Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

'சொல்லிட்டாளே அவ காதல..!'



றைந்திருந்து பார்ப்பதில் ஒரு மர்மம் இருக்கத்தான் செய்கிறது..! இலை மறைவாக இருப்பதில் இன்பம் பெருகத்தான் செய்கிறது..! ஜோக் நீர்வீழ்ச்சியை மழைக்காலங்களில் பார்ப்பவர்கள் இப்படிதான் சொல்கிறார்கள்.


மேகம் மேலிருந்து கீழிறங்கி பார்வையை மறைத்திருக்கும்போது கேட்கும் அருவி ஓசை, இனம்புரியா மர்மத்தைக் கொடுக்கும். அதே மேகம் சற்று கலைந்து விலகும்போது எதிரில் தெரியும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி கண்களை மயக்கும்.. மனதை சொக்க வைக்கும்..! மீண்டும் மேகம் மறைக்கும்.. மர்மம் கொடுக்கும். மீண்டும் விலகும்.. அருவியின் அழகு மனதை அள்ளும்..! இப்படி திரும்ப திரும்ப நடக்கும்..! ஆனால், இப்போது கொஞ்ச நாட்களாய் அருவியின் இரைச்சல் யாருக்கும் கேட்பதில்லை. பதிலாக 'சொல்லிட்டாளே அவ காதல.. சொல்லும்போதே சுகம் தால..!' என்ற இனிமைதான் எல்லோருக்கும் கேட்கிறது. 

'கும்கி' படத்தில் எம்.சுகுமார் தனது கேமராவில் பிரித்து மேய்ந்திருக்கும் அருவி இதுதான். இன்னும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கவைத்த இந்த இயற்கை பாடல் காட்சியை நேரில் பார்த்தால் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியுமா..?


கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் தான் ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தியாவின் மிக உயரமான அருவியும் இதுதான். 830 அடி உயரத்தில் இருந்து வெள்ளிக்கம்பிகளை உருக்கிவிட்டது போல, பள்ளத்தை நோக்கி பாய்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


பசுமை, குளுமை இணைந்த இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஜோக் நீர்வீழ்ச்சி சொர்க்கம். அது மட்டுமல்ல, வனவிலங்கு பிரியர்களையும் இந்த இடம் கிறங்க வைக்கும்.

மலைகள் சூழ்ந்த இடங்கள், காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் அழகு பொக்கிஷங்களை கொட்டிவைத்திருக்கும் இடம் இது. இங்கிருந்துதான் ஷராவதி, துங்கபத்ரா, காளி, கங்காவதி, தடதி என்று ஆறு நதிகள் உற்பத்தியாகின்றன.


இந்தியாவின் மிகப் பெரிய பல்லுயிர் மண்டலமும் இதுதான். இங்கு ஏழு வனவிலங்கு சரணாலயங்களும் பூங்காக்களும் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது பத்ரா வனவிலங்கு சரணாலயம்தான். நாட்டின் மிக முக்கிய புலிகள் சரணாலயத்தில் ஒன்று இது. இவைகள் எல்லாமே பசுமையும் புத்துணர்வும் தருவதாக உள்ளன.

ஜோக் நீர்வீழ்ச்சி, ஷராவதி ஆற்றின் வீழ்ச்சிதான். இது 'லிங்கன்மாக்கி' அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது. மேலிருந்து அருவி கீழே விழும்போது நான்கு பிரிவுகளாக பிரிந்து விழுகிறது. அதற்கு ராஜா, ராணி, ராக்கெட், கர்ஜனை என்று நான்கு பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.


இருப்பதிலேயே உயரமானது 'ராஜா'. உயரம், பிரமாண்டம், வேகம் என்ற குணாதிசயங்களுக்கு சொந்தக்காரன் இந்த அருவி. அடுத்து 'ராணி', புரிந்திருக்குமே..! ஆமாம் அழகுதான்! இந்த அருவி பேரழகு, அடர்த்தியான நீர்த்துளிகள் மொத்தமாக பறந்து கீழே இறங்குவதுபோல் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

'ராக்கெட்' என்பது செங்குத்தாக ராக்கெட் வேகத்தில் கொட்டும் அருவி. 'கர்ஜனை' என்பது இருப்பதிலேயே உயரம் குறைவான அருவி. உயரத்தில் குறை இருந்தாலும், இது உருவாக்கும் பேரிரைச்சல் காதை தவிடு பொடியாக்கும். அதனால்தான் இந்த அருவிக்கு அப்படியொரு பெயர்.


இந்த நான்கு அருவிகளும் நிரந்தரமானவை வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும். இதுபோக பருவமழை, கனமழை காலங்கள் வந்துவிட்டால் ஏகப்பட்ட புது அருவிகள் உருவாகிவிடும். பல அருவிகள் மொத்தமாக தண்ணீரைக் கொட்டும். அப்போது இந்த நான்கு பிரதான அருவிகள் இன்னும் அழகு பெரும்.


ஜோக் அருவியின் அழகை விட்டு பிரிந்துபோக முடியாமல் இருந்தாலும், இதன் அருகில் பார்ப்பதற்கு வேறு இடங்களும் உள்ளன. அதில் 'மந்தகட்டே பறவைகள் சரணாலயம்' சிறப்புமிக்க பொழுதுபோக்கு. இந்த சுற்றுவட்டாரங்களில் சாப்பிடுவதற்கென்று சில உணவுகளும் உண்டு.

கருணைக் கிழங்கு இலைகளை கொண்டு செய்யப்பட்ட 'ரோடு', பலாப்பழ பன், பேன் கேக்குகள், பஜியாஸ், கொழுக்கட்டை என எல்லாமே வித்தியாசமான மற்ற இடங்களில் கிடைக்காத உணவு வகைகள். அதன் ருசி அறிவது சுவையான அனுபவம்.


மழைக்காலங்களில் மேகமூட்டமாய் தெரியும் ஜோக் நீர்வீழ்ச்சி, கோடையில் சூரிய ஒளிபட்டு அதி அற்புதமான வானவில்லை உருவாக்கும்.எப்படிப் பார்த்தாலும் ஜோக் அழகுதான்.

பிரிந்துபோக முடியாமல் வசீகரத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் இந்த இயற்கை காதலனிடம் இருந்து மனதை பறிக்கொடுத்து, திரும்பும்போது நம் மனதில் மீண்டும் ஒலிக்கிறது..

'சொல்லிட்டேனே இவ காதல..!'




எப்படி போவது? 

பெங்களூரில் இருந்து 270 கி.மீ. தொலைவில் ஷிமோகா உள்ளது. பஸ், ரயில் என்று வசதிப்படி எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

எங்கு தங்குவது?

'ராயல் ஆர்கிட் ஹோட்டல்' தங்குவதற்கு ஏற்றது. சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ளது. முன்பதிவு செய்து போவது நல்லது. போன்: 08182-401999. 


ஜோக் நீர்வீழ்ச்சியை பிரமாதமாக காட்டியிருக்கும் அந்த பாடல்.. 





45 கருத்துகள்

  1. வாவ்@ நீர்வீழ்ச்சியின் குளுமையோடு சொல்லிட்டாளே அவ காதலை தலைப்பும் இலைமறை காயாய் மறைந்திருந்து பார்ப்பதில் இருக்கும் இன்பம் பற்றியும் சொல்லி நெஞ்சினுள் ஜில்லிப்பை உணர வைத்து விட்டீர்களே!

    ஜோக் நீர்வீழ்ச்சி குறித்து அறிவேன்,இந்தியாவில் நாயகாராவுக்கு நிகராய் ஒரு நீர் வீழ்ச்சி இருப்பது இந்தியர்கள் பலருக்கே தெரியாது. நீங்கள் சுருக்கமாய் பயண விபரங்களோடு நிறைவான விபரப்பபதிவுக்கு பாராட்டுகள். நன்றிகள்!

    இந்தியா வந்தால் இங்கெல்லாம் செல்ல நேரம் கிடைக்குமா என்பதே தெரிவதில்லை.

    நாங்கள் இருப்பதும் மலைத்தொடர்கள் என்பதால் இங்கே இம்மாதிரி அல்லாமல் குட்டி குட்டி நீர் வீழ்ச்சிகள் உண்டு.

    இன்னும் தொடருங்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி நிஷா!

      நீக்கு
  2. அருமையானதோர் நீர்வீழ்ச்சி. இது வரை சென்றதில்லை. செல்லும் ஆர்வம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து வாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  3. ஒருமுறை சென்றிருக்கிறோம். அழகு.படங்கள் கண்களுக்கு குழுமை சேர்க்கின்றன. கும்கி படத்தில் வரும் அருவி இது என்று இப்போது தான் தெரிகிறது. இப்போ வீடியோ பார்க்கும் போது இன்னும் நன்றாக இருக்கிறது தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை புரிந்திருக்கும் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  4. நான் மிகவும் ஆசைப்பட்ட,இதுவரை பார்க்காத இடத்திற்கு அழைத்துச சென்றமைக்கு நன்றி. கண்டிப்பாகச் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  5. போகனும்தான் தோழா... ம்... பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  6. அழகிய புகைப்படங்களும் விளக்கமும் நன்று நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பர் கில்லர்ஜிக்கு!

      நீக்கு
  7. WOW... S.P.S
    அருவின்னாலே...
    ஐய்யைய்யைய்யோ... ஆனந்தமே...!!

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    ‘ சொல்லும் போதே சுகம் தாளல...’ கவிஞர் யுகபாரதியின் பாடலைப் போல தாங்கள்
    ஜோக் நீரருவியைப் பற்றி சொல்லும் போதே சுகம் தாளல... எழில் கொஞ்சும் படங்களைப் பார்த்த பொழுதும் நெஞ்சம் அதில் தஞ்சம்.

    அழகிய அருவி... இயற்கையின் அற்புதம்... அதிசயம்...!

    நன்றி.

    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையாய் வந்த தங்களின் கருத்துரைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  9. கண்ணுக்கு குளுமை! மனதிற்கு இனிமை! அருமையான நீர்வீழ்ச்சி குறித்த தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. ஏற்கனவே பார்த்தது என்றாலும் ,மீண்டும் பார்க்கத் தூண்டுகிறதே உங்க பதிவு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  11. படங்களைப் பார்க்கும்போது,பதிவைப் படிக்கும்போது மனதுக்குள் நீர்த் திவலைகள் தெறிக்கின்றன!
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  12. படம் பார்க்காததால் பாடலும் நீர்வீழ்ச்சியை பற்றியும் தெரயிவில்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ இணைப்பை முழுமையாக பாருங்கள். அதில் இந்த அருவி மிக பிரமாதமாய் வந்திருக்கும். வருகைக்கு நன்றி !

      நீக்கு
  13. பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு..

    கீதா: பார்த்திருக்கின்றேன். அதுவும் மழைக்காலத்தில்! ந்யாகரா போல இருக்கும். பல பிரிவிகளாகக் கொட்டும் நீர்த்திவலைகளின் அனுபவம் கிடைக்கும்.
    உங்கள் புகைப்படங்கள் மனதை அப்படியே கொள்ளை கொள்ளுகின்றன சகோ. புகைப்படங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இந்தியாவின் நயாகரா என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
  14. அருமையான இடம். பயமூத்தும் அழகு. குற்றாலம் உட்பட நான் எந்த நீர்வீழ்ச்சியையுமே பார்த்ததில்லை! (ஹிஹிஹி)
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம் : "பயமுறுத்தும்"

      நீக்கு
    2. ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே, தமிழகத்தில் இருந்துகொண்டு குற்றலத்தைக் கூட பார்க்கவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

      நீக்கு
    3. நீங்கள் சொல்லாமலே திருத்தி படித்துவிட்டேன்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. அடுத்த பதிவர் சந்திப்பை அங்கு வைத்தால் ஊரையும் பார்த்தது போல் ஆச்சு, பதிவர்களையும் சந்தித்ததுபோல் ஆச்சு!

      நீக்கு
  16. ஆஹா.... நாமலும் போயி பார்க்கணுங்கிற ஆசையை தூண்டி விட்டிருச்சு பகிர்வு...
    அருமை....

    பதிலளிநீக்கு
  17. ஆகா
    ஆகா
    படங்களைப் பார்க்கும்போதே
    சாரல் நீர் மேலே பட்ட உணர்வு எழுகிறது நண்பரே
    அவசியம் பார்த்தே ஆகவேண்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஒவ்வொன்றையும் பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டு காலம் கூடிவரவேண்டும் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. ஜோக் நீர்வீழ்ச்சி! சுற்றிப் பார்க்க போன இடத்தில், அதுவும் அருவியின் மடியில், அதன் பேரிரைச்சல் தாலாட்டில், சுமார் ஒரு மணிநேரம் தூங்கியதை மரணப் படுக்கையில் கேட்டாலும் சொல்வேன்! அப்படியொரு சுகம்.

    ஷராவதி ஆற்றின் நீர்தான், ஜோக் நீர்விழ்ச்சியில் அப்படி கொட்டுகிறது. அது கர்நாடகாவில் இருப்பதால், பெரும்பாலும் கிழக்கு நோக்கி வங்கக்கடலில் கலக்கும் நதிகளைப் பார்த்து பழக்கப்பட்ட பெரும்பாலான இந்தியர்கள் போல், மேற்குத் தொடர்ச்சி மலையில் அந்நீர்வீழ்ச்சி கிழக்கு நோக்கித் திரும்பி இருக்குமென எனது தமிழ்நாட்டு மூளையும் கற்பனை செய்து கொண்டது. அங்கு செல்ல முடிவு செய்து அதைப் பற்றிய விவரங்கள் தேடியபோது தான் தெரிந்தது, ஷராவதி அரபிக் கடலில் கலக்கிறது என்பது! அப்படி என்றால் மேற்கு நோக்கித் திரும்பி இருக்குமென முடிவுக்கு வந்தேன்.

    ஷராவதி நதி பற்றி கேள்விப்பட்டிராத மலையாள நண்பன் ஒருவனிடம், ஜோக் நீர்வீழ்ச்சி எந்தத் திசையில் திரும்பி இருக்கலாம் என்று கேட்டேன். எல்லா நதிகளும் மேற்கு நோக்கி பாயும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அவன், நான் எதிர்பார்த்ததைப் போலவே, சற்றும் யோசிக்காமல் மேற்கு என்றான்!

    ஒரே நீர்வீழ்ச்சி, எனக்கு கிழக்கு, அவனுக்கு மேற்கு. முன்பின் பார்த்திராத ஒரு விசயத்தை, நமக்கு பழக்கமான விடயங்களைக் கொண்டு, நமது மூளை எப்படி எல்லாம் முதல் அபிப்பிராயத்தை முடிவு செய்கிறது பாருங்கள்! கடவுள் உட்பட.

    நேரில் போய் பார்த்தால் ................ அவ்வளவு தூரம் மேற்கு நோக்கி ஓடிவரும் ஷராவதி, ஜோக் நீர்வீழ்ச்சியை நெருங்கியவுடன் ஒரு வளைவு கொடுத்து, வடக்கு கிழக்கு மேற்கு என்று மூன்று திசைகளிலும் அருவியாகக் கொட்டி, என்னை நோக்கி தெற்கில் பாய்ந்து வந்தது! நம்ம தாமிரபரணி, திருநெல்வேலியில் ஒரு யூ டர்ன் எடுப்பதுபோல.

    கும்கி பாட்டில் காட்டப்படுவது போல், அருவியின் உச்சிக்குப் போக முடியாது. அது தடை செய்யப்பட்ட இடம். அந்த நாயகன் நாயகி போல், உச்சிக்குப் போய் விளிம்பில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க சில சுற்றுலா வழிகாட்டுபவர்கள் உசுப்பேற்றுவர்கள். அதே கும்கி பாட்டில் காட்டப்படுவது போல், அருவியின் அடியில் அருகிலும் போக முடியாது. எப்போதும் காவலர்கள் இருப்பார்கள். மொத்தத்தில், ஜோக் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாது!

    அங்கு நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே:

    https://photos.google.com/share/AF1QipOnsNlap35BmJvZvXd3tWTxONsbexU5uABLxAId13wsOfIkIWpGYoU0g204XnS0xA?key=cEwtNjZWMjhvS01vaW11MTNSME9vbW9ic0FWZnJR

    https://photos.google.com/share/AF1QipP5NUuj_tJV9gbcdFF9DWy2nw3plXDmiZrKFTSaOO7OzK5vQ9IgZC1fQ7pnSi2sRA?key=bElGNkx2N0xzLVZPLXh3cEFvb0h1MlZiR1VrWnBR

    - ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  22. எப்போது இந்த பாடலை பார்த்தாலும்....இது எந்த அருவி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரும் அந்த அளவுக்கு அருமையாக படமாக்கி இருப்பார்கள்....அந்த அழகு போலவே இருந்தது உங்களின் எழுத்து...இயற்கையை நேசிக்கும் உங்கள் மனது....கண்டிப்பாக பார்த்து விட வேண்டும்...இப்படி ஆர்வத்தில் தான் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியையும் போய் பார்த்து வந்தேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை