Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எனது முதல் சபரிமலை பயணம்

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும் ஐயப்ப சுவாமிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் நாளிலே மாலை அணிந்து, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, கறுப்பு நிற உடையில் அவர்கள் நடமாடுவதே ஒரு தெய்வீக அழகுதான்.

எனக்கும் சபரிமலைக்குமான பந்தம் மிக சிறு வயதில் இருந்தே தொடங்கி விட்டது. அப்போதெல்லாம் சபரிமலைக்கு போவோர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் சபரிமலைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் தூங்க விடாமல் செய்யும். ஆனாலும் கடுமையான விரத முறைகள் பயத்தைக் கொடுக்கும். ஒருவேளை நாம் சரியாக விரத முறைகளை கடைப்பிடிக்காமல், ஐயப்பன் தண்டித்து விட்டால்... இந்த பயமே என்னை சபரிமலைக்குப் போக விடாமல் தடுத்தது.

வெகுகாலம் கழித்து, அதாவது 20 வருடங்களுக்கு முன்பு தான் மாலையணியாமலும் சபரிமலைக்கு போகலாம் என்பது தெரிய வந்தது. அது போதாதா...! அந்த வருடமே புறப்பட்டு விட்டேன். அதுவொரு பரவச அனுபவம். சிறுவயதிலிருந்தே கேட்டுப்பழகிய ""பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. சுவாமியே ஐயப்பா, ஐயப்பா சுவாமியே....!'' என்ற பாடல் என் மனதில் தொடர்ந்து ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.


சபரிமலைக்கு எந்த பஸ்ஸில் ஏறுவது எங்கு போய் இறங்குவது என்ற எந்த விவரமும் தெரியாது. கடிதமும் ஒரு சில வீடுகளில் உள்ள டெலிபோன்கள் மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாக இருந்த காலம் அது. அதனால் யாரிடமும் விவரம் கேட்க முடியவில்லை. ஏற்கனவே சபரிமலைக்கு சென்று வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால், மாலையணியாமல் விரதம் இல்லாமல் அங்கெல்லாம் போகக்கூடாது என்று ஏதாவது ஒரு சுவாமி தடுத்து விடுவாரோ! என்ற பயத்தில் அவர்களிடமும் கேட்கவில்லை.

வெளியாட்களிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டது இரண்டு வி­ஷயங்கள் மட்டும்தான். மதுரையிலிருந்து சபரிமலைக்கு செங்கோட்டை, புனலூர் வழியாக ஒரு பாதையும், கம்பம், குமுளி வழியாக இன்னொரு பாதையும் இருக்கிறது, என்பது மட்டும்தான்.

 குமுளி வழியாக போவது தான் பக்கம். ஆனால் அப்போதெல்லாம் குமுளியிலிருந்து பம்பைக்கு நேரடி பஸ் கிடையாது. மாறி மாறித்தான் போக வேண்டும் என்றார்கள். இல்லையென்றால் ஜீப் போகும் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொன்னார்கள். என்ன ஆனாலும் சரி. ஐயப்பனை இந்த முறை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் குமுளி போகும் பஸஸில் என்னை ஏறிக் கொள்ள செய்தது. 

பஸ்ஸில் நிறைய ஐயப்ப சுவாமிகள் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கூனிக் குறுகிப் போனேன். நான் ஒருவன் மட்டும்தான் மாலை அணியாமல் போவது என்னவோ போல் இருந்தது. என்னை தண்டிக்க ஐயப்பன் கோபத்தோடு காத்திருப்பது போல திரும்பத் திரும்ப தோன்றியது.

பஸ்ஸின் கடைசி வரிசையில் ஒரு சுவாமி தனது ஐந்து வயது மகனுடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

""சுவாமி! சபரிமலைக்கு எப்படி போகணும்? ''

முதன் முதலாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாலை அணிந்திருக்கும் சுவாமிகளிடமே கேட்டு விட்டேன்.

""குமுளில இருந்து வண்டிப் பெரியார் வழியாப் போகறதுதான் பக்கம். ஆனா பஸ் இருக்காது. அதனால முண்டகாயம் வழியாவோ, எரட்டுபெட்டா வழியாவோ தான் போகணும்'' என்று மூன்று பாதைகளைச் சொன்னார். 

எனது பயம் இன்னும் அதிகமாகி விட்டது. மொழி தெரியாத ஊரில் நடு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளப் போகிறோம். மாலையணியாமல் வந்த நமக்கு நல்ல தண்டனையைக் கொடுக்கப் போகிறார் ஐயப்பன். 

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. தவிப்புடனே குமுளி வந்து இறங்கினேன். நேரம் இரவு 12 மணியைக் கடந்திருந்தது. குளிர் என்றால் அப்படியொரு பேய்க் குளிர்! 

தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் நுழைந்தால்... வரிசையாக நேந்திரம் பழ சிப்ஸ் சுடச்சுட போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஐயப்ப சுவாமிகள் அங்கு நின்று கொண்டு சூடாக டீ, காபி, சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

அங்கு மட்டும்தான் வெளிச்சம் இருந்தது. பஸ் நிலையம் உட்பட மற்ற எல்லா இடங்களிலும் இருள் அப்பியிருந்தது. ஒரேயொரு பஸ் மட்டும் அது பஸ் நிலையம் என்பதற்கான அடையாளத்தை உணர்த்தி நின்று கொண்டிருந்தது.

 அது முண்டகாயம் போகும் பஸ். பம்பைக்கு காலை 7 மணிக்கு தான் அடுத்த பஸ் இருக்கிறதாம். கிடைப்பதில் ஏறிப் பயணத்தைத் தொடர்வது என்று ஏறி அமர்ந்து கொண்டேன். எல்லோரும் போர்த்திக் கொண்டு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தார்கள்.

குளிருக்கு வேண்டிய உடைகள் எடுத்து வராததால் எனது உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பற்கள் தானாக தந்தியடித்தன.

ஒரு மணி நேரம் கழித்து பஸ் புறப்பட்டது. முண்டகாயம் வந்து சேர்ந்த போது பொழுது புலர்ந்திருந்தது. அங்கும் குளிர்தான் என்னை விடாமல் விரட்டிக் கொண்டிருந்தது. 

சூடாக எத்தனை டீ, காபி குடித்தாலும் அந்தக் குளிர் என்னை விட்டு விலகுவதாக இல்லை. அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து பம்பை வந்து சேர்ந்து விட்டேன். காலை 9 மணி ஆகியிருந்தது. இதமான வெயில் குளிருக்கு சுகமாக இருந்தது. பம்பையில் நீராடுவது மிகப் புனிதம் நிறைந்தது. 

நானும் குளிரைப் பொருட்படுத்தாமல் ""சாமியே! சரணம்!'' என்று நதியில் மூழ்கி எழுந்தேன். குளிர் பறந்தோடியது. பூமியில் ஐயப்பன் அவதரித்தது இந்த பம்பை நதிக் கரையில்தான். அந்த நதியில் குளிப்பதும் அதில் கன்னி சுவாமிகள் வாழை மட்டையில் தெப்பங்கள் செய்து விளக்கேற்றி ஆற்றோடு விடுவதும் மெதுவாக ஓடும் நீரில் அலுங்காமல் குலுங்காமல் அந்த தெப்ப தீபங்கள் மிதந்து செல்வதும் அழகோ அழகு.



பம்பா நதியில் குளித்த பின் மலை மீது ஏறத் தொடங்கினேன். முதலில் நீலிமலை ஏற்றம் வருகிறது. செங்குத்தாக இருக்கும் இந்த ஏற்றத்தில் ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறது. அங்கு நிலவும் குளிரையும் மீறி வியர்த்தது. அதன் உச்சி அப்பாச்சி மேடு.

அதிலிருந்து சற்று தூரம் சென்றால் சமநிலமாக வருகிறது சபரி பீடம். இங்குதான் ராமனை காண்பதற்காக பெண் பக்தை சபரி அமர்ந்த நிலையில் தவம் செய்தாராம். இவரின் பெயரில்தான் இந்த மலையை சபரிமலை என்று அழைக்கிறார்கள். 

