• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

  மனித அடிமைகளை மகாராணியாக மாற்றிய திருவிழா  'ரியோ-கார்னிவல்'
  ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரிக்கும் உற்சாக வார்த்தை இந்த 'ரியோ-கார்னிவல்'. எப்போது பிப்ரவரி மாதம் வரும் பிரேசில் போவோம் என்று ரசிகர் கூட்டம் ஏங்கி தவிக்கும் திருவிழா இது. 


  கொண்டாட்டங்கள் எல்லாமே மேல்தட்டு மக்களை மகிழ்விக்க வடிவமைக்கப் பட்டவைகள்தான். விதிவிலக்காக பல திருவிழாக்கள் சாமானியர்களையும் மகிழ்விக்கின்றன. இதில் ரியோ-கார்னிவல் இன்னும் ஸ்பெஷல் இது மகிழ்வித்தது அடிமைகளை..! 


  அன்றைய மனித அடிமைகளை மகிழ்வித்திருக்கிறது. அவர்களின் கட்டற்ற சுதந்திர கொண்டாட்டத்தை அதிகார வர்க்கம் கேள்வியே இல்லாமல் அங்கீகரித்திருக்கிறது. அந்த உற்சாகம் நூற்றாண்டைக் கடந்து இன்றும் இளமைத் துள்ளலோடு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உற்சாகம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுமானால் ரியோ-கார்னிவலுக்கு ஒருமுறை போய் வர வேண்டும்.


  வண்ணங்களையும், உற்சாகத்தையும் கொட்டி உருவாக்கிய கொண்டாட்டம்தான் இந்த ரியோ கார்னிவல். இதில் காணப்படும் உல்லாசம் வேறெங்கும் காணமுடியாதது. வெறும் நான்கு நாட்கள் நடக்கும் திருவிழாவுக்காக வருடம் முழுவதும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள், பார்வையாளர்கள். இதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் மக்கள் விமானம் ஏறுகிறார்கள். 


  ரியோ திருவிழா ஒவ்வொரு வருடமும் 'ஈஸ்ட்டர் தினம்' வருவதற்கு 40 நாட்களுக்கு முன் தொடங்குகிறது. பிப்ரவரியில் களைக்கட்டுகிறது. இதுவொரு பாரம்பரியத் திருவிழா. இதன் தொடக்கம் கிரேக்கர்களிடம் இருந்து வந்தது. 


  கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடம் வசந்த காலத்தை வரவேற்று வழிபடும் முறை இருந்தது. இதுவே பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் நன்றி சொல்லும் திருவிழாவாக வேறு வடிவம் கொண்டிருந்தது. முகத்தில் முகமூடியை அணிந்து கொண்டு வீதிகளில் ஆடிவரும் முறை அப்போது உருவானதுதான். 
  பாரீஸில் இதுபோன்ற ஒரு திருவிழாவைப் பார்த்து பரவசம் அடைந்த வணிகர்கள் கி.பி.1750-ல் பிரேசிலுக்கு இறக்குமதி செய்துவிட்டார்கள். அப்போது பிரேசில் போர்ச்சுக்கல் கையில் இருந்தது. இந்த திருவிழாவை வித்தியாசமாக வடிவமைக்க நினைத்தார்கள். 


  ஏழை - பணக்காரன், உயர்ந்தோர் - தாழ்ந்தோர் வித்தியாசம் இல்லாத திருவிழாவாக இது உருவாக்கப்பட்டது. ஆண்டான் - அடிமை முறை திருவிழா நேரத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டது. திருவிழாவில் அரச குடும்பத்தினர் சாதாரண மக்கள் போல் ஏழைகள் உடை அணிந்து வருவதும், அடிமைகளும் சாதாரண மக்களும் மகாராணி உடையில் வருவதும் சகஜமாக நடந்தது. இப்படி ஒரு நடைமுறை வேறு எந்த திருவிழாவிலும் இல்லை.  


  சமூக ஏற்றத் தாழ்வுகள் இல்லாத இந்த நான்கு நாள் திருவிழா அன்றைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்டு வந்திருந்த கறுப்பர்களுக்கு சொர்க்கமாக தெரிந்தது. நான்கு நாள் திருவிழாவை தங்கள் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமாக கருதினார்கள். அடிமை நிலையை மறந்த கருப்பர்கள் திருவிழாவில் கட்டுக்கடங்காத களியாட்டம் ஆடினார்கள். 


  அதில் தங்களின் பூர்விக இசையான 'சம்பா' இசையையும் நடனத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். குழுவாக சேர்ந்து ஆடும் இந்த நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழாவில் பிரேசில் மக்களை விட ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களே அதிகம் கலந்து கொண்டார்கள். இப்போதும் கூட ரியோ-கார்னிவலில் அவர்களின் பங்களிப்புதான் அதிகம். 


  19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரியோ திருவிழா வேறு வடிவம் கொண்டது. இதில் கலந்து கொள்ளும் குழுக்களுக்கு இடையே போட்டி உருவானது. இந்தப் போட்டி இசை நடனத்தோடு நின்று விடவில்லை. விதவிதமாக உடையோடு வித்தியாசமான வேடங்கள், ஆர்கெஸ்ட்ரா என்று அனைத்திலும் கடுமையான போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி மனப்பான்மைதான் ரியோ திருவிழாவை எங்கேயோ உச்சத்துக்குக் கொண்டு போனது. பிரமாண்டம் உருவானது. 


  நான்கு நாட்கள் திருவிழாவில் குழுநடனம் இருக்கிறது. மாறுவேட நடனம் உள்ளது. நமது குடியரசு தினத்தில் டெல்லி வீதிகளில் அணிவகுத்துவரும் கவச வண்டிகள் போல் இங்கு விதவிதமாக அலங்காரித்த பிரமாண்டமான வாகனங்கள் அணிவகுத்து வருவதை பார்த்து பரவசப்பட இரண்டு கண்கள் போதாது.
  சாமானிய பெண்கள் மகாராணியாக வலம் வரும் வைபவமும் இங்கு கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்கு 'குயின்ஸ் ஆஃப் கார்னிவல்' என்று பெயர். மகாராணிகள் தங்களின் மார்பக அழகை வெளிக்காட்டுவது அந்தஸ்தின் அடையாளமாக மேலைநாடுகளில் இருக்கிறது. அதனாலே இங்கு மகாராணிகளாக வலம் வரும் பெண்களும் திறந்த மார்பகங்களோடும் கட்டற்ற சுதந்திரத்தோடும் வெறித்தனமான ஆட்டம் போடுகிறார்கள்.
  ரியோ-கார்னிவல் என்பது வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல. உண்மையான பிரேசிலின் கலையையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.


  ரியோ திருவிழாவுக்கான ஆயத்த வேலைகள் புது வருடம் பிறந்ததுமே தொடங்கிவிடுகின்றன. 'கிங் மோமோ முடிசூட்டு விழா'வுடன் கார்னிவல் கலைக்கட்டத் தொடங்குகிறது. அந்த அரசர் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன சாவியை நகர மேயரிடம் ஒப்படைப்பார். அதுதான் விழா தொடக்கத்திற்கான அழைப்பு.


  அழைப்பு கிடைத்தவுடன் தெருக்கள், சதுக்கங்கள், பார்கள், கிளப்புகள் என்று எல்லா இடங்களிலும் திருவிழா ஜுரம் பற்றிக் கொள்ளும். சம்பா நடனங்களை சொல்லித்தர சம்பா பள்ளிகள் இருக்கின்றன. இங்கு தீம் மியூசிக், பாடல்கள் அதற்கான ஒப்பனைகள், நடனங்கள் கற்றுத்தரப்படுகின்றன.


  இங்கு 'ஸ்ட்ரீட் பேண்ட்' என்ற வீதியோர இசைக்குழுக்கள் 300-க்கும் மேல் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. திருவிழா பேரணிக்காக இவர்கள் தயாராகும் ஆரம்பக்கட்ட நிகழ்ச்சிகள் அற்புதமானவை.


  இவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலைகளில் தங்கள் ஆர்கெஸ்ட்ராக்களுடன் சம்பாவுக்கு உண்டான ஆடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்து கூட்டத்தினரை வசீகரிப்பார்கள். இந்த வார்ம்-அப் நிகழ்ச்சி தவறவிடக் கூடாத ஒன்று.


  வருகிற 2017 ரியோ கார்னிவலுக்கு போகவேண்டும் என்றால் இப்போதே திட்டமிடுங்கள். அதுவொரு அற்புத அனுபவத்தை தரும். எதற்கும் பட்ஜெட்டாக ஒரு 5 லட்ச ரூபாயை தனியாக ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள். 


  சில படங்கள் மிகக் கவர்ச்சியாக தெரியலாம். அதில் உள்ள கலையம்சத்திற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளது.


  படங்கள்: கூகுள் இமேஜ்


  26 கருத்துகள்:

  1. ரியோ கார்னிவெல் குறித்து அறியத் தந்ததுடன்...அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிக்க வைத்தீர்கள் சார்...
   அருமை..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. புதிய கலையை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  3. புதிய செய்தி, சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய படங்கள்.
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!

    நீக்கு
  4. அருமையான தகவலுடன் அற்புதமான படங்கள் கொண்ட பதிவு நண்பரே. பாராட்டுக்கள்.

   கத்தோலிக்க கிருஸ்துவர்கள் கடைபிடிக்கும் lent (சாம்பல் புதன் தினத்திலிருந்து துவங்கும் விரதம்.) விரத நாட்களுக்கு முன் இத்தாலியர்களும் போர்சுகீசியர்களும் இதை முதலில் ஒரு கொண்டாட்டமாக ஆரம்பித்ததாக வரலாறு உண்டு. Carnival என்பதே farewell to meat என்பதன் இத்தாலியச் சொல். ரியோ வில் நடைபெறும் இந்த களியாட்டம் கத்தோலிக்க சம்பிரதாயத்தோடு சம்பந்தப்பட்டது என்றறிந்தபோது ஆச்யர்யமாக இருந்தது. என்னதான் கலை, உற்சாகம் என்றாலும் ரியோ கார்னிவல் ஒரு எல்லையற்ற காமக் களியாட்டம் என்ற பிம்பமே பிரதானமாக இருக்கிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உணமைதான். ஆரம்பத்தில் நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த திருவிழா இப்போது காமக் களியாட்டம் ஆடும் இடமாக மாறியது வேதனையான ஒன்றே!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. திருவிழா ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் திசைமாறி ,இன்று காமக்களியாட்டம் போடுவதற்கென்றே ஆகிவிட்டதை ,பேஷன் டிவி ஒளிபரப்பில் இருந்து பரர்க்க முடிகிறது :)

   பதிலளிநீக்கு
  6. அடுத்த முறை கில்லர்ஜீ அவர்கயள் அங்கு சென்று நேரடி தகவல்களைத் தருவார் என நம்புகிறேன்.

   பதிலளிநீக்கு
  7. வணக்கம் நண்பரே நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தினீர்கள் உடன் விசா அப்ளை செய்து விட்டேன் மிக்க நன்றி

   பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள். புகைப்படங்கள் நண்பரே!

   கீதா: ஈஸ்டர் தின ஞாயிற்றுக் கிழமைக்கு 40 நாட்கள் முன் லென்ட் எனும் விரதம் ஆஷ் வெட்னெஸ்டேவிலிருந்து (மதியத்திலிருந்து)தொடங்கப்படும். ஏஞ்சலிக்கன், கால்வனிஸ்ட், லுதரன் சர்ச் சேர்ந்தவர்கள், ரோமங்கத்தோலிக்கர்கள் கடைப்பிடிக்கின்றார்கள். கார்னிவல் - டு ரிமூவ் மீட் (மாமிசத்தைத் தவிர்த்தல்) சிலநாட்களில் மாமிசத்தைத் தவிர்த்தார்கள். ப்ரேசிலில் கொண்டாட்டமாகியது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல். என் தோழி எல்லாம் எல்லா நாட்களிலும் மாமிசத்தைத் தவிர்ப்பதில்லை. நானும் கிறித்தவப் பள்ளி, கல்லூரியில் படித்ததால் இதைப் பற்றி அறிய முடிந்தது. ஆனால் அப்போதெல்லாம் கொண்டாட்டங்கள் இருந்துவந்தாலும் இது போன்று இருந்ததாகத் தெரியவில்லை அதாவது உடைகள். சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் உடைகளை அணிவார்கள். நான் அப்போது தெரிந்து கொண்டது வரை இப்படியான உடைகள் இருந்ததாகத் தெரியவில்லை அதாவது உடல் உறுப்புகளை வெளிப்படுத்திய உடைகள். இப்போது இது மாறியிருக்கிறது என்று நினைக்கின்றேன். வடகிழக்கு ப்ரேசிலில் கார்னிவலுக்கும் ரியோ கார்னிவெலுக்கும் வித்தியாசம் உண்டு குறிப்பாக இதற்காக இசைக்கப்படும் இசை தீமில்....மகனின் மெக்சிகன் நண்பரும் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் பேசியது பல புரியவில்லை மட்டுமல்ல வார்த்தைகளும் மனதில் பதியவில்லை.

   அருமை சகோ பதிவு!!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வெளிநாடுகளில் மகிழ்ச்சி என்றாலே அது பாலியல் சம்பந்தப்பட்டது என்றாகிவிட்டது. அதற்கு இந்த விழாவும் விதிவிலக்கல்ல. வருகைக்கும் ஆழமான கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு
  9. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  10. ஐந்து லட்சத்திற்கு எத்தனை சைபர் நண்பரே! 😜😜

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. புரிகிறது. ஆனாலும் இது அவ்வளவாக மிகைப்படுத்தப்படாத உண்மைதான்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்