• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, டிசம்பர் 24, 2016

  யாரைத்தான் நம்புவதோ..!


  ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள் சாதாரண குடிமகனின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. புழக்கத்தில் இருந்த பெருவாரியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில், மிகப்பெரும் அளவிலான கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டதா? என்கிற ஐயம் எழாமல் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரி ரெய்டுகளின்போது, கிடைத்து வரும் ரொக்கம் ஓரளவுக்கு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.  ரெய்டுகளில் பிடிபடும் ரொக்கத்தில் பெரும்பகுதி புதிய நோட்டுக்களாகவே உள்ள நிலையில், இவையும் பதுக்கப்படுவதற்காகவே மாற்றப்பட்டிருப்பது தெளிவாகிறது.


  வங்கிகளுக்குள் வந்துள்ள 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஈடாக புதிய கரன்சி வெளியிடப்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறிவரும் நிலையில், இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டு பதுக்கல்களின் காரணமாக இருக்கின்ற பணப்புழக்கமும் மேலும் தேக்கமடையும் என்றால் ஏற்கெனவே சங்கடத்தில் ஆழ்ந்திருக்கும் பொதுமக்கள் என்ன செய்வர்.

  இது ஒருபுறம் இருக்க, குறைந்த கடன் வட்டி விகிதங்களுக்கான சூழல் ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். அதாவது, வங்கிகளில் வந்து சேர்ந்துள்ள பணத்தை வெறுமனே வைத்திருக்க முடியாது என்பதால், கடன்கள் மூலமாக அவற்றிலிருந்து வருவாய் பெறவே வங்கிகள் விரும்பும். அதிக தொகை கையிருப்பில் உள்ளதால், கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்பதும் ஏற்கத்தக்கதே.


  ஆனால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமானால் அது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியையும் குறைக்கும் எனும் போது, வங்கிகளின் வட்டியை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான ஓய்வூதியக்காரர்களின் வருவாய் பாதிக்கப்படாதா என்பது ஒரு கேள்வி.

  மேலும், கடந்த செப்டம்பர் மாதம் வரையில் வாராக்கடன்களின் அளவு ரூ.6.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்கிற புள்ளிவிவரம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.  கடன் ஒழுங்காக செலுத்தப் படாது காலதாமதமானதன் காரணமாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட கடன்களையும் வாராக்கடன்கள் வரிசையில் சேர்த்தால் பிரச்சினைக்குரிய கடன் தொகை என்பது ரூ.11 முதல் 12 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

  இது வங்கிகள் வழங்கியுள்ள ஒட்டுமொத்த கடன் களில் 14 முதல் 15 சதவிகிதமாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய அபாயமான சூழல் புதிதாக வட்டி விகிதங்களை குறைப்பதனால் அதிகரிக்கவே செய்யும் என்கிற அச்சமும் இயல்பானதே.

  அதுமட்டுமல்லாமல், அதானி மற்றும் அம்பானி சர்க்கார் என பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கேலி செய்து வரும் சூழலில், அதை மாற்றுவதற்காக கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அதானி குழுமத்திற்கு ரூ.72 ஆயிரம் கோடியும், அம்பானி குழுமத்திற்கு ரூ.1.13 ஆயிரம் கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் மிகப்பெரும் எடுப்பில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் பிஜேபி குற்றம் சாட்டியுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.

  2013 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே ரூ.1.14 ஆயிரம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு கடன்கள் அதிகமாக வழங்கப்படுதல் என்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாகிவிடாதா என்கிற எண்ணமும் ஏற்படுகிறது.

  இதெல்லாம் போக, பணப்புழக்கத்தில் தேக்க நிலை தொடர்வதன் காரணமாக மின்னணு பரிவர்த்தனை முறைக்கு மாறுவது குறித்து பேசப்படுகிறது. கிட்டத்தட்ட 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்திய பொருளாதாரம் உலகின் ஏழாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள நிலையில், முன்னணியில் உள்ள 6 வளர்ந்த நாடுகளிலும்கூட இன்னமும் 40 முதல் 45 சதவிகித ரொக்க பரிவர்த்தனையே மேற்கொள்ளப்படும்போது, இந்தியாவில் 100 சதவிகிதம் அவசியமா அல்லது சாத்தியமா என்கிற கேள்வியும் எழுகிறது.

  இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில், நாடாளும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் என சிலர் சேர்ந்து அடித்திருக்கும் கொள்ளை பற்றிய செய்திகள் மூச்சு முட்டுவதாக அமைந்துள்ளதையும் மறுக்க இயலாது. 8 சதவிகித வளர்ச்சி தொடர்ந்தும் பல்லாண்டுகளுக்கு கொண்டு செலுத்தப்பட்டாலே நாடு மேம் பாடு அடையும் எனும் போது, அதற்கான பாதையில் நாம் பயணிக்கிறோமா என்கிற கேள்வியையும் இந்த நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.

  பழைய சினிமா பாட்டு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்... என்று துவங்கும் அந்த பாடல் வரிகளின் உணர்வைத்தான் சாதாரண குடிமகன் பிரதி பலிக்கக்கூடும். நம்பிக்கைக்கு வாய்ப்பு இருக்குமா என்பது வரும் காலம் தான் சொல்ல வேண்டும்.


  கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 
  5 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்