நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது 'குருசுமலை விழா பேருந்து' என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.
குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. அந்த பெயர் ஏதோ மந்திரம் போட்டதுபோல் என்னை இழுத்தது. இத்தனை மனிதர்கள் சாரை சாரையாக போகிறார்கள் என்றால் அது விசேஷம் மிக்கதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
நான் போக வேண்டிய ஊரைத் துறந்து குருசுமலைக்கு பஸ் ஏறினேன். குமரி மாவட்டத்தின் மிக உயரமான மலை அதுதான். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரம் கொண்டது. தமிழக கேரள எல்லை பகுதியில் எல்லைக் கோடு போல் உயர்ந்து நிற்கிறது இந்த மலை. இதற்கு காளி மலை, குரிசு மலை, கொண்டகெட்டி, கூனிச்சி, வரம்பொதி என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.
நான் சென்றிருந்த சமயம் குருசுமலையில் திருவிழா கூட்டம் கால்வைக்க இடமில்லை. வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முந்தைய இருவாரங்களுக்கு முன் வரும் புதன் கிழமையில் இந்த கடினமான கொண்டாட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. அதன் பின் புனித வெள்ளி அன்று மீண்டும் கொண்டாட்டம் தொடங்கி முடிகிறது. இந்த 6 நாட்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் குருசுவை தரிசனம் செய்து மகிழ்கிறார்கள்.
|
'கெத்செமனே' என்ற சிறிய குன்று |
'குருசு' என்ற மலையாள வார்த்தைக்கு
'சிலுவை' என்று அர்த்தம். மலை உச்சியில் சிலுவை இருப்பதால் இந்த மலைக்கு
'சிலுவை மலை' என்று பெயர். தமிழக மலைகளின் உச்சியில் இந்துக் கோயில்கள் இருக்கும். சிலவற்றில் முஸ்லீம் தர்ஹாக்கள் இடம் பெற்றிருக்கும். மலையின் மீது கிஸ்துவ ஆலயங்கள் இருப்பது அரிது. அப்படியொரு அரிதான மலைக்குத்தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பஸ் தமிழகத்தைக் கடந்து கேரளாவுக்குள் நுழைகிறது. குருசுமலையில் ஏறவேண்டும் என்றால் கேரளாவில் உள்ள வெள்ளறடைக்குப் போயாக வேண்டும். அங்கிருந்துதான் மலைப்பயணம் தொடங்குகிறது. பஸ் வரும் பாதையெங்கும் விழாவின் அடையாளங்கள் சிறப்பாக இருந்தன. ஒலிபெருக்கியில் கிறிஸ்துவக் கீதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பக்தர்களை வரவேற்கும் அலங்கார வளைவுகள் எல்லா இடங்களிலும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்தன. வெள்ளறடையை அடையும் முன்பே திருவிழா உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.
வெள்ளறடையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித முகங்கள்தான். அந்த மனித சமுத்திரத்தில் நீந்திதான் மலையேற வேண்டும். இதை
'குருசு மலை திருப்பயணம்' என்கிறார்கள். பயணம் என்பது சந்தோஷத்துக்காக செல்வது. திருப்பயணம் என்பது ஆண்டவனுக்காக செல்வது. திருப்பயணம் எப்போதுமே கடினமானது தான். சபரிமலை பயணமோ, வெள்ளியங்கிரி மலை பயணமோ சாதாரணமானது அல்ல.
குருசு மலையும் அப்படித்தான். இந்த மலையில் ஏறுவதே ஒரு சாகஸம்தான். கல்வாரி மலையில் ஏசுக்கிறிஸ்து சிலுவையைச் சுமக்கும்போது பட்ட வேதனைகளையும், வலிகளையும் நமக்கு உணர்த்தும் பயணம் இது. புனித வெள்ளிக்கு முன்பு இப்படி சிலுவை பாதையில் செல்வது பாரம்பரிய வழக்கம். அப்படியொரு பயணத்தில் தான் நானும் கலந்து கொண்டேன். அப்போது அது கடினமாகத் தானே இருக்கும்.
|
பிரார்த்தனை நிலையில் ஏசுநாதர் |
கற்களும் புழுதியும் நிறைந்த குறுகலான கடினமான பாதையில் மலையேறுவது திணற வைக்கும் அனுபவம். மலையேறும் முன் சமதளத்தில் 50 அடி உயரத்தில் சிறிய குன்று இருக்கிறது. இதுதான் பயணத்தின் முதல் இடம். பிரார்த்தனை கூடம். இதை
'கெத்செமனே' என்கிறார்கள். இங்கு ஏசுவே பிரார்த்தனை செய்வது போல் ஒரு சிலை உள்ளது.
'கவனியுங்கள்....! பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் விழமாட்டீர்கள்...! ' என்ற வசனத்தை அது நினைவுப் படுத்துகிறது. மலை மீது ஏறும் இந்த பயணம் நல்லபடியாக நிறைவு பெறவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைதான் இங்கு வரும் எல்லோருக்கும் உதிக்கின்றன. இந்த பிரார்த்தனைக் கூடம் அருகில் பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை உள்ளது. பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர். நற்செய்தி அறிவிப்பதற்காக திருவிதாங்கூர் வந்தார். 1935 முதல் 1973 வரை கேரளாவில் இருந்தார்.
|
பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை |
உண்டன்கோடு தேவாலயத்தில் குருவாக இருந்தபோது கொண்டகெட்டி மலையின் உச்சியில் வாழ்ந்த மலைவாசிகளை காலரா, மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் எமனுக்கு உயிர்களைப் பலியாக அனுப்பிக் கொண்டிருந்தன. அவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களை இந்த தேவாலயத்துக்கு தூக்கி வந்தார்கள். அவர்களை சிலுவையின் அற்புதத்தால் ஜான் பாப்பிஸ்ட் குணப்படுத்தினார்.
|
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை |
கையில் எந்த பாரமும் இல்லாமல் வெற்று ஆட்கள் ஏறுவதற்கே திணறிப் போகும் இந்த மலைப் பாதையில் எப்படி நோயாளியையும் தூக்கிக்கொண்டு இறங்கினார்களோ, தெரியவில்லை..! செங்குத்தான இந்த மலையில் இருந்து நோயாளிகளைத் தூக்கி வருவது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது என்பதை மலைவாசிகள் பாதிரியாரிடம் தெரிவித்தனர். "நீங்கள் இங்கு வரவேண்டாம் உங்கள் இடத்தை தேடி தேவனே வருவார்" என்று கூறிய பாப்பிஸ்ட் 1957 மார்ச் 27-ல் மலை உச்சியில் மரத்தாலான ஒரு சிலுவையை நிறுவி திருப்பலி நடத்தினார். அந்த மலைக்கு
'தெக்கன் குருசுமலை' என்று பெயரிட்டார். அன்றிலிருந்து குருசுமலை திருப்பயணம் ஆரம்பமானது. அந்தப் புனிதரின் ஞாபகார்த்தமாக இங்கு சிலை வைத்திருக்கிறார்கள்.
|
கன்னிமேரி ஏசு கிறிஸ்துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை |
மலைப் பாதையின் தொடக்கத்தில் சங்கமாவேதி என்ற தியானக்கூடம் உள்ளது. இங்கு தியானம் செய்யலாம். இதன் அருகே கன்னிமேரி ஏசு கிறிஸ் துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை உள்ளது. குழந்தையை தாய் பாதுகாப்பது போல் மலையேறும் நம்மை கன்னிமேரி பாதுகாப்பாள் என்பது ஐதீகம். அங்கிருந்து மலையேற்றம் தொடங்குகிறது. முதலில் ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நல்ல ரோடு இருக்கிறது. அதன்பின் தொடங்கும் கடினமான பாதை மலை உச்சி வரை இடைவெளி இல்லாமல் தொடர்கிறது. குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக மொத்தம் 14 சிலுவைகள் இந்த பாதையில் உள்ளன.
|
14 - வது சிலுவை |
ஐந்தாவது சிலுவை உள்ள இடம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் குளுமையான காற்றை சுவாசிக்கும் விதமாக உள்ளது. களைத்து வரும் பக்தர்களுக்கு அற்புதமான இடம்.
ஒன்று முதல் ஏழாவது சிலுவை வரை கேரள பகுதியில் உள்ளது. அதற்கு பின் தமிழ்நாட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. 7 - 14 சிலுவைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏழாவது சிலுவை வரை கேரள போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும். எல்லோரும் மலையாளத்தில பேசிக் கொண்டிருப்பார்கள். 7வது சிலுவையில் இருந்து தமிழக போலீஸ் தமிழ் உரையாடல் என்று சூழலே மாறுவது ஒரு ரம்மியமான அனுபவம்.
|
பாறையில் 'லாஸ்ட் ஸப்பர்' ஓவியம் |
பாறையில் வரையப்பட்டிருக்கும்
'லாஸ்ட் ஸப்பர்' என்ற ஏசுவின் கடைசி உணவு விருந்து சித்திரமாக தீட்டப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து உயரத்துக்குப் போனால் மலைமுகட்டில்தான் சிலுவை உள்ளது. ஜான் பாப்பிஸ்ட் செய்துதந்த மர சிலுவை இப்போது இல்லை. மோசமான தட்பவெப்பத்தினால் அது சிதைவுற்றது. அதன்பின் தற்போது உள்ள கான்கிரீட்டால் ஆன சிலுவையை வைத்துள்ளார்கள். இதன் உயரம் 25 அடி.
இந்த சிலுவை முன் சிறிய மண்டபம் உள்ளது. சிலுவை இருப்பது தமிழ்நாட்டில்தான் என்றாலும், இது நெய்யாற்றின்கரை கிறிஸ்துவ சபைக்கு கட்டுப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆராதனை வழிபாடுகள் எல்லாம் மலையாள மொழியிலே நடக்கிறது.
|
மலை முகட்டில் உள்ள சிலுவை |
இங்கிருந்த 500 மீட்டர் தொலைவில் காளிக்கோயில் உள்ளது. இந்த இடத்தை
'காளிமலை' என்கிறார்கள். இங்கு துர்க்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் என்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. மிக அழகான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம். மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகை பார்க்கலாம். மிக வசீகரமான இடம் இது.
|
சப்த கன்னியர் |
இங்கிருக்கும் காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. இது பல நோய்களை தீர்க்கும் மூலிகைத் தீர்த்தம் என்று கூறுகிறார்கள். சித்திராப் பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது நிறைய பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள்.
|
மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயில் |
இந்தக் கோவிலில் இருந்து கீழே போவதற்கு மோசமான மண் ரோடு ஒன்று உள்ளது. ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. குருசு மலை ஏறமுடியாதவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகாணியில் இருந்து ஜீப் மூலம் மலை உச்சிவரை செல்லலாம். ஆனாலும் நடந்து போவதில் கிடைக்கும் மன திருப்தியும் உடல் ஆரோக்கியமும் இப்படி வாகனத்தில் போகும்போது கிடைக்காது.
குருசு மலை சாகஸம் செய்பவர்களுக்கும் அற்புதமான இடம். இந்த மலையேற்றமே நல்ல ஒரு டிரக்கிங் அனுபவத்தைத் தரும்.
உங்களிடம் இருந்து வித்தியாசமான பல தகவல்களை சொல்லி செல்லும் பதிவுகளாக வருகிறது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநான் பயணம் நிமித்தமாக பல மலைகளில் ஏறியிருக்கிறேன். சாதாரண மக்கள் ஏறும் மலைகளில் இது கடினமானது. முதலில் வருகைதந்து கருத்து பதிவிட்டமைக்கு நன்றி.
நீக்குஇரு படங்களும் பயணம் எவ்வளவு சிரமம் என்று புரிகிறது...!
பதிலளிநீக்குஉண்மைதான் டிடி சார், அந்த கடினமான பாதையை எப்படி படம் எடுப்பது என்று நான் திணறித்தான் போனேன். நல்ல கோணத்தை தேர்வு செய்து போகஸ் செய்வதற்குள் யாரவது பிரேம்குள் வந்துவிடுவார்கள். மனிதர்கள் இல்லாமல் இந்த மலை பாதையை ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கடைசி வரை நிறைவேறவில்லை. திரும்பும் இடமெல்லாம் மனிதர்கள்தான்.
நீக்குமறக்க முடியாத ஒரு பயண அனுபவம்.
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.
அட! எங்க ஊரு! நானும் ஒரே ஒரு முறை இந்த மலைக்குச் சென்றிருக்கின்றேன். நான் படித்த பள்ளி, கல்லூரி கிறித்தவ மதத்த்தைச் சேர்ந்தவை ஆதலால். ஆனால் இப்போது நீங்கள் இங்கு தந்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிகின்றது. அப்போதும் கடினமான பாதைதான். அதில் மட்டும் மாற்றம் இல்லை! நீங்கள் சொல்லி இருக்கும் மற்ற வழிப் பாதையில் சென்றதில்லை. இந்த வழிப் பாதைதான். அப்போது இன்னும் அடர்த்தியான மரங்கள், செல்லவே பயமாக இருக்கும். கரடு முரடு மட்டுமில்லை ஒரு சில இடங்களில் செங்குத்தாக ஏற வேண்டியதாக இருக்கும் சறுக்கி விழும் அதுவும் பள்ளத்தில் அபாயம் இருந்தது. ஏறுவது வரை சிரமம். ஏறிவிட்டால் அந்த மலை உச்சியில் சில்லென்ற காற்று சுகமாக இருக்கும். நாங்கள் சென்றதும் புனித வெள்ளி சமயம்தான். அங்கிருந்து நெடுமங்காடு மலைத் தொடர், பொன்முடி மலைத்தொடர் தூரத்தில் தெரியும்.
பதிலளிநீக்குஇந்தத் தகவல் எல்லாம் அப்போது எங்களுடன் வந்த ஆசிரியர் சொல்லிக் கேட்டதுண்டு ஆனால் பின்னர் அது அவ்வளவாக நினைவில்லை இந்த இடத்தைத் தவிர. இன்று அதே தகவலைப் புதுப்பித்துக் கொண்டேன். நினைவலைகளுடன். பரவாயில்லை உங்கள் வழி எங்கள் ஊரை நினைத்துக் கொள்கின்றேன். மிக்க நன்றி !
நான் இங்கு தெரிவிக்காத சில தகவல்களையும் நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். மலையின் உச்சியை நெருங்கும் சமயம்தான் அந்த செகுத்தான ஏற்றமும் வரும். நீண்ட மலையேற்றத்தில் சோர்ந்து வலுவிழந்து இருக்கும் கால்களை கொண்டு அதன் மீது ஏறுவது மிக மிகக் கடினம். சிலருக்கு கால்கள் நடுங்குவதை கண்கூடாக பார்க்கலாம். ஒரு வித்தியாசமான அனுபவம்.
நீக்குவருகைக்கும் கருத்து பதிவுக்கும் கூடுதல் தகவல்களுக்கும் நன்றி நண்பர்களே!
thangal payanathiun thevirthu ungalai irtha kurusu malai ku engalium alithu sentrathuku vaalthukal.
பதிலளிநீக்குthangal payanathiun thevirthu ungalai irtha kurusu malai ku engalium alithu sentrathuku vaalthukal.
பதிலளிநீக்குநன்றி! கருத்துக்களை ஒரு முறை மட்டும் பதிவிடவும்
நீக்குநண்பரே தங்களது செட்டிங்கில் கருத்துரையில் போய் வேண்டாததை நீக்கி விடலாம்.
நீக்குபயணத்தை சிறப்பாக சொல்லிச்சென்ற விதம் அருமை முதல் புகைப்படத்தின் கோணம் ஸூப்பர் வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
நண்பரே எமது பதிவுக்கு உண்மையிலேயே வரவில்லையா ? இல்லை வந்து விட்டு மாட்டிக்கொள்ள வேண்டாமென ஓடி விட்டீர்களா ?
வாருங்கள் நண்பரே,
நீக்குவேலைப்பளு காரணமாக கடந்த ஒரு வாரமாகவே என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை. இன்றைக்குத்தான் மீண்டும் பல பதிவுகளை படித்தேன். தங்களின் பதிவு என் கண்ணில் படவில்லை. மன்னிக்கவும்.
காளி கோவில் சூழல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மலைகளுக்கு வண்டியில் செல்வதை விட உறவுகள் மற்றும் நண்பர்களுடன் நடைபயணமாகச் சென்றால் அது ஒரு தனி மகிழ்ச்சிதான். படங்களுடன் விளக்கிய விதம் சிறப்பு.
பதிலளிநீக்குவாருங்கள் சகோதரி,
நீக்குஉண்மையிலே காளி கோயில் இருக்கும் இடம் வசீகரமானது தான். ஆனால் அந்த உயரம் தொட, படும் பாடுதான் சிரமமானது. இந்த பாதை மிக கடினமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் பாதை ஓரங்களில் மரங்கள் இல்லாததுதான். தொடர்ந்து வெயிலில் மலை ஏறுவதால் விரைவில் களைப்பு ஏற்படுகிறது. ஆனாலும் வித்தியாசமான அனுபவம்தான்.
வாருகைக்கும் வாக்குக்கும் நன்றி!
" நான் போக வேண்டிய ஊரைத் துறந்து குருசுமலைக்கு பஸ் ஏறினேன் "
பதிலளிநீக்குநமது மண் மற்றும் அதன் மனிதர்களை பற்றிய உங்களின் தீராத தேடலின் சான்றாய் இந்த பதிவை பார்க்கிறேன்...
உலகின் மூன்று பெரும் மதங்களையும் கொண்ட இந்தியாவில் இது போன்ற எத்தனையோ ரம்மியமான, சாகசத்துக்கு உகந்த கோயில்களும், மசூதிகளும், கிறிஸ்த்துவ ஆலயங்களும் உண்டு. இவை ஒவ்வொன்றில் மத நல்லிணத்துக்கான ஒரு காரணமோ அல்லது கதையோ ஒளிந்திருக்கும்.
பதிவை போலவே படங்களும் மிக அருமை !
நன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நீக்குஅருமையான பயணம்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசிலுவை எனப் பொருள்படும் குருசு என்ற வார்த்தையின் மூலம் போர்த்துகீசிய மொழியின் Cruz.
வருகைக்கு நன்றி!
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசிலுவை எனப் பொருள்படும் குருசு என்ற வார்த்தையின் மூலம் போர்த்துகீசிய மொழியின் Cruz.
கருத்துரையிடுக