படிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை, வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தற்கொலைக்கு துணிந்தவர்தான் டாக்டர் வெங்கடபதி ரெட்டியார்.
இன்றோ இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் அவர் ஒருவர். பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரே விவசாயி. தொடர்ந்து விருதுகளை குவித்துக் கொண்டே இருப்பவர்.
ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். 100 வகையான கனகாம்பரம், சவுக்கு மரம், கொய்யா மரம் என்று கை நிறைய காப்புரிமைகளை வைத்திருப்பவர்.
புதுவை மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் வெங்கடபதியையும் அவரின் ஆய்வுக்குத் துணையாக நிற்கும் மகள் லட்சுமியையும் சந்தித்தேன். நிறைய பேசினார். பல விஷயங்களைச் சொன்னார்.
ஒரு முன்னோடி விவசாயி என்பதையும் கடந்து அவர் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் இருக்கின்றன.
அவரது வாழ்வு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறது. மனிதன் மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற உத்வேகத்தை தருகிறது. ஒரு அருமையான பெட்டகமாக அவர் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து...
டாக்டர் வெங்கடபதி ரெட்டியார் |
மகள் லட்சுமி |
"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே விவசாயக் குடும்பத்தில்தான். சுட்டுப் போட்டாலும் எனக்கு படிப்பு வரவில்லை. 4-ம் வகுப்போடு மொத்தப் படிப்பையும் நிறுத்திக் கொண்டேன். விவசாயமும் பிடிபடவில்லை. இதற்குள் திருமணம் வேறு.
வாழ்க்கை பிடிபடுவதற்குள், இறுதி கட்டத்திற்கு வந்து விட்டேன். வறுமை என்னுடன் வசதியாய் வாழ்ந்தது. பசியோடும் பட்டினியாகவும் நாட்கள் நகர்ந்தன. இனி வாழ வழியில்லை என்று மனைவியோடு தற்கொலை செய்ய நினைத்தேன்.
"தற்கொலைதான் தீர்வுன்னா அத முன்னாடியே செஞ்சிருக்கலாமே, என்ன எதுக்கு கட்டிக்கிட்டு வரணும்' என்றார், மனைவி. நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்தன அந்த வார்த்தைகள். அவள் பேச்சால் மனம் மாறியது. வாழ வேண்டிய நிர்பந்தம் உருவானது.
மறுநாளே பெரியகுளம் போனேன். தோட்டக்கலை இயக்குநர் சம்பந்தமூர்த்தியிடம் போய் நின்றேன். "ஐயா! எனக்கு பொழைக்கத் தெரியல. ஏதாவது வழி சொல்லுங்கன்னு' கேட்டேன். அவர் 10 கனகாம்பரம் கன்றுகளை கையில் கொடுத்து 'பிழைத்துப் போ' என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. பிழைக்க வழி கேட்டால் கனகாம்பரம் செடியை தருகிறாரே என்று எண்ணியபடி என் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைத்தேன். செடிகள் தளிர்த்தன. மலர்கள் பூத்தன.
அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் மலர்களைக் கேட்டார்கள். 10 சென்டில் 300 செடிகள் நட்டேன். வியாபாரம் சூடு பிடித்தது. புதுவை மலர்க் கண்காட்சி நடந்தபோது 25 கனகாம்பரம் செடியைக் கொண்டு போனேன். அங்கு ஒரு செடியை ரூ.500க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். என்னால் வெறும் ரூ.5-க்கு தரமுடியும் என்றேன். விவசாயத்துறையில் இருந்து ஒரு லட்சம் கனகாம்பர கன்றுகளுக்கு ஆர்டர் கிடைத்தது.
ஆர்டர் கிடைத்துவிட்டது. இப்போது எப்படி கன்றுகளை உற்பத்தி செய்வது. ஒரு செடியில் இருந்து மூன்று செடிகளைத்தான் உருவாக்க முடியும். மீண்டும் சம்பந்த மூர்த்தியிடம் ஓடினேன். அரசு கொடுத்த ஆர்டரை காட்டினேன். ஒரு லட்சம் செடியை எப்படி பதியம் போடுவது என்று கேட்டேன். அவர் கணு பதியம் முறை சொல்லிக் கொடுத்தார். செடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கணுப் பதியம் போட்டேன்.
என் மனைவி எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவே நினைத்தார். பெரிய செடியைப் பதியம் போட்டாலே வரமாட்டேங்குது. இது துண்டு துண்டா வெட்டிப் போட்டா எப்படி வரும்? என்றார். வேர் ஊசி முறையில் ஒரு லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து கொடுத்தேன். அடுத்த மலர் கண்காட்சியில் அதை விற்பனை செய்தார்கள். ஒரே டிடியில் ரூ. 5 லட்சம் தொகை கொடுத்தார்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
அறியாமைதான் விவசாயின் முதல் எதிரி. கனகாம்பரம் எனக்கு நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்தது. அப்போது ஒரே கலர் கனகாம்பரத்தைத் தருகிறீர்களே, பல வண்ணங்களில் கொடுத்தால் என்ன என்று பெண்கள் கேட்டார்கள். நான் மறுபடியும் சம்பந்த மூர்த்தியிடம் போனேன். அவர் கலர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் குரோமோசோம் மாற்ற வேண்டும் என்றார். பயோடெக்னாலஜி, டிஸ்யூ கல்சர், காமா ரேடியேன், கெமிக்கல் மியூட்டேன் இவற்றையயல்லாம் செய்தால்தான் கலர் மாற்ற முடியும் என்றார்.
சம்பந்த மூர்த்தியின் பேச்சை அப்படியே டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு தொழில்நுட்பத்தைக் கற்றேன்.
காமா ரேடியேன் என்ற கதிர் வீச்சு சமாசாரம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. அந்த வேளையில் ஒரு டிவி சேனல் எனது பேட்டியை ஒளிபரப்பியது. அதில் நான் காமாரேடியேன் மட்டும் கிடைத்தால் 100 வண்ணங்களில் கனகாம்பரம் செடியை உருவாக்கி விடுவேன் என்றேன். இதை கேட்ட கல்பாக்கத்தினர் எனக்கு அனுமதியளித்தனர். செடிகளைக் கொண்டு ரேடியேன் கொடுத்தேன். திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் எல்லா செடிகளும் செத்துவிட்டன.
அப்போதுதான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனிடம் இதுபற்றி கேட்டேன். காமா ரேடியேன் போன்ற பெரிய வியங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். 'ஃபார்மர் ஜீனியஸ் வித்தவுட் ஃபார்மல் எஜூகேன்' என்று பாராட்டினார். பின் செடி தாங்கும் அளவுக்கு காமா ரேடியேன் கொடுங்கள் என்றார். கனகாம்பரத்திற்கு 1கே.ஆர். கிலோரேட்ஸ் 5 வரை கதிர்வீச்சு செலுத்தி புதிய இனம் உருவாக்கினேன்.
அதன்பிறகு காப்புரிமை பற்றி அன்றயை ஜனாதிபதி அப்துல்கலாமிடம் கேட்டேன். ஒரு வருடத்தில் எனக்கு காப்புரிமை கிடைத்தது. தாய், தந்தை, எப்படி குரோமோசோம்களை மாற்றினீர்கள். டிஎன்ஏ எடுத்து கொடுப்பது என்று நிறைய வேலைகள் காப்புரிமை பெறுவதில் உள்ளன. ஒரு வழியாக அதையும் பெற்றேன்.
கனகாம்பரத்தில் பல வகைகளை உருவாக்கியப்பின், சவுக்கு மரம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய புதிய சவுக்கு மரம் 5 ஆண்டுகளில் 200 டன் விளைச்சல் தரக்கூடியது. புயல், வறட்சி, மழை போன்ற எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இந்த மரத்தை இலையில் இருந்து வீரிய ரகமாக உற்பத்தி செய்தேன். அதன்பின் கொய்யா, இப்போது மிளகாய்.
நெய் மணம் கமழும் மிளகாய் |
மிளகாயில் நெய் மணம் கமழும் மிளகாய் இயற்கையாகவே கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்கா, அமேசான் காடுகளில் 6,000 அடி உயரத்திற்கு மேல் உள்ள அடர்ந்த காடுகளில் இது இயற்கையாக விளைகிறது.
இந்த மிளகாய் எனக்கு கிடைத்தது ஒரு சுவாரசியமான அனுபவம். காடுகளில் வளரும் கனகாம்பர இனங்களைக் கண்டுபிடிப்பதற்காக மலைப் பகுதிக்குச் சென்றேன். மலைவாழ் மக்கள் உதவியில்லாமல் அங்கு செல்லமுடியாது. அப்படி போகும்போது பழங்குடியினர் வீட்டில் புதுவிதமான ஒரு மிளகாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அந்த மிளகாய் பற்றி விசாரித்தேன்.
அவர்கள் இந்த மிளகாயை நீண்ட வாக்கில் நான்காக பிளந்து குழம்பில் போட்டால், குழம்பு கொதித்தப்பின் சோற்றில் பிசைந்து சாப்பிடும்போது நெய் மணம் வீசுகிறது என்கிறார்கள். இதை நான் நம்ப மறுத்ததால் என் எதிரே குழம்பு வைத்து அதில் ஒரு மிளகாயை பிளந்து போட்டு இறக்கினார்கள். குழும்பில் நெய் மணம் வீசியது.
பின் எங்கு விளைகிறது, எங்கு கிடைத்திருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் பதில் கூறவில்லை. ஒரு கிலோ மிளகாயை ரூ.350க்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். மனைவியிடம் இதை கூறினேன். நம்ப முடியாமல் அரை மனதோடு சமைத்தார்கள். நெய் மணம் கமழ்ந்தது. அதன் பின்னே நம்பினார்கள்.
இந்த மிளகாய் நமது மேற்கு மலைத் தொடர்ச்சி மலையில் மூணாறுக்கு பக்கத்தில் உள்ள வனப் பகுதியில் இயற்கையாக வளர்கிறது. அந்த மிளகாயை சாதாரண நிலப்பரப்பில் கடல் மட்டத்திற்கு இணையாக விளைவித்து மகசூல் எடுத்ததுதான் சமீபத்தில் நான் கண்டு பிடித்தது.
நெய் மிளகாயில் இரண்டு பலன்கள் உண்டு. உணவில் காரமும் நெய் மணமும் ஒரே மிளகாயில் கிடைத்துவிடும். உண்மையான நெய்யை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. இது அவர்களுக்கு ஒரு சுவையான உணவைத் தரும்.
பரமக்குடி மிளகாய் ரகத்தில் உருவாக்கிய நெய் மிளகாய் |
நமது மிளகாயில் நம்பர் ஒன் ரகம் பரமக்குடி மிளகாய்தான். இந்த மிளகாய்தான் குண்டாக பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். அதிக காரம் இருக்காது, விதையும் குறைவு இந்த மிளகாயில் நெய் வாசம் வரும் விதமாக புதிய மிளகாயை உருவாக்கியுள்ளேன்.
இந்த மிளகாயைப் பொங்கல், ரவா பொங்கல், உப்புமா, கிச்சடி, பூரி குருமா போன்றவற்றை தயாரிக்கும்போது ஒரு நெய் மணம் கமழும் மிளகாயை சேர்த்து சமைத்தால் நெய் மணம் கமழும், சுவையும் கூடும். மசால் வடை, உளுந்து வடை, சம்சா, பஜ்ஜி, பப்ஸ், போண்ட இவைகளை தயாரிக்கும்போது ஒரு மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்து மாவுடன் அல்லது மசாலாவில் சேர்த்து சமைத்தால் சுவை கூடும்.
நெய் மிளகாய் நாற்று |
கதம்ப சாம்பார், மோர்குழம்பு, வத்த குழம்பு, கூட்டு வகைகள் தயாரிக்கும்போது ஒரு மிளகாயை நான்காக பிளந்து பருப்புடன் வேக வைத்து சமைத்தால் நெய் மணம் கமழும். சுவையும் கூடும். பிரியாணி, சிக்கன் 65, கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலே இதை பயன்படுத்தலாம்.
ஐந்து நபர்களுக்குத் தேவையான அளவிற்கு சமைக்கும்போது ஒரு மிளகாய் பயன்படுத்தினால் போதும். சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டாம்.
ஃபிரிட்ஜில் வைத்தால் 50 நாள் வரை கெடாமல் இருக்கும். இந்த மிளகாய் குடை மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. ஆனாலும் காரம் 10 மடங்கு அதிகம். மலையில் விளையும் இந்த மிளகாயை இங்கு விளைவிக்க பல ஆராய்ச்சி செய்துள்ளோம். இதற்கு என் மகள் லட்சுமியின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானது. அதனால் தான் எல்லா விழாக்களிலும் என் மகளையே முன்னிறுத்துகிறேன்.
நெய் மிளகாய் புதுவை கடைகளில் கிடைக்கிறது.மக்கள் சுவைத்து பாராட்டியிருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவித்து விற்கப் போகிறார்கள் '' என்று கூறி முடித்தார் பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்.
நெய் மிளகாயை கையில் ஏந்தியபடி லட்சுமி |
விவசாயத் தொழில் நுட்பங்கள், பயிரிட விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்
94432 26611
இனி வருங்காலங்களில் விவசாயம் தான் எல்லோரின் வாழ்வாதாரமாக இருக்கப்போகிறது என்பதை இவர் செயலின் மூலம் நாம் காணலாம். நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு. இப்படியான சாதனையாளர்களை தாங்கள் எப்படி அடையாளம் காண்பீர்கள் சகோ?
பதிலளிநீக்குநன்றி சகோ!
நீக்குகருத்துரையிடுக