!


  திமூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த கிராமத்திற்குப் போகிறேன். பழைய நினைவுகள் என்னையறியாமல் என்னுள் ஓடத்துவங்கின. 

  அப்போதெல்லாம் அந்த கிராமத்துக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். மீறி நுழைந்தால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.  அதற்காக நான் ஒரு தொண்டு நிறுவனத்தை நாடினேன். அவர்களும் வரச் சொன்னார்கள். எனக்கு துணையாக மீனா என்ற பெண்ணை அனுப்பி வைத்தார்கள். 

  மீனா அந்த கிராமத்தின் களப்பணியாளர். அதனால் எந்த ஆபத்தும் வராது என்றார் தொண்டு நிறுவனத் தலைவர். அந்தக் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லையென்பதால், எனது வாகனத்திலே இருவரும் சென்றோம். 

  ஒரு இரண்டு கிலோமீட்டர் கூட சென்றிருக்க மாட்டோம் தலைவரிடம் இருந்து போன். "செந்தில் சார், எதுக்கும் ஸ்டேஷன்ல ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிடுங்க!". மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வழிகாட்ட, இன்ஸ்பெக்டர் அங்கிருந்தார். 

  விவரங்களை சொன்னேன். "கண்டிப்பா போயாகணுமா சார்!" என்று மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டார். "நான் தகவல் சொல்லிட்டேன். மற்றபடி உங்க பெர்மிஷன கேக்கல..!" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். 

  "கொஞ்சம் இருங்க சார்..! சுப்ரமணி கூட போயிட்டு வாங்க..!" என்று ஒரு கான்ஸ்டபிளை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான் அதன் தீவிரம் தெரிந்தது. 

  மூவரும் ஊருக்குள் நுழைந்தோம். எல்லோரும் வெறித்தபடி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். "சார்! நீங்க இப்படி கூடவே வந்தா யாரும் எதுவும் பேசமாட்டாங்க. நாங்க மட்டும் போய்ட்டு வர்றோம்." என்று அவரை ஒரு டீக்கடையில் அமரவைத்துவிட்டு சென்றோம். 

  "ஏன்டீ, உனக்கு வேற வேலையில்ல. எப்ப பாத்தாலும் இங்கனயே சுத்திக்கிட்டு இருக்கே. நாங்க எங்க புள்ளைய கொன்னா என்ன, கொல்லாம விட்டா உனகென்னடீ. எப்ப பாத்தாலும் எங்கள வேவு பாத்துகிட்டு..! ஆமா, இவன் யாரு புதுசா..?" 

  அந்த பாட்டிக்கு 75 வயதிருக்கும். பிறந்த பெண் குழந்தையை கொல்வதுதான் அவரின் வேலை. மீனா போன்றவர்களால் அந்த வேலை தடைபடுகிறது. அதனால் வெறுப்பை வார்த்தைகளாய் கொட்டுகிறார். ஊருக்குள் முதல் வரவேற்பே எனக்கு பிரமாதமாக இருந்தது. 

  பெண் சிசுக்கொலை என்பது அந்த கிராமத்தில் பாரம்பரியமாக தொன்று தொட்டு நடக்கும் வழக்கம். எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வு. இவற்றைப் பற்றி ஆராயப் போனவர்களை அடித்தே விரட்டுவார்கள் ஊர்மக்கள். என்னுடன் வந்த மீனாவுக்கும் அந்த அனுபவம் உண்டு. அவர் மீது கல் எரிந்ததில் ஏற்பட்ட காயம் ஒன்று தழும்பாக நெற்றியில் இன்னமும் இருக்கிறது.

  இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் அவர்கள் களப்பணி செய்கிறார்கள். ஒருமையில் திட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் ஏசுவதும், குடும்பத்தினரை இழுத்து வைத்து மானத்தை கப்பல் ஏற்றுவதும் இங்கு சகஜம். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் உழைக்கிறார்கள். சமூக அக்கறை இல்லாத யாரும் வெறும் சம்பளத்திற்காக மட்டும் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது.

  மீனா சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் என்னை உறைய வைத்தது. "நாங்க 17 கிராமங்கள்ல பென்சிசுக்கொலைக்கு எதிரா பிரசாரம் பண்றோம்.  ஆரம்பத்துல பல கிராமங்கள்ல எங்கள நுழையவே விடல. எங்க முயற்சி எல்லாம் வீனா போச்சு.  கரடிக்கல்  கிராமத்துல ஒரு பெண் குழந்தைய கொல்ல கள்ளிப்பால் முதகொண்டு எல்லாத்தையும் தயாரா வச்சிருந்தாங்க.


  அத தெரிஞ்சு, நாங்க அங்க போனதும் எங்ககிட்ட அன்பா பேசினாங்க. எந்த பாவமும் அறியாத பச்சிளங் குழந்தைய கொல்றது  பெரிய பாவம்னு சொன்னாங்க. 'பெண் பாவம்' தலைமுறை தலைமுறையா எங்கள பாதிக்கும்னு சொன்னாங்க. அவர்களின் பேச்சில் மயங்கி நாங்களும் நம்பிக்கையோடு வெளி வந்தோம். ஆனா, எங்க நம்பிக்கை பொய்த்துப் போனது.

  நாங்க அந்த கிராமத்த விட்டு வெளியேறுவதற்குள்ல அந்தக் குழந்தை இறந்துட்டதா தகவல் வந்தது. ஆரம்பத்தில் இப்படி பல ஏமாற்றங்கள். எங்களால பெண் சிசுக்கொலையை தடுக்கவே முடியல. எங்க கண் முன்னால அது நடந்து கொண்டிருந்தது. அப்புறந்தான் கிராமத்து தலைவர்களை அழைச்சுப் பேசினோம். முதல்ல அவங்களுக்கு பெண் குழந்தைகள கொல்வது தவறுன்னு உணர வைத்தோம். இதற்கே நாங்க நிறைய மெனக்கெட்டோம். அதன்பின் காவல்துறையையும் நாடினோம். அவர்களும் எங்களுக்கு உதவினார்கள்."

  "மீனாக்கா..!"

  ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தை கத்திக் கொண்டே ஓடி வந்தது.

  "ஏன்க்கா லேட்டு? என்னால பசி தாங்க முடியல..!" என்றது குழந்தை மழலை மாறாமல். மீனா மூன்று பொட்டலங்களை எடுத்து வைத்தார். "இத இப்ப சாப்பிட வச்சுக்கோ, இது நைட்டுக்கு, இது நாளைக்கி காலேல சாப்டுக்கோ! மத்தியானத்துக்கு நா வந்துருவேன்..!" எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இந்த குழந்தைக்கு சாப்பாடு தர வேண்டும்? மீனாவே விளக்கம் தந்தார்.

  "இந்த பொண்ண பெத்தவங்க, கொல்லப் பாத்தாங்க. நாங்க காப்பாத்திட்டோம். இது அவங்களுக்கு வேண்டாத கொழந்த. அவங்க இன்னும் இந்த கொழந்தைய ஏத்துக்குல. பொறந்ததில இருந்து அம்மா பால் கொடுக்கல. அப்பா துணிமணி எடுத்து தரல. எப்போதும் பட்டினியாவே இருக்கும். நாங்கதான் கொழந்தையில இருந்து தினமும் பாலும், இப்ப சாப்பாடும் கொடுத்து காப்பாத்துறோம். எல்லா செலவும் நாங்கதான் செய்றோம். அவங்க நீங்க தானே காப்பாத்தினீங்க, நீங்களே வளருங்கன்னு ஒதுங்கிட்டாங்க. நாங்க வந்தாதான் இந்த பொண்ணுக்கு சாப்பாடு.!"

