'வெள்ளையம்மாள்' ஜல்லிக்கட்டு காளையர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்! தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் பெயர்! அவர்களை ஓட ஓட ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து பந்தாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் காளை! ஒவ்வொரு வருடமும் இந்தக் காளையை அடக்க வேண்டும் என்பது மாடுபிடி வீரர்களின் கனவு. ஆனாலும் யார் கைக்கும் பிடிபடாத காளை இது.
இப்படி பிடிபடாமல் இருப்பதாலும், இந்தக் காளையை ஒரு சின்னஞ்சிறிய பெண் வளர்ப்பதாலும் பெரும் புகழ் அடைந்துவிட்டது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் காளையின் மீது பல பரிசுப்பொருட்களை அறிவிப்பார்கள். அதிலும் யாருக்கும் அடங்காத காளை என்றால் பரிசுப்பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏராளமான பரிசுகள் குவிந்திருக்கும்.
காளையைப் பிடித்துவிட்டால் பிடித்த வீரருக்கு அந்தப் பரிசுப்பொருட்கள் போய்சேரும். பிடிபடவில்லையென்றால் காளையை வளர்ப்பவர்களுக்கு எல்லா பரிசும் சென்று சேரும். இப்படி வெள்ளையம்மாள் வாங்கி வந்த பரிசை குவித்து வைக்க தனியாக பெரிய அறை ஒன்றையே கட்டியிருக்கிறார்கள்.
நான் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நிறைய ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் முறையை நேரில் பார்த்திருக்கிறேன். அதுவொரு முரட்டுத்தனமான பயிற்சியாக இருக்கும். இந்தக் கிராமங்களில் கேட்டுப்பார்த்தால் ஒரு பயிற்சிப் பட்டறையே நடத்தும் அளவுக்கு காளை வளர்ப்பைப் பற்றி பேசுவார்கள். தினமும் காலை மாலை காளையை நீண்ட தூரம் வாக்கிங் கூட்டிப்போவார்கள். அதன்பின் குளத்தில் நீந்த வைப்பார்கள். இவையெல்லாம் காளையின் கால்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சி.
மற்ற நேரங்களில் மண் மேவப்பட்ட இடத்தை கொம்பால் குத்தி குத்தி கொம்புகளை வலுப்படுத்தும் பயிற்சியைக் கொடுப்பார்கள். இவற்றை எல்லாம் சரியாக செய்தபின், வைக்கோலில் மனிதனைப் போல் உருவம் செய்து கொம்பால் அதனை குத்த வைத்து பயிற்சி கொடுப்பார்கள். இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் பனியன் போட்டிருக்கும் ஆண்களைப் பார்த்தாலே அவர்களை முட்டத் தயாராகிவிடும். எப்போதும் ஒருவித வெறியோடு மனிதனை எதிரிப்போலவே முறைக்கும். ஜல்லிக்கட்டு நேரம் என்றில்லை எந்த நேரத்திலும் அந்தக் காளையை கண்டாலே மனிதர்கள் பயந்து ஒதுங்குவார்கள்.
நாங்களெல்லாம் காளைகளை படம் எடுப்பதென்றால் ஒரு 25 அடி தொலைவில் இருந்துதான் எடுப்போம். அப்போதும் ஒருவித பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், வெள்ளையம்மாள் அப்படியில்லை. அது மற்ற காளைகளைப் போல கட்டுமஸ்தாகவும் இருக்கவில்லை. விரைகள் நீக்கப்பட்ட ஒரு வேலைக்கார காளைப் போலவே இருந்தது. அதன் கழுத்தை நம் கைகளால் வருட முடிகிறது. 'வா' என்றால் வந்து நிற்கிறது. 'சாப்பிடு' என்றால் சாப்பிடுகிறது. 'படு' என்றால் படுத்துக் கொள்கிறது. தனது எஜமானியின் வார்த்தைக்கு பெட்டிப் பாம்பாக அடங்குகிறது. இதெல்லாம் மற்ற ஜல்லிக்கட்டு காளைகளிடம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆச்சரியங்கள்.
இந்த வெள்ளையம்மாளின் எஜமானியின் பெயர் ரேணுகா. வயது 16. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு போக மற்ற நேரங்களில் காளையோடுதான் இவரின் பொழுதுபோக்கு. ரேணுகாவின் ஐந்து வயதிலிருந்தே வெள்ளையம்மாள் தான் உயிர்த்தோழன். உணவு, உறக்கம் எல்லாமே இந்தக் காளையோடுதான். இப்போது 13 வயதாகும் காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வதும் ரேணுகாதான்.
"பெண்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது அபூர்வம். அதிலும் எங்கள் கிராமத்துப் பெண் வளர்க்கும் இந்தக் காளையை ஒருமுறை கூட பிடிபட்டதில்லை என்பது எங்கள் கிராமத்துக்கே பெருமை" என்கிறார், சாத்தாம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் சின்ன தொந்தி. இவர் பெருமையாக சொல்லும் அந்தக் கிராமம் இருப்பது திண்டுக்கல் மாவட்டத்தில்.. விளாம்பட்டி அதன் பெயர்.
வெள்ளையம்மாள் வீட்டில் வளர்ப்பவர்களிடம் பணிவாக நடந்தாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலுக்கு வந்துவிட்டால் இது அடங்காத காளையாகிவிடும். பனியன் அணிந்து கும்பலாக இருக்கும் ஆண்களைக் கண்டால் வெறி தலைக்கேறும். கண்ணிமைக்கும் நேரத்தில் வாடிவாசலிலிருந்து சீறிப்பாயும், யாரும் கிட்டே நெருங்க முடியாது. ஒருவருக்கும் பிடிபடாமல் எல்லைக் கோட்டைத் தாண்டிவிடும்.
ஒரு ஆண் காளைக்கு எதற்காக ஒரு பெண்ணின் பெயரை வைத்தார்கள் என்று என் மனதில் தோன்றிய சந்தேகத்தை ரேணுகாவின் பெற்றோர் கருப்பணன் மற்றும் செல்வியிடம் கேட்டுவிட்டேன்.
"எங்கள் குலதெய்வம் வெள்ளையம்மாள்தான். வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமும் அதுதான். அதனால்தான் காளைக்கு எங்களின் குலதெய்வம் பெயரையே வைத்துவிட்டோம். நாங்கள் வளர்க்கும் பசுக்களுக்கும் இதே பெயர்தான். சில வருடங்கள் நாங்கள் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கவில்லை. அப்போது எங்கள் குலதெய்வம் எனக்கு ஒரு காளை வேண்டும். அதற்கு என் பெயரை வைத்து வளர்க்கவும் என்று கட்டளையிட்டது. அதன்படி இந்தக் காளையை வளர்த்து வருகிறோம்." என்றனர்.
கடைசியாக காளையை வளர்க்கும் ரேணுகாவிடம் காளை வளர்ப்பு, பயிற்சி ரகசியத்தை கேட்டேன். சிறப்பான பயிற்சி எதுவும் இருக்கிறதா என்றேன்,"அப்படியெதுவும் கொடுப்பதில்லை. சாதாரணமாக பசுக்களை எப்படி வீட்டில் வளர்ப்போமோ, அப்படிதான் வெள்ளையம்மாளையும் வளர்க்கிறோம். பருத்திக் கொட்டை, புல்லுக்கட்டு இவைகள்தான் இதன் உணவு. இதுபோக மேய்ச்சலுக்கு செல்லும், ஜல்லிக்கட்டு காளை என்பதற்காக எந்த விஷேசமான உணவும் தருவதில்லை. வெள்ளையம்மாள் மற்ற மாடுகளைப் போல் மனிதர்களோடு நெருங்கிப் பழகும். ஆனால் தெய்வாம்சம் பொருந்திய காளை. எங்கள் குலதெய்வம் உத்தரவு கொடுத்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துப் போவோம். அப்படி போனால் கண்டிப்பாக வெற்றிதான். தெய்வம் உத்தரவு கொடுக்கவில்லை என்றால் எப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவாக இருந்தாலும் அழைத்துப் போகமாட்டோம். ஓரிரு முறை குலதெய்வம் உத்தரவு தராத போதும் முக்கியமான ஜல்லிக்கட்டு என்பதற்காகவும் பெரிய மனிதர்கள் வந்து அழைத்தார்கள் என்பதற்காகவும் வலுக்கட்டாயமாக வெள்ளையம்மாளை இழுத்துக்கொண்டு போனோம். ஆனால், அது வராமல் அடம் பிடித்து, பிடிவாதமாக நின்று விட்டது. இதுவே குலதெய்வம் உத்தரவு கொடுத்து விட்டால் மினி லாரி வந்ததுமே யாரும் சொல்லாமல் அதுவாகவே லாரியில் சென்று நின்று கொள்ளும். வெள்ளையம்மாள் வெற்றிக்கு குலதெய்வமே காரணம்." என்று ஆச்சரியமும் பெருமிதமும் கலந்த குரலில் சொல்லி முடித்தார் ரேணுகா.
எது எப்படியோ, கிராமத்தில் படிப்பறிவு இல்லாத பெண்கள் கூட மாடுகளை வளர்க்க தயங்கும் போது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதை யாரும் அடக்க முடியாத எப்போதும் வெற்றி பெரும் காளையாக உருவாக்கியிருப்பது போற்றுதலுக்குரியது. அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துக்களை கூறி விடைபெற்றேன்.!
===========
இந்தக் கட்டுரை 2010-ம் ஆண்டு எழுதப்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பையும் முடித்த ரேணுகாவிற்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. இல்லத்தரசியாக இருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளாமல் வெள்ளையம்மாள் ஓய்வெடுத்து வருகிறான். இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்பதும் ஒரு காரணம்.
ரேணுகா அவர்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குரேணுகாவிற்கு வாழ்த்துகள். அருமையானப்பகிர்வு சகோ. நன்றி
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
மிகவும் ஆச்சர்யமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குinteresting
பதிலளிநீக்குvote plus
ரேணுகா வீரத் தமிழச்சி...
பதிலளிநீக்குவாழ்த்துவோம் ரேணுகாவோடு வெள்ளையம்மாளையும்...
பகிர்வுக்கு நன்றி நண்பரே....
பதிலளிநீக்குஇந்த ஆண்டாவது வெள்ளையம்மாள் ‘ஜல்லிக்கட்டு’ போட்டியில் கலந்துகொள்ள இயலுமோ? காலம் (நீதி மன்றம்) தான் சொல்லவேண்டும்! தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குGovernment should support what peoples need,it should conduct this time. We all raise our voices for it.
பதிலளிநீக்குகருத்துரையிடுக