Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!


அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இந்தியா; இந்த மனித சரித்திரம் பார்க்காத மிகப்பெரிய ஊரடங்கைப் பூமிக்கு அளித்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்த நேரம். 

இன்றைய நாட்கள் போல் அன்று கொரோனாவை துச்சமாக எண்ணாத மக்கள் அதிகம் இருந்தார்கள். எல்லோருக்கும் உயிர் பயம் என்பது உணவைவிட அதிகமாக இருந்தது. வீட்டுக்கு அடங்காத ஒரு சில இளசுகள்தான் ஊர் சுற்றி, போலீசிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார்கள். 

எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு பலருக்கு வாழ்வையே சுழற்றிப்போட்டிருக்கிறது. வெளியூர்களுக்குச் சென்றவர்கள் அங்கேயே மாட்டிக்கொண்டார்கள். 

மதுரையிலிருந்து காசிக்குப் புனித யாத்திரை சென்ற 15 முதியவர்கள் திரும்பி வரமுடியாமல் காசியிலே உணவும் உறைவிடமும் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். எனது நண்பரின் குடும்பம் ஒன்று டெல்லிக்குச் சுற்றுலா சென்று அங்கேயே மாட்டிக்கொண்டது. தங்கும் விடுதியே அவர்களின் வீடானது. 

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல சாமானியர்கள் தெய்வங்களாக மாறினார்கள். அந்த விடுதி உரிமையாளரும் அப்படித்தான் மாறிப்போனார். அவர் தங்கும் விடுதிக்கான கட்டணம் எதுவும் வாங்கவில்லை. அவர்கள் நான்கு பேருக்கும் நல்ல உணவு. அதற்கும் ஒரு பைசா வாங்கவில்லை. டெல்லி முழுவதும் கடுமையான ஊரடங்கு நடைமுறையிலிருந்தபோதும் 40 நாட்களாக மனம் தளராமல் அவர்களுக்கு உணவளித்தார்.

சிறப்பு ரயில் விடப்பட்ட போதுதான் அவர்களால் தமிழகம் வரமுடிந்தது.  அப்படி அவர் வந்தபோது கூட கை செலவுக்காக 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தனுப்பினார். 'எல்லாம் சரியான பிறகு இந்தப் பணத்தைக் கொடுத்தால் போதும்..!' என்று அன்பு கட்டளையிட்டார். பணமே பிரதானமாக இருக்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு மனுஷன்..! அதுதான் சாமானியர்களைத் தெய்வமாக்கிய காலம்..!!

சரி, இப்போது என்னுடைய பிரச்சினைக்கு வருகிறேன். 

எனது தம்பி மகள் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வருகிறாள். ஊரடங்கில் தனியாக விடுதியில் மாட்டிக்கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களில் அவளும் ஒருத்தி. சரி, எப்படியாவது 21 நாட்களைச் சமாளித்துவிடலாம் என்று ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு விமான டிக்கெட் எடுத்திருந்தாள். ஆனால், இந்த ஊரடங்கு இப்போதைக்கு முடியாது என்ற செய்தி ஏப்ரல் முதல் வாரத்திலே அரசல் புரசலாக அனைவருக்கும் தெரியத் தொடங்கிவிட்டது. 

அதுவரை மன தைரியத்தோடு இருந்த தம்பிக் குடும்பம் நொறுங்கிப்போனது. ஏனென்றால், அவனுக்கு அவள் ஒரே மகள். அதுவும் செல்லமாக வளர்ந்தவள். வசதியாக வாழ்ந்தவள். 

திடீரென்று உணவுக்கே கஷ்டப்படும் சூழல். கையில் காசிருந்தாலும் வாயில் தோசை இல்லாத நேரங்காலம். எல்லாக் கடைகளும் அடைபட்டுப் போனது. ஹாஸ்டல் பக்கத்திலிருந்த ஒரேயொரு பேக்கரி கடையும் கொஞ்ச நாட்களுக்குப் பின் காலியானது.



மனவலிமை நம்பிக்கை எல்லாமே தளர்ந்து கொண்டிருந்தது. கூடவே கவலையும் பயமும் ஆக்கிரமித்துக்கொண்டது. இனியும் தனித்திருக்க முடியாது என்ற சூழல். ஏப்ரல் 10-ம் தேதி மதுரை காவல் ஆணையருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினோம். அதில் எல்லா விவரங்களையும் எழுதியிருந்தோம். அன்று இரவே அங்கிருந்து பதில் வந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பார்க்கும்படி இருந்தது.

அதை எடுத்துக்கொண்டு மறுநாள் ஆட்சியர் அலுவலகம் சென்றோம்.

வாகன அனுமதிக்காக அங்கே நீண்ட வரிசை நின்றுகொண்டிருந்தது. நாங்களும் நின்றோம்.  எங்கள் முறையும் வந்தது.

"முதலில் நீங்கள் ஹைதராபாத் காவல் ஆணையரிடமிருந்து வாகன அனுமதிச் சீட்டு வாங்குங்கள். அதை வைத்து நாங்கள் கொடுக்கிறோம்." என்றார்கள். எங்களின் பயம் இன்னும் கூடியது. ஏனென்றால் ஹைதராபாத்தில் அப்போதுதான். ஊரடங்கு விதிகளை மீறுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு அளித்திருந்தார் தெலுங்கானா முதல்வர்.

நிலைமை அப்படியிருக்கும்போது ஒரு சின்னப்பெண் எப்படி ஊரடங்கை மீறி காவலர்களைச் சமாளித்து அங்கிருக்கும் ஆணையரைப் பார்க்கமுடியும்? நாங்கள் செய்வதறியாது நின்றோம். அங்கே வந்திருந்த பலரையும் விசாரித்த மாத்திரத்தில் இதற்கெல்லாம் அனுமதி தரமுடியாது என்று அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டுக்குள் செல்வதற்காக அனுமதி கேட்டவர்கள். நாங்களோ வெளி மாநிலம்..!  

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

சுத்தமாகச் சாத்தியமே இல்லை என்று நாங்கள் நினைத்த நேரத்தில். அந்த அதிகாரி மீண்டும் எங்களை அழைத்தார்.

"சார்..! நீங்க லெட்டர் (மனு) எழுதிக்கொடுங்க..!" என்றார்.

நாங்கள் உள்ளதை உள்ளபடி அப்படியே எழுதிக்கொடுத்தோம்.

"இப்படி எழுதினா உங்களுக்கு பாஸ் கிடைக்காது. நான் சொல்ற மாதிரி எழுதுங்க..!" என்றார்.

அவர் சொன்னபடியே...

உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும்.. அங்கு அவளைப் பார்த்துக்கொள்ளப் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்றும், அதனால் மதுரை அழைத்து வருகிறோம் என்று எழுதிக்கொடுத்தோம். அடுத்த அரைமணி நேரத்தில் எங்களுக்கு அனுமதி கடிதம் கிடைத்தது. எங்களுக்கு அந்த அதிகாரி தெய்வமாகத் தெரிந்தார். அவர் மட்டும் அப்படியொரு யோசனை சொல்லாவிட்டால் இப்போது வரை நாங்கள் அவளை அழைத்து வந்திருக்க முடியாது.

ஏப்ரல் மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப் பட்டிருந்தது. அன்று ஏப்ரல் 11-ம் தேதி. 

நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை. இரவே பயணத்துக்கான ஏற்பாட்டில் இறங்கினோம். 

மாற்று உடை எடுத்து வைத்துக்கொண்டோம். மூன்று வேளைக்கும் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டோம். தேவைக்கு அதிகமாகவே குடிநீர் எடுத்துக்கொண்டோம். எங்கும் எந்தக் கடையும் இருக்காது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். 

சரியாக ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இரவு 1 மணிக்கு ஹோண்டா சிட்டி காரில் நான், எனது தம்பி, தம்பி மனைவி மூவரும் ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டோம். 

மதுரை மாநகர சாலைகளில் பல இரவுகள் வாகனங்களில் பயணித்திருக்கிறேன். இரவு ஒரு மணிக்கெல்லாம் வாகனங்கள் பறந்து கொண்டு இருக்கும். ஆனால், அன்று இரவு நான் பார்த்த மதுரை சாலைகளை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அப்படியொரு நிசப்தம். பேரமைதி என்பார்களே அதை அன்று உணர்ந்தேன். அந்த சாலைகள் ஒருவித மிரட்சியை மனதில் உருவாக்கின. 

சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாய்கள் மட்டுமே இருந்தன. அதைத்தவிர எந்தவொரு வாகனத்தையும் பார்க்கமுடியவில்லை. காவலர்களையும் காணமுடியவில்லை. பகலில் அதிக வேலைப்பளு என்பதால் இரவில் இருப்பதில்லை என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

சாலைகளில் தடுப்பு வைத்து மறைக்கப்பட்டிருந்தாலும் வாகனம் போவதற்கான இடைவெளி இருந்தது. மாநகர எல்லை மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர் எங்களை மறித்தார். அனுமதிச் சீட்டை காட்டியவுடன் ஒரு நோட்டில் வாகன எண், எங்கிருந்து எங்குப் போகிறோம், எத்தனை பேர், என்ன காரணம், மொபைல் எண் என்று எல்லாவற்றையும் கேட்டு எழுதிக்கொண்டு  அனுப்பி வைத்தார். 

நான்கு வழிச்சாலையில் மாவட்ட எல்லைகளில் மட்டும் சோதனை சாவடிகளை அமைத்திருந்தார்கள். மற்றபடி பெரிதாக தொந்தரவு எதுவும் இல்லை. 

ஆந்திராவிலும் தெலுங்கானாவில் ஏகப்பட்ட கெடுபிடி இருந்தது. அவர்களின் பரிசோதனை கடந்து செல்வது சிரமமாக இருந்தது. 

பயண அனுபவம் அடுத்த பதிவிலும் தொடரும் 


12 கருத்துகள்

  1. ஊரடங்கு பலரது வாழ்க்கையினையேப் புரட்டிப் போட்டுவிட்டது.
    தங்களின் தொடர் பயணத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. இப்படியான பல அனுபவங்கள் இடையில் வந்தன.

    இத்தொற்று பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

    அடுத்த என்ன என்று அறியத் தொடர்கிறோம்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலவிதமான அனுபவங்கள் பலருக்கும்..!
      வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
  3. தீதுண்மி பலரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் அனுபவங்களை மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவில் மட்டுமல்ல பட்டினியால் இறப்போர் எண்ணிக்கையும் யாரும் அறியா வண்ணம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

      நீக்கு
  4. ஊரே அடங்கி இருக்கும் நிலையில் பயணமா … பாதுகாப்புடன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை