• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, டிசம்பர் 23, 2016

  கிணறு வெட்ட வெட்ட கிளம்பும் பூதங்கள்


  ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்களின் சிரமங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமில்லை என்றபோதிலும், நாடெங்கும் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் குறித்து செய்திகள், அன்றாடம் சிரமங்களை மேற்கொண்டு வரும் சாதாரண குடிமகனின் காதுகளுக்கு இன்பத்தேனாகவே இருக்கக்கூடும்.


  கிட்டத்தட்ட 15.4 லட்சம் கோடி மதிப்பிற்கு 500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அதில் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் கோடியையும் தாண்டி ரொக்கம் வங்கிகளுக்குள் வந்துள்ளது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

  அதாவது கருப்பு பணம் வைத்திருப்பதாக சொல்லப்படும் பலரும் அதனை பல்வேறு வகைகளில் வெள்ளையாக மாற்றிக்கொண்டு விட்டதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. வங்கி அதிகாரிகளின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ள இத்தகைய தில்லுமுல்லுகளில் பண புரோக்கர்கள், ஒப்பந்தக்காரர்கள், மணல் மாஃபியாக்கள், இவர்களோடு அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் அடங்கியிருப்பது கண்கூடு.

  அதேநேரம் 2015-16ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தியான 143 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு நாட்டிலுள்ள 6 கோடி அமைப்பு சாரா தொழில்துறை நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  இதில் குறிப்பிடத்தக்க விசயம் யாதெனில், இத்தகைய அமைப்பு சாரா துறைகளில்தான் நாட்டின் 90 சதவிகித ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நிழல் பொருளாதாரம் என்று சொல்லப்படும் இத்தகைய வர்த்தகம் வரி கணக்குகளுக்குள் வருவதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே.


  அதேபோல், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே வருமான வரி கட்டுகின்றனர் என்பதைப் பார்க்கும்போது, ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக மேலதிக நபர்களை வரி கட்டுமானத்திற்குள் கொண்டுவர விழையும் அரசின் எதிர்பார்ப்பு புலப்படும்.

  இருந்தாலும், தற்போது வரையிலும் பெரும் பான்மையான பழைய ரூபாய் மதிப்பு வங்கி கணக்குகளுக்குள் வந்துவிட்ட பின்னர், இத்திட்டம் வெற்றியே என காண்பிக்க வேண்டிய சூழலில் மத்திய அரசு பெருவாரியான வரி சோதனை நடவடிக்கைகளை துவங்கியுள்ளது என்றே தோன்றுகிறது.

  கிட்டத்தட்ட 3,600 கோடி ரூபாய் மதிப்பிற்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டா லும் கூட, இத்தகைய பெரும் எடுப்பிலான வரிச் சோதனைகளில் ரொக்கப் பணம் தங்கத் தைவிடவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவது கூர்ந்து நோக்கத்தக்கது.

  தமிழகத்திலும் கூட ஒரே ஒரு நபர் ரூ.1700 கோடி மதிப்பிலான கட்டிடம் ஒன்றை துபாயில் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இதுகாறும் நடத்தப்பட்ட வரிச்சோதனைகள் பிரச்சினையின் ஒரு முனையைத்தான் தொட்டிருப்பதை உணர முடிகிறது. ஏற்கெனவே கருப்பு பணம் என்பது ரொக்கமாக இருப்பு வைக்கப்பட்டிருப்பது குறைவே என்றும், சொத்துக்களாகவும், தங்கமாகவும், அன்னிய கரன்சிகளாகவும் மாற்றப்பட்டு ஆங்காங்கே வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதே அதிகம் என்றும் வல்லுநர்கள் கூறிவந்த நிலையில், தற்போதைய கள நிலவரம் அக்கூற்றோடு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.


  அதேநேரம், கடந்த ஒன்றரை மாதங்களாக மிகக்கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள சாதாரண குடிமகன் இதுபோன்ற சோதனைகள் இன்னும் தீவிரத்துடன் தொடர வேண்டும் என்றே விரும்பக்கூடும்.  பெரும் பெரும் கருப்புப்பண முதலைகள் சிக்குவது புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நிச்சயமாய்  நம்பலாம்.

  அதுமட்டுமல்லாமல், மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே என மத்திய அரசு தொடர்ந்தும் கூறி வருவதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, வரிச்சோதனைகள் இனி வரும் நாட்களில் தொடர்கதையாகவே இருக்கும் என்பதையும் உணரமுடிகிறது.

  இதன்மூலம் மிகப்பெரும் எடுப்பிலான கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு ஊழல் சொத்துக்கள் மீட்கப்படுவது உறுதி செய்யப்படுமானால், அது சாதாரண குடிமகன் தற்போது அனுபவித்து வரும் காயத்திற்கு சற்றே ஆறுதல்தரும் மருந்தாக அமையும் என்பது மட்டும் ஐயமில்லை.


  கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன்   5 கருத்துகள்:

  1. நேற்று ப சிதம்பரம் இதுகுறித்து பேசிய புள்ளி விவரங்கள் சுவாரஸ்யமானவை. 15.4 லட்சம் கோடிக்கு மேலும் கூட பணம் வந்துவிடும்; ஏனென்றால் நேபாளிலும் நம் பணம்தான் புழக்கத்திலுள்ளது என்கிறார். 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சடித்ததால் சில்லறை மாற்ற முடியாமல் அவை தேங்கிக் கிடக்கும் கஷ்டத்தையும் சொன்னார். நாம் வாட்ஸாப்பில் படித்த சில ஜோக்குகளை புதிதாக சொல்வதுபோலச் சொல்லிப் பகிர்ந்துகொண்டார்.

   பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை. எத்தனை ஊழல் பெருச்சாளிகள் இங்கே....

   பதிலளிநீக்கு
  3. மருந்து முதலில் கசப்பாகத்தான் இருக்கும்... நலம் பெற்றால் சரி...

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்