சபரி பீடத்திற்கு அருகிலேயே சரங்குத்தி ஆல் உள்ளது. இங்கு கன்னி சுவாமிகள் தங்களுக்கு துணையாக வந்த சரத்தை (அம்பு)  இங்கு விடுவிக்க வேண்டும். (சரம் என்பது எருமேலியில் முதல் முறையாக வரும் கன்னி சுவாமிகளுக்கு கொடுக்கப்படுவது) பல கன்னி சுவாமிகள் தங்கள் குருசாமியர் உதவியால் இதை செய்து கொண்டிருந்தார்கள்.


சரங்குத்தி ஆல் முடிந்தவுடனே ஐயப்ப சுவாமிகளிடம் ஒரு புத்துணர்வு பெற்றது போல் நடை வேகமெடுக்கிறது. தங்களின் தலை மேல் உள்ள இருமுடியை இறுக்க பிடித்தபடி வேகமாக ஓடுகிறார்கள். இந்த வேகத்திற்கு என்ன காரணம் என்பது மெதுவாகத்தான் எனக்கு புரிந்தது. 

சன்னிதானம் அருகில் வந்து விட்டது. என்பதற்கான அடையாளம் இது! மாலை அணிந்த சுவாமிகள் எல்லாம் வரிசைப்படி தான் படியேற வேண்டும். நானும் அவர்கள் வரிசையில் நின்றேன்.

""ஐயப்பா! மாலை போடாதவங்க இங்க நிக்க வேண்டாம். இது 18ம் படி வழியா போறவங்க நிக்கிற வரிசை. நீங்க அப்படியே சைடுல போனீங்கனா சன்னிதானத்துக்கு போயிடலாம்!'' என்று ஒரு சுவாமி சொல்ல அப்படியே செய்தேன். வரிசை மிக நீண்டு இருந்தது. நான் மேல வந்து விட்டேன்.



தங்க கூரையில் ஐயப்பனின் சன்னிதானம் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது. வரிசை மெதுவாக நகர நகர ஐயப்பனை நெருங்கிக் கொண்டே வந்தேன். எல்லையில்லா பரவசம் மனம் முழுவதும் படர்ந்திருந்தது. அமர்ந்த நிலையில் அமைந்திருக்கும் ஐயப்பனின் அந்த உருவம் சட்டென மனதில் ஒட்டிக் கொண்டது.

'தண்டிப்பாரோ!' என்று பயத்துடன் வந்த என்னை சாந்தமாக ஐயப்பன் பார்த்துக் கொண்டிருந்தார். 'நான் இருக்கிறேன். கவலைப்படாதே!' என்று ஆறுதல் சொல்வது போல் ஐயப்பனின் அழகு இருந்தது. 

தரிசனம் முடித்து பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு சன்னிதானத்திற்கு இடது புறம் இருக்கும் மாளிகைபுர தேவியை வணங்கினேன்.


எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அதுவரை அடங்கியிருந்த அகோர பசி வயிற்றுக்குள் எழுந்தென்னைத் தாக்கியது. அருகிலேயே அன்னதானம் செய்தார்கள். திருப்தியாக சாப்பிட்டேன். 

இரவு சரியான தூக்கம் இல்லாததும் நடந்த களைப்பும், உண்ட மயக்கமும் ஒன்றாக கலந்து அசத்த அங்கேயே படுத்து தூங்கினேன். எல்லா சுவாமிகளும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தூங்கி எழுந்ததும் மீண்டும் ஐயப்பனை தரிசித்தேன். பார்க்க பார்க்க திகட்டாத அழகாக ஐயப்பனின் உருவம் இருந்தது. நடை சாத்தும் வரை அங்கேயே இருந்தேன். 

நடை சாத்துவதற்கு முன்பு 'ஹரிவராசனம்'  பாடல் இசைக்கத் தொடங்கியது. 32 வரிகள் கொண்ட இந்தப் பாடலை ஐயப்பனுக்கான தாலாட்டுப் பாடலாக கருதுகிறார்கள். 

புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இந்தப் பாடலைப் பாடியிருந்த போதும் ஜேசுதாஸ் பாடிய பாடலே இங்கு ஒளிபரப்பப்படுகிறது.

அமைதியான இரவில் மலையின் குளுமையில் பாந்தமான குரலில் ஒலித்த இந்தப் பாடல்  நம் மனதை என்னவோ செய்கிறது. மலையில் இருந்து கீழே இறங்கினேன். 

வெகுதூரம் வரை 'ஹரிவராசனம்' கேட்டுக் கொண்டே இருந்தது. இதற்குப் பின் பலமுறை சபரிமலைக்கு வந்து போய்விட்டேன். இருமுடி கட்டி 18 படிகளிலும் ஏறி விட்டேன். ஆனாலும் நான் முதன் முதலில் சபரி மலைக்கு வந்த அனுபவத்தை  மறக்கவே முடியாது.


இப்போது பெரிய பாதை வழியாக பயணித்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அதை ஐயப்பன் என்று நிறைவேற்றப் போகிறாரோ..?
        

8 கருத்துகள்

  1. வண்டிப்பெரியாரில் இருந்தும் பயணிக்கலாமே. தமிழர்கள் உள்ள பகுதியானதால் உங்களுக்கு எளிதான பயணமே. http://josephinetalks.blogspot.com/2011/01/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  2. ஐயப்பன் நினைப்பதுவே நடக்கும் ..

    பெரிய பாதையில் இருமுறை (1990,1991) சென்று தரிசனம் செய்துள்ளேன்.வெளிநாட்டில் பணிக்கு வந்து விட்டபடியால் - ஊருக்கு வரும்போதெல்லாம் - காலத்தை அனுசரித்து தரிசனம் செய்வேன்.. தற்சமயம் இரண்டாண்டுகளுக்கு முன் சென்றது தான்..

    ஐயன் அருள் உண்டு.. என்றும் பயமில்லை!..

    பதிலளிநீக்கு
  3. முதல் அனுபவத்தை முத்தாக சேமித்து முன்வைத்துள்ளீர்கள். சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  4. நன்றாக் எழுதியுள்ளீர்கள். இப்பொழுதெல்லாம் வாகன வசதிகள் பெருகிவிட்டன. அவ்வளவு சிரமம் இல்லை. முதன் முதலில் குருஸ்வாமி துணையின்றி சென்று வந்துள்ளீர்கள். பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் ஐயப்ப தரிசனம் அருமை...
    பழனியில் முருகனை ராஜ அலங்காரத்தில் பார்க்கும் போது உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டாகும்... ஆனால் நம்ம ஊரில் காசு பிடிங்கி, போ போ என்று விரட்டி நிம்மதியில்லாமல் தரிசிக்க வைப்பார்கள்.... ஆனால் சபரிமலையில் அழ்ந்த அமைதியுடன் ஐயனை... அந்த அழகிய தெய்வத்தை தரிசிக்க முடியும்... கூட்டம் இல்லாத சமயம் என்றால் முன்னிருக்கும் இடத்தில் அமர்ந்து தியானித்து தரிசிக்கலாம்... நான் அதைச் செய்திருக்கிறேன்... அங்கு அங்கப் பிரதட்சணம் செய்திருக்கிறேன்... இதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பினை...

    இந்த முறை திருச்செந்தூர் சென்ற போது அதிக கூட்டம்.... முன்னிற்கும் காவலாளி எல்லோரையும் போ, போ என்று விரட்டிக் கொண்டிருக்கிறார்... சாமிக்கு நேரே போகும் போது பார்த்தால்தான் உண்டு.... என்ன முருகா வந்து நிம்மதியில்லாம பார்த்துச் செல்ல வேண்டியிருக்கே என்றபடி முருகன் அழகனை பார்த்துக் கொண்டு வந்தோம் நானும் என் மனைவியும்.... காவலாளி அருகே வந்தாச்சு.... கடந்து சென்ற வரிசையில் ஏதோ தடங்கல்... கூட்டம் அப்படியெ நிற்க, காவலாளி அங்க வரிசை நின்னுருச்சு... அங்க போயி நிக்கிறதை இங்க நின்னு நல்லாப் பாருங்க... என்றார்... ஒரு பத்து நிமிடம் முருகன் முன் நின்று அருமையான தரிசனம்... எல்லாம் அவனின் செயல்.

    தங்கள் எண்ணம் ஈடேறட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை