செவ்வாய், ஜனவரி 10, 2017

மயங்கும் மகாராஜா.. முடங்கும் முதலீடு!


ந்தியப் பொருளாதாரத்தின் வெள்ளை யானையாக ஏர்-இந்தியா விமான நிறுவனம் மாறிப்போயுள்ளது வருத்தத்திற்குரியதே. பல்வேறு முறைகள் அதனை சீர்படுத்த பல்வேறு அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் மிகப் பெரும்பாலும் ஏமாற்றம் தரும் தோல்விகளையே சந்தித்துள்ளன.


சமீபத்தில் 'ஃபிளைட்ஸ்டாட்ஸ்' என்கிற சர்வதேச விமான நிறுவனங்கள் சேவைகள் குறித்த அமைப்பானது மேற்கொண்ட ஆய்வில் குறித்த காலத்திற்கு வருதல் மற்றும் காலதாமத அறிவிப்புகள் அதிகமின்றி செயல்படுதல் என்கிற காரணிகளின் அடிப்படையில், ஏர்-இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் 3-வது மிக மோசமான விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வருத்தம் தருவதாகும்.

இந்த ஆய்வில் தனியார் துறை நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ நிறுவனங்கள் முதல் 10 சிறப்பான நிறுவனங்கள் பட்டியலுக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், இதுபோன்று மோசமான பெயரை சர்வதேச அளவில் ஏர் இந்தியா பெறுவது முதல் முறையல்ல என்பதும் கவனிக்கத்தக்கதே.

2013ம் ஆண்டிலும் கூட சர்வதேச அளவில் இதுபோன்ற ஒரு ஆய்வு மேற்கொண்டபோதும், ஏர் இந்தியா நிறுவனம் மிக மோசமான பட்டியலில் 3-வது இடம் வகித்தது உண்மையே.  60 விமான நிறுவனங்களை கணக்கில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டதில் ஏர் இந்தியாவிற்கு ஏமாற்றம் தரும் இடமே மிஞ்சியது. குறித்த கால சேவை மட்டுமல்லாது, நிதி நிலவரத்தைப் பொறுத்த வரையிலும்கூட, ஏர் இந்தியா மஹாராஜா தள்ளாடி வருவதே கண்கூடு.


கிட்டத்தட்ட ரூ.47 ஆயிரம் கோடி கடன்களில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா, 2012ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10 ஆண்டு கால அளவிலான ரூ.30 ஆயிரம் கோடி தொகையை உதவியாக அறிவித்ததன் காரணமாகவே தற்போது செயல்பட்டு வருவதே யதார்த்தமான உண்மையாகும். கிட்டத்தட்ட ரூ.24 ஆயிரம் கோடி இது வரையில் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அத்திப்பூத்தாற்போல் 2015-2016  நிதியாண்டில் ரூ.105 கோடி ஏர் இந்தியா லாபம் ஈட்டியபோது, 10 ஆண்டுகளில் முதன் முறையாக அது நிகழ்ந்தது என்கிற நிலையில், நடப்பாண்டில் நிலவரம் மிக மோசமானதாகவே உள்ளது.  2016-17-ல் முதல் காலாண்டில் ரூ.246 கோடியும், 2வது காலாண்டில் ரூ.461 கோடியும் ஏர் இந்தியா நஷ்டத்தை சந்தித்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

செயல்பாடுகளில் சுணக்கமின்றி தொடர்வதற்காக 2015 மார்ச் 31-ம் தேதி வரையில் ரூ.51 ஆயிரம் கோடி பல்வேறு வங்கிகள் மற்றும் அமைப்புகளிடம் ஏர் இந்தியா கடன் வாங்கியுள்ள நிலையில், புதிதாக 35 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டு வருவது எந்த வகையில் அதன் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், முறையற்ற நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாதலால், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு செயல்பாடுகளை சமாளிக்கும் அளவிலேயே தொடர்ந்து வருவது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

மண்ணெண்ணெய், டீசல்,பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றிக்காக எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்குவதன் காரணமாக ஏழைகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெற்று வரும் சூழலில், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா எவ்வகையிலும் இத்தகைய பிரிவினருக்கு பலனளிப்பதாக இருக்காது எனும் நிலையில், தொடர்ந்து அரசு முதலீடுகள் ஏர் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கான பதில் சொல்ல வேண்டிய கட்டாய சூழலை அரசு நெருங்குவதாகவே தெரிகிறது.


விமானப் பயணத்துறை மேம்பாடு அடைவதற்காக பல்வேறு நிபந்தனை தளர்வுகள், ஆதரவான கொள்கை அறிவிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதன் காரணமாக இத்துறை இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் சூழலில், தொடர்ந்தும் நஷ்டத்தையே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அரசு தனது பங்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று எழுகின்ற குரல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்தே வருகின்றன என்பது மட்டும் நிஜம்.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 8 கருத்துகள்:

 1. ஏர் இந்தியாவை சுதந்திரமாக இயங்க அனுமதித்ததேயில்லை ஆட்சியாளர்கள். காங்கிரஸ் அரசின் ஊழல்களுக்கு தீனிபோடும் நிறுவனமாகவே அது இயங்கும்படி ஆட்டுவிக்கப்பட்டது. BSNL நிறுவனம் ஊழியர்களின் திறமையின்மையால் செத்துக்கொண்டிருக்கிறது என்றால், ஏர் இந்தியாவோ, ஆட்சியாளர்களின் முடிவுப்படியே மரணம் அடைந்து வருகிறது என்பதே உண்மை... -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 2. நண்பரே, இணையத்தில் நீண்ட நாட்களாக எழுதிவரும் திரு அமுதவன் அவர்கள் உங்கள் தினம் ஒரு தகவல் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். உங்கள் முயற்சிக்கு பாராட்டுதல்களும் ஆதரவும் பெருகி வருவது கண்டு மகிழ்ச்சி.

  http://amudhavan.blogspot.com/2017/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 3. போட்டிகளின் மத்தியில்
  விமானப் பயணத் துறை
  சிறந்த ஆய்வுக்கட்டுரை

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...