• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, டிசம்பர் 30, 2016

  மர்மம் விலகுமா.. மந்திரம் பலிக்குமா?


  டந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்களை பாடாய்படுத்தி வந்த ரூபாய் நோட்டு விவகாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும், அதன் பின்னணியில் எழுந்த பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறைவதற்கு இன்னும் சில காலாண்டுகள் ஆகக்கூடும் என்றே கருதப்படுகிறது.


  எதிர்பார்த்ததைவிடவும் பெருவாரியாக கிட்டத்தட்ட மொத்த தொகையுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துவிடும் என்றே தெரிகிறது. ஏற்கெனவே 90 சதத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது.  இது எதைக்காட்டுகிறது என்றால் கருப்பு பண மலைகள் சிறு குன்றுகளாகவும், சிறுகுன்றுகள் சின்னஞ்சிறு ஜல்லிக் கற்களாகவும் மாறி அதிகாரப்பூர்வ பாதையில் பயணித்து இலக்கை அடைந்துவிட்டது என்பதைத்தான்.


  2014 ஆம் ஆண்டு வாக்கில் கருப்பு பணத்தை ஒழிப்பதில் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்புகள் பெரிய அளவில் ஒத்துழைக்காது என்றும், கருப்பு பணத்தை பதுக்குவோர் சின்னஞ்சிறு பகுதிகளாக அவற்றைப் பிரித்து மாற்றிவிடுவர் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தீர்க்க தரிசனத்துடன் தெரிவித்தது தற்போது நினைவுக்கு வருகிறது.

  ஆனால், மறைமுக வரி மற்றும் நேரடி வரிகள் வசூல் அதிகரித்திருப்பதாகவும், அதனால் பொருளாதாரம் சுணங்கிவிட்டது என்கிற குற்றஞ்சாட்டு எடுபடாது என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.  ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், கையிலுள்ள பணம் அனைத்தையும் வங்கிகளில் செலுத்துவதைவிட  அடைக்க வேண்டிய கடன்கள் மற்றும் வரிகள் போன்றவற்றிற்கு அதனைப் பயன்படுத்தினால் அதற்குப் பதிலளிப்பது எளிதாக இருக்கும் என பலரும் எண்ணியதால், இத்தகைய வரி வசூல் அதிகரிப்பு நிகழ்ந்திருக்கக்கூடும்.

  கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் மதிப்பு கொண்ட கடன்கள் ரொக்கமாக திரும்ப செலுத்தப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளதும் உண்மையே. வரி வசூல் உயர்வையும், சந்தையில் பணப்புழக்க தேக்க நிலை காரணமாக உற்பத்தி இழப்பு, தேவை குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை ஒப்பிடமுடியாது என்பதோடு, மூன்றவாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும் எனும்போது, பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை என எவ்வாறு நிதியமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை.


  அதேநேரம், 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக  கிட்டத்தட்ட 51 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் ரூ.2.13 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்பதும், 80 லட்சம் முதல் 1 கோடி வரையிலான கிட்டத்தட்ட ரூ.3.93 லட்சம் கோடி மதிப்பிலான டெபாசிட்டுகள் 1,14,000 வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  டிசம்பர் 17 ஆம் தேதி வரையில், இந்த வகையில் கிட்டத்தட்ட 7 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை உள் வந்திருப்பதாகத் தெரிகிறது.  கிட்டத்தட்ட 60 லட்சம் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இத்தகைய டெபாசிட்டுகளை மேற்கொண்டுள்ள தாகத் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு சந்தேகத்திற்கு இடமான டெபாசிட்டுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட, வங்கிகளில் விசயம் அறிந்து இந்த அளவிற்கு டெபாசிட் செய்தவர்கள் அதற்கு பதில் சொல்ல தயாரான மனநிலையில்தானே டெபாசிட் செய்திருப்பார்கள் எனும் கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

  ரெய்டுகள் மூலமாக ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வருமானம் காட்டப்படாத தொகை பிடிப்பட்டுள்ளது என்றாலும், மொத்த பணப்புழக்கத்தில் இது குறைவானதே. இந்நிலையில், அடுத்த ஒரிரண்டு நாட்களில் பிரதமர் இது குறித்து நாட்டு மக்களுடன் பேசுவார் என்கிற செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல், நவம்பர் 8 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை போன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஆனால் அதேநேரம் நாட்டு மக்களின் தற்போதைய சங்கடங்களை தீர்க்கும் வகையிலும் அத்தகைய அறிவிப்புகள் இருக்கும் என்றும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளுக்குள் வந்துள்ள பணத்தின் நம்பகத்தன்மை குறித்த மர்மம் விலகுமா என்பதும், சுதந்திர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்ட பிரதமரின் பொருளாதார, அரசியல் மந்திரம் பலிக்குமா என்பதும் வரும் நாட்களில் தெரிய வரக்கூடும்.


  ஏனெனில் பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தாலும், கருப்பு பணம் ஊழல் ஒழிப்பு என்கிற கோசம் மக்களை அதிகம் ஈர்த்ததன் காரணமாகவே அவர்கள் அமைதியாக உள்ளனர் என்பதும், ஒரு எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்துக்கொண்டுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத யதார்த்தமாகும். என்ன சொல்வார் மோடி?


  கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 
  7 கருத்துகள்:

  1. ஹேஷ்யக் கட்டுரைகள். என்ன நடக்கும் என்று பிரதமருக்கே தெரியாத நிலையில் இதுபோன்ற கட்டுரைகள் பெரிய புதிய தகவல் எதுவும் தராது.

   பதிலளிநீக்கு
  2. எதுவென்றாலும், இன்னும் 6 மாதத்திற்கு பலருக்கும் திண்டாட்டம் தான்...

   பதிலளிநீக்கு
  3. it is nothing but small treatment, who asked for where is my 15lac in my account which modi promised in election campaign.

   so mr modi took a revenge and put all in road to take first your account money without problem, so people will not arise the question again and again.

   modi's smart move nothing else to say.

   affected indian-

   பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை சகோ! இன்னும் சற்று காலம் ஆகும் என்றே தோன்றுகின்றது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்