• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், டிசம்பர் 26, 2016

  மதிப்பு மிக்கது மக்களின் தியாகம்


  ணவாட்ட சூழல், பொருளாதாரத்தின் போக்கு ஆகியவை குறித்து நிதி ஆயோக் அமைப்பின் பொருளாதார வல்லுநர்களுடன் இன்று பிரதமர் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளை அறிவித்தபோது 50 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார் பிரதமர். இன்றைக்கு 45 நாட்களுக்கு மேலாகியும் பணவாட்ட நிலவரத்தில் பெருத்த அளவில் மாறுதல்கள் இல்லை என்பது யாவரும் அறிந்ததே. தனது குழந்தைகளின் திருமணத்தை தான் விரும்பியவாறு செய்ய முடியாமலும், ஆசைப்பட்ட பொருட்களை வாங்க முடியாமலும், அடுத்தவருக்குத் தேவையான நேரத்தில் உதவ முடியாமலும் சராசரி குடிமகன் சிரமப்பட்டதோடு, அன்றாடச் செலவுகளுக்கும் அல்லல்பட வேண்டியிருப்பது கண்கூடு.


  அதேபோல் தொழில் வர்த்தக நிறுவனங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே 25 முதல் 40 சதவிகித வர்த்தக இழப்பை சந்தித்துள்ளதும் உண்மையே. கருப்பு பணம் ஒழிக்கப்படும், லஞ்ச ஊழல் வேறோடு களையப்படும் என்றெல்லாம் பிரதமர் சொன்னதன் அடிப்படையில், நாட்டு மக்கள் 45 நாட்களாக செய்துள்ளது அளப்பரிய தியாகமே.  அதன் அடிநாதம் என்னவெனில் எவ்வகையிலாவது நாட்டிற்கு நல்லது நடக்கவேண்டும் என்பதே.


  எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக பழைய நோட்டுகள் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில், கருப்பு பணம் எங்கே என்று எழும் கேள்விகளை தவிர்த்துவிடுவோம். அதேபோல், உள்ளே வந்துள்ள பணம் அனைத்தும் வெள்ளை அல்ல, வரிக்கு உட்பட்ட பிரிவும் உள்ளது. அதன் அடிப்படையில் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும் என்றும், நிதியமைச்சர் தொடர்ந்து கூறி வருவதையும் பொருட்படுத்த வேண்டாம் என வைத்துக் கொள்வோம்.

  ஆனால், சமீப நாட்களில் நாடெங்கும் நடைபெறும் வரிச்சோதனைகள் கருப்பு பணத்தின் பிரம்மாண்டத்தில் ஒரு துளியை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ள நிலையில், தற்போது பிரதமர் அறைகூல் விடுத்துள்ளதுபோல், லஞ்ச ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக ஒரு ராணுவத்தை எதிர்க்கத்தக்க அளவில் போர் நடத்தப்படும் என்றும், நாட்டின் நலன்களுக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தயங்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருப்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

  மொத்தம் 4 ஆயிரம் கோடிகளுக்குள்தான் இத்தகைய சோதனைகளில் கணக்கில் வராத பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றாலும், துணிச்சலுடன் இத்தகைய சோதனைகள் தொடரும் என்றால் மிகப்பெரும் எடுப்பில் நிழல் பொருளாதாரம் சுத்தப்படுத்தப் படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதையும் மறுக்க இயலாது.


  உதாரணமாக, தமிழகத்தில் மணல் விற்பனையில் மட்டுமே நாளொன்றுக்கு ரூ.150 கோடியை முறை கேடாக தனி நபர்கள் கொள்ளையடிக்க இயலும் என்கிற யதார்த்தம் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டிருந்தும், தற்போது அரசு நடவடிக்கைக்குப் பின்னரே அதனுடைய வீச்சின் அளவை உணர முடிகிறது எனும்போது, இதே தீவிரத்துடன் மத்திய அரசு நடவடிக்கைகளைத் தொடரும் என்றால் பெரும் அளவு பயன்கள் விளையும் என்பது நிச்சயம்.

  சொல்லப்போனால், அத்தகையதோர் ஆதாயத்திற்காகத்தான், யதார்த்த நிலவரம் பிரதமர் சொன்னது போல் அமையவில்லை என்றாலும் கூட, சாதாரண குடிமகன் தனது சிரமங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டதோடு, மனக்குமுறல்களை போராட்டங்களாகவோ, வன்முறையாகவோ வெளிப் படுத்தவில்லை என்பதையும் உணர்தல் அவசியம்.

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே எதிர்பார்த்த பலனைத் தராது என்பதால், அதுவே முதற்படி என்றும், அடுத்ததாக பினாமி சொத்துக்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதும் முற்றிலும் வரவேற்கத்தக்கதே. அதேநேரம், பெருமளவில் வரி ஏய்ப்பு உருவாவததற்கான அடிப்படைக்காரணம் நாட்டில் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதும், வரித்துறை அமைப்புகள் குற்றவாளியைப்போல் எவரையும் நடத்துவதுமே ஆகும் என்பதையும் மறுக்க இயலாது.  இந்நிலையில், குறைந்த வரி விகிதங்கள் கொண்ட பொருளாதாரச் சூழல் தற்போதைய தேவையாகியுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.


  மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதம் என்கிற முனைப்பு இல்லாது, ஓரளவிற்கு கொண்டு வரலாம் என்பதோடு, ஆதாருடன் இணைந்த செயலிகள் மூலமாக இந்திய தொழில்நுட்பங்களைக் கொண்டே விசா போன்ற அந்நிய நிறுவனங்களுக்கு வருவாய் பெருகாத வகையில் அதனை வகைப்படுத்த முடியுமானால், பின்னாளில் பல்வேறு வரிகள் களையப்பட்டு பரிமாற்றங்களுக்கான சிறிய வரி என்கிற வகையில், நாட்டிலுள்ள பெருவாரியான மக்களை வரிக்கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்துவிட முடியும் என்பதால், அதன் அடிப்படையிலும் மத்திய அரசு சிந்தித்தல் நலம்.

  கருப்பு பணம், லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பிரதமர் மோடி
  தோற்றுவிட்டார் என்றால், ஒரு அரசியல் வாதியாக அவருக்கு அரசியல் ரீதியான தோல்வியே கிடைக்கும் என்றாலும், நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மகத்தான, எளிதில் கிடைக்காத வாய்ப்பு அனாவசியமாக வீணடிக்கப்பட்டுவிடும் என்பதோடு, அதனை ஒரு வரலாற்றுப் பிழையாகவும் காலம் கருத்தில் கொள்ள நேரிடும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

  ஏனெனில், மிகவும் மதிப்பு மிக்கது மக்களின் தியாகம். அதற்குரிய விலை, நியாயமான விலை நாட்டுக்குக் கிடைத்தே ஆகவேண்டும்.
  11 கருத்துகள்:

  1. மதிப்பு மிக்க மக்களின் தியாகம் நிச்சயமாக மதிக்கப்பட வேண்டும். பல்வேறு முக்கிய விஷயங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  2. இந்த தலைப்பில் தொடர்ந்து பொறுப்பான பதிவுகளை நாடு நிலையோடு வெளியிட்டு வருகிறீர்கள்... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...நன்றி...

   பதிலளிநீக்கு
  3. நாளைப்பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்ற நம்பிக்கையில்தான் நாளும் விடிந்துகொண்டிருக்கிறது.

   பதிலளிநீக்கு
  4. நல்லது நடக்கவேண்டும் நண்பரே
   பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று
   தம +1

   பதிலளிநீக்கு
  5. நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரிடமும். பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!

   நல்ல கட்டுரை.

   பதிலளிநீக்கு
  6. உண்மை, துன்பப்பட்டாலும் நல்லது நடந்தால் சரி என்ற மக்களின் தியாகமும் கஷ்டங்களும் வீணாகக்கூடாது.

   பதிலளிநீக்கு
  7. உண்மைதான் சகோ! இடையில் அதிருப்தி ஏற்பட்டது. ஏனென்றால் மோடி அவர்களின் அறிவிப்பு மிகவும் நல்லதே என்றாலும் ஒரு சில வகைகளில் நடைமுறையில் பல பிரச்சனைகள். இன்னும் ஆழ்ந்து சிந்தித்து முன்னேற்பாடுடன் எடுத்திருக்கலாமோ என்றுதோன்றுகிறது. இன்று கூட வங்கிக்குச் சென்றால் 10.20 நான் செல்லும் போது எனக்கு முன்னால் 10 பேருக்குத்தான் பணம் வழ்னகப்பட்டது. எனக்கு முன்னால் இருந்த 2 வரிலிருந்து 11 வது நபருக்குப் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இதுவும் முதல் நாள் இரவே வங்கியின் வாசலில் இடம் ரிசர்வ் செய்து வைக்க வேண்டுமோ என்று தோன்றும் அளவிற்கு இருக்கிறது. ஆனால் மக்கள் எந்தவிதக் கூக்குரலோ எதிர்ப்போ எழுப்பவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் தியாகம் தான். என்றாலும் தற்போதைய செய்திகள், ரெய்டுகள் மனதிற்குக் கொஞ்சம் மகிழ்வைத் தருகின்றன நம்பிக்கை ஊட்டுகிறது..நல்லதே நடக்கும் என்பதை நம்புவோம்....இன்னும் எழுதலாம் ஆனால் பதிவாகிவிடும் அபாயம் ஹஹஹ் எனவே..இங்கு நிறுத்திக் கொள்கிறேன்.

   கீதா

   பதிலளிநீக்கு
  8. தற்போதைய நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.இந்த நிலைமாறும் நம்பிக்கையுடன்
   காத்திருப்போம்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்