  என் கண்கள் கசிந்தன. பெண் குழந்தை என்றால் இவர்கள் மனம் எத்தனை கல்லாகிறது. நல்ல வேளை அந்த குழந்தையை அவர்கள் வீட்டில் தங்கவாவது அனுமதித்தார்களே. அதுவரை அவர்களை பாராட்டலாம்.

  பொதுவாக மீனா போன்ற தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் இத்தகைய கிராமங்களில் என்ன வேலை செய்வார்கள் என்றால், அந்த கிராமத்தில் எந்தப் பெண் கர்ப்பமடைந்தாலும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்தால் கவனிப்பு இரு மடங்காகும்.

  மீனா பணியாற்றும் நிறுவனம் மட்டும் 135 பெண் குழந்தைகளை சிசுக் கொலையில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. வேண்டாத குழந்தையை கள்ளிப்பால் அல்லது எருக்கம் பால் ஊற்றிக் கொல்வது, அது கிடைக்காத போது தண்ணீரில் குழந்தையை முக்கி எடுப்பது, கோழிக் குழம்பை சூடாக வாயில் ஊற்றுவது, இரண்டு நெல் மணிகளை தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி விடுவது. குழந்தையை உயிரோடு மண்ணில் புதைப்பது என்று பெண் குழந்தைகளைக் கொல்ல பல வழிகளைப் பின்பற்றுகிறார்கள்.

  இந்த முறைகள் எல்லாம் குழந்தையை போஸ்ட் மார்ட்டம் செய்தால் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் இப்போது புதிதாக ஒரு முறையை பின்பற்றுகிறார்கள். அது குழந்தையை ஒரு அறைக்குள் படுக்க வைத்துவிட்டு, மின் விசிறியை வேகமாக சுழலவிடுவது. 15 நிமிடத்திற்குள் மூச்சு திணறி குழந்தை இறந்துவிடும். இந்த மரணம் மருத்துவ பரிசோதனையில் தெரிவதில்லை. அதனால் இதைதான் இப்போது எல்லோரும் செய்கிறார்கள். மீனா சொல்ல சொல்ல எனக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

  அதைவிட பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண் படும் அவமானங்கள் சொல்லி முடியாது. அந்த அவமானங்களை துடைக்க அவள் ஒரு ஆண் குழந்தையை பெற்றாக வேண்டும். ஆண் குழந்தைதான் அவளுக்கான மறு ஜென்மத்தை கொடுக்கிறது.

  பெண் குழந்தையை ஈன்ற பெண்ணுக்கு அந்த குழந்தையோடு கணவன் வீட்டுக்குள் நுழைய முடியாது. அதனால் குழந்தையை கொல்லும் பொறுப்பு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதர்கள் தலையிலே விழுகிறது. இதற்காகவே கிராமங்களில் சில கருத்தம்மாக்களும் உண்டு. அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து, 50 அல்லது 100 ரூபாய் கொடுத்தால் போதும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். பெற்ற பெண் குழந்தையை கொன்றப் பின்தான் கணவன் வீட்டுக்குள் குழந்தையின் தாய் நுழைய முடியும்.

  "அம்மா மீனா!"

  பாசமாக அழைத்த அந்த பாட்டியை பார்த்ததுமே பிடித்துவிட்டது. அப்படியொரு வசீகரம்! காது வளர்த்து, தண்டட்டி அணிந்திருந்த அந்த பாட்டியின் பெயர் வெள்ளையம்மா. அந்த பாட்டியைப் பற்றி மீனா சொன்ன பின் இன்னும் பிடித்துவிட்டது.

  ஊரெல்லாம் பெண் குழந்தைகளை விதவிதமாக கொன்று கொண்டிருக்கும் போது தன் பேத்திக்காக மதுரை சென்னை என்று அலைந்து திரிந்திருக்கிறார் இவர்.

  தனது மகனுக்கு நாலாவதும் பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது என்ற போது வெள்ளையம்மா பதறித்தான் போனார். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை கொன்று விட்ட குடும்பம் அது.  இப்போது நாலாவதாக இன்னொரு குழந்தையை பலி கொடுக்க பாட்டிக்கு திராணியில்லை. இந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். மகனின் முடிவு வேறுவிதமாக இருந்தது.

  நான்கு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டால் ஐந்தாவது தப்பாமல் ஆண் பிள்ளைதான் என்று அந்த கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் படி நான்காவதாக பிறந்த அந்த குழந்தையையும் கொன்று விட்டு, அடுத்த ஆண் குழந்தைக்கு தயாராக வேண்டும் என்பதில் வெள்ளையம்மாவின் மகன் உறுதியாக இருந்தான். பாட்டிக்கோ பேத்தியை இழக்க மனமில்லை. மகனிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள். பாட்டி சொல் அம்பலமேறவில்லை.

  விடியற்காலையில் குழந்தையைக் கொல்ல கருத்தம்மா கிழவி வந்துவிடுவாள். இப்போதே இரவு 8 மணி. குழந்தை பாலுக்காக ஒரு மணி நேரமா வீரிட்டு அழுகிறது. இரக்கமற்ற அதன் தாயும் தந்தையும் பெண் என்பதால் திரும்பி கூட பார்க்கவில்லை. அழுது அழுது அதன் ஜீவன் அடங்கிவிடுமோ என்று பாட்டி பயந்தாள்.

  "ஏம்மா, கொழந்தைக்கு பால் கொடுமா. இல்லன்ன மார்ல பால் கட்டிக்கும். வலி தாங்க முடியாது."

  "ஏற்கனவே மூணு கொழந்தைகளுக்கு மார்ல பால் கட்டி நின்னு வேதன பட்டவதான் நான். இதுவொன்னும் புதுசு இல்ல. காலேல சாகப்போற சனியனுக்கு பால் எதுக்கு? பசில செத்தா சாகட்டும். நூறு ரூபா மிச்சம்."

  அழுதழுது குழந்தையின் முகம் சிவந்து வீங்கிப் போயிருந்தது. தொப்புள் கொடியின் ஈரம் கூட காயாத அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த செல்லாயி வீட்டுக்கு பாட்டி வந்தாள். அந்த கிராமத்தில் கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரே பெண் அவள்தான்.

  "செல்லாயி, பொட்டப்புள்ள பொறந்ததாலே இவ ஆத்தா இதுக்கு பால் தரமாட்டேன்னுட்டா. கொஞ்சம் அமத்திக் கொடு தாயீ!"

  "ஆத்தா, நானெப்படி உங்க பேத்திக்கு பால் கொடுக்க..? உங்காளுங்க பாத்தா என்ன வெட்டி போட்ருவாங்களே."

  "அப்படி எதுவும் ஆகாது புள்ள. உசுருக்கு பொறவுதான் புள்ள சாதி. இப்ப என்னோட பேத்திக்கு நீதான் உசுரு."

  "பேத்திய கொடு ஆத்தா..!"

  வயிறு நிரம்ப பால் உண்டதில் குழந்தை நிம்மதியாக உறங்கியது.

  "ஏனாத்தா, இந்த புள்ளைக்கும் கள்ளிப்பால்தானே கொடுக்கப் போற..!"

  "இல்ல தாயீ, இத சாக விடமாட்டேன். 'அழகு சிறை'க்கு கொண்டு போறேன்."

  அழகு சிறை கருமாத்தூரில் இருக்கிறது. பாட்டி இருக்கும் கின்னிமங்கலத்திற்கும் அதற்கும் 6 அல்லது 7 கி.மீ. தூரம் இருக்கும். கைக்குழந்தையை கையில் ஏந்தியபடி வயல், வரப்பு, கரடு வழியாக நிலா வெளிச்சத்தில் தட்டு தடுமாறி 'அழகு சிறை'க்கு வந்து சேர்ந்தாள் பாட்டி.

  அங்கிருந்த தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்தாள்.

  "சாமீ..! சாமீ..!"

  கத்தினாள். கதவை தட்டினாள்.

  சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு பாதிரியார் வந்தார்.

  "சாமீ..! இவ என்னோட பேத்தி இவள கொல்லப் போறாங்க. அதான் இங்க வந்து உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். பத்தரம பாத்துக்கோங்க சாமீ..!"

  பாதிரியார் பதிவேட்டில் குழந்தையின் பெற்றோர் பெயர், ஊர் போன்றவற்றை எழுதிக்கொண்டு பாட்டியிடம் ஒரு கைநாட்டையும் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தார்.

  தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்திற்கு முன்பிருந்தே இங்கு அழகு சிறை என்பது இயங்கி வருகிறது. வேண்டாத பெண் குழந்தைகளை கொல்வதற்கு பதில் இவர்களது தொட்டிலில் சேர்த்துவிட்டால் போதும். அந்தக் குழந்தையை அவர்கள் எடுத்து வளர்த்துக் கொள்வார்கள். அங்குதான் பேத்தியை விட்டு விட்டு வெள்ளையம்மா வந்திருக்கிறாள்.

  காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லையே, நான்கு பெண் குழந்தைகளை கொடுத்த இறைவன் அதற்குப் பின் அவர்களுக்கு குழந்தையை கொடுக்கவில்லை. ஆண் குழந்தைக்காக ஏங்கி ஏங்கி அதிகமாக குடித்து 2 வருடத்தில் இறந்தும் போனான் வெள்ளையம்மா மகன்.

  மகன் இழந்த சோகத்தை பேத்தி மூலம் மறக்க நினைத்த பாட்டி பேத்தியை தேடி அழகு சிறைக்கு போனாள்.

  "என்ன பாட்டி ஒனக்கு விளையாட்ட போச்சா..? நீ நெனச்ச இங்க கொண்டுவந்து விடுவ, அப்புறம் வந்து கேப்ப..! நீ கொளந்தைய வளக்க கேக்கறியா, இல்ல கொல்ல கேக்கறையான்னு யாருக்கு தெரியும். கொழந்தைய மதுரைக்கு அனுப்பியாச்சாச்சு. இனி ஒன்னும் செய்ய முடியாது."

  பாதிரியார் உறுதியாக சொல்லிவிட்டார்.

  "அய்யா, என்னோட வம்சம் என் மகனோட போயிட கூடாது. என் பேத்தி மூலம் அது தழைக்கனும்ய்யா. நீங்க தான் சாமி பெரிய மனசு பண்ணனும்."

  ஒரு வாரம் முழுவதும் நாள் விடாமல் தினமும் பாட்டி வந்து கேட்டதில் பாதிரியார் மனம் இறங்கியது. மதுரை முகவரியை தந்தார்.

  "ஏம்மா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விட்ட கொழந்தையப் பத்தி இப்ப கேக்கரையேம்மா. அந்த கொழந்த எங்க இருக்கோ..! பெத்தவங்க பேரு ரிஜிஸ்டர்ல இருக்கா..?"

  "கொடுத்துருக்கேன்யா..!"

  அப்பா, அம்மா பெயரை வைத்து தேடியதில் குழந்தை சென்னையில் இருப்பதாக தெரிந்தது. சென்னை எந்த திசையில் இருக்கிறது என்று கூட தெரியாத பாட்டி  பேத்தியை தேடி சென்னைக்கு சென்றது, தேடி அலைந்தது, கூட்டி வந்தது மிகப் பெரிய கதை.

  இத்தனை எண்ணவோட்டங்கள் எனக்குள் ஓடி முடிக்கவும். கிராமம் வந்து சேரவும் சரியாக இருந்தது. அந்த பாட்டி, அவரின் பேத்தி, பெயர் தெரியாத அந்த பெண் குழந்தை மூவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கிராமத்துக்குள் நுழைந்தேன். .

  கிராமத்தில் நிறைய மாற்றம் இருந்தது. ஓட்டு வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாறியிருந்தன. மனிதர்கள் மாறிவிட்டார்களா என்று பார்க்கவேண்டும்.

  அவர்களிடமும் மாற்றம் இருந்தது. தப்பி பிழைத்த பெண் குழந்தைகள் நிறைய இருந்தார்கள். வெள்ளையம்மா பற்றிக் கேட்டேன். நல்லவேளையாக பார்த்துவிட்டேன். மிகவும் நொடிந்து போயிருந்தார். வயோதிகம் எல்லா வசீகரத்தையும் பறித்துவிட்டது.

  என்னை அவருக்கு நினைவில்லை. நானும் எவ்வளவோ நினைவு படுத்தினேன். அவரின் நினைவுகள் ஒரு எல்லைக்கு மேல் செல்லவில்லை. அவரின் பேத்தியைப் பற்றி கேட்டேன். கல்லூரியில் படிப்பதாக சொன்னார். அவர் பேத்திதான் உலகம் என்றார்.

  இப்போது பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறதா என்று கேட்டேன். "தம்பி, நீங்க நல்ல நாள்லதான் வந்திருக்கிறீங்க. இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு விடை தெரியும்" என்றார் பாட்டி.

  மாலை நேரமும் வந்தது.

  கிராமமே ஊர் கோவிலில் ஒன்று கூடியது. சிறிது நேரத்தில் சிறு ஊர்வலமாய் கிளம்பியது. அரிசி, பருப்பு, கருப்பட்டி, மிட்டாய், ஆப்பிள், பட்டுப்பாவாடை, ஆட்டுக்குட்டி, மரக்கன்று, கோழி என்று ஆளாளுக்கு கையில் ஒரு பொருளை வைத்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் சென்று சேர்ந்தது நந்தினி வீட்டிற்கு.
   
  நந்தினி என்ற அந்தப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருந்தது. ஊர்வலத்தில் கொண்டு வந்த பொருட்களால் வீடு நிறைந்தது. ஊராரின் அன்பில் திக்குமுக்காடிப் போனார், நந்தினி.

  'இப்படிதான் இரண்டாவதாக ஒரு பெண் பிறந்துவிட்டாலே கிராமத்திற்கே தலைகால் புரிவதில்லை. ஒரே ஆட்டம்தான்' என்றார் வெள்ளையம்மா.

  தொண்டு நிறுவனங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் தான் இந்த நடைமுறையை கொண்டுவந்துள்ளன. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துவிட்டால் 'கவலைப் படாதீர்கள் உங்களுக்காக இந்த ஊரே இருக்கிறது' என்று சொல்வதன் பொருள்தான் இந்த கொண்டாட்டமெல்லாம்.

  இது உண்மையாகவே பலன் அளித்திருக்கிறது. இரண்டாவது மூன்றாவது என்று பெண் குழந்தைகள் பிறக்கும்போது கவலைப்பட்டு கொன்றுவிடும் குடும்பத்தாருக்கு அந்த பெண் குழந்தையால் இத்தனை பொருட்கள் வீட்டுக்கு வருவது உளவியல் ரீதியாக மிகப் பெரிய மாரல் சப்போர்டாக இருக்கிறது. இயல்பாகவே அந்த பெண் குழந்தை மீது குடும்பத்தினருக்கு பாசம் வந்துவிடுகிறது.

  மீனாவைப்போல் இப்போது செல்வராணி என்ற பெண் அந்த ஊர்வலத்தில் இருந்தார். அவர்தான் தற்போதைய களப்பணியாளர். அவரிடம் பேசினேன். "இப்படி ஒரு கொண்டாட்டத்தை 15 வருடத்திற்கு முன்பு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இன்று தொண்டு நிறுவனங்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. எங்களை ஊருக்குள்ளே நுழைய விடாமல் கல்லால் அடித்து விரட்டிய அதே மனிதர்கள்தான் இன்று எங்களால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் சாதனைகளைப் பார்த்து பூரித்துப்போய் கண் கலங்கி நிற்கிறார்கள்." என்றார் செல்வராணி.

  தொடர்ந்து நிகழ்ந்த பல அவமானங்களுக்குப் பிறகு தொண்டு நிறுவனங்கள் இதை சாதித்திருக்கின்றன. கிராமமக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக மறையவில்லை. ஆனால், பெருமளவு குறைந்திருக்கிறது.

  கிராம மக்களை மாற்றிவிட்டோம். படித்தவர்களை, நகர மக்களை எப்போது மாற்றப் போகிறோம். ஸ்கேன் பயன்பாட்டுக்கு வந்தபின் பெண் குழந்தைகள் பிறக்கும் விகிதமே குறைந்திருக்கிறது. இந்தியா, சீனா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் பெண் குழந்தைகளின் பிறப்புவிகிதம் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கருவிலே பெண் குழந்தையை ஸ்கேன் மூலம் கண்டறிந்து கொன்று விடுவதுதான். இது பணக்காரர்கள் மத்தியில் அதிகமாக பரவியுள்ளது.

  கடந்த 60 வருடங்களில் இந்தியா முழுவதும் 5 கோடிப் பெண்கள் இப்படி சிசுக்கொலை மூலமும் பட்டினிப்போட்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு காரணத்துக்காகவே அந்த இனம் இத்தனை வேகமாக அழிக்கப்படுவதும் மிகப் பெரிய இனப்படுகொலைதான். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உடல் தெரிய உடையணியும் உரிமைக்காக பெண்கள் போராடுவதுதான் வேதனையாக இருக்கிறது.  *********************************************************************************

  வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி

  பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், என்ற தலைப்பின் கீழ் இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இது எனது சொந்த படைப்பே என்று உறுதியளிக்கிறேன். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும்,  “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்ற உறுதிமொழியையும் தருகிறேன்.

                                                                                                                --எஸ்.பி.செந்தில்குமார்.

  *********************************************************************************  28 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே! அருமையான கட்டூரை! பல கருத்துக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் உங்கள் அனுபவம் அதன் பயங்கரத்தை காட்டுகிறது! முடிவில் கூறிய கருத்து அருமை! நன்றி!!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கு நன்றி நண்பரே, இன்னும் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கிறது. பதிவின் நீளம் கருதி அவற்றை விட்டுவிட்டேன். இன்னொரு முறை பணக்காரர்களும் வளர்ந்த நாடுகளிலும் பெண் குழந்தைகளை எப்படி அழிக்கிறார்கள் என்பதை பதிவிடுகிறேன்.

    நீக்கு
  2. போட்டிக்கான உங்கள் கட்டுரைகள் சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. வெற்றி பெற வாழ்த்துகள். தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. படிக்கப் படிக்க மனம் பதறுகிறது நண்பரே
   இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா
   மீனா போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
   போற்றுவோம்
   போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது இறந்த காலம் மட்டுமல்ல, நிகழ் காலமும் கூட. இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். சிசுக்கொலை என்பதன் வடிவம் மாறியிருக்கிறது.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. நன்றி...

   நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

   இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

   புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
   அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

   பதிலளிநீக்கு
  5. பதில்கள்
   1. உண்மை இங்கு சொன்னதைவிட கொடுமையானது. பலவற்றையும் தவிர்த்துவிட்டேன்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. இந்த பகிர்வு போட்டிக்கானதாக என்னால் பார்க் கஇயலவில்லை. 5கோடி பெண் சிசுக்கொலை நிகழும் சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பதை நினைக்கவும் வேதனையாக உள்ளது. இதனை தடுக்க வழிசெய்யாது பெண்கள் முன்னேற்றம் என்றும் தாங்கள் இறுதியாகச் சொல்வது போல ஆடையலங்காரத்திற்கு போராடும் சமூகத்தை கண்டு சகித்து வாழும் நம்மை என்ன சொல்வது?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மனிதனுக்கு விவசாயம் தெரியாத வரை பெண்தான் குழுத் தலைவியாக இருந்தாள். ஓரிடத்தில் நிலையாக இருந்து சொத்து சேர்த்த போதுதான் பெண் அடிமைத்தனமும் கூடவே வந்தது.

    முன்னேறிய பெண்கள் மற்ற பெண்களும் முன்னேற உதவ வேண்டும். அதைவிடுத்து மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வக்காலத்து வாங்கும் பெண்ணீயவாதிகளின் பேச்சைக் கேட்டால் பெண் முன்னேற வழியில்லை.

    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  7. உண்மை சகோ,
   பெண் விடுதலை ,முன்னேற்றம் என்று நாம் பேசு ,,,,,,,
   மனம் கனக்கிறது,,,,, பெண்கள் குழுவிற்கு தலைவணங்குகிறேன், அவர்களின் பணி பாராட்டிற்குரியது. தங்கள் பகிர்வு அருமை, தொடருங்கள் நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அவர்களால்தான் மாற்றம் கொண்டு வர முடிந்தது. அவர்களை நாமும் வணங்குவோம்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  8. உள்ளத்தைத் தொட்ட பகிர்வு
   வாழ்த்துகள் செந்தில்குமார்

   பதிலளிநீக்கு
  9. மனதை நெகிழவைத்துவிட்டது. தங்களது எழுத்துக்களை வாசிக்கும்போது மன உணர்வுகளை அடக்கமுடியவில்லை. நல்ல பொருண்மையைத் தெரிவு செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுவீர்கள். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க மகிழ்ச்சி அய்யா! தங்களின் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  10. சிறப்பான கட்டுரை. பெண் சிசுக் கொலை மொத்தமாக அழிக்கப்பட வேண்டிய ஒன்று.

   போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் செந்தில்.

   பதிலளிநீக்கு
  11. கட்டுரையை வாசிக்கும்போதே அடிவயிற்றில் பகீரென்று இருக்கிறது. எத்தனை எத்தனைத் தடைகளைத் தாண்டிப் பெண்ணினம் பிழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தக் களப்பணியாளர்களுக்கு நம் அனைவரின் வாழ்த்துகளும். நெஞ்சமிளகச் செய்த கட்டுரைக்குப் பாராட்டுகள் செந்தில். வெற்றி பெற வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னமும் இருக்கிறது. அதை மற்றொரு பதிவில் பதிவிடுகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    நீக்கு
  12. பெண்ணை உற்பத்திப் பொருளாகவும், செலவுப் பண்டமாகவும் பார்க்கக் கற்றுப் பலநூற்றாண்டுகளான சமுதாயத்தின் நோய்ப்பாதிப்புகள் கல்வியாலும் விழிப்புணர்வாலும் மாற்றப்பெற வேண்டும்.
   சட்டங்களின் போதாமையை உங்களின் பதிவு காட்டுவதாகப் பார்க்கிறேன்.

   எல்லாரும் விரும்பித் தொடரும் உங்கள் எழுத்தன்றி வெல்வது வேறேது?

   வாழ்த்துகள்.

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  13. வாசிக்க வாசிக்க திகிலாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. இப்போது களப்பணியாளர் மூலம் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதையறிய கொஞ்சம் ஆறுதல். நானே கிராமத்துக்கு நேரே சென்று வந்தது போன்ற விவரிப்பு அருமை செந்தில்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் பாராட்டே பரிசுப் பெற்ற மகிழ்ச்சியை தந்தது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்