Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எழுத்தாளர் எஸ்.ரா.வுடன் ஒரு மினி பேட்டி


விகடனில் தொடர்ந்து தொடர் எழுதி பட்டித்தொட்டிகள் வரை தனது எழுத்தைக் கொண்டு சேர்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனனை சில வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். சின்னதாக அவருடன் நடந்த கலந்துரையாடல் பின்னர் 'தினத்தந்தி' ஞாயிறு மலரில் வெளிவந்தது. அந்த சிறிய சந்திப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இனி பேட்டி..

எழுத்தாளர்கள் தங்கள் படிப்பை வெளிப்படுத்துவது பலன் தருமா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்று பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது கிடைத்த பதில் சுவாரஸ்யமானதாக இருந்தது.


"சாதாரண மக்கள்தான் எனக்கு நெருக்கமான தோழர்கள். லாண்டரி கடைக்கார் ஒருவரிடம் உட்கார்ந்து நான் நாட்டுநடப்பை அவ்வப்போது பேசுவேன். இருவரும் ஆத்மார்த்தமாக உரையாடுவோம். ஒருநாள் நாங்கள் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது எனது இன்னொரு நண்பர் அங்கே வந்தார். வந்தவர், லாண்டரி கடைக்காரரிடம் 'சார் யார் தெரியுமா?' என்று என்னைக் காட்டி கேட்டார். கேட்டுவிட்டு என் படிப்பைப் பற்றி அவரிடம் கூறினார். அடுத்தநாள் அந்த லாண்டரிக் கடைக்காரர் என்னிடம் பேசவே ரொம்ப  யோசித்தார். கிட்டத்தட்ட பேச்சை நிறுத்திவிட்டார். 

நிறைய படித்திருப்பது அதிகமான மனிதர்களிடம் நம்மைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கு பதில், இருக்கிற நண்பர்களிடம் இருந்தும் நம்மை பிரித்துவிடுகிறது. நம் பெயருக்குப் பின்னால்  டிகிரிகள் சேரும்போது, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நம்மிடம் இருந்து விலகிப் போய்விடுகிறார்கள்.

நான் எளிய மக்களுடன் வாழ்பவன். அவர்களிடம் போய், படித்தது ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் என்றால், வீட்டில் சாப்பாடு போடுகிறவர்கூட தயங்குவார். கல்வி அதிகமாகும்போது மரியாதை கொடுப்பதையும் கடந்து, 'அவரிடம் போய் பேசுவது சரியாக இருக்குமா?' என்ற தயக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. அதனால் நான் மேற்படிப்பு முடித்ததும் எல்லா சான்றிதழ்களையும் ஊரிலே விட்டுவிட்டு வெறும் ராமகிருஷ்ணனாக மட்டுமே சென்னைக்கு வந்தேன். 

காந்திஜியின் அரை ஆடை தோற்றத்தை பார்ப்பவர்களிடம் அவர் வெளிநாட்டில் சட்டக்கல்வி பயின்றவர் என்றால், நம்பமாட்டார்கள். கல்வியில் மேம்பட்ட அவர் தன் தோற்றம் மக்களிடம் இருந்து தன்னை தூரப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக சாதாரண மக்கள்போல் அரை ஆடைக்கு மாற்றிக்கொண்டார். அது அவரை மக்களிடம் மேலும் நெருங்கவைத்தது. 

இன்றும் எவ்வளவோ பெண்கள், தங்கள் கணவரைவிட அதிகம் படித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரும் முன்னிலைப்படுத்தி வைத்திருக்கும் படிப்பை, வெளியே தெரியாமல் மறைத்துக் கொள்கிறார்கள். சிலவேளை அது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தன்னை தூரப்படுத்திவிடும் என்றும் கருதுகிறார்கள். கல்வி யாவருக்கும் தேவைதான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அது தொடர்பாக மேம்படுகிறவர்களுக்கு அது நல்ல பயனைத் தரும். என்னைப் போன்றவர்களை எளிய மக்களிடம் இருந்து தூரமாக்கிவிடுகிறது." என்று விளக்கம் கூறும் எஸ்.ராமகிருஷ்ணன் என்ன படித்திருக்கிறார்? என்று கேட்டபோது..

"ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். முடித்தேன். அதன்பின்பு நாட்டுப்புற கதைகளில் பி.ஹெச்டி. செய்யத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்த தூரப்படுத்தும் அனுபவங்கள் கிடைக்க ஆய்வை அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்."

எழுத்தை வாழ்வாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள். அதற்கு உங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?

"எங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளாகவே படித்தவர்களை கொண்டது. எழுத்தின் மீதும் புத்தகங்கள் மீதும் எல்லோருக்கும் இயல்பாகவே விருப்பம் இருந்தது. வீட்டில் நல்ல நூல்களைக் கொண்ட நூலகம் இருந்தது. உலக இலக்கியங்கள் பற்றிய விவாதங்கள் வீட்டுக்குள் அடிக்கடி நடக்கும். வீட்டுச் சூழலே இலக்கியத்தோடு பிணைந்து கிடந்ததால் எதிர்ப்பு இல்லை. வரவேற்பு இருந்தது."


தினமும் எவ்வளவு நேரம் புத்தகங்கள் வாசிப்பீர்கள்?

"தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் படிப்பேன். டிசம்பர் மாதம் என்றால் பகல் முழுவதும் படிப்பேன். டிசம்பர் மாதம் படிப்பதற்கு  உகந்தது. அப்போது மனது சாந்தமாக இருக்கும். என்னால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கங்கள் வாசித்து விட முடியும். படித்ததை அப்படியே நினைவில் நிறுத்திக் கொள்வேன்."

இலக்கியம் என்பது சிறு வட்டத்துக்குள்ளே முடங்கி விடுகிறதே, அதை ஜனரஞ்சகமாக மாற்ற முடியுமா..? 

"இலக்கியம் வாழ்வை ஆராய்ந்து சொல்வது. ரசனை மிகுந்தது. மனிதனை வழி நடத்துவது. அது ஓர் அனுபவம். அதனைப் படிக்க லட்சக்கணக்கானவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனாலும் வருடந்தோறும் இலக்கிய ஆர்வலர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் என்பது வரவேற்கத்தக்க மாற்றம்."

சினிமாவுடனான உங்கள் நட்பு..?

"திரையுலக நண்பர்கள் எனக்கு அதிகம் இருந்தாலும் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வெகுநாளாக வரவில்லை. அவர்களுக்கு உதவியாக இருந்துள்ளேன். வெளியில் இருந்து செய்யும் வேலையை திரைக்குள் வந்து செய்யலாமே என்றார்கள். 1994-க்குப் பின் திரைப்படத்துக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது. இயக்குநர் வசந்தபாலன் விருதுநகர்காரர். நான் படித்த கல்லூரியில் படித்தவர். அவரின் 'ஆல்பம்' படத்திற்கு முதன்முதலாக வசனம் எழுதினேன்.


பின்னர் ரஜினியின் 'பாபா' படத்திற்கு வசனம் எழுதினேன். அவரோடு நல்ல நட்பு உருவானது. இயக்குநர்  லிங்குசாமி, ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டது. அதனால் ஜீவா படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதும் வாய்ப்பு கிட்டியது. மேலும் பலர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒத்த ரசனையுடையவர்கள் என்பதால் இணைந்து பணியாற்றினேன். ஆல்பம், பாபா, பாப்கார்ன், சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே, பீமா, தாம்தூம் என 8 படங்களுக்கு வசனம் எழுதினேன். மோதி விளையாடு, யுவன் யுவதி என்ற 2 படங்களுக்கு கதை எழுதுகிறேன். தற்போது பாலாவின் 'அவன் இவன்' படத்திற்கு வசனம் எழுதி வருகிறேன்." (நேர்காணல் கண்ட ஆண்டு 2010).

இயக்குனராகும் எண்ணம்..

"மனதின் எண்ணப்படி செல்பவன் நான். மனதில் தீவிரமான எண்ணம் ஏற்பட்டால் மட்டுமே எதையும் செய்பவன். இயக்குனராகும் எண்ணம் தீவிரமாகும்போது அதை செய்வேன்."

எதிர்கால திட்டங்கள்..?

"வருடத்திற்கு ஒரு துறையில் விரிவான புத்தகம் கொண்டு  வரவேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. தற்போது இந்திய சரித்திரம் பற்றி பல ஆய்வுகள் கொண்ட விரிவான புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அடுத்து மாற்றுக் கல்வி சம்பந்தமான புத்தகம் ஒன்று கொண்டுவர உள்ளேன். கல்விக்கான மாற்றுத் தளங்கள், உலக அளவில் எழுத்தாளர்களின் கல்வி பற்றிய சிந்தனைகள், எப்படி கல்வி தருவது என்ற அனைத்தையும் கொண்டதாக அது இருக்கும். மூன்றாவதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் பயணம் செய்துள்ளேன். பலரும் இந்தியா முழுக்க பயணிக்கிறார்கள். அவர்களின் பயண அனுபவங்களை எல்லாம் தொகுத்து விரிவான தொகை நூல் ஒன்றினை வெளியிட உள்ளேன். இதற்கு மூன்று வருடங்கள் கூட ஆகலாம்."

புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றி..?

"புத்தகங்கள் மட்டுமே காலத்தை மிஞ்சி நிற்பவை. திருக்குறள் காலத்தில் இருந்த ஒரு பொருள்கூட இப்போது இல்லை. ஆனால், திருக்குறள் இருக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் புத்தகங்கள் இன்றும் வீடுகளில் புனித நூலாக வாசிக்கப்படுகின்றன. காகிதத்திற்கு இரண்டு விதங்களில் மட்டுமே அதிக மரியாதை உள்ளது. ஒன்று  பணம்,மற்றொன்று புத்தகம். 

உடற்பயிற்சி எப்படி  உடலை ஆரோக்கியமாக வைக்கிறதோ அதுபோல மனத்திற்கான பயிற்சியை தருவது புத்தகங்கள்தான். புத்தக வாசிப்பை பெரியவர்கள்  சிறியவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். சினிமா, பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துப்போவதுபோல் புத்தகக் கடைகளுக்கும், நூலகங்களுக்கும் அழைத்துப்போக வேண்டும். நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும். இது பெற்றோரின் கடமை." என்று முடித்தார்.

கண்காட்சியில் கூட்டம் அதிகம் இருந்தபோதும், வாசகர்களின் குறுக்கீடுகள் இடை புகுந்தபோதும் அதையெல்லாம் கடந்து என் கேள்விக்கு பதிலளித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றி கூறி  விடைப்பெற்றேன். 



தொடர்புடைய பதிவு

எழுத்து ஒரு தவம் - மனுஷ்யபுத்திரன் நேர்காணல் 





31 கருத்துகள்

  1. ஓர் எழுத்தாளனின் பன்முகச் சிந்தனைகளை முன்வைக்கும் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. நேர்த்தியான நேர்காணல்

    பதிலளிநீக்கு
  3. ஒரு எழுத்தாளராகிய தங்களது கேள்விகளும், அதற்கு பதில் தந்த எழுத்தாளர் எஸ்,ரா அவர்களின் பதில்களும் நிறைய விஷயங்களை தெளிவு படுத்தின. நேர்காணலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எஸ் ராவின் பதில்கள் சிந்திக்க வைக்கின்றன ,வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  5. ஹலோ செந்தில் ஜி
    ஏழாவது வாக்கு
    நல்ல பேட்டி

    பதிலளிநீக்கு
  6. நல்லதோர் பேட்டி. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பேட்டி நன்று.எஸ்.ரா காலை மண்ணின்மீது வைத்திருப்பதால்தான் அவர் எழுத்து நமக்கு அருகாமையில் உள்ளது. அவர் நிறைய எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மனிதர்களோடு நெருக்கமாக இருப்பதால்தான் எழுத்தும் நேசத்தோடு இருக்கிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. மிக அழகான பேட்டி! எஸ் ராவின் எண்ணங்கள் பளிச்! அவரைத் தொடர்ந்து வாசிப்பவள் அவரது தளத்திலும்... எழுத்தை ரசிப்பவள் என்பதால் கூடுதல் மகிழ்வு...பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை