வியாழன், பிப்ரவரி 26, 2015

படைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்

    ராஜேந்திரப்பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தனது தந்தை குலபூஷண் பாண்டியன் காலத்தில் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலாக காஞ்சியை ஆட்சி செய்து வந்த காடுவெட்டிய சோழன் மதுரை வந்து சொக்கநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றான். அதன்பின் பலமுறை சொக்கரை தரிசனம் செய்ய விரும்பினான்.

    அதற்காக பாண்டியனிடம் தோழமைக் கொள்ள விரும்பினான். தோழமைக்காக அவ்வப்போது பல பொருட்களை காணிக்கையாக ராஜேந்திரப் பாண்டியனுக்கு அனுப்பிவந்தான். சோழன் அனுப்பிய சுகர்ணாபரணம் பொன்னாடை முதலியவற்றை பாண்டியன் ஏற்று மகிழ்ந்தான். அதற்கு ஈடாக பாண்டியனும் பல வகையான பொருட்களை பரிசாக அனுப்பி வைத்தான். இதனால் சோழன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தனது மகளை பாண்டியனுக்கு கொடுத்து பாண்டியனை தன் மருமகனாக ஆக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

    அந்த திருமண முடிவு பாண்டிய மன்னனின் தம்பியான ராஜசிம்மனுக்கு தெரியவந்தது. தம்பி பழிபாவத்துக்கு அஞ்சுபவன் அல்ல. வஞ்சக நெஞ்சகம் கொண்டவன். அவனுக்கு சோழ மன்னனின் மகள் அழகில் ஒரு கிறக்கம் இருந்தது. எப்படியாவது அந்த அழகு மங்கையை அடைந்தாக வேண்டும் என்று மாறாத விருப்பமும் இருந்தது.

இந்த எண்ணத்தோடு காஞ்சிபுரம் சென்று சேர்ந்தான். தன்னை நாடிவந்த ராஜசிம்மனுக்கு சோழன் தனது பரிவாரங்களுடன் சென்று வரவேற்றான். அரண்மனை சேர்ந்த ராஜசிம்மன் தனது ஆசையையும் சோழனின் மகள் மீது கொண்ட காதலையும் மன்னனுக்கு தெரிவித்தான். இதைக் கேட்ட சோழன் அண்ணனுக்கு திருமணம் செய்ய நினைத்த தனது மகளை தன்னை தேடி வந்து தன் மகள் மீது விருப்பம் கொண்ட தம்பிக்கே கொடுக்க முன் வந்தான்.

திருமணமும் நடந்தது. ராஜசிம்மன் சோழனின் மருமகன் ஆனான். திருமணம் முடிந்த சில மாதங்களிலே சோழனின் மனமும் சிந்தனையும் விபரீதமாக மாறியது. பாண்டியனை வெற்றிக்கொண்டு பாண்டிய நாட்டையும் தன் மருமகனுக்கு கொடுக்க நினைத்தான்.

    அதை நிறைவேற்றும் பொருட்டு தனது பெரும்படையுடனும்; தனது மருமகனின் யுத்த தந்திரமுடனும் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். யுத்த பேரிகைகள் முழங்க படைகள் சென்றன. மதுரை மாநகரை நெருங்கி விட்டன சோழனின் படைகள். படைகள் நெருங்கும் செய்தி ஒற்றர்கள் மூலம் ராஜேந்திரப் பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சூழ்ச்சியால் நெருங்கிவரும் இந்த படையை எப்படி எதிர்கொள்வது என்று பாண்டியனுக்கு தெரியவில்லை. குழப்பமான மனநிலையில் தெய்வ நம்பிக்கைதான் சரியான வழிகாட்டுதலை வழங்கும் என்று நினைத்த பாண்டிய மன்னன் சோமசுந்தரக் கடவுளின் சன்னதிக்கு சென்று முறையிட்டான்.

    “அனைவரையும் காக்கும் அற்புதப் பெருமானே! அன்றொரு நாள் இரவு நேரம் தங்களை தரிசிக்கும் எண்ணத்தோடு வந்து தங்களின் கருணையால் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காடுவெட்டிய சோழன் இன்றைக்கும் வந்துள்ளான். இப்போது அவன் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் பாதகனாக வந்துள்ளான். போர்க்கோலம் பூண்டு மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவன் தங்களின் பக்தன். அன்று அவனது பக்திக்கு ஈடு செய்த பெருமானாகிய தாங்கள்தான் அவனது பகைமைக்கும் ஈடு செய்து அருள வேண்டும்!" என்று சிவபெருமானிடம் வேண்டி நின்றான்.

    “பாண்டிய மன்னனே! பயப்படாதே! உனது படையுடன் செல். சோழனை எதிர்த்துப் போரிடு! போரில் உனக்கு வெற்றி கிடைக்கும்படி யாம் செய்வோம்!” என்று அசரீரி எழுந்தது. அதனைக் கேட்டு ஆனந்தம் கொண்ட அரசன், இறைவனின் காலடியில் விழுந்து வணங்கினான். பின் தன் அரண்மனை சென்று சேர்ந்தான்.
   
    அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து சிவபூஜைகளை செய்து முடித்தான். தனது படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டான். சோழனின் படையும், பாண்டியனின் படையும் எதிரெதிரே நின்றன. சோழனின் படை சமுத்திரம் என்றால், பாண்டியனின் படை ஒரு சிறு ஓடை என்று சொல்லும் அளவுக்கு சிறியதாக இருந்தது.

    போர் தொடங்கியது.

    இரண்டு படைகளும் கடுமையாக மோதின. இடி முழக்கம் போல ஒலியும், புயல் போல புழுதியும் கிளம்பின. சண்டமாருதம் போன்ற வேகம் உண்டானது. பாண்டியனின் சிறிய படை சோமசுந்தரப் பெருமானின் திருவருளால் பெரிய படை போல் தெரிந்தது. பாண்டிய மன்னனின் வீரர்கள் ஒவ்வொருவரும் சோழ வீரர்களுக்கு பல வீரர்களாகத் தெரிந்தார்கள்.

    தாக்குதல், அந்த தாக்குதலைத் தடுத்தல், எதிர்தாக்குதலுக்கு வியூகம் அளித்தல், எதிர்தாக்குதல் செய்தல், பிரயோகம், அதற்கு எதிர்ப்பிரயோகம் என்று போர் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

விடியற்காலையில் தொடங்கியப் போர் நண்பகல் உச்சி வெயிலில் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கடுமையான கிரணங்களால் வீரர்கள் களைப்படைந்தனர். தாகமெடுத்தது. தண்ணீர் கிடைக்காமல் திண்டாடினர். பெரும் தாகத்தால் பரிதவித்தனர்.

    பாண்டிய படைவீரர்கள் இப்படி வாடி வதங்குவதைக் கண்ட சிவபெருமான் அந்த படைகளுக்கு நடுவே நான்கு கால்களைக் கொண்ட ஒரு தண்ணீர்ப் பந்தலை அமைத்தார். பந்தலுக்கு நடுவே மையப்பகுதியில் விபூதி அணிந்த தவக்கோலத்தோடு நின்றிருந்தார். பந்தலுக்கு நடுவே பெரும் பானைகளில் ஆற்று நீர் நிரம்பியிருந்தது. பானையில் இருக்கும் நீரை ஒரு கமண்டலத்தில் எடுத்து, தாகத்தோடு தன்னை நாடிவரும் வீரர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

    தாகம் தீர்ந்து புத்துணர்ச்சிப் பெற்ற பாண்டிய வீரர்கள் அசுர பலம் பெற்றவர்களாக சோழனின் படையை பலமடங்கு உக்கிரத்தோடு தாக்கினர். இந்த எதிர்தாக்குதலை அவர்களால் தாங்க முடியவில்லை. போதாக்குறைக்கு தாகத்தால் சோழப் படைகள் களைப்புற்றன. தொடர்ந்து போராட, யுத்தம் செய்ய தெம்பு இல்லாமல் துவண்டு போயின. பாண்டிய சேனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னாபின்னப்பட்டுப் போய் நாலுபக்கமும் சிதைந்து ஒடின.

    வெற்றி வாகை சூடிய பாண்டிய படைகள் சோழனின் படையை புறமுதுகிட்டு ஓட வைத்தன. படை வீரர்கள் காடுவெட்டிய சோழனையும் அவனது மருமகனாகிய ராஜசிம்மனையும் கைது செய்தார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மதுரை நகர் நோக்கி வீர நடை போட்டது பாண்டியபடைகள். இருவரையும் பாண்டிய மன்னன் ராஜேந்திர பாண்டியனிடம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    பாண்டிய மன்னனுக்கு ஒரே குழப்பம். தன் முன் சிறைப்பட்டு நிற்கும் காடுவெட்டிய சோழன் நீண்ட நாட்களாக நட்பை பாராட்டிய மன்னன். ராஜசிம்மனோ உடன் பிறந்த தம்பி இவர்களை எப்படி தண்டிப்பது? என்று யோசனை செய்த மன்னன் ராஜேந்திர பாண்டியன் இருவரையும் அழைத்துக் கொண்டு சோமசுந்தரப் பெருமான் முன் கொண்டு போய் நிறுத்தினார். 

“எம் பெருமானே! இவர்களுக்கு தண்டனைத்தரவோ சிறையில் அடைக்கவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. எல்லாம் அறிந்த இறைவனே! தங்களது திருவுள்ளம்தான் என்ன என்பதை எனக்கு எடுத்துரைப்பீர்களா?" என்று வேண்டி வணங்கி நின்றான்.

    பாண்டியனின் வேண்டுகோளுக்கு செவிசாய்ந்த பெருமான் “பாண்டியனே! நீ அறவழி தெரிந்தவன். தர்மத்தின் வழிநடப்பவன். இறைபக்தி கொண்டவன். உன் இஷ்டம் எதுவோ? அதன்படியே செய். நான் என்றும் உன்னுடன் இருப்பேன்” என்று அசரீரியாக ஒலித்தது சிவபெருமானின் குரல்.

    இதனைக் கேட்டு மகிழ்வு பெற்ற மன்னன் தெய்வ வாக்கை மனதில் நிறுத்தி, தான் விரும்பியபடியே தர்மசாஸ்திரங்களின் நெறிதவறாமல் காடுவெட்டிய சோழனுக்கு சில தேர்கள், யானைகள், குதிரைகள், வீரர்கள், தங்க ஆபரணங்களை கொடுத்து வழியனுப்பிவைத்தான். 

தனது தம்பியான ராஜசிம்மனுக்கு தனது நாட்டில் சிறு பகுதியை தனியாகப் பிரித்துக் கொடுத்து அந்தப் பகுதிக்கு அரசனாக முடிசூட்டினான். எல்லா உயிர்களையும் காப்பவனாகிய கடவுள் அருளாலே பல வளமும் பெருக அரசாட்சி செய்து நல்லதொரு மன்னனாக பிற்காலத்தில் பெரும் பெயரெடுத்தான் ராஜேந்திரபாண்டியன்.

திங்கள், பிப்ரவரி 23, 2015

சரித்திரம் படைத்த விவசாயி

“முடியாது...இது நடக்காது..!" என்று எடுத்த காரியத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்கள் பல பேர். 'ஏன் முடியாது? ஏன் நடக்காது? என்னால் முடியும்...!' என்று தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வெற்றிகரமாக முடித்துக் காட்டுபவர்கள் சில பேர். அந்த சில பேரில் ஒருவர் முருகேசன். இவரிடம் முடியாது என்று 'சவால்' விட்டது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!

பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்தான் ஒரு முடிவை வேளாண் துறை அறிவிக்கிறது. அப்படி தமிழகத்தில் இதை விளைவிக்கவே முடியாது என்று அறிவித்த ஒன்றை, அதே தமிழகத்தில் அதுவும் வறட்சியின் உச்சம் நிலவும் பூமியில் விளைவித்து, தமிழகத்தை மட்டுமல்ல... இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், இவர்.

தனது விளைபொருளை தரத்தில் இந்தியாவில் 'நம்பர் ஒன்' என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த விளைபொருள் அல்போன்ஸா மாம்பழம். 
"எப்படி உங்களால் இந்த சரித்திர சாதனையை செய்ய முடிந்தது?" என்ற கேள்வியோடு சிவகங்கை மாவட்டம் எ.கருங்குளம் எம்.எம்.பண்ணையின் உரிமையாளர் எம்.முருகேசனை சந்தித்தேன்.
எம்.முருகேசன்

சிரித்துக் கொண்டே "வாங்க! நிலத்தில் மரக்கன்று நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு வருவோம்" என்று தனது டாடா சஃபாரியில் என்னையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தென்னந்தோப்பு, பண்ணைக்குட்டைகள் என்று நான்கு கிலோமீட்டர் தூரம் கடந்து வெட்ட வெளியான ஓர் இடத்தில் சஃபாரி நின்றது.

வனத்துறை இலவசமாகக் கொடுத்த மரக்கன்றுகளை 300 ஏக்கர் நிலத்தில் நடும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்த பின் மீண்டும் சஃபாரி புறப்பட்டது. அவரின் மகன் மதிபாலன் காரை ஓட்டி வந்தார். கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவரது பண்ணையில் 15 கி.மீ. நீளத்துக்கு கனரக வாகனங்கள் போய்வரும் அளவிற்கு தரமான சாலைகளை அமைத்துள்ளார் முருகேசன்.
பண்ணைக்குள் செல்லும் சாலை

இந்தியாவில் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் நிலத்தில் கூட இப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை என்று தன் நிலத்தை பார்வையிட்ட வட இந்திய ஆய்வாளர்கள் கூறியதாக பெருமிதத்துடன் கூறுகிறார் முருகேசன். 

தொடர்ந்து கட்டாந்தரையை பொன்விளையும் பூமியாக மாற்றிய அந்த ரகசியத்தையும், தான்பட்ட கஷ்டங்களையும் ஒருசேர சொன்னார்.

"இந்தக் கருங்குளம்தான் நான் பிறந்து வளர்ந்த மண். விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த மண்ணுக்கே உரிய வறட்சி மற்றவர்களைப் போலவே என்னையும் பிழைப்பு தேடி வேறு ஊருக்குத் துரத்தியது. 

நானும் போனேன். 10-ம் வகுப்பு வரை படித்திருந்த எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. நான்கு  வருடம் கழித்து 1974-ல் ஒரத்த நாட்டில் 'முருகன் ஜூவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை தொடங்கினேன். பரிச்சயம் இல்லாத தொழில். எங்கள் இன மக்கள் யாருமே நகைக்கடை வைத்ததில்லை. ஆனாலும் வெற்றி கிடைத்தது. 

அடுத்து, 1980-ல் பொள்ளாச்சியில் 'ஸ்ரீதிருமலை ஸ்டீல்ஸ் கார்ப்பரேஷ­ன்' என்ற பெயரில் இரும்பு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். கடின உழைப்பு என்னை மிக உயரத்துக்கு கொண்டு போனது. சிறந்த தொழில் அதிபர் என்ற தமிழக அரசின் விருது என்னைத் தேடி வந்தது. என்னதான் தொழிலில் சாதித்தாலும் விவசாயத்தின் மீது இருந்த ஈர்ப்பு என்னை தூங்க விடாமல் அதன் பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில்தான் எங்கள் மக்கள் இந்த மண்ணைவிட்டு கொத்து கொத்தாக பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் பக்கம் வந்து கொண்டு இருந்தார்கள். இது என் மனதை ரணமாக மாற்றியது விவசாயம் மிகவும் பின்தங்கியிருந்த காலகட்டம் அது. அதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரான கருங்குளத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். தென்னந்தோப்பும், மாந்தோப்பும் உருவாக்கினேன். 

அப்போதுதான் அல்போன்ஸா மாம்பழம் நல்ல விலைக்குப் போவது தெரிய வந்தது. உடனே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகினேன். அவர்கள் தமிழகத்தில் இது வராது என்றார்கள். அதற்கான மண்வளம் நம்மிடம் இல்லை என்றார்கள். இதைக்கேட்ட பின்பு அல்போன்ஸா மீது தீவிர பிடிப்பு ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது நமது பண்ணையில் அல்போன்ஸாவை விளைவித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
அல்போன்ஸா மாமரங்கள்

முதலில் எனது நிலத்தின் மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். 

இதுதான் விவசாயத்தின் மிக முக்கியமான பணி. அதற்கடுத்து நிலத்தடி நீரை டெஸ்ட் செய்தேன். இரண்டுமே மாம்பழ விவசாயத்துக்கு சாதகமாக இருந்தது. முதலில் சோதனை அடிப்படையில் 20 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்தேன். மாம்பழத்தின் முதல் தரமான ரத்தினகிரி மாங்கன்றுகளை மஹாராஷ்டிராவில் இருந்து வாங்கி வந்தேன்.

செயற்கை உரங்கள் மண்வளத்தை பாழ்படுத்தும் என்பதை 25 வருடங்களுக்கு முன்பே நான் உணர்ந்து இருந்தேன். அதனால் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவது இல்லை என்ற முடிவை அப்போதே எடுத்தேன். அதற்காக 15 டன் மண்புழுக்களை வாங்கி வந்து நிலத்தில் விட்டேன். 10 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 40 மரங்கள், 8 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 66 மரங்கள் நட்டேன். மண்புழுக்களால் மண்வளம் செழித்தது.

நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம் என்பதால் 4 பண்ணைக் குட்டைகளை அமைத்தேன். அதன்மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்து கொண்டேன். சொட்டுநீர் பாசனம் செய்தேன். இதிலும் இரண்டு மரத்துக்கு ஒரு கேட் வால்வு என்ற கணக்கில் பண்ணை முழுவதும் கேட் வால்வு அமைத்திருந்தேன். இதனால் கடைக்கோடியில் இருக்கும் மரத்துக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. அதனால் விளைச்சல் ஒரே விதமாக இருந்தது.

பின்னர் மரத்துக்கு இடையே களைகள் வளர்ந்து விடாமல் இருப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை உழுது கொண்டே இருப்போம். களை சுத்தமாக அழிக்கப்படுவதால் மரம் செழித்து வளர்ந்தது. நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதால் தரமான மாம்பழத்தை உருவாக்க முடிந்தது. இப்படி விளைவிப்பதோடு ஒரு விவசாயி தனது வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. அதை சந்தைப்படுத்த வேண்டும். ஒரு விவசாயி வியாபாரியாக மாறும்போது அவனுக்கு 90 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இந்த சந்தைப்படுத்துதல் தான் எங்கள் வளர்ச்சியின் புதிய அணுகுமுறை. 

இதை மனதில் வைத்து தான் சந்தைப்படுத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்தோம். இதில் எனது மகன் மதிபாலன் எடுத்துக்கொண்ட முயற்சி பிரமிப்பானது. மும்பையில் ஒரு அல்போன்சா மாம்பழம் ரூ.60-க்கு விற்கிறது. வெளிநாடுகளில் ஒரு பழமோ 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்படியென்றால் வெளிநாட்டுக்கும் வட இந்தியாவிற்கும் மாம்பழத்தை அனுப்பி வைப்பதுதான் கூடுதல் லாபம் என்று நினைத்தேன்.

முதலில் வட இந்திய வியாபாரிகள் இதை ரத்தினகிரி மாம்பழம் என்று சொல்லி விற்கலாம். நன்றாக விற்பனை ஆகும் என்றார்கள். நாங்கள்தான் எங்களின் சொந்த பிராண்டில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோம். அதன் பலன்தான் இன்றைக்கு ரத்தினகிரி மாம்பழத்தை விட தரத்திலும் சுவையிலும் சிறப்பான மாம்பழமாக இந்தியாவில் நம்பர் ஒன்னாக எங்களின் மாம்பழம் இருக்கிறது.

இதற்கு காரணம் நாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்ததுதான். ரத்தினகிரி மாம்பழம் என்று கூறி விற்பனை செய்திருந்தால் எடுத்தவுடனேயே நன்றாக விற்பனை நடந்திருக்கும். அதே வேளையில் எங்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் போயிருக்கும். அன்று பொறுமை காத்தோம். இன்று பெருமை கொண்டோம்" என்று நீண்ட விளக்கத்தை கூறி முடித்தார் முருகேசன்.

"வட இந்தியாவிற்கு மாம்பழங்கள் போய் சேர ஐந்தாறு நாட்கள் ஆகிவிடுமே...? அதுவரை மாம்பழம் கெட்டுப் போகாமல் இருக்குமா...?" என்று கேட்டதற்கு நாங்கள் மாம்பழத்தை பறிப்பது இல்லை. காம்போடு சேர்த்து கட் செய்து விடுவோம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 3 அங்குலம் நீளம் கொண்ட காம்பு இருக்கும். 

இந்த மாம்பழங்களை மூன்று வகையாக நாங்கள் பிரிப்போம். ஒரு பெட்டியில் 48 மாம்பழங்கள் வைப்பது பெரிய வகை. நடுத்தர வகையில் 60 மாம்பழங்கள் வைக்கலாம். சிறிய வகையில் 72 மாம்பழங்கள் வைக்கலாம். பெட்டியில் வைக்கோலும், பேப்பரும் வைத்து பேக் செய்வோம். இவற்றை பேக் செய்வதற்காகவே ஜார்க்கண்டில் இருந்து ஆட்கள் வருவார்கள். வைக்கோலின் கதகதப்பால் மாம்பழம் மெதுவாக பழுக்கத் தொடங்கும். 5 நாட்கள் கழித்து அங்கு போய் இறங்கும்போது இயற்கையான முறையில் மாம்பழம் பழுத்திருக்கும். சுவையும் அலாதியாக இருக்கும்.
மகன் மதிபாலன் மற்றும் தோட்ட தொழிலாளியுடன் முருகேசன்

விவசாயம் நமது நாட்டின் முக்கியத் தொழிலாகும். விவசாயத்தில் புரட்சியும், புதுமைகளும் செய்பவர்கள் வரலாற்று ஏடுகளில் பதியப்படுகிறார்கள். காலத்துக்கு ஏற்ப வேளாண்மை துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது ஒவ்வொரு விவசாயியின் கடமை. பணப்பயிர் சாகுபடி பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்தரக்கூடிய ஒன்று. 

இளைய தலைமுறையினர் விவசாயத்தில் இருந்து தடம் புரண்டு சென்று விடாமல் இதில் சாதிப்பதற்கு பல சாதகமான வாய்ப்புகள் உள்ளது என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்." என்று கூறும் முருகேசன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்து வருகிறது. அவரது கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

எம்.முருகேசன் - 94865 61677

சனி, பிப்ரவரி 21, 2015

மாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்

துரை மாநகரில் தனபதி என்ற வணிகன் சிறப்போடு வாழ்ந்து வந்தான். வணிகத்தை தொழிலாகக் கொண்ட அவனுக்கு குபேர யோகம் வாய்த்திருந்தது. அவனின் மனைவி சுசீலைக்கு அழகும் நற்குணங்களும் நிறைந்திருந்தது. ஆனாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கைகூடவில்லை. எல்லா செல்வங்கள் இருந்தும் கொஞ்சி மகிழ ஒரு மழலைச் செல்வம் இல்லையே என்ற வருத்தம் அவர்களை வாட்டி எடுத்தது.

    ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். தனபதி தனது தங்கை மகனையே தனது மகனாக ஏற்று கொண்டான். அவனின் மனைவி சுசீலையும் அவனை அன்போடு வளர்த்து வந்தாள். பலவகையான ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து அழகுறச் செய்தான்.

    நாட்கள் செல்ல செல்ல தனபதி நன்றி மறக்கத் தொடங்கினான். தன் மனைவி மீது கொண்ட காதல் மயக்கத்தில் தன் தங்கையுடன் அடிக்கடி சண்டையிட்டான். இது தங்கைக்கு கோபத்தை உண்டாக்கியது.

    ஒரு நாள் கடுமையான கோபம் கொண்ட தங்கை “நீ எல்லாம் என்ன மனிதன்? குழந்தையில்லாத பாவிதானே நீ! என் குழந்தையினால்தானே நீ பிறவிப் பயனை அடைந்தாய், நன்றி கெட்டவனே!” என்று கூறி திட்டி விட்டாள்.

    இது தனபதியை மிகவும் வெட்கப்பட வைத்தது. ரோஷம் கொண்ட அவன் அடுத்த பிறவியிலாவது தனக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டும். அதற்காக தவம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். தனது சொத்து முழுவதையும் தனது மருமகனுக்கு உரிமையாக்கிவிட்டு தனது மனைவியுடன் வனவாசம் சென்றான்.

    தனபதி வனவாசம் சென்ற சிறிது நாட்களிலே அவருக்கு வேண்டாத தாயாதிக்கார்கள் பொய் வழக்கு செய்து, மருமகனிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வயல்கள், தோட்டங்கள், நன்செய் நிலங்கள், நகைகள், அடிமையாட்கள், பசுமாடுகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். என்னசெய்வதென்று தெரியாத தாயும் மகனும் வீதியில் நின்றனர்.

    போகும் திசை தெரியாமல் திக்கற்று இருப்பவர்களுக்கு தெய்வம் மட்டுமே துணை. அந்த தெய்வத்திடமே சரண் அடைவோம் என்று சோமசுந்தரப் பெருமான் கோவில் சென்று வணங்கினார். “எல்லாம் வல்ல இறைவனே! எங்களின் அவல நிலையை பார்த்தாயா! இருந்தவையெல்லாம் பறி கொடுத்துவிட்டு உன் முன் நாதியற்று நிற்கிறோம். நானோ ஆதரவற்ற பெண் எனக்கு இருப்பதோ ஒரே மகன். அவனும் சிறுவன். விவரம் தெரியாதவன். சாமான்யர்களான எங்களை காப்பது உனது கடமை. எங்களை காத்தருள்வாய் தேவனே!” என்று கூறி விழுந்து புரண்டு பலவாறு அழுதாள் தனபதியின் தங்கை.

    அழுகையின் அயர்ச்சி அவளை அங்கேயே உறக்கம் கொள்ள வைத்தது. உறக்கத்தில் சிவனின் திருவருளால் கனவு வந்தது. பிரமணரின் உருவில் சிவபெருமான் எழுந்தருளினார். “பெண்ணே! இன்று இரவு கடந்து, பொழுது விடிந்ததும். உன் செல்வத்தை அபகரித்தவர்களை அரசன் மீது ஆணையிட்டு தர்மசபைக்கு கொண்டுவந்து விடு. அங்கு யாமே வருவோம். தர்மசீலர்களும், அறிவில் சிறந்து விளங்கும் பெரியவர்களும் ஒப்புக் கொள்ளும்படியான, பொய் வழக்கை தீர்த்துவைத்து பொருள்கள் எல்லாவற்றையும் மீட்டுத் தருவோம்” என்று கூறினார்.

    இதைக் கேட்டு விழித்துக் கொண்ட பெண் வியப்பும் மன மகிழ்வும் கொண்டாள். சோமசுந்தரரை வாழ்த்தினாள். தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

    மறுநாளும் விடிந்தது.

    தனது சொத்தை அபகரித்தவர்கள் இருப்பிடம் சென்ற பெண் “தர்மநெறி தவறியவர்களே! பொய்வழக்கில் நீங்கள் வெற்றிபெற அனுமதிக்கமாட்டேன். இங்கு இருக்கும் அனைவரையும் சாட்சியாகக் கொண்டு அரசன் மீது ஆணையிட்டேன். தர்ம சபைக்கு நீங்கள் வரவேண்டும். பெரியவர்கள் சொல்லும் தீர்ப்பைக் கேட்க வேண்டும். எங்களின் பொருளை திரும்ப தரவேண்டும்” என்று கூறி பாதையில் சென்ற அவர்களை மறித்து நின்றாள்.

    அவர்களோ முரடர்கள். வலிமை மிக்கவர்கள் அவள் சொல்வதை கேட்காமல் அவளை அடித்தார்கள். “பாவிகளா! எனது செல்வத்தை ஏமாற்றி அபகரித்தது மட்டுமல்லாமல், நியாயம் கேட்டு தர்மசபைக்கு அழைத்தால் என்னை தாக்குறீர்களே.. இது முறையா?” என்று கத்திக் கொண்டே தனது மகனோடு தர்மசபைக்கு சென்று வழக்கை முறையிட்டாள். தர்மசபையோர் காவலர்களையும் ஏவலர்களையும் அனுப்பி வைத்தனர். தனபதியின் தங்கை அவர்களுடன் சென்று ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட ஏவலர்கள் நியாய சபைக்கு இழுத்துவந்தனர்.

    சோமசுந்தரப் பெருமானோ, வனவாசம் சென்றிருந்த தனபதியைப் போல உருவம் கொண்டு சபைக்கு வந்தார். அவர் கண்களில் கோபம் அனலாக வீசியது. மகனைப் பார்க்கும் போது முகம் மலர்ந்தது.

    “இந்த நாட்டில் மன்னன் இல்லையா? நியாயவழி நடக்கும் பெரியவர்கள் இல்லையோ? இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா? இல்லையா? தர்மமும் நியாயமும் பாண்டிய மண்ணில் செத்துப் போய்விட்டதா? என்று தனபதிப் பெருமான் முறையிட்டார்.

    தனபதியே நேராக வந்ததால் தாயாதிக்காரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இனி எதுவும் செய்ய முடியாது என்று மனம் தளர்ந்துவிட்டனர். மனவலிமையை இழந்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றியதை நினைத்து வெட்கமும் பயமும் கொண்டனர்.

    மாமனாக வடிவம் கொண்டு வந்திருந்த சிவன் தனது மருமகனையும் தங்கையையும் அணைத்துக்கொண்டார். 'ஜயோ! செல்வ செழிப்பில் இருந்த நீங்கள் பரம ஏழைகளாக மாறிவிட்டீர்களா?' என்று வருந்தினார். தாயும் மகனும் தனபதிப் பெருமானின் காலில்விழுந்து கண்ணீர்விட்டு அழுதனர்.

    மருமகனை மார்போடு அனைத்துக் கொண்ட தனபதிப் பெருமான் அவன் முன்பு அணிந்திருந்த பொன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி ‘எல்லாம் இழந்தாயோ?! என்று வாய்விட்டு அழுதார். கேட்பவர்களின் மனம் இரங்கியது. கண்கள் கலங்கின. பின்னர் சோமசுந்தரர் குடிகொண்டிருக்கும் கோவிலை நோக்கி “மாணிக்கம் விற்ற பெருமானே! பெண்களுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் தந்த எங்கள் குலத்தெய்வமே! இந்த வழக்கைத் தீர்த்துவைத்து என் தங்கை இழந்த பொருளை மீட்டுத் தருவாயா…? என்று வேண்டினார். சபையை நோக்கி “நாலும் தெரிந்த நல் அறிஞர்களைக் கொண்ட இந்த தர்மசபை அறிஞர்களே! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்” என்று விண்ணப்பித்தார்.

    இருதரப்பினரின் வழக்குகளையெல்லாம் நன்கு கேட்டு ஆராய்ந்த நீதிநூல் வல்லுநர்கள் “தாயாதிக்காரர்களின் வழக்குப் பொய்யானது” என்று தீர்ப்புக் கூறினர். இந்த தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக “வழக்காட வந்திருப்பவர் தனபதி வணிகரே இல்லை. இவர் வேறு யாரோ…? என்று வாதிட்டனர்.

    இதனைக் கேட்ட தனபதிப் பெருமான் கைகொட்டிச் சிரிந்தார். தனக்கு எதிராக வாதிட்ட அத்தனை தாயாதிக்காரர்களையும் ஒருவர் விடாமல் பெயர் சொல்லி அழைத்தார். அதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் குடிப்பெயர், பட்டம், காணி, தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் சொந்தக்காரர்கள், குணங்கள், செய்கின்ற தொழில், செய்த பிழை என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.

    இதனைக் கேட்ட நீதிபதிகள் “வந்திருப்பது தனபதிச்செட்டியர் தான்” என்று முடிவாக கூறினர். தங்களின் வழக்கு தோற்றது. இதனை அறிந்தால் பாண்டிய மன்னன் தங்களை தண்டித்துவிடுவானே! என்ற பயம் அவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொருவம் ஏதேதோ காரணங்களைக் கூறியபடி சிதறி ஓடினார்கள்.

    அவர்கள் ஓடிச்சென்றதும் நீதிமான்கள் தனபதி வணிகர் முதலில் கொடுத்திருந்த பொருள்களை எல்லாம் தத்துப்புத்திரனுக்கே உரியவை. அவற்றை திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு சாசனத்தை வணிகராக வந்திருந்த தனபதிப் பெருமானிடம் தந்தனர். எல்லாம் சுபமாக முடிய வணிகராகத் தோன்றிய சிவபெருமான் மறைந்தருளினார்.

    இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னனான சுந்தரேச பாதசேகர பாண்டியன் மிகுந்த வியப்பு கொண்டார். வணிகராகத் தோன்றிய சிவபெருமானின் அற்புதங்களை நினைத்து உள்ளம் பூரித்தார். தனபதியின் தத்துப் பிள்ளையான தங்கையின் மகனுக்கு மேலும் பல பரிசுகளை வழங்கினான் மன்னன். சிவபெருமானின் திருக்கோவிலை தங்கத்தால் புதுப்பித்தான்.

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

இனி பெண்கள் 'அதற்கு' கவலைப் படவேண்டியதில்லை

வெளியூர் பயணம் என்றாலே பெண்கள் கூச்சத்தோடு நெளிவார்கள்.
பயணம் செய்யும் பெண்களுக்கும் சரி...! பாத்ரூம் வசதியில்லாத கடைகளில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கும் சரி..! இருக்கும் மிகப் பெரிய தொந்தரவு இயற்கை உபதைதான். இதற்கு பயந்து பல பெண்கள் வெளியில் சென்றால் தண்ணீர் கூட குடிப்பதில்லை.


தேவையான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர் பற்றாக்குறையும் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பாதையில் தொற்று நோயும் ஏற்படுகிறது.

பெண்களின் இந்த அடக்க முடியா பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது. 'ஈவா டிண்டர்' என்ற ஜெர்மானியப் பெண் அதை கண்டுபிடித்துள்ளார். அதற்கு 'பாக்கெட் யூரினல்' என்று பெயர். இதை டயபர் போல அணிந்து கொள்ள வேண்டும்.

இது சிறுநீரை ஜெல்லாக மாற்றி சேர்த்து வைக்கிறது. பெண்ணின் பிறப்புறுப்பில் இது கச்சிதமாக ஒட்டிக்கொள்கிறது. இதில் இருக்கும் 'பாலிமர் கிரிஸ்டல்' சிறுநீர் வெளியேறும் வேகத்தை விட 30 மடங்கு விரைவாக உறிஞ்சி சிறுநீரை கெட்டியான ஜெல்லாக மாற்றிவிடும்.

ஒருமுறைக்கு 300 மில்லியில் இருந்து 500 மில்லி வரை சிறுநீர் வெளியேறுகிறது. இதன் கொள்ளளவு ஒரு லிட்டர். தேங்கிய சிறுநீர் வெளியே கசிந்து விடுமோ என்ற பயமும் தேவையில்லை. துர்நாற்றம் வருமோ என்ற கவலையும் இதில் இல்லை.

ஒரு லிட்டர் நீர் உறிஞ்சப்பட்ட ஜெல் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் அளவில் தான் இருக்கும். 52 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

நிற்கும்போது, அமரும்போது, படுக்கும்போது என்று எல்லா சூழ்நிலையிலும் இதை அணிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போது மட்டும் இதை அணிய வேண்டாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதை உபயோகிப்பது போலவே அழிப்பதும் சுலபம். குப்பைதொட்டியில் போட்டுவிடலாம். சுற்றுசூழல் பதிப்பு ஏற்படாது.

சரி, ஆண்களுக்கு எதுவும் இல்லையா? என்ற கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆண்களுக்கும் இது உள்ளது. பெண்களுக்கு 'லேடி பேக்' என்றும், ஆண்களுக்கு 'ரோடு பேக்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இது பெண்களின் பயணத்தை இனிமையாக்குகிறது என்று இப்போதே பெண்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள். வியாழன், பிப்ரவரி 19, 2015

பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்

டிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை,  வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தற்கொலைக்கு துணிந்தவர்தான் டாக்டர் வெங்கடபதி ரெட்டியார்.

இன்றோ இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் அவர் ஒருவர். பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரே விவசாயி.  தொடர்ந்து விருதுகளை குவித்துக் கொண்டே இருப்பவர்.

ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். 100 வகையான கனகாம்பரம், சவுக்கு மரம், கொய்யா மரம் என்று கை நிறைய காப்புரிமைகளை வைத்திருப்பவர்.

புதுவை மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில்  வெங்கடபதியையும் அவரின் ஆய்வுக்குத் துணையாக நிற்கும் மகள் லட்சுமியையும் சந்தித்தேன். நிறைய பேசினார்.  பல வி­ஷயங்களைச் சொன்னார்.  

ஒரு முன்னோடி விவசாயி என்பதையும் கடந்து அவர் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் இருக்கின்றன. 

 அவரது வாழ்வு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறது.  மனிதன் மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற உத்வேகத்தை தருகிறது.  ஒரு அருமையான பெட்டகமாக அவர் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து...

டாக்டர் வெங்கடபதி ரெட்டியார்
மகள் லட்சுமி
"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே விவசாயக் குடும்பத்தில்தான். சுட்டுப் போட்டாலும் எனக்கு படிப்பு வரவில்லை. 4-ம் வகுப்போடு மொத்தப் படிப்பையும் நிறுத்திக் கொண்டேன். விவசாயமும் பிடிபடவில்லை. இதற்குள் திருமணம் வேறு. 

வாழ்க்கை பிடிபடுவதற்குள், இறுதி கட்டத்திற்கு வந்து விட்டேன். வறுமை என்னுடன் வசதியாய் வாழ்ந்தது.  பசியோடும் பட்டினியாகவும் நாட்கள் நகர்ந்தன. இனி வாழ வழியில்லை என்று மனைவியோடு தற்கொலை செய்ய நினைத்தேன்.

"தற்கொலைதான் தீர்வுன்னா அத முன்னாடியே செஞ்சிருக்கலாமே, என்ன எதுக்கு கட்டிக்கிட்டு வரணும்' என்றார், மனைவி. நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்தன அந்த வார்த்தைகள். அவள் பேச்சால் மனம் மாறியது. வாழ வேண்டிய நிர்பந்தம் உருவானது.

மறுநாளே பெரியகுளம் போனேன். தோட்டக்கலை இயக்குநர் சம்பந்தமூர்த்தியிடம் போய் நின்றேன். "ஐயா! எனக்கு பொழைக்கத் தெரியல. ஏதாவது வழி சொல்லுங்கன்னு' கேட்டேன். அவர் 10 கனகாம்பரம் கன்றுகளை கையில் கொடுத்து 'பிழைத்துப் போ' என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. பிழைக்க வழி கேட்டால் கனகாம்பரம் செடியை தருகிறாரே என்று எண்ணியபடி என் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைத்தேன். செடிகள் தளிர்த்தன.  மலர்கள் பூத்தன.

அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் மலர்களைக் கேட்டார்கள். 10 சென்டில் 300 செடிகள் நட்டேன். வியாபாரம் சூடு பிடித்தது.  புதுவை மலர்க் கண்காட்சி நடந்தபோது 25 கனகாம்பரம் செடியைக் கொண்டு போனேன். அங்கு ஒரு செடியை ரூ.500க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். என்னால்  வெறும் ரூ.5-க்கு தரமுடியும் என்றேன். விவசாயத்துறையில்  இருந்து ஒரு லட்சம் கனகாம்பர கன்றுகளுக்கு ஆர்டர் கிடைத்தது.

ஆர்டர் கிடைத்துவிட்டது. இப்போது எப்படி கன்றுகளை உற்பத்தி செய்வது.  ஒரு செடியில் இருந்து மூன்று செடிகளைத்தான் உருவாக்க முடியும்.  மீண்டும் சம்பந்த மூர்த்தியிடம் ஓடினேன். அரசு கொடுத்த ஆர்டரை காட்டினேன். ஒரு லட்சம் செடியை எப்படி பதியம் போடுவது என்று கேட்டேன். அவர் கணு பதியம் முறை சொல்லிக் கொடுத்தார்.  செடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கணுப் பதியம் போட்டேன்.

என் மனைவி எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவே நினைத்தார். பெரிய செடியைப் பதியம் போட்டாலே வரமாட்டேங்குது. இது துண்டு துண்டா வெட்டிப் போட்டா எப்படி வரும்? என்றார்.  வேர் ஊசி முறையில் ஒரு லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து கொடுத்தேன். அடுத்த மலர் கண்காட்சியில் அதை விற்பனை செய்தார்கள். ஒரே டிடியில் ரூ. 5 லட்சம்  தொகை கொடுத்தார்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

அறியாமைதான் விவசாயின் முதல் எதிரி. கனகாம்பரம் எனக்கு நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்தது.  அப்போது ஒரே கலர் கனகாம்பரத்தைத் தருகிறீர்களே, பல வண்ணங்களில் கொடுத்தால் என்ன என்று பெண்கள் கேட்டார்கள். நான் மறுபடியும் சம்பந்த மூர்த்தியிடம் போனேன். அவர் கலர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் குரோமோசோம் மாற்ற வேண்டும் என்றார். பயோடெக்னாலஜி, டிஸ்யூ கல்சர், காமா ரேடியே­ன், கெமிக்கல் மியூட்டே­ன்  இவற்றையயல்லாம் செய்தால்தான் கலர் மாற்ற முடியும் என்றார்.

 சம்பந்த மூர்த்தியின் பேச்சை அப்படியே  டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து மீண்டும் மீண்டும்  கேட்டு தொழில்நுட்பத்தைக் கற்றேன்.
காமா ரேடியே­ன் என்ற கதிர் வீச்சு சமாசாரம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது.  அந்த வேளையில் ஒரு டிவி  சேனல் எனது பேட்டியை ஒளிபரப்பியது. அதில் நான் காமாரேடியே­ன் மட்டும் கிடைத்தால் 100  வண்ணங்களில் கனகாம்பரம் செடியை உருவாக்கி விடுவேன் என்றேன்.  இதை கேட்ட கல்பாக்கத்தினர் எனக்கு அனுமதியளித்தனர். செடிகளைக் கொண்டு ரேடியே­ன் கொடுத்தேன்.  திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் எல்லா செடிகளும் செத்துவிட்டன.

அப்போதுதான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனிடம் இதுபற்றி கேட்டேன். காமா ரேடியே­ன் போன்ற பெரிய வி­யங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 'ஃபார்மர்  ஜீனியஸ் வித்தவுட் ஃபார்மல் எஜூகே­ன்' என்று பாராட்டினார். பின் செடி தாங்கும் அளவுக்கு காமா ரேடியே­ன் கொடுங்கள் என்றார். கனகாம்பரத்திற்கு 1கே.ஆர். கிலோரேட்ஸ் 5 வரை கதிர்வீச்சு செலுத்தி புதிய இனம் உருவாக்கினேன்.

அதன்பிறகு காப்புரிமை பற்றி அன்றயை ஜனாதிபதி அப்துல்கலாமிடம் கேட்டேன். ஒரு வருடத்தில் எனக்கு காப்புரிமை கிடைத்தது. தாய், தந்தை, எப்படி குரோமோசோம்களை மாற்றினீர்கள். டிஎன்ஏ எடுத்து கொடுப்பது என்று நிறைய வேலைகள் காப்புரிமை பெறுவதில் உள்ளன.  ஒரு வழியாக அதையும் பெற்றேன்.

கனகாம்பரத்தில் பல வகைகளை உருவாக்கியப்பின், சவுக்கு மரம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய புதிய சவுக்கு மரம் 5 ஆண்டுகளில் 200 டன்  விளைச்சல் தரக்கூடியது. புயல், வறட்சி, மழை போன்ற எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இந்த மரத்தை இலையில் இருந்து வீரிய ரகமாக உற்பத்தி செய்தேன். அதன்பின் கொய்யா, இப்போது மிளகாய்.

நெய் மணம் கமழும் மிளகாய்
மிளகாயில் நெய் மணம் கமழும் மிளகாய் இயற்கையாகவே கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்கா, அமேசான் காடுகளில் 6,000 அடி உயரத்திற்கு மேல் உள்ள அடர்ந்த காடுகளில் இது இயற்கையாக விளைகிறது.

இந்த மிளகாய் எனக்கு கிடைத்தது ஒரு சுவாரசியமான அனுபவம். காடுகளில் வளரும் கனகாம்பர இனங்களைக் கண்டுபிடிப்பதற்காக மலைப் பகுதிக்குச் சென்றேன். மலைவாழ் மக்கள் உதவியில்லாமல்  அங்கு செல்லமுடியாது. அப்படி போகும்போது பழங்குடியினர் வீட்டில் புதுவிதமான ஒரு மிளகாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அந்த மிளகாய் பற்றி விசாரித்தேன்.
அவர்கள் இந்த மிளகாயை நீண்ட வாக்கில் நான்காக பிளந்து குழம்பில் போட்டால், குழம்பு கொதித்தப்பின் சோற்றில் பிசைந்து சாப்பிடும்போது நெய் மணம் வீசுகிறது என்கிறார்கள். இதை நான் நம்ப மறுத்ததால் என் எதிரே குழம்பு வைத்து அதில் ஒரு மிளகாயை பிளந்து போட்டு  இறக்கினார்கள். குழும்பில் நெய் மணம் வீசியது.

பின் எங்கு விளைகிறது, எங்கு கிடைத்திருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் பதில் கூறவில்லை. ஒரு கிலோ மிளகாயை ரூ.350க்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.  மனைவியிடம் இதை கூறினேன். நம்ப முடியாமல் அரை மனதோடு சமைத்தார்கள். நெய் மணம் கமழ்ந்தது. அதன் பின்னே நம்பினார்கள்.

இந்த மிளகாய் நமது மேற்கு மலைத் தொடர்ச்சி மலையில் மூணாறுக்கு பக்கத்தில் உள்ள வனப் பகுதியில் இயற்கையாக வளர்கிறது.  அந்த மிளகாயை சாதாரண நிலப்பரப்பில் கடல் மட்டத்திற்கு இணையாக விளைவித்து மகசூல் எடுத்ததுதான் சமீபத்தில் நான் கண்டு பிடித்தது.

நெய் மிளகாயில் இரண்டு பலன்கள் உண்டு. உணவில் காரமும்  நெய் மணமும் ஒரே மிளகாயில் கிடைத்துவிடும். உண்மையான நெய்யை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. இது அவர்களுக்கு ஒரு சுவையான உணவைத் தரும்.

பரமக்குடி மிளகாய் ரகத்தில் உருவாக்கிய நெய் மிளகாய்
நமது மிளகாயில் நம்பர் ஒன் ரகம் பரமக்குடி மிளகாய்தான். இந்த மிளகாய்தான் குண்டாக பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். அதிக காரம் இருக்காது, விதையும் குறைவு இந்த மிளகாயில் நெய் வாசம் வரும் விதமாக புதிய மிளகாயை உருவாக்கியுள்ளேன்.

இந்த மிளகாயைப் பொங்கல், ரவா பொங்கல், உப்புமா, கிச்சடி, பூரி குருமா போன்றவற்றை தயாரிக்கும்போது ஒரு நெய் மணம் கமழும் மிளகாயை சேர்த்து சமைத்தால் நெய் மணம் கமழும், சுவையும் கூடும். மசால் வடை, உளுந்து வடை, சம்சா, பஜ்ஜி, பப்ஸ், போண்ட இவைகளை தயாரிக்கும்போது ஒரு மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்து மாவுடன் அல்லது மசாலாவில் சேர்த்து சமைத்தால் சுவை கூடும்.

நெய் மிளகாய் நாற்று
கதம்ப சாம்பார், மோர்குழம்பு, வத்த குழம்பு, கூட்டு வகைகள் தயாரிக்கும்போது ஒரு மிளகாயை நான்காக பிளந்து பருப்புடன் வேக வைத்து சமைத்தால் நெய் மணம் கமழும். சுவையும் கூடும். பிரியாணி, சிக்கன் 65, கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலே இதை பயன்படுத்தலாம்.

ஐந்து நபர்களுக்குத் தேவையான அளவிற்கு சமைக்கும்போது ஒரு மிளகாய் பயன்படுத்தினால் போதும். சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டாம்.

ஃபிரிட்ஜில் வைத்தால் 50 நாள் வரை  கெடாமல் இருக்கும். இந்த  மிளகாய் குடை மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. ஆனாலும் காரம் 10 மடங்கு அதிகம். மலையில் விளையும் இந்த மிளகாயை  இங்கு விளைவிக்க பல ஆராய்ச்சி செய்துள்ளோம்.  இதற்கு என் மகள் லட்சுமியின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானது. அதனால் தான் எல்லா விழாக்களிலும் என் மகளையே முன்னிறுத்துகிறேன்.

நெய் மிளகாய் புதுவை கடைகளில் கிடைக்கிறது.மக்கள் சுவைத்து பாராட்டியிருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவித்து விற்கப் போகிறார்கள் '' என்று கூறி முடித்தார் பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்.

நெய் மிளகாயை கையில் ஏந்தியபடி லட்சுமி

விவசாயத் தொழில் நுட்பங்கள், பயிரிட விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்
94432 26611
திங்கள், பிப்ரவரி 16, 2015

பாக்கர் எனும் சித்தர்

து ஒரு சிறிய ஊர்.

அந்த ஊருக்கு வித்யாசமான ஒரு முறம் விற்கும் வியாபாரி வந்திருந்தார். அவர் முறம் விற்பனை செய்வதை பார்த்து அந்த ஊர்காரர்கள் ஏளனமாக சிரித்தனர்.

"அம்மா, தாயே..! இந்த முறத்திற்கான விலை ஒரு வெள்ளி. இந்த விலை இறைவன் எனக்கு சொன்ன விலை. யாராவது ஒரு வெள்ளி கொடுத்து முறம் வாங்கினால் மீதி இருக்கும் முறங்களை இனாமாகத் தருகிறேன்." என்று  கூறினார்.

முதலில் அவரை ஒரு பைத்தியகாரராகத்தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் சொன்னபடியே ஒரு முறத்தை தவிர மற்ற தெல்லாம் இனாமாகக் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த முற வியாபாரியின் பெயர் பாக்கர். ஒரு முறத்தின் விலை ஒரு வெள்ளி என்று தினமும் கூவி விற்பது அவரது வாடிக்கையாக இருந்தது. கால தேவிதான் தினமும் ஒரு வெள்ளி கொடுத்து ஒரு முறத்தை வாங்கிச் செல்வாள். மற்ற முறங்களை அந்த ஊர் மக்கள் இலவசமாகப் பெற்றுச் செல்வார்கள்.

காலதேவி கொடுத்த அந்த ஒரு வெள்ளியையும் பாக்கர் முழுதாக செலவு செய்யமாட்டார். அந்த ஒரு வெள்ளியில் கால் வெள்ளியை தனது மனைவிக்கு கொடுப்பார். கால் வெள்ளிக்கு முறம் செய்வதற்கான மூங்கில்களை வாங்குவார். மீதமிருக்கும் அரை வெள்ளியை தெருவில் வீசி விடுவார்.

மறுநாள் வழக்கம்போல் முறம் விற்கச் சென்று விடுவார். பாக்கரின் மனைவியும் கால் வெள்ளிப் பணத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார். பாக்கரும் இல்லத்தில் இருந்து கொண்டே தினமும் தியானத்தில் ஈடுபடுவார். பாக்கர் மிகச்சிறந்த சிவ பக்தர். நடராஜரின் சிலம்பு சப்தம் கேட்ட பின்தான் தனது தியானத்தை கலைப்பார்.

பாக்கரின் மனைவி ஒரு நாள், "சுவாமி! என்னை மகிழ்விக்க கால் வெள்ளி போதும். என்றாலும் கூட, நீங்கள் தினமும் அரை வெள்ளியை வீதியில் எறிவது ஏன்?" என்று கேட்டார்.

"தினமும் மனதில் ஆசை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சி அது. என்றாவது அந்த அரை வெள்ளிக்கு நீயோ..! நானோ..! ஆசைபடுகிறோமா என்பதை கால தேவி சோதிக்கும் விளையாட்டு, என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆசைக்கு அடிபணியாத பயிற்சியே இது!" என்று விளக்கம் அளித்தார்.

"எல்லாம் சரி சுவாமி. அடுத்து நமது வீட்டில் ஒரு விசேஷம் வருகிறது. அதற்கு நிறைய பாத்திரங்கள் தேவைப்படுகிறது. நீங்கள் தான் ஊர் முழுவதும் இலவசமாக முறங்களைக் கொடுத்து உள்ளீர்களே. அந்த பெண்களிடம் சென்று நமது விசேசத்திற்கு வேண்டிய பாத்திரங்களை வாங்கி வாருங்கள். பயன்படுத்தி விட்டு திரும்ப தந்து விடலாம்." என்றார்.

பாக்கரும் மனைவி கூறியபடியே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று பாத்திரங்களைக் கேட்டார். அவர்களுக்கு பாக்கர் மிகவும் மட்டமானவராகத் தெரிந்தார். என்னதான் இருந்தாலும் முறம் விற்றுப் பிழைப்பு நடுத்தபவர்தானே... இருந்தாலும் இலவசமாக முறங்களைக் கொடுப்பதால் வேண்டா வெறுப்பாக  வீட்டில் இருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்களை பாக்கரிடம் கொடுத்தனர். இதன் மூலம் அந்த ஊர் பெண்கள் தன்மீது எப்படி பட்ட அன்பு வைத்துள்ளார்கள் என்பதை பாக்கர் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்பமாக அமைந்தது.

மூன்று நாட்கள் கழித்து வீட்டில் விசேஷம் எல்லாம் முடிந்த பின் வாங்கிய பாத்திரங்களை அந்தந்த வீட்டில் கொண்டுபோய் திருப்பிக் கொடுத்தார். பாக்கர் திருப்பிக் கொடுத்த பாத்திரங்களில் இருந்த ஓட்டை உடைசல் எல்லாம் சரி செய்யப்பட்டு புது பாத்திரமாக இருந்தது. அது போக ஒவ்வொரு பாத்திரத்துடனும் ஏதேனும் ஒரு சிறிய பாத்திரம் கூடுதலாக இருந்தது. கூடுதலாக இருந்த பாத்திரங்களைக் கண்டு அத்தனைப் பெண்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

"பாக்கரே, எங்களது பழைய பாத்திரங்களை புதிதுபோல் பளபளக்கச் செய்து விட்டீர்களே! நன்றி. அதே சமயத்தில் நாங்கள் கொடுக்காத சிறிய பாத்திரங்களும் ஒவ்வொரு பாத்திரத்துடனும் உள்ளதே அது எப்படி?" என்று எல்லோரும் ஆவலாகக் கேட்டனர்.

"அது வேறொன்றுமில்லை. நீங்கள் கொடுத்த சமையல் பாத்திரங்கள் பகலில் வேலைக்கு உதவின. இரவில் அவை எல்லாம் குட்டி போட்டு விட்டன. நீங்கள் கொடுத்த பாத்திரங்கள் தானே குட்டி போட்டது. அது உங்களுக்கு உரியது தானே. அதனால்தான் உங்களிடம் கொடுத்து விட்டேன்" என்று விளக்கம் கூறினார். ஊர் முழுக்க பாத்திரம் குட்டி போட்டதே ஒரே பேச்சாக இருந்தது.

சிறிது நாட்கள் போனபின் மீண்டும் ஒரு விசேஷம் பாக்கர் வீட்டில் வந்தது. மறுபடியும் பாக்கருக்கு பாத்திரங்கள் தேவைப்பட்டது. இந்த முறையும் அந்த பெண்கள் வீட்டு வாசலில் நின்று பாத்திரங்களைக் கேட்டார். இப்போது யாரும் அவரை உதாசினப்படுத்தவில்லை. முறம் விற்பவர்தானே என்று மட்டமாகப் பார்க்க வில்லை. மாறாக எல்லா பெண்களும் சந்தோஷத்துடன் தங்களது கணவன் மார்களுக்குத் தெரியாமல் மிக நல்ல பாத்திரங்களை விலை உயர்ந்த பாத்திரங்களைக் கொண்டுவந்து பாக்கரிடம் கொடுத்தனர். பாக்கரும் எல்லா பாத்திரங்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்.

மூன்று நாட்கள் போனது.

குட்டிபோட்ட பாத்திரங்களோடு பாக்கர் வருவார் என்று மங்கையர்கள் மனம்நிறைந்த சந்தோஷத்தோடு பாக்கரை எதிர்பார்த்து காத்திருந்தனர். பாக்கர் திரும்பி வரவே இல்லை. பெண்கள் பதறிப் போயினர். எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து பாக்கர் வீட்டுக்கு படையாக கிளம்பினர்.

அங்கே பாக்கரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருந்த பெண்கள் கோபத்தோடு, "பாக்கர் எங்கே?" என்று கேட்டார்கள். உடனே பாக்கரின் மனைவி கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து சிந்தியது.

"அந்த கொடுமையை நான் எப்படி சொல்வேன். நீங்கள் கொடுத்த் பாத்திரங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கலாம், என்று என் கணவர் நினைத்திருந்த போதுதான் அந்த விபரீதம் நடந்தது. நீங்கள் கொடுத்த பாத்திரங்களுக்கு எல்லாம் நோய் வந்து இறந்து போய்விட்டன" என்று துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

"என்னதான் அழுதாலும் மாண்டவைகள் மீளுமா? மீளமுடியாது... வேறு வழியில்லாமல் இறந்து போன எல்லா பாத்திரங்களையும் எடுத்துப்போய் தகனம் செய்து விட்டார். நேற்றுதான் பால் ஊற்றி வந்தார். அந்த கவலையிலே பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தார். எங்கே சென்றாரோ தெரியவில்லை. நீங்கள் தான் என் கணவரை எப்படியாவது என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்." என்று கூறி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தப் பெண்கள் எல்லாம் திடுக்கிட்டு போனார்கள்.

நல்லவன்போல் நடித்து தங்களை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர்கள் நடந்த எல்லாவற்றையும் தங்கள் கணவன்மாரிடம் தெரிவித்தனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து மன்னரிடம் முறையிட்டனர்.

அந்த மன்னர் தீவிர சிவ பக்தர். பாக்கரின் அருமைகளைத் தெரிந்தவர். இருந்தாலும் மக்களுக்காக விசாரணைக்கு உத்தரவிட்டார். பாக்கர் அரசவைக்கு  வந்தார். பாக்கரை மானசீகமாக வணங்கிய மன்னர், "பாக்கரே, நடந்தவற்றைக் கூறுங்கள். அனைவரும் ஆத்திரமாக உள்ளனர்." என்று மன்னர் கேட்க, "அரசரே! இந்த ஊர் மக்களிடம் முன்பு ஒரு முறை பாத்திரம் வாங்கினேன். திரும்ப கொடுத்து விட்டேன். உண்மையா என்று கேளுங்கள்?" என்றார்.

"ஆமாம்! அரசே, பாக்கர் சொல்லுவது உண்மையே. முன்பு கொடுத்த பாத்திரங்களைத் திருப்பிக் கொடுத்தார். கொடுத்தப் பாத்திரத்துடன் கூடுதலாக ஒரு சிறிய பாத்திரத்தையும் கொடுத்தார். என்ன இது? என்று கேட்டதற்கு பாத்திரங்கள் குட்டி போட்டதாகச் கூறினார். இரண்டாவது முறை நாங்கள் பாத்திரம் கொடுத்தோம் அதை திரும்ப தரவேயில்லை. அதை கேட்டால் பாத்திரங்கள் எல்லாம் இறந்து விட்டது என்று பொய் கூறுகிறார். பாக்கரின் இந்த ஏமாற்று வேலையை தண்டிக்க வேண்டும் மன்னா...!" என்று அனைவரும் கூறினர்.

"அரசே, மோசமான எண்ணம் நாசத்தை விளைவிக்கும். பிறந்தவை இறக்கும் என்பது உலக நியதி. பாத்திரங்கள் அன்று குட்டி போட்டன. பிறப்பும் இறப்பும் இயற்கைதானே. அன்று பாத்திரங்கள் புதியதாய் பிறந்ததை மக்கள் எப்படி நம்பினார்கள்...? இப்போது, பிறந்த பாத்திரம் இறந்துபோனதை ஏன் நம்பவில்லை!" என்று பாக்கர் கேட்டார்.

மக்களின் பேராசையை அகற்றுவதற்காக சித்தர் விளையாடிய விளையாட்டு என்பதை புரிந்து கொண்ட மன்னர் "சித்தர் பெருமானே! பக்குவப்பட்டவர் நீங்கள்! இந்த அரை வேக்காட்டு மனிதர்களிடம் குறைவில்லா மனதை எதிர்பார்க்க முடியுமா! அதனால் அவர்களின் பாத்திரங்களை அவர்களுக்கு திரும்ப அருளும்படி வேண்டுகிறேன்" என்றார் மன்னர்.

பாக்கரும் "அழுக்கடைந்த பாத்திரங்களை தூய்மையான பாத்திரங்களாக மாற்ற நினைத்தது என்றுடைய தவறுதான்" என்று கூறி தனது ஞான திருஷ்டியால் எல்லா பாத்திரங்களையும் வரவழைத்து கொடுத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் மாயமாய் மறைந்து போனார்.

மனிதர்களின் பேராசையை அகற்ற பாக்கரும் எவ்வளவோ செயல்களை செய்தார். அது அந்த மக்களுக்கு  தெரியாமல் போனதில் பாக்கருக்கு வருத்தமே !

சனி, பிப்ரவரி 14, 2015

நானும்.. எனது இந்திராணியும்.. -ஒரு நிஜ காதல்!

காதலர் தினம் என்றதும் காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்த போது  40 வருட காதலையும் காதல் மனைவி இறந்தப் பின் அவரது உருவத்தோடும் வாழும் கோவிந்தராஜ் நினைவுக்கு வந்தார்.

உடனே ஊட்டி பஸ்ஸில் ஏறி மேட்டுப்பாளையம் போய் இறங்கினேன். அவர் வீட்டுக்குள் நுழைந்த போதுதான் காதல் எத்தனை புனிதமானது என்று தெரிந்தது.
கோவிந்தராஜ்
தனது காதலை உணர்வுபூர்வமாக கூறினார், கோவிந்தராஜ்.

"இந்த வீடு இந்திராணி ஆசைப்பட்டு கட்டியது.  

இதன் ஒவ்வொரு செங்கலும் அவள் பெயரைச் சொல்லும். இந்த வீட்டுக்கான இன்ஜினியரும் அவள்தான்.  

முன்புறம் ஒரு போர்ட்டிகோ, பெரிய ஹால், மூன்று பெட்ரூம், கிச்சன், பூஜை அறை, மார்பிள் தரை என்று வசதிப்படைத்தவர்களின் வீட்டைப் போலவே பார்த்து பார்த்து கட்டினாள்.  

யார் கண் பட்டதோ இந்த வீட்டில் ஒருநாள்கூட வாழும் பாக்கியம் அவளுக்கு இல்லாமல் போனது..

மேட்டுப்பாளையம் காட்டூர் பேரிங் கம்பெனி ரோட்டில்தான் எங்கள் இருவரின் வீடும் இருந்தது.  எங்களது அப்பாக்கள் இருவரும் நண்பர்கள். 

அதனால் சின்ன வயதிலிருந்தே இந்திராணி வீட்டுக்கு நான் போய் வருவேன்.  பால்ய சிநேகம் என்பார்களே அப்படியொரு பந்தம். எனக்கும் அவளுக்கும்..! நான் 10ம் வகுப்போடு எனது படிப்பை முடித்துக் கொண்டேன். 

அதே தெருவில் ஒரு டெய்லர் கடை வைத்தேன். இந்திராணி அப்போது சின்னப் பெண்.  எனக்கும் அவளுக்கும் 10 வயது வித்தியாசம். அவளது பாவாடை சட்டையெல்லாம் கூட நான் தைத்துக் கொடுத்திருக்கிறேன்.  

அப்போதெல்லாம் இந்திராணி சாதாரணப் பெண்ணாகத்தான் எனக்குத் தெரிந்தாள். என்னுடைய 24வது வயதில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கிளார்க் வேலை கிடைத்தது.  அரசு வேலை கிடைத்தப் பின்பும் கூட எனது டெய்லர் தொழிலை நான் விடவில்லை.  வேலை முடிந்து வந்ததும், கடையைத் திறந்து உட்கார்ந்து விடுவேன்.  

இப்படியே  இரண்டு வருடம் போனது.  வேலைப் பளுவால் இந்திராணி வீட்டுக்குக் போவது கிட்டத்தட்ட நின்று போனது. இந்திராணி கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவிலிருந்து விலகி சென்று கொண்டிருந்தாள்.

ஒரு நாள் கடையில் இருந்தபோது, அந்த இனிமை நிகழ்ந்தது.

 "இந்த சட்டையை கொஞ்சம் தைச்சுக் கொடுங்க...'' என்று ஒரு பெண்ணின் இனிய குரல் கேட்டது.  நிமிர்ந்து பார்த்தேன். 

இந்திராணி...!!! 

என்னால் நம்ப முடியவில்லை..! 16 வயது பருவ மங்கையாக அவள்..!

 பிரமித்துப் போனேன். அழகு... அழகு.... அப்படியொரு அழகு..! இந்த இரண்டு வருடத்தில் பருவம் அவள் உடலை பக்குவமாக செதுக்கி வைத்திருந்தது.  

மனதுக்குள் மத்தளம்  அடித்தது.  'எனக்கென பிறந்தவள்' என்று மனம் பரபரத்து பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டது.

எனது கடைக்கு எதிரே இருந்த தண்ணீர் குழாய் தேவதையின் கூடாரமாக மாறியது.  

அங்குதான் இந்திராணி காலையும் மாலையும் தண்ணீர் பிடிக்கக் குடத்துடன் வருவாள், பள்ளிக்கூடம் போகும்போது அவளைப் பின் தொடர்வது எனது வாடிக்கையானது.

ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிதம் கொடுத்தேன். அதுவொரு காதல் கடிதம்!  பதில் இல்லை.  பின் நேரடியாகவே எனது விருப்பத்தை சொன்னேன். 'முடியாது' என்று கூறிவிட்டாள். அதற்கு காரணமும் இருந்தது.

நாங்கள் இருவரும் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பம் வசதியான குடும்பம். அவளுடைய குடும்பமோ ஏழ்மையானது.  

வர்க்கப் பேதங்கள் எங்களை விலக்கி வைத்தன.  ஆனாலும், என் மனது 'இவள் உனக்கானவள்' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் என் காதலை இந்திராணி ஏற்றுக் கொண்டாள்.  நான்கு வருடங்களாக இருவரும் உயிருக்குயிராய் காதலித்தோம்.  இந்த வி­ஷயம் அரசல் புரசலாக எங்களின் வீடுகளுக்கும் எட்டியது. இருவர் வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்பு.

அவர்கள் வீட்டில், இந்திராணியின் அத்தை மகனுக்கு அவளைக் கட்டி வைக்க தீவிரமான ஏற்பாடுகள் நடந்தன.

"எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடுதான். இல்லேன்னா செத்துடுவேன் '' என்று என் முன் வந்து நின்ற பெண்ணை, ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்ள சொன்னேன்.

அன்றைக்கே லீவு போட்டு தாலி, பட்டு வேட்டி, பட்டுச் சேலை எல்லாம் வாங்கினேன். இரவோடு இரவாக இந்திராணிக்கு ஜாக்கெட் தைத்து முடித்தேன். 
திருமணத்தின் போது இந்திராணி கோவிந்தராஜ் 
விடியற்காலையில் இருவரும் பழனிக்கு வந்து விட்டோம்.  முருகன் கோயிலில் திருமணம் செய்வதாக இருந்தோம்.  ஆனால் கோயிலில் அனுமதிக்கவில்லை.  அதனால் மலைக்கு கீழே உள்ள விநாயகர் கோயிலில் தாலி கட்டினேன். அங்கு வந்திருந்தவர்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு பெங்களூருக்கு சென்றுவிட்டோம்.  உறவினர் ஒருவரின் வீட்டில்  ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த காலத்தில் போன் வசதி அதிகமாக கிடையாது. அதிலும் சாமானியர்கள் போன் பேசுவது நினைத்து பார்க்க முடியாத அதிசயம். அதனால் நண்பர்களுக்கு கடிதம் எழுதினேன்.

அவர்களே எங்களுக்கான வீட்டை வாடகைக்கு எடுத்தனர். தேவையான சாமான்களை வாங்கி வைத்தார்கள்.  திரும்பவும் மேட்டுப்பாளையம் வந்தோம். இரு வீட்டிலும் எங்களை வேப்பங்காயாய் நினைத்தார்கள். எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

எட்டு வருடமாக எங்கள் குடும்பத்தினர் யாரும் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.  தாரத்துக்கு தாரமா, தாய்க்குத் தாயாக இருந்து என் மேலே பாசத்தை கொட்டினாள் இந்துராணி.

கூடவே அதிர்ஷ்டமும் வந்தது. எனக்கு புரமோ­ஷன் கிடைத்தது.  சம்பளம் அதிகமானது. வாழ்க்கை மிக சந்தோ­ஷமாக போய்க் கொண்டிருந்தது.  

செந்தில்குமார் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் பிறந்தார்கள்.
பிள்ளைகள் எங்களை பெருமைப்படுத்தும் விதமாக நன்றாகப் படித்தார்கள். செந்தில் பி.இ. முடித்து பெங்களூரில் வேலைக்குப் போனான். பூர்ணிமா எம்.பி.ஏ., எம்.பில். படித்துவிட்டு கோபியில் திருமணம் செய்து கொடுத்தோம்.

எல்லாம் இருந்தும் ஒரு சொந்த வீடு இல்லையே  என்ற குறை இந்திராணியை வாட்டிக் கொண்டே இருந்தது. என் மகனுக்கு  வெளிநாட்டில் வேலை கிடைத்து போனபோது வீடு கட்டுவதற்கான காலமும் கணிந்தது.

காரமடை ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டுக்கான இன்ஜினியர் இந்திராணிதான். அவளின் விருப்பப்படிதான் வீட்டின் அமைப்பு இருந்தது.  

வீட்டை ஒவ்வொரு அங்குலமாக அலங்கரித்து ரசித்தாள். பூஜை அறை இப்படி இருக்கணும், சமையலறை இப்படி இருக்கணும், பெட்ரூம் இப்படி இருக்க வேண்டும் என்று ரசித்து ரசித்து கட்டினாள்.

வீட்டு வேலையும் முழுமையாக முடிந்தது. பால் காய்ச்ச  நாளும் குறித்தோம். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்  திடீரென்று இந்திராணிக்கு தாங்க முடியாத நெஞ்சு வலி ஏற்பட்டது, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது.  

அவ்வளவுதான் என் மொத்த வாழ்க்கையும் ஒரு நொடியில் முடிந்து போனது.வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது.
எனக்கு வாழவே பிடிக்கவில்லை. 

உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்த என் இந்திராணி போன பிறகு வாழ்வே சூனியமாக இருந்தது.  இந்த வீடு அவள் உயிரை வாங்கிவிட்டதாக எனக்குப் பட்டது. இந்த வீட்டு பக்கமே நான் வரவில்லை. அதன் பிறகு நாங்கள் இருந்த வாடகை வீட்டிலேதான் தங்கியிருந்தேன்.
போட்டோவில் இந்திராணி 
என் பிள்ளைகள் புது வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டார்கள். எனக்குத்தான் அவள் இல்லாத வீட்டில் இருக்க மனமில்லாமல் இருந்தது.  திடீரென்று ஒருநாள் தோன்றியது. இந்திராணியை புதுவீட்டுக்கு கூட்டிப் போனால் என்ன என்று...
சிலையாக இந்திராணி 
எனக்கு கம்பி வேலை, சிமெண்ட் வேலை எல்லாம் தெரியும். அவள் முகத்தை மனதில் நினைத்துக்  கொண்டு சிலை செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு நிலையிலும் சிலையை போட்டோ எடுத்து முகம் சரியாக இருக்கிறதா என்று அவளின் ஒரிஜினல் போட்டோவோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆறுமாதமாக தன்னந்தனி ஆளாக இந்த சிலையை முடித்து பார்த்தபோது எனது இந்திராணியே நேரில் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

கிரகப்பிரவேசத்திற்கு அந்த சிலையுடன்தான் வருவேன் என்று அடம்பிடித்தேன். முதலில் எதிர்த்தவர்கள் பின் 'ஓகே' சொல்லிவிட்டார்கள். அப்போதிருந்து என்னுடன்தான் சிலை வடிவில் இந்துராணி இந்த வீட்டில் இருக்கிறாள்.

மகன் வெளிநாட்டில், மகள் புகுந்த வீட்டில் இருக்கும் நிலையில் நானும் அவளும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று எந்த ஒரு திருவிழா வந்தாலும் இந்திராணிக்கும் புதுப்புடவை உடுத்தி வழிபடுவேன்.
இந்திராணி உருவத்துடன் கோவிந்தராஜ்
மரணம் எங்களைப் பிரித்திருந்தாலும்.... காதல் பிரித்ததில்லை... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனையிலும் இந்திராணிதான் என் மனைவியாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை...!"

வெள்ளி, பிப்ரவரி 13, 2015

பெண்மை என்ற கவர்ச்சி காரணமா?

நான் 'ப்ளாக்' தொடங்கி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இதுவரை 30 பதிவுகள் வெளியிட்டுவிட்டேன். எந்த ஒரு பதிவும் 300 பார்வையாளர்களை கடந்ததில்லை. ஆனால், கடந்த வாரம் நான் பதிப்பித்த 'அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி' என்ற பதிவு வெளியிட்ட  இரண்டு நாளிலே 500 பார்வையாளர்களை கடந்து விட்டது. இதற்கு பெண்மை என்ற கவர்ச்சி தான் காரணமா? அல்லது தகவல் காரணமா? தெரியவில்லை.

பெரும்பாலான நண்பர்கள் இந்த பதிவை அவர்களின் சமுக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அனார்ச்சாவிற்காக பரிதாபப்பட்டு எனக்கு போன் செய்தவர்கள் அநேகர்.

நம் மக்களின் மனங்களிலும் எராளமான ஈரம் இருக்கிறது என்பதை இந்த பதிவு உணர வைத்தது. தற்போது 1,000 என்ற இலக்கை நோக்கி முன்னேறி செல்கிறது.

பதிவை பரிந்த இதயங்களுக்கு நன்றிகள் கோடி!

புதன், பிப்ரவரி 11, 2015

வந்தாச்சு.. 9.2 ஹோம் தியேட்டர்

ஹாலிடேயை ஜாலிடே ஆக்கும் சமாச்சரங்களில் ஒன்று மியூஸிக்! அதிலும் வீட்டில் ஹோம் தியேட்டர் ஒன்று இருந்துவிட்டால், ஜாலிக்கு கேட்கவே வேண்டாம்.

ஹோம் தியேட்டர்ப் பற்றி தெரிந்து கொள்வதற்கு  முன் நாம் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தாக வேண்டும். 

ஆரம்பத்தில் சினிமாவில் 'ஆடியோ டிராக்' என்பது 'மோனோ'வாகவே இருந்தது. அந்த ஒரு டிராக்கில் தான் வசனம், பாடல், இசை என்று எல்லாமே பதிவாகி இருக்கும். திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில்தான் இவை அத்தனையும் கேக்கும். 

'மோனோ'வில் உள்ள குறை இசையின் நுண்ணிய ஒலிகளை அது விழுங்கிவிடுவதுதான்.

70-களின் தொடக்கத்தில் ஆடியோவில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அதுதான் 'ஸ்டீரியோ'! ஒரே டிராக்காக இருந்த ஆடியோவை வலது, இடது என இரண்டு டிராக்காகப் பிரித்தார்கள். 

சில இசை கருவிகளை வலது டிராக்கிலும், சிலவற்றை இடது டிராக்கிலும் பதிவு செய்தார்கள். இது இசை கேட்பதில் ஒரு சுகமான அனுபவத்தை ஏற்படுத்தி தந்தது. 

'ஷோலே' முதல் ஸ்டீரியோ திரைப்படம்
ஸ்டீரியோவில் இந்தியாவில் வெளிவந்த முதல் படம் 'ஷோலே'! தமிழில் 'ப்ரியா'! அப்போதெல்லாம் இந்திய ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஸ்டீரியோ ஒலிப்பதிவு கிடையாது. 

ஸ்டீரியோவில் ஒரு படம் பண்ண வேண்டும் என்றால், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு லண்டனுக்கு ஓடவேண்டும். மேலும், அன்றைய இசையமைப்பாளர்கள் ஸ்டீரியோ ஒலிப்பதிவில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெறவில்லை.

அதனால், ஸ்டீரியோ முறை சினிமாவில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. 70 எம்.எம்.-ல் எடுக்கப்படும் அரிதான சில படங்கள் மட்டுமே ஸ்டீரியோவில் வந்தன. ஆனால், காலப்போக்கில் இசைத்தட்டுக்களில் பதிவு செய்யப்படும் சினிமா பாடல்கள் எல்லாமே ஸ்டீரியோவில் பதிவு செய்யப்பட்டன. 

'வாக்மேன்' அறிமுகமான பின் ஸ்டீரியோ முறைக்கு மவுசு கூடியது. ஹெட்போன் மூலம் கேட்பது இசையில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. அதன்பின் இசைப் பதிவு முறையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.


இப்படி மந்தமாகப் போய்க்கொண்டிருந்த சினிமா ஆடியோவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது, 90-களின் தொடக்கத்தில் தான். அமெரிக்காவில் இருக்கும் 'டால்பி லேபரட்டரி' ஆடியோவை 5 டிராக்குகளாக பிரிக்கும் முறையை கண்டுபிடித்தது.

'ஸ்பீட்' டால்பி சிஸ்டத்தில் வந்த முதல் படம்
முதன் முதலில் 'ஸ்பீட்' என்ற ஹாலிவுட் படம் டால்பி சிஸ்டத்தில் வெளிவந்தது. தமிழில் கமலஹாசன் நடித்த 'குருதிப்புனல்' வந்தது.


டால்பி தொழில்நுட்பத்தில் ஒரு சில சின்ன மாற்றங்களை செய்து அடுத்த வருடமே டி.டி.எஸ். என்ற 'டிஜிட்டல் தியேட்டர் சரவுண்ட் சிஸ்டம்' முறை அறிமுகமானது. 

டி.டி.எஸ். முறையில் வெளிவந்த முதல் படம்
இந்த தொழில் நுட்பத்தில் ஸ்பீல்பெர்க்கின் 'ஜுரஸிக் பார்க்' தான் முதல் படமாக வெளிவந்தது. தமிழில் 'கருப்பு ரோஜா'. இந்த படம் சரியாக ஓடாததால் இரண்டாவதாக வந்த 'இந்தியன்' படமே டி.டி.எஸ். பெருமையை எல்லோரும் அறியச் செய்தது. இந்த படம்தான் பல தியேட்டர்களை டி.டி.எஸ். சிஸ்டத்துக்கு மாற வைத்தது.

அப்போது சாட்டிலைட் சேனல்கள் வீட்டின் வரவேற்பறையில் புகுந்து எல்லோரையும் டி.வி.யின் முன்னே முடக்கிப் போட்டிருந்த காலம்.  

முடங்கிப் போயிருந்த மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு கொண்டு வருவதற்கு, இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அவசியத் தேவையாக இருந்தன. தொழில்நுட்பங்கள் ரசிகர்களுக்கு கொடுத்த திருப்தியில் சினிமாக்காரர்களின் பணப்பை நிரம்பியது.

 'ஆன்க்யோ' ஹோம் தியேட்டர்
சினிமா தியேட்டர்களில் மட்டும் குடி கொண்டிருந்த இந்த ஆடியோ அதிசயத்தை வீட்டுக்கு கொண்டுவந்தது,  'ஆன்க்யோ' என்ற ஜப்பான் நிறுவனம். இன்றைக்கும் ஹோம் தியேட்டர் தயாரிப்பில் இதுதான் முன்னணி நிறுவனம். வீட்டுக்குள் வந்த இந்த அதிசயம், வந்த வேகத்திலேயே விற்பனையில் சூடு பிடித்தது.

 தியேட்டரில் சென்று கூட்டத்தின் இடையே சிக்கிக்கொள்ளாமல், விசில் சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக படத்தை தியேட்டரின் தரத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹோம் தியேட்டர் வரப்பிரசாதமாக அமைந்தது.

மோனோவிலும் ஸ்டீரியோவிலும் இசையைக் கேட்டுகொண்டிருந்தவர்களுக்கு 5.1 ஹோம் தியேட்டர்கள் புதிய இசை அனுபவத்தை தந்தன.

 அது என்ன 5.1..?!

 ஒரு இசையை ஐந்து டிராக்குகளாகப் பிரித்து பதிவு செய்யும் முறை. சென்டர், ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட், சரவுண்ட் ரைட், சரவுண்ட் லெஃப்ட் இதுதான் அந்த ஐந்து டிராக்குகளின் அமைப்பு.

 இதில் சென்டர் என்பது டி.வி.க்கு பின்னால் இருக்கும் ஸ்பீக்கரை (டிராக்) குறிக்கும். இதில் வெறும் வாய்ஸ் மட்டுமே பதிவாகி இருக்கும். டி.வி.க்கு இருபக்கமும் சிறிது தூரத்தில் ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட் ஸ்பீக்கர்கள் (டிராக்குகள்) இருக்கும் இதில் இசை பதிவாகி இருக்கும். திரையின் இடது பக்கம் நடக்கும் காட்சிகளின் சிறப்பு சப்தங்கள் இடது டிராக்கிலும் வலது பக்கம் நடப்பது வலது டிராக்கிலும் பதிவு செய்திருப்பார்கள்.

இது படம் பார்ப்பவர்களை காட்சியோடு அப்படியே ஒன்றவைக்கும்.

'சரவுண்ட் ரைட், லெஃப்ட்' என்பது நாம் உட்காந்திருக்கும் இடத்திற்கு இடது      பக்கமும் வலது பக்கமும் அமைத்திருக்கும் ஸ்பீக்கர்களை (ட்ரக்குகள்) குறிக்கும். கூட்டத்தின் நடுவே சிக்கிகொள்வது, டிராஃபிக்கில்  மாட்டிக்கொள்வது, சண்டை காட்சிகள் போன்றவற்றில் இந்த  டிராக்குகள் இயங்கும்  மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும். இதனால் டிராஃபிக்கில் ஹீரோயின் மாட்டிக்கொண்டால்  நாம் டிராஃபிக்கில் இருப்பது போன்ற உணர்வை உண்டாகும்.இப்படியாக 5 டிராக்குகள் வேலை செய்கின்றன.


அது என்ன .1 (பாயிண்ட் ஒன்)...?

அந்த ஒரு டிராக்கில் வெறும் 'லோ ஃப்ரிகுவேன்ஸி' ஒலிகளை மட்டுமே கொடுத்திருப்பார்கள்.

இதுதான் பேஸ் ஒலிகளை துல்லியமாகக் கொடுத்து தியேட்டர்  அனுபவத்தை நமக்கு கொடப்பது.  இது அரைகுறையான டிராக் என்பதால் இதை முழுமையான டிராக்காக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் பாயிண்ட்  ஒன் என்று வைத்து விட்டார்கள். 

மற்ற டிராக் ஸ்பீக்கர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்ற வரைமுறை உண்டு. ஆனால் பாயிண்ட் ஒன் என்று அழைக்கபடுகிற சப்- ஊஃபார்களுக்கு மட்டும் இந்த வரைமுறை எல்லாம் கிடையாது. அறையில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளாம்.

இந்த 5.1 இசை சரவுண்ட் அனுபவத்தை தந்தாலும் நமக்கு பின்னால் இருக்கும் பகுதி இசையால்  சூழப்படாமல் வெற்றிடமாக இருப்பதாய் உணர்ந்தார்கள், இசை ஆர்வலர்கள். அதையும் சரி செய்வதற்காக பின்னால் மையமாக ஒரு டிராக்கை அமைத்தார்கள்.

இதை 'ரியர் சென்டர்' என்றழைத்தார்கள். இதற்கு  '6.1 டால்பி - ஈ எக்ஸ்' என்றும்  '6.1 டி.டி.எஸ் - ஈ எஸ்' என்றும் பெயரிட்டார்கள். இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று இந்த கண்டுபிடிப்பாளர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.

ஆனால் மனிதனின் இசைஆர்வம் அமைதியாக இல்லை. அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக 'லூகாஸ்' என்ற பிலிம் கம்பெனி 'டி. ஹெச்.எக்ஸ்' என்ற பெயரில் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர். அதன்படி 'ரியர் சென்டர்'  டிராக்கோடு நின்று போயிருந்த ஹோம் தியேட்டரில் ரியர் டிராக்கை இரண்டாகப்பிரித்து 'ரியர் லெஃப்ட்', 'ரியர் ரைட்' என்று அறிமுகபடுத்தினார்கள். 7.1 ஹோம் தியேட்டரை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான். 

சிலர் பேஸ் ஒலிகளை மிகவும் விரும்பி கேட்பார்கள்.அவர்களுக்கு ஒரு சப் ஊஃபர் மட்டும் போதுமானதாக இருப்பது இல்லை.அதனால் இரண்டு சப் ஊஃபர் வைக்கும் விதமாக ஒரு டிராக்கை உருவாக்கினார்கள். அதுதான் 7.2 ஹோம் தியேட்டர். 


இதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்று நினைத்தவர்களுக்கு மேலே வெற்றிடமாகதானே இருக்கிறது. அங்கும் டிராக்குகளை வைத்தால் என்ன என்று யோசித்தார்கள்....விளைவு ரியர் லெஃப்ட், ரைட் ஸ்பீக்கர்களுக்கு  மேலே சற்று  உயரத்தில் சீலிங்கை தொட்டபடி 'ரியர் அப்பர்-லெஃப்ட்', 'ரியர் அப்பர்- ரைட்' என்று இரண்டு டிராக்குகளை புதிதாக சேர்த்து விட்டார்கள்.இப்போதைக்கு கடைசியாக இருப்பது 9.2 ஹோம் தியேட்டர் தான். 

இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று விஞ்ஞானத்துக்கே வெளிச்சம்! 

ஆனால் இந்த ஹோம் தியேட்டர்களை எல்லாம் ஒரிஜினல் சாஃப்ட்வேர் உபயோகித்து அதற்குரிய நிறுவனம் சான்றிதழ் அளித்திருந்தால் தான் கேட்பதற்கு  நன்றாக இருக்கும். இப்படி சான்றிதழ் பெற்று ஒரிஜினல் சாஃப்ட்வேரோடு கிடைக்கும் 5.1 ஹோம் தியேட்டர்களின் குறைந்தபட்ச விலை ரூ.25,000. இதுவே 7.1 என்றால் 75,000. 9.2 ஹோம் தியேட்டரின் ஆரம்ப விலை 2 லட்சம். அதிகபட்ச விலைக்கு எல்லையே இல்லை. ஏனென்றால் ஒரு ஸ்பீக்கரின் விலையே ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் இருக்கிறது.

பொதுவாக, ஹோம் தியேட்டர்களின் ஆம்பளிபையர்களை ரிசீவர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த ரிசீவரில் ஆடியோ-வீடியோ இன்-புட் கொடுத்து அவுட்-புட் எடுத்தால் ஒலி ஒளியின் தரம் கூடுகிறது. வீடியோவிலும் சரி ஆடியோவிலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவு 'நாய்ஸ்' என்பது உள்ளே புகுந்துவிடும். இது வீடியோவில் புள்ளிகளையும், ஆடியோவில் இரைச்சலையும் ஏற்படுத்தும். இதை பில்டர் செய்து தரமான துல்லியமான ஒலி ஒளிகளை அனுப்பும் வேலையை இந்த ஹோம் தியேட்டர் ரிசீவர்கள் செய்வது கூடுதல் நன்மை.

இப்படி எல்லாமே தரமாக அமைந்தால் சலிக்காத ஓர் இசைப் பயணத்தை நாம் பெறலாம். திங்கள், பிப்ரவரி 09, 2015

வாதாபி கொண்ட அகத்தியர்

    சித்தர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் ஒன்று சேர வந்து நிற்பவர் அகத்தியர்தான். சித்தர் என்றால் அகத்தியர், அகத்தியர் என்றால் சித்தர் என்கிற அளவுக்கு சித்தர்களிலே புகழ்பெற்ற முதன்மைச் சித்தர் அகத்தியர்.

    நவீன மருத்துவ உலகம் கூட விடை காணமுடியாத பல நோய்களுக்கும், மருந்துகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான விளக்கம் கொடுத்தவர். சித்த வைத்தியத்திற்கு இவர் செய்திருக்கும் பணி செயற்கரியது.

    அகத்தியரின் தோற்றம் பற்றிப் பலவிதமாகப் புராணங்கள் கூறுகின்றன. தாரகன் என்ற அரக்கர்கள் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த காலம். அவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வேட்கையில் இந்திரன், வாயு, அக்னி துணையுடன் பூமிக்கு வந்தான். இவர்களைக் கண்ட அரக்கர்கள் மனதில் அச்சம் ஏற்பட அவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். கடல்நீர் முழுவதும் வற்றச் செய்தால்தான் அரக்கர்களை பிடிக்க முடியும் என்று நினைத்த இந்திரன் தன்னுடன் வந்திருந்த அக்னிக்கு ‘கடல்நீரை வற்ற செய்!’ என்று கட்டளையிட்டான். ஆனால் அக்னி இதை ஏற்கவில்லை.

    “இந்திரனே, கடல்நீரை வற்றச் செய்துவிட்டால் உடகில் உள்ள நீர் வளங்கள் எல்லாம் வற்றிவிடும்.  பூமியில் வாழும் உயிரினங்கள் நீரின்றி மரணம் எய்தும். அதனால் கடல்நீரை வற்றவைக்க முடியாது” என்று பதிலுரைத்தார்.

    அரக்கர்களை அழிக்க முடியாமலே மேலோகம் திரும்பினர். சிறிது காலம் அமைதியாக இருந்த அரக்கர்கள் மீண்டும் தொல்லை கொடுக்க தொடங்கினர். இவர்களின் கொடூரங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் கடல்நீரை வற்றச் செய்ய வேண்டும். அன்றே இந்த கடல்நீரை வற்றிப்போகும்படி செய்திருந்தால் இன்று இத்தனை துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்த இந்திரன்.

    கோபத்துடன் அக்னி தேவனைப் பார்த்து “நீ வாயுடன் கூடி பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல்நீரையெல்லாம் குடிக்கக்கடவாய்” என்று சாபமிட்டான். அதன்படி அக்னி, வாயுடன் கூடி  பூமியில் விழுந்து அகத்தியராய் தோன்றினார். இந்திரனின் விருப்பப்படி அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்துவிட்டார். வற்றிய கடலில் ஒழிந்து கொள்ள இடமில்லாமல் அரக்கர்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தனர். அவர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தார். இப்படியாக அகத்தியர் உருவானதை ஒரு புராணம் விவரிக்கிறது.

    இன்னொரு புராணம் வேறொருவிதமாக விவரிக்கிறது.  பூமியின் கடற்கரை அருகே மித்திரனும் வருணனும் தங்கியிருந்த காலம். இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்திருந்த ஊர்வசியைப் பார்த்தனர். அவளின் அழகு அவர்களைக் கிறங்க வைத்தது. தங்கள் மனதை பறிகொடுத்தனர். இருவருக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரிடமிருந்தும் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியத்தை ஒருவர் குடத்திலிட்டார். இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.

    குடத்திலிருந்த வீரியம் அகத்தியராக உருபெற்றது. தண்ணீரில் விட்ட வீரியம் வசிஷ்டராக தோன்றியது. இப்படி ஒரு புராணம் கூறுகிறது. காவிரி புராணம் இன்னொருவிதமாக கூறுகிறது. பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தை கண்டு அவள் மீது மையல் கொண்டு, காமவயப்பட்டதும், வீரியத்தை வெளிவிட, அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாக கூறுகிறது. இப்படி அகத்தியரின் தோற்றம் பற்றி விதவிதமாக புராணக்குறிப்புகள் இருந்தாலும் சித்தர்கள் உலகில் தவிர்க்க முடியாத சித்த பெருமான் அகத்தியர்தான்.

    ராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவனுக்கு பிணந்தின்னுமாறு சபிக்கப்பட்ட சாபத்தில் இருந்து விடுதலை செய்தார். தான் வருவது தெரிந்திருந்து வணங்காமல் இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.

    நீரின் மீது படுத்து கடுந்தவம் புரிந்தார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததால் பல அரிய சக்திகளைப் பெற்றார். வடதிசையில் வாழ்ந்து வந்த அகத்தியர் தென்திசை நோக்கிவந்தார். வரும் வழியில் அவரது முன்னோர்களைச் சந்தித்தார். அவர்கள் எல்லாம் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். தனது பித்ருக்கள் இப்படி இருப்பதைக்கண்டு கவலை கொண்ட அகத்தியர் ‘எப்படி விடுவிப்பது?’" என்று கேட்டார்.

    “அகத்தியனே! உன்னைக் கண்டதும் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். நீ திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தப்பின்தான் நாங்கள் இதிலிருந்து விடுபட முடியும். அதன்பின் தான் சொர்க்கம் புக முடியம்” என்றனர்.

    அகத்தியர் எப்போதுமே கடுந்தவத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர். தவமும் இறைவனை நினைக்கும் பேரானந்தத்தைவிட வேறு எதையுமே பெரிதாக நினைக்காதவர். வேறு எதிலும் நாட்டம் கொள்ளாதவர். திருமணம், மனைவி, இல்லற வாழ்க்கை என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்காதவர்.

    ஆனால் தன் முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக “கவலைக் கொள்ளாதீர்கள்! விரைவில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்” என்று கூறி விதர்ப்ப நாட்டை நோக்கி நடந்தார்.

    அந்த நாட்டு அரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரை என்ற பெண்ணை அதிகமான பொருள் தந்து மணந்து கொண்டார். ஒரு மகனை ஈன்று முன்னோர்களின் கடனைத் தீர்த்தார்.

    தமிழுக்கு உரிய முருகக் கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு 'அகத்தியம்' என்ற இலக்கிய நூலை இயற்றினார்.

    ஒருமுறை சிவபெருமான் உமாதேவி திருமண வைபவம் நடைபெற இருந்தது. இறைவனின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்களும் ரிஷிகளும் இமயத்தில் ஒன்று கூடினர். உலக மக்கள் அனைவரும் அங்கு திரண்டதால் பூமியின் வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. தாழ்ந்துபோன இந்த பூமியை சரிசெய்ய அகத்தியர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று சிவபெருமான் கூறினார்.

    உடனே அகத்தியர் அழைக்கப்பட்டார். “அகத்தியரே! எமது திருமணம் காண அனைவரும் இங்கு ஒன்று கூடியதால் வடப்பகுதி தாழ்ந்துவிட்டது. இதனை சமநிலைப்படுத்த தென்திசைப் போக வேண்டும். உம் ஒருவரால்தான் இதுமுடியும்” என்று சிவபெருமான் கட்டளையிட்டார்.

    “எம்பெருமானே! உலகமே கண்டு களிக்கும் தங்களின் திருமணத்தை அடியேனும் காண ஆவல் பிறக்கிறது. திருமணத்தைப் பார்த்தபின் செல்கிறேன்” என்றார் அகத்தியர்.

    “அகத்தியரே! இது தாமதிக்கும் செயல்அல்ல. உடனே தென்திசை செல்! அங்கே உனக்கு நானும் உமாதேவியும் திருமண கோலத்தில் காட்சி தருகிறோம்” என்றார்.

    இதனைக் கேட்ட அகத்தியர் மன மகிழ்வுடன் தென் திசைக்கு பயணம் மேற்கொண்டார். தென்திசையை அடைந்ததும் உலகம் சமநிலை அடைந்தது.

    ஒரு சமயம் விந்திய மலைக்காடுகளில் வாதாபி, இல்வலன் என்ற கொடிய அரக்கர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வரும் அப்பாவி மனிதர்களைத் தந்திரமாக வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர். விருந்து நல்லதுதானே என்று நினைத்துப் போனவர்கள் மாண்டுபோனார்கள்.

    விருந்துக்கு செல்லும் மனிதர்களிடம் வாதாபியை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவர்களின் வயிறு புடைக்க கறி சமைத்து உண்ணச் செய்வான் இல்வலன். விருந்தினன் உண்டு முடித்ததும் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா!’ என்று அழைப்பான். உடனே வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான்.

