Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கால் கடுக்க நிற்கும் மக்கள் கைவிட்டுவிட்ட மக்களவை


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எவ்வித பலனுமின்றி முடிந்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை மக்களுக்கு அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்கே கால் கடுக்க கிலோ மீட்டர்களில் நீளும் வரிசைகளில் நின்று வாடி வரும் மக்கள் தங்களது சிரமங்களும், வேதனைகளும் நாடாளுமன்றத்தில் எதிரரொலிக்கும் என்றும், அதன் அடிப்படையில் தங்களுக்கு கொஞ்சமேனும் சிரமங்கள் குறையும் என்றும் எண் ணியிருந்தது தற்போது தவிடு பொடியாகியுள்ளது.


கண்ணியமான முறையில் எதிர்ப்புகளை தெரிவிக்கும் நாடாளுமன்ற நடைமுறைகள் காற்றோடு போய்விட்டதாகவும், நியாயமான கேள்விகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில பொதுமக்கள் நலன் குறித்த விசயங்களை ஆள்வோருக்கு எடுத்துச்சொல்லும் வாய்ப்புகளும் மறுதலிக்கப்பட்டு விட்டதாகவும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ஹமீத் அன்சாரி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையிலும்கூட சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், நாடாளுமன்றத்தின் மாண்பை இத்தகைய இடையூறுகள் தகர்த்துவிட்டதாகவும், மக்களின் எண்ணத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளின் மீது ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும், பிரதமர் அதுகுறித்து பேச வேண்டுமென்றும் பிடிவாதம் பிடித்த எதிர்கட்சிகள், பின்னர் அரசு தங்களை காயப்படுத்திவிட்டதாகவும் அதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தை மேலும் முடக்கக்கூடிய நடவடிக்களை மேற்கொண்டனர் என்றால் ஆளும் தரப்பும் எதிர்கட்சிகளை அணுசரித்து எத்தகைய விவாதத்தையும் ஏற்கத்தக்க உறுதியை காண்பிக்கவில்லை என்பதும் சோகமே.


அதுமட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் சீர்திருத்தமாக குறிப்பிடப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி விதிப்பு குறித்த நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ள முடியாமல் போன காரணத்தினால், திட்டமிட்டபடி 2017 ஏப்.1 முதல் புதிய வரி விதிப்பு அமலாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளுவோர் தனிப்பெரும்பான்மையை கருத்தில் கொண்டு எதேச்சதிகார மனோபாவத்துடன் நடந்து கொள்வதாகவும், இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்தும் குறைகூறி வரும் நிலையில், மக்களுக்கான விவாதங்களை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்ற வேண்டிய நாடாளுமன்றம், பயனின்றி கூடி களைவது பணவிரயம் மட்டுமல்லாது, நாம் போற்றி பாதுகாத்து வரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

நாளடைவில் இத்தகைய உயரிய அமைப்புகள் மீது ஒருவித சலிப்புத்தன்மையை மக்களிடம் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திவிடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.  அதிபர் முறை ஆட்சி போன்ற அவ்வப்போது தோன்றும் கோசங்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் வலுசேர்ப்பதாகவும் அமைந்துவிடும் என்பதும் துரதிர்ஷ்டமான யதார்த்தம் ஆகும்.

ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அனைவரும் குறிப்பாக சான்றோர்கள், சமூக நல ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு நாடாளுமன்றம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான கருத்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமாகியுள்ளது. மேலும், தற்போதைய சூழலில் ரூபாய் மதிப்பு இழப்பு விவகாரம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அமலாக்கம் போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களை நடத்துவதற்கு ஏதுவாக விசேச நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், வலியுறுத்த வேண்டியதும் அவசியம்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் செய்தன என்றால், தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதனையே செய்வது என்பது உண்மையான ஜனநாயகமா என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட கட்சிகளின் நலன்களை விடவும் அல்லது தலைவர்களின் ஈகோக்களைவிடவும் நாட்டின் நலன் முக்கியம் என்பதால், நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறப்புக்கூட்டத்தை கட்சி வேறுபாடின்றி அனைவரும் வற்புறுத்த வேண்டும். ஏனெனில், வருங்கால சந்ததியின ருக்கு சிறப்பான நாடாளுமன்ற ஜனநாயகத்தை விட்டுச்செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும் என்பதை மறத்தல் ஆகாது.

இனியாகிலும் மாறுமா மக்களவை காட்சிகள். கை பிசைந்து நிற்கிறான் கடைசிக் குடிமகன்.

கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 




3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை