சனி, ஜனவரி 21, 2017

வாட்ஸாப்பில் வந்தவை
தமிழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:-
நாளை நடக்கவிருக்கும் "நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தின்" புகைப்படங்களையோ அல்லது காணொலியையோ யாரும் பகிரவேண்டாம்.
இளைஞர்கள் மீது இருக்கும் கவனத்தை அப்படியே நடிகர்கள் மீது திருப்பிவிடும்.
தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் நாளை நம்மைக் கண்டுகொள்ளாது.
ரஜினி என்ன சொன்னார்?
கமல் என்ன சொன்னார்?
விஜய், அஜித், சூரியா என்ன சொன்னார்கள் என்று தான் விவாதிப்பார்களே தவிர, இளைஞர்கள் படும் துன்பத்தை நாளை துடைத்துவிடுவார்கள்.
அவர்களது போராட்டம் வரவேற்க வேண்டியதுதான். இருப்பினும் நாம் உணர்வுக்காகப் போராடுகிறோம், அது திசைதிரும்பிவிடக் கூடாது.
எனவே, அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நமது நீதியை நிலைநாட்டிட தொடர்ந்து அற வழியில், காந்திய அஹிம்சையில் போராடுவோம்.
இந்தப் பதிவை முடிந்த வரைப் பகிருங்கள்...

============================================நான்கு ஆண்டுகளுக்கு முன் டைடல் அருகே ஈழத்துக்காக நடந்த மனிதச்சங்கிலியைவிட இது மாஸ்.

1) மெரீனா அருகே நெட்வர்க் ஜேம் ஆகிவிட்டது. அதனால் லைவ் செல்ல முடியவில்லை. 'ஜேம் பண்ணிட்டாய்ங்களா' என்று நிறைய மாணவர்கள் கடுப்பாகிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தாலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

2) விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, பாரதிதாசன் சிலை தாண்டி கூட்டம் நீண்டிருந்தது.

3) 100000 பேர் இருப்பார்கள். ஒருவர் கூட போதையில் இல்லை. ஒரு பீடி, சிகரெட் துண்டு இல்லை.

4) 'பீட்டா ஓழிக', 'வரச்சொல் வரச்சொல் ஓபிஎஸ்-ஐ வரச்சொல்', 'மோடி மோடி எங்க போன ஓடி', 'ஜல்லிக்கட்டு காளை எங்க வீட்டுப்பிள்ளை', ஆகிய கோஷங்கள் ரிப்பீட் மோடில் இருந்தன.

5) லோட் வண்டிகள், டாட்டா ஏஸ்களில் இருந்து, வாட்டர் பாக்கெட் மூட்டைகளை கூட்டத்தினர் குடிப்பதற்காக, ரன்னிங்கில் ரோட்டோரத்தில் ஆங்காங்கே போட்டுச் சென்றார்கள் மாணவர்கள் சிலர்.

6) கத்தி முடித்து தொண்டை வற்றிய போது, வலது கையை உயர்த்தியவுடன், எதிர்த்திசையில் இருந்து ஒரு வாட்டர் பாக்கெட் பறந்து வந்தது. எறிந்தவன் எவனென்று தெரியவில்லை, முன்னிருந்தவன் ஒரு கையால் பிடித்து, என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் குடுத்தான்.

7) கண்ணகி சிலைக்கு தெற்கே மாணவர்கள் போராட்டம். வடக்கே எம்ஜிஆர் சமாதி அருகே அதிமுக தொண்டர்கள் கூட்டம். எங்கள் கூட்டத்தை கடந்து சென்ற வேனில் இருந்து ஒரு அதிமுக கொடி நீண்டவுடன், சில நூறு வாட்டர் பாக்கெட்கள் வேனை நோக்கி எறியப்பட்டன. கொடி பொத்திக்கொண்டு உள்ளே சென்றது. அடுத்தடுத்த வேன்களுக்கும் இதே நடந்தது.

8) பறை இசை அடி நொறுங்கியது. தேவையற்ற கோஷங்களை தவிர்த்து, சல்லிக்கட்டுக்காகவும், கைதானவர்கள் விடுதலைக்காகவும் கோஷம் எழுப்ப சொல்லி சிலர் கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

9) கூட்ட நெரிசலில், கூச்சலில் யார் பேசுவதும் கேட்கவில்லை, சார்ட்டுகளில் எழுதி உயர்த்தி காண்பித்தார்கள். தங்கர் பச்சான் வந்து 'மக்கள் தேர்ந்தெடுத்த எம்பி, எம்எல்ஏக்கள் வரும் வரை பள்ளி கல்லூரி செல்ல மாட்டோம்' என்று எழுதிய சார்ட்டை உயர்த்தியவுடன் எழுந்த ஆரவாரம் அடங்க நேரமானது.

10) வயதானவர் ஒருவர் வந்து, கருப்புத்துணி காமிச்சு கத்துங்கப்பா என்று ஒரு பண்டிலை குடுத்துவிட்டு சென்றார்.

11) 'ரிசல்ட் பாத்துட்டியா மச்சி', 'அப்புறம் பாத்துக்கலாம் மச்சி. முதல்ல இவனுகள பாப்போம், பீட்டா ஒழிக' என்று பக்கத்தில் ஒரு கான்வெர்சேஷன் நடந்தது

12) ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து கோஷம் வேண்டாம் என்று சிலர் சொல்லியும், அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

13) பீட்டாக்காரர்கள் இன்று சிக்கியிருந்தால், தக்காளிச்சட்னி கூட மிஞ்சியிருக்காது.

14) காவல்துறை எக்ஸெலண்ட் ஒத்துழைப்பு. ஒரு சத்தம், அரட்டல், உருட்டல் இல்லை. நன்றிகள் பல.

15) கண்ணகி சிலைப்பக்கம், இரண்டு கரைவேட்டிகள், 300 ரூவா பேசுனா குடுக்கணும்ல, ஊருக்குப் போயி தர்றேன்னா என்னா அர்த்தம் என்று புலம்பிக்கொண்டு இருந்தன. 'எம்.ஜி.ஆர்' நூற்றாண்டு விழாவுக்கு 'கூட்டி' வந்திருக்கின்றனர்

16) கார்ப்பரேஷன்காரர்கள், வாக்கிங் ஏரியாவில் தரமான தடுப்புக் கம்பிகள் போட்டிருக்கிறார்கள். 100 பேர் ஏறி நின்றாலும் தாங்குகின்றன.
தலைவனே இல்லாமல், அனைவரும் தொண்டர்களாக, தன் இனத்துக்காக போராடுகிறார்கள். 

அடுத்த தலைமுறை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும்.

காலரத் தூக்கி விட்டுக்கலாம் !

===========================================மெரீனா - Day 2

1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.

2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. 'அவர்களை பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ'ன்னு சொல்லிட்டாய்ங்க :)

3) 'நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க'ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.

4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.

5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு. 

6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.

7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து 'பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்க குடுத்த காசு" ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல்லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.

8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வர கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் 'We Do Jallikkattu' என்று எழுதியிருந்தது.

9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாக சப்ளை செய்தார்கள்.

10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களை பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், 'நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க' னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.

11) இவர்தான் நம்ம சூ சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.

12) ஓபிஎஸ், மோடி படங்களை தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.

13) 'பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா', 'குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா', 'பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே', 'சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா', 'மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு' இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))

14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள். 

15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.

16) பின்னால் இருந்தவன் 'பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்' என்றான். 'ஊரே பாத்துருக்குமேடா' என்றவுடன் 'அய்யய்யோ' என்றான்.

17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.

18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் 'வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் 'ஐஸ்மோர் வேண்டும்' என்று கத்தினான்.

19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, மைக்கில் பேசியவன் " பின்னாடி போ நண்பா. கடல் வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு" என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.

20) தாகம் தீர்க்க கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது

21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு குடை பிடித்தார்கள்.

'3 மாசப்புள்ள நமக்காக போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ? ' னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும்,  நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்.

=============================================

இளைஞர்கள்,  மாணவர்களின் 10 கோரிக்கைகள்.

இந்த போராட்டம் 'காளை'க்காக மட்டும் அல்ல 'நாளை'க்காகவும்   தான்.

#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.

#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.

#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும். 
குழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.

#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா?

#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.

#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.
விவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும்  கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

#7. முதல்வன் படத்தில் வருவது போல் Tamilnaducomplaintbox.com என்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆட்சி முடியும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அடுத்த தேர்தலில் அவரையே தேர்ந்தெடுப்போம்..இல்லாவிட்டால் ஓட்டை மாற்றி குத்துவோம்...குத்தவும் சொல்லுவோம்.

#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

#9. விவசாயிகளுக்கு் என்று ஒரு வெப்சைட் Tamilfarmers.com வேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில்  நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும்  இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல்   olx போல செயல்பட வேண்டும்.

#10. மக்களுக்கு தெரியபடுத்தாமல் எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் வியாபார நோக்கோடு தமிழ்நாட்டிற்குள் வர கூடாது.

 நாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டோம்...இனி தூங்கமாட்டோம்..
சந்தேகப்பட கற்றுக்கொண்டோம்..

இதில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்...

என் தோழர்களே...
நமக்காக நாமே செய்துகொள்ளாவிட்டால், நமக்காக செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்..

=====================================================வெள்ளி, ஜனவரி 20, 2017

'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி..!'


ராணுவ ஒழுங்குடன் நடக்கும் புரட்சி 
ராத்திரியிலும் அயராது தொடரும் அறப்போர்

'ஆகாவென்று எழுந்தது பார் யுக புரட்சி' என்கிற கவிஞனின் வார்த்தைகள் தமிழகத்தில் தற்போது மெய்யாகி நிற்பதை பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்த தமிழகமும் குறிப்பாக, மாணவர்களும் ஜல்லிக் கட்டுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி தொடர்ந்தும் அறவழியில் போராட்டங்களை நடத்தி வருவது அகில இந்தியாவின் கவனத்தை மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அரசியல் கட்சிகள், மற்ற பிற அமைப்புகள் என யாருடைய தூண்டுதலும் இன்றி தன்னிச்சையாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மாணவர்களிடத்திலே எழுந்துள்ள இந்த எழுச்சி தமிழகத்தின் 7 கோடி தமிழர்களின் உணர்வுகளையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

ஜல்லிக்கட்டுக்கு தடை, அதற்கு எதிரான போராட்டம் என்கிற அளவில் மட்டும் இதனை எடுத்துக் கொண்டுவிட முடியாது. தன் இனத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக திரண்டுள்ள எழுச்சியாகவே இது பார்க்கப்படுகிறது. நாட்டு மாடுகள் இன ஒழிப்பு செய்யப்படுகின்றவோ என்கிற அச்சம் வெகு காலமாகவே எழுப்பப்பட்டு வந்துள்ள சூழலில், இனவிருத்திக்கு உதவக்கூடிய காளை இனங்களின் எண்ணிக்கையும் கடுகாக சிறுத்துப் போய்விட்ட பிறகு, தமிழர்தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் போராட்டமாகத்தான் இந்த மாணவர் புரட்சியை பார்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான காளை இனங்கள் இருந்த தமிழகத்தில் கைவிரல்களில் எண்ணிவிடும் அளவிற்கான இனங்களாக அவை சுருங்கிவிட்ட நிலையில், இது மேலும் தொடர் கதையாகிவிடக்கூடாது என்கிற சிந்தனை இந்த போராட்டத்தில் வெளிப்படுவதும் உண்மை.

ஏற்கெனவே ஆலம்பாடி இன மாடுகள் இனஒழிப்பு செய்யப்பட்டுவிட்ட நிலையில், இருக்கின்ற காங்கேயம், புளிக்குளம், மலைமாடுகள் இனங்களையாவது காப்பாற்ற வேண்டுமென்கிற விழிப்புணர்ச்சியும் இந்த போராட்டங்களில் தெரிவதை உணர முடிகிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தை செல்லரிக்கச் செய்யும் பல்வேறு அவலங்கள் குறித்து அனைவரும் அறிந்திருந்த போதிலும், அவற்றிற்கு எதிராக ஒருங்கே குரல் கொடுக்க தயங்கி வந்த நிலையை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் உடைத்துப் போட்டுவிட்டது. இது  தமிழ்ச் சமுதாயத்திற்கும் நற்பலன்களையே அளிக்கும் என்பதையும் மறுக்க இயலாது. பின் பனிக்காலத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் இரவு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, சுட்டெறிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பகல் நேரத்திலும் சற்றும்குறையாத உற்சாகத்துடன் அதனைத் தொடர்வது என்பதும் தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றே என உறுதியாகக் கூறமுடியும்.

மக்களின் எழுச்சி, மத்திய மாநில அரசுகளை ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளதும் உண்மை. தற்போது முதல்வர் பன்னீர்செல்வம் இரண்டொரு நாளில் அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது முற்றிலும் வரவேற்கத்தக்கது.

இருந்தபோதும், தொடர்ந்த ஏமாற்றங்களால் சலித்துப்போயுள்ள போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்து வருவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதுகாறும் எந்தவித சிறு சச்சரவும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் இல்லாத அளவிற்கு ராணுவக் கட்டுப்பாட்டுடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் மாணவர்களின் போக்கு பாராட்டுக்குரியது. இளைய சமுதாயம் முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயமாகவே தோன்றுகின்ற நிலையில், இனி வரும் நாட்களிலும் சமூகத்தின் அவலங்களை களைந்து, சுயநலமில்லா சமூகத்தை நோக்கிய பயணத்தை இந்த இளைய பட்டாளம் தொடரும் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் தற்போது தங்களது போராட்டத்தின் அடிப்படையிலான உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை மாணவர்கள் ஏற்பதே சிறப்பானதாக இருக்கும். ஆனால் அவசர சட்டம் வெளியான பின்னரே இது குறித்து முடிவெடுக்க இயலும் என்கிற நிலையை மாணவர்கள் எடுப்பார்கள் எனில் தங்களின் பிரதிநிதிகளாக ஒரு சிறிய குழுவை போராட்ட களத்திலே முன்னிறுத்தி விட்டு படிப்படியாக பின் வாங்குதல் நலம் பயக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் பல நாட்களாக தொடரும் அற்புதமான அறவழி போராட்டதின் சமூக விரோதிகள் புகுந்து விடக்கூடிய வாய்ப்பை அறவே ஒழிக்க வேண்டியதும் அவசியம்.


* * * * * * * * * *

இந்திய மொழிகளில் ஜல்லிக்கட்டு கோஷம் போடும் மத்திய அரசுக் கல்லூரி மாணவர்கள்.  இந்தியாவின் 25 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரி சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கிறது. 'ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட்' என்ற பெயர்கொண்ட அந்தக் கல்லூரியில் தமிழ் மாணவர்கள் குறைவு. வட மாநிலத்தவரே அதிகம். தமிழ் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் கோஷமிட்டனர்.  


செவ்வாய், ஜனவரி 17, 2017

வந்தே விட்டது வளர்ச்சியில் பாதிப்பு !


லகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்கிற இந்தியாவின் பெருமை பறிபோய்விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

2016-17ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதம் வரை இருக்கும் என்றே உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சர்வதேச ரேட்டிங் அமைப்புகளும் கணிப்பு வெளியிட்டிருந்த சூழலில், தற்போது ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக வளர்ச்சி எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படுவதற்கான சூழல் தோன்றியுள்ளது.

திங்கள், ஜனவரி 16, 2017

இன்னமும் மன்னராட்சியுள்ள நாடுகள்


ன்னர்கள் காலமெல்லாம் மலையேறிவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் உலகின் பல நாடுகளில் மகாராஜாக்களும் மகாராணிகளுமே ஆட்சி செய்கிறார்கள். ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன. சில நாடுகளில் மன்னர் பதவியும் அதையொட்டிய ஆடம்பரங்கள் மட்டுமே இருக்கின்றன. அதிகாரமெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கிறது.

சனி, ஜனவரி 14, 2017

வேகத்திற்கு தடையில்லாத உலகின் அதிவேக டிராக்


ட்டுப்பாடு சிறிதும் இல்லாமல் நினைத்த வேகத்தில் வாகனத்தை ஓட்டவேண்டும் என்பது இளைஞர்களின் ஆசை மட்டுமல்ல, சில முதியவர்களுக்கும் கூட இந்த ஆசை இருக்கிறது. அதற்கு நமது சாலைகள் பயன்படாது. நினைத்த வேகத்தில் வாகனத்தை இயக்க எதிரில் எந்த வாகனமும் வரக்கூடாது. வளைவுகள் தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அப்படியொரு இடம் இருந்தால் மட்டுமே நாம் நினைத்த வேகத்தில் வாகனத்தை இயக்க முடியும். 

வறுமைக்கோட்டை எப்படி கணக்கிடுகிறார்கள்?


றுமைக்கோடு என்கிற வார்த்தை பொருளாதார நிபுணர்களின் பேச்சில் அடிக்கடி அடிபடும் ஒன்று. வறுமைக்கோடு என்றால் என்ன? எதை வைத்து அதனைக் கணக்கிடுகிறார்கள் என்று ஆராய்ந்தால்.. அது உணவை அடிப்படையாக கொண்டது.

உணவின் மூலம் கிடைக்கும் 'கலோரி'யைக் கொண்டே கணக்கிடுகிறார்கள். ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழத் தேவைப்படும் குறைந்தபட்ச கலோரியின் அளவு வறுமைக்கோடு என்று அழைக்கப்படுகிறது. தன் உணவின் மூலம் இந்த அளவு கலோரியைப் பெறுவதற்கு ஒரு தனி மனிதனின் வருமானம் போதுமானதாக இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக கருதப்படுவார்.


வியாழன், ஜனவரி 12, 2017

வரிஇணக்கம் இல்லா சமூகமா.. விழிபிதுங்க வரி நெருக்கும் சமூகமா..!


ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் வெற்றி தோல்வி பற்றிய தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதை தவிர்க்க இயலாது. இந்நிலையில், ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பின் கீழ் வங்கி பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் எனவும், அதன் மூலம் நேர்மறை பொருளாதார சூழல் மேம்படும் என்றும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்து வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தற்பொழுது இன்னொரு முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளார். அது நிச்சயம் சர்ச்சைக்கிடமானதே.

எனது 400-வது பதிவு!


'கூட்டாஞ்சோறு' 400 பதிவுகளைக் கண்டிருக்கிறது. சமீபகாலமாக பல்வேறு பணிகள் குறுக்கிடுவதால் முன்புபோல் வலைப்பூவில் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. நண்பர்களின் பதிவுகள் பலவற்றை அலைப்பேசி வாயிலாக வாசித்த போதும் முன்பு போல் கருத்திட முடியவில்லை. எனது பதிவுக்கு கருத்திடும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க இயலவில்லை. ஆனாலும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வழங்கி வரும் பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!


இன்றைய கணக்குப்படி இதுவரை 7,13,925 பார்வைகள் கூட்டாஞ்சோறுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பார்வைகளின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்திருக்கிறது. கூட்டாஞ்சோறுக்கு கருத்துரைகளும் வாக்குகளும் குறைவாக இருந்த போதும் நாளுக்கு நாள் புதுப்புது பார்வையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு தினமும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பார்வைகளின் எண்ணிக்கையே சாட்சியாக இருக்கிறது. 

சமீபத்தில் முத்துநிலவன் அய்யா அவர்களின் முயற்சியால் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் பல வழிகளில் எனக்கு உதவியாக இருந்தது. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூகுளில் வார்த்தைகள் மூலம் தேடும்போது நமது வலைப்பூ வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கூறிய தொழிநுட்பங்கள் பயன் தந்திருப்பதாகவே தோன்றுகிறது. அந்தப் பயிற்சிக்குப்பின் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளும் நண்பர் கற்றுத்தந்த தொழில்நுட்ப அடிப்படையிலேயே பதிவிட்டு வருகிறேன். அது நல்ல பலன் தந்திருப்பதாக தோன்றுகிறது. பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி!


இந்த ஆண்டு எனது பதிவுகள் சிலவற்றை காணொலியாக மாற்றி யூடியூப்பில் வெளியிடலாம் என்றிருக்கிறேன். இது பள்ளிகளுக்கு பயன்படும் என்று சில ஆசிரிய நண்பர்கள் கூறினார்கள். அதற்கான முதல் முயற்சியாக இந்த காணொலியை முயற்சித்துள்ளேன். பார்த்து கருத்திடுங்கள். அப்படியே சேனலையும் subscribe  செய்து விடுங்கள். புதிதாக பதிவேற்றும் காணொலி உடனுக்குடன் உங்களை வந்தடையும். 


தொடர்ந்து கூட்டாஞ்சோறுக்கு வருகை தந்து கருத்திட்டு ஆதரவு அளித்துவரும் அத்தனை அனுபுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல கோடி!


அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார்.
செவ்வாய், ஜனவரி 10, 2017

மயங்கும் மகாராஜா.. முடங்கும் முதலீடு!


ந்தியப் பொருளாதாரத்தின் வெள்ளை யானையாக ஏர்-இந்தியா விமான நிறுவனம் மாறிப்போயுள்ளது வருத்தத்திற்குரியதே. பல்வேறு முறைகள் அதனை சீர்படுத்த பல்வேறு அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மிகப் பெரும்பாலும் ஏமாற்றம் தரும் தோல்விகளையே சந்தித்துள்ளன.


சமீபத்தில் 'ஃபிளைட்ஸ்டாட்ஸ்' என்கிற சர்வதேச விமான நிறுவனங்கள் சேவைகள் குறித்த அமைப்பானது மேற்கொண்ட ஆய்வில் குறித்த காலத்திற்கு வருதல் மற்றும் காலதாமத அறிவிப்புகள் அதிகமின்றி செயல்படுதல் என்கிற காரணிகளின் அடிப்படையில், ஏர்-இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் 3-வது மிக மோசமான விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வருத்தம் தருவதாகும்.

சனி, ஜனவரி 07, 2017

சங்க காலத்தில் மட்டுமல்ல இப்போதும் சில பெண்கள் வளர்க்கிறார்கள்..!


'வெள்ளையம்மாள்' ஜல்லிக்கட்டு காளையர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்! தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் பெயர்! அவர்களை ஓட ஓட ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து பந்தாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் காளை! ஒவ்வொரு வருடமும் இந்தக் காளையை அடக்க வேண்டும் என்பது மாடுபிடி வீரர்களின் கனவு. ஆனாலும் யார் கைக்கும் பிடிபடாத காளை இது. 


இப்படி பிடிபடாமல் இருப்பதாலும், இந்தக் காளையை ஒரு சின்னஞ்சிறிய பெண் வளர்ப்பதாலும் பெரும் புகழ் அடைந்துவிட்டது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் காளையின் மீது பல பரிசுப்பொருட்களை அறிவிப்பார்கள். அதிலும் யாருக்கும் அடங்காத காளை என்றால் பரிசுப்பொருட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏராளமான பரிசுகள் குவிந்திருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

My Videos

Loading...