    வயிறு கிழிக்கப்பட்டதால் விருந்தினன் இறந்து போவான். இறந்தவனை இரண்டு அரக்கர்களும் அறுத்துத் தின்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.

    ஒருநாள் அகத்தியரும் அந்தப் பக்கமாக நடந்துப்போய் கொண்டிருந்தார். உடனே இல்வலன் அகத்தியரை தனது இல்லத்திற்கு விருந்து உண்ண அழைத்தான். அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் அழைப்பவரின் தந்திரங்களை தெரிந்து கொண்டார். அழைப்பைத் தட்டாமல் இல்வலன் இல்லத்திற்கு சென்றார் அகத்தியர். அங்கு வழக்கம்போல் வாதாபியை ஆட்டுக்கறியாக மாற்றி சமைத்து வைத்திருந்தான். உணவை மிகவும் பணிவோடும் பாசத்தோடும் பரிமாறுவதுபோல் நாடகம் நடத்தினான் இல்வலன்.

    அகத்தியர் வயிறு நிறைந்தது. உணவு முழுவதும் வயிற்றுக்குள் போனவுடன் ‘வதாபி நீ ஜீரணமாகக் கடவாய்’ என்று கூறி வயிற்றைத் தடவினார். உடனே வாதாபி ஜீரணமானான். இதனை அறியாத சகோதரன் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா, வெளியே வா!’ என்று மீண்டும் மீண்டும் கூவி அழைத்தான். ஆனால் வாதாபி வரவேயில்லை. அகத்தியரின் தெய்வீகத்தன்மை உணர்ந்த இல்வலன் அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

    அவனை மன்னித்து அகத்தியர் அவனிடமிருந்து தனது மனைவி உலோபமுத்திரை விரும்பிய செல்வங்களை இல்வலனிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார். மனைவியுடன் சிறிது காலம் தங்கியிருந்த அகத்தியர் அதன்பின் தனது முன்னோர்களை சாபத்தில் இருந்து விடுவித்தார்.

    சில ஆண்டுகளுக்குப் பின், தமது நுற்றுக்கணக்கான சீடர்களுடன் பொதிகை மலைக்குப் புறப்பட்டார். அங்குதான் அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ்முனி என்று பல பெயர்கள் ஏற்பட்டது.

    அகத்தியர் எழுதிய நூல்களை 'நாதரிஷி' என்பவர் தம் விருப்பத்திற்கு மாறாக எழுதி வெளியிட்டதைக் கண்டு வெகுண்டு போன அகத்தியர் “நீ தவறான நூல்களை எழுதி வெளியிட்டதால் உனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீராமலே போகட்டும்” என்று சாபமிட்டார்.

    இதனைக்கேட்டு மனம் நொந்து போன நாதரிஷி அகத்திய முனிவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு மன்னிப்பு கொடுத்த அகத்தியர் “என்னுடைய நூல்கள் சங்கப்பலகையில் மிதந்துவரும் காலத்தில் நீ அவற்றை அடைந்து சந்தேகம் தெளிவாய்” என்று சாப விமோசனம் அருளினார்.

     இப்படியாக பல அற்புதங்களை செய்து, பல நூற்றாண்டுகள் அகத்தியர் பூமியில் வாழ்ந்தார்.

வெள்ளி, பிப்ரவரி 06, 2015

அனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..!

ருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் கண்டுபிடிக்கும் போது அந்த கண்டுபிடிப்பாளரை உலகம் கொண்டாடும், விருது கொடுத்து கௌரவிக்கும்.

ஆனால், அந்த கண்டுபிடிப்புக்கு பின் கசப்பான உண்மைகளும், அதிர்ச்சி நிறைந்த சிலரின் பங்களிப்பும் இருக்கும். அது எந்த காலத்திலும் வெளியுலகத்திற்கு தெரியாமலே போய்விடும்..!

தெரியாமல் என்பதைவிட.. மறைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும்..!

அப்படி மறைக்கப்பட்ட  ஒரு பெண்ணின் கதைதான் இது

 அவள் பெயர் அனார்ச்சா, அவள் ஒரு அடிமைப்பெண். அடிமைகள் அவர்கள் உடல் மீது கூட ஆதிக்கம் செலுத்த முடியாத காலம் அது. அவர்கள் உடல் அவர்களுக்கு சொந்தமில்லை.

பதினெட்டு வயதுகூட நிரம்பாத அந்த பருவப் பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் மூலம் கர்ப்பம் திணிக்கப் பட்டிருந்தது. முகம் தெரியாத அந்த ஆணின் கருவை சுமந்து கொண்டே தன் எஜமானுக்கு ஆன எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். அந்த கறுப்பின அடிமைப்பெண்.

அது கி.பி.1846-க்கும் 1849-க்கும் இடைப்பட்ட காலம். பெண்களின் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்பு பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ் என்பவர் இந்த ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் மீதும், ஏழை அயர்லாந்து பெண்கள் மீதும் இந்த கசாப்புக்கடை பாணியிலான, பயங்கர கொலைகார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

டாக்டர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ்

இன்று டாக்டர் சிம்ஸ், 'நவீன மகப்பேறு மருத்துவத்தின் தந்தை' என்று கொண்டாடப்படுகிறார். இந்த ஆய்வுக்கு பின்னால் புறக்கணிக்கப்பட்ட.. ரணங்கள் நிறைந்த.. ரத்தம் சிந்திய பெண்களின் வாழ்க்கை ஒளிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்திதான் அனார்ச்சா!

அனார்ச்சாவிற்கு எழுதப்படிக்கத் தெரியாது. அதனால் அவள் சொல்லச் சொல்ல, டாக்டர் அலெக்ஸாண்ட்ரியா சிலிஞ்ச் என்பவர் ஆங்கிலத்தில் அந்த கொடூரத்தை புத்தகமாக எழுதினார். புத்தகத்தின் வரிகள் ஒவ்வொன்றும் படிப்பவர்கள் மனதை பதைபதைக்க  வைக்கும்.

பகல் முழுவதும் கொளுத்தும் வெயிலில்.. பருத்திச் செடியில் இருந்து பருத்திகளை பறித்துப் போடுவதுதான் கர்ப்பிணிப் பெண்ணான அனார்ச்சாவின் வேலை. தோட்ட வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தால், வீட்டில் முதலாளியின் குழந்தைகளை கவனிக்க வேண்டும். மற்றவர்களுக்கு சமைத்து போட வேண்டும்.

ஒரு நாளில் 18 மணி நேரம் தனது எஜமானருக்காக உழைத்தாள் அனார்ச்சா. ஓய்வே அறியாத உழைப்பு, உடலை மோசமான நிலைக்கு கொண்டு போனது. குச்சியாய் உடல் மெலிந்தது. எலும்புகள் எல்லாம் கொடூரமாக வலித்தன.

நிறை மாதம் வேறு... எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற மகிழ்ச்சி அவளிடம் நிரம்பி வழிந்தது.

ஒரு அடிமைப்பெண்ணின் வாழ்க்கை மிக மிக சிக்கலானதுதான், ஆனாலும் இத்தகைய அழகிய நிமிடங்கள் அந்தப் பெண்களிடம் இருந்து பறிக்கப்படாமல் இயற்கை விட்டு வைத்திருந்தது.

அன்று பின்னிரவு...

அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விடிவதற்குள் குழந்தை பிறந்து விட வேண்டும் என்று அவள் இறைவனை வேண்டினாள். விடியற்காலை அவளுக்காக பருத்திக் காட்டு வேலை காத்திருந்தது. குழந்தை பிறந்தது என்று சொல்லி வேலைக்கு போகாமல் இருக்க முடியாது.

இரவு முழுவதும் போனது. அவளின் வலியும் முடிவுக்கு வரவில்லை. குழந்தையும் பிறக்கவில்லை. வலியோடு வேலைக்கு சென்றாள். இப்படியே மூன்று நாட்கள் கடந்தது... அனார்ச்சாவின் நிலை கவலைக்கிடமானது.

இனி இந்த அடிமைப்பெண்ணால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது நிச்சயமாக தெரிந்தபின், மனசில்லாமல் மருத்துவமனைக்கு அனார்ச்சாவை அனுப்பிவைத்தார் அவளது முதலாளி.

மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்டாள். டாக்டர் சிம்ஸ் அந்த அறைக்குள் நுழைந்தார். மூன்று நாட்களாக குழந்தையைப் பெற்றெடுக்க அவளின் நிலையைப் பார்வையிட்டார்.

அப்போதெல்லாம் இப்படி நடந்தால், அந்த பெண்ணுக்கு மரணத்தை தவிர வேறு வழியில்லை.

டாக்டர் சிம்ஸ் கர்ப்பபையில் சிக்கியிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தால் என்னவாகும் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.

உடனே அருகில் கிடந்த சுத்தப்படுத்தப்படாத, துருப் பிடித்த, ஒரு பெரிய இடுக்கியை எடுத்து அவளின் பிறப்புறுப்பில் நுழைத்து, குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்தார்.


டாக்டருக்கு குழந்தையை பத்திரமாக எடுக்க வேண்டும் என்ற அக்கறை மட்டுமே இருந்தது. அனார்ச்சாவைப் பற்றி எந்த கவலையும் அவருக்கு இல்லை. அளவுக்கு மீறிய பெரிய இடுக்கி என்பதால் அனார்ச்சாவின் பெண்ணுறுப்பில் காயங்களும், கிழிசல்களும் ஏற்பட்டன.

அடிமைப்பெண்களுக்கு என்றே மருத்துவமனையின் பின்புறம் இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கு தரையில் நீண்ட நாட்கள் பஞ்சத்தில் அடிப்பட்டது போல் பல அடிமைப்பெண்கள் படுத்துக் கிடந்தார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்த அனார்ச்சாவிற்கு தனது விதி எப்படியோ? என்ற பயம் வந்தது. இவர்களைப்போலவே தானும் வேதனையை அனுபவிக்க வேண்டிவருமோ, தன்னை யாராவது இந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுவார்களா? பலவிதமாக சிந்தித்தாள்.

குழந்தையை வெளியே எடுக்க இடுக்கியை பயன்படுத்தியதால் அவளின் பெண்ணுறுப்பு கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. இந்த வேதனையில் இருந்து அந்த பெண்ணை மீட்க யாரும் நினைக்கவில்லை.

மாறாக, நாளுக்கு நாள் அவளின் பெண்ணுறுப்பிலும், கர்ப்பபையிலும் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.


சுற்றிலும் டாக்டர் சிம்ஸின் உதவியாளர்கள், டாக்டர்கள் சூழ்ந்து நிற்க, ஒரு மேஜையின் மீது அனார்ச்சா படுக்க வைக்கப்பட்டாள். அவளின் பெண்ணுறுப்பை தெளிவாக எல்லோரும் பார்ப்பதற்காக கால்களை விரிக்கச் செய்து, இடுக்கியைப் பயன்படுத்தி விரித்து பிடித்தபடி அனார்ச்சாவின் அந்தரங்கத்தை ஆராய்ந்தனர்.

அவள் எதுவும் பேச அனுமதிக்கப் படவில்லை. எப்போதும் அவள் ஆறாத ரணங்களோடும் வலியின் வேதனையிலுமே இருந்தாள்.

அனார்ச்சாவுக்கு தன் குழந்தையுடன் சேர்ந்து வாழ ஆசை. ஆனால், அதற்கு அனுமதிக்கப்படவே இல்லை. மார்பில் கட்டியிருக்கும் பாலின் வேதனை தாங்க முடியாததாக இருந்தது.

வாரங்கள் பல கடந்தன. மருந்தும், சரியான உணவும் இல்லாமல் வலியின் ரண வேதனையை தொடர்ந்து அன்பவித்தாள்.

அங்கிருந்து வெளியேறவும் அவளால் முடியவில்லை. முன்பின் தெரியாத யார் யாரோ அவளை தேடி வருவார்கள். யார் யாரிடமெல்லாமோ தனது பெண்ணுறுப்பைக்  காட்டியபடி படுத்திருப்பாள். அவர்கள் அதை தொட்டுப் பார்த்து ஏதேதோ பேசிக்கொள்வார்கள்; குறிப்பெடுப்பார்கள்; காயங்களைப் பற்றி கவலைப் படாமல் குரடை நுழைப்பார்கள்.

பெண்மையின் உணர்வுகள் மரத்துப்போய் ஜடமாய் மற்றவர்கள் முன் அவள் கிடந்தாள்.

மூன்று வருட ஆய்வுக்குப்பின் டாக்டர் சிம்ஸ், பெண்ணின் பிறப்புறுப்பு பற்றியும், குழந்தைப் பிறப்பில் அதன் செயல்பாடு பற்றியும் முழுதாக தெரிந்துக் கொண்டார். அதைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தன. குழந்தைப் பிறப்பில் ரகசியமாக இருந்த பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன. மர்மமாக இருந்த பல விஷயங்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தன.

சிம்ஸ்க்கு விருதுகள் தேடி வந்தன. 'குழந்தை பிறப்பு மருத்துவத்தின் தந்தை' என்ற பட்டமும் வந்து சேர்ந்தது.

ஆனால், கற்பனைக்கு கூட எட்டாத கொடுமைகளை அனுபவித்து, கட்டாயப்படுத்தி தியாகம் செய்யவைக்கப்பட்ட அனார்ச்சாவை யாரும் கண்டுகொள்ள வில்லை. உலகிற்கு தெரியப்படுத்தவும் இல்லை.

ஆய்வுகள் எல்லாம் வெற்றிகரமாக முடிந்த பின் அந்த  அடிமைப்பெண்ணின் அந்தரங்கம் அவர்களுக்கு தேவைப்படவில்லை.

டாக்டர் சிம்ஸ் புகழின் உச்சியில் ஏறிகொண்டிருக்க.. எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த அனார்ச்சாவோ.. ஆடைகளற்று, அம்மணமாய் வீதியில் தூக்கி வீசப்பட்டாள்...!LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...