• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, ஏப்ரல் 03, 2015

  மேகமலை பயணம் - 1

  சுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை. திரும்பிய பக்கமெல்லாம் பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலைத் தோட்டங்கள். அதற்கிடையே அடைந்து கிடக்கும் நீர்த்தேக்கங்கள், இவையெல்லாம் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத இயற்கைக்குச் சொந்தமான காட்சிகள்.

  சன்னாசி மொட்டை
  இத்தனைக் காலம் தனியார் கைவசம் சிக்கியிருந்த இந்த அழகுப் பொக்கிஷ­த்தை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் 2009-ல் தமிழக அரசு திறந்துவிட்டது. அப்போது அறிவித்த புதிய சுற்றுலாத் தலங்களில் மேகமலையும் ஒன்று.
  தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 29 கி.மீ. பயணித்தால் வருகிறது மேகமலை கிராமம். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி அடுத்த 20 கி.மீ. தேயிலைத் தோட்டம். இந்த மலைப் பாதையில் பயணிக்க தனி ‘தில்’ வேண்டும். குண்டும் குழியுமாய் இருக்கும் இந்தப் பாதையில் ‘காஸ்ட்லி’யான காரில் பயணம் செய்தாலும் கட்டை வண்டியில் போகும் அனுபவத்தையே கொடுக்கும். பாதையின் பெரும்பகுதி வனப் பகுதிக்குள் வளைய வருவதால், விலங்குகளின் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.

  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாதையில் புள்ளிமான் குறுக்கிட்டு மிரண்டு ஓடும். யானை மறியல் செய்து ‘சலாம்’ போடும். சிங்கவால் குரங்கு மரத்தில் தொங்கி சிரிக்கும். விலங்குகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்து திரிகிற வனப்பரப்பு இது.  சிங்கத்தைத் தவிர எல்லா விலங்குகளுமே இங்கு ஜீவனம்  செய்கின்றன.

  கொண்டை குருவி
  600 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த வனப்பிரதேசம் மேகமலை வனச் சரணாலயமாக மாற்றம் பெற்றுள்ளது.  இதில் கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய்த் தோட்டங்கள் பரவிக் கிடக்கின்றன.
  மேகமலை வெறும் மலை வாசஸ்தலம் மட்டுமல்ல. இங்கு டிரக்கிங், அனிமல் சைட்டிங் போன்ற மற்ற அம்சங்களும் ஏராளம். விலங்குகளைப் பார்ப்பதற்கு வட்டப்பாறை, போதப்புல்மேடு, சன்னாசி மொட்டை என்கிற 'எலிபேண்ட் காரிடர்' ஆகியவைகள் சிறந்த இடம். போதப் புல்மேட்டில் வரையாடுகள் அதிகம். ஐயப்பன் கோயில் சீஸனில் குன்னிக்காடுகளில் உள்ள யானைகள் மேகமலைப் பகுதிக்கு வந்துவிடுவதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு நிறைய யானைகளைப் பார்க்கலாம்.

  தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள்
  மலையேற நினைப்பவர்களுக்கு வசதியாக நிறைய டிரக்கிங் பாயிண்ட்டுகள் உள்ளன. ராஜபாளையம்-வெள்ளிமலை, ஸ்ரீவில்லி புத்தூர்-வெள்ளிமலை, மேகமலை-வெள்ளிமலை போன்ற 8 மணி நேர  மலையேற்றப் பாதைகளும், ஹைவேவீஸ்-வண்ணாத்திப்பாறை, இரவங்கலாறு-கிராஸ் ஹில் போன்ற 3 மணிநேர டிரெக்கிங்கும் உள்ளன. சாகஸப் பிரியர்களுக்கு இவையெல்லாம் சாதகமாய் உள்ளன.


  மேகமலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ஹைவேவீஸ் உள்ளது.  தமிழில் இதை ‘பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். இதற்கு பசுமையான மலை என்று அர்த்தம். இங்கு இரண்டு அணைகள் உள்ளன.  இதுபோக மேலும் மூன்று அணைகளும் சேர்த்து சிறிது சிறிதாக மொத்தம் ஐந்து அணைகள் மேகமலையில் உள்ளன.  அணைகளின் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றாலும், தொலைவில் இருந்து பார்ப்பதே தனி அழகுதான். இங்குதான் மேகங்கள் நம்மை தழுவிச் செல்கின்றன. தூவாணம் கவர்ச்சிமிக்க அழகுப் பிரதேசங்களில் ஒன்று.


  இதனைக் கடந்து சற்று தொலைவில்
  இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. அது மிக அற்புதமானது.  மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த நீரை அருந்தினால் வயிற்று வலி, தலை வலி, தலைச்சுற்றல் எல்லாம் பறந்தோடிவிடும் என்று இங்குள்ள மக்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

  தூவாணம் நீர்த்தேக்கம்
  இரைச்சல் பாறையில் இருந்து வழியும் நீர்தான் அருவியாக கொட்டுகிறது.  இதுதான் சுருளியாறாகச் சென்று வைகை நதியில் கலக்கிறது.  மற்றொரு பகுதியில் விழும் அருவி நீர் தேக்கடி நீர்த்தேக்கத்துக்குப் போகிறது.  மேகமலையின் அழகுப் பிரதேசங்களில் இந்த அருவியும் ஒன்று. இதுபோக  ஹைவேவீஸ் டேம், பச்சைக் கூமாச்சி, தூவாணம் நீர்த்தேக்கம், மணலாறு பாலம், மணலாறு எஸ்டேட், மஹாராஜா மெட்டு, வட்டப்பாறை, போதப்புல் மேடு, கிராஸ் ஹில், சன்னாசி மொட்டை என்ற எல்லா இடங்களுமே அழகின் பொக்கிஷங்கள். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இனிய விருந்து.

  மணலாறு பாலம்
  விலங்குகளைப் பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கும் பிச்சைக்கு மலையின் ஒவ்வொரு அங்குலமும் அத்துப்படி. விலங்குகள் எதிர்பட்டால்  எப்படி தப்பிக்க வேண்டும்? என்ற நுட்பத்தையும், அவற்றை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவைகளும் நம்மை ஒன்றும் செய்யாது என்றும், விலங்குகளின் மனநிலையை  கூறினார். சுற்றுலாப் பயணிகளை எல்லா இடங்களுக்கும்  அழைத்துச் சென்று விளக்கமுடன் சொல்கிறார்.

   பிச்சை
  காடுகளுக்குள் காலாற நடக்க வேண்டும். வன விலங்குகளை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் இருந்து வந்திருந்தது ஒரு புதுமண ஜோடி ஹரிஹரன்-லாவண்யா. 10 வகையான புதிய பறவைகளை இங்கு பார்த்தோம் என்கிறார்கள். காட்டுக்குள் நடந்து போவதும் டிரக்கிங் செய்வதும் பிடித்தமானது என்கிறார் ஐடியில் வேலைப் பார்க்கும் லாவண்யா.

  லாவண்யா - ஹரிஹரன் தம்பதி
  மூன்று வருடத்திற்கு முன்புவரை இங்கு தங்குவதற்கு பயணியர் விடுதியைத் தவிர வேறு இடம் எதுவும் இல்லை.  இன்று சிவக்குமார் என்ற தனி நபரின் முயற்சியால் தகுதிக்கேற்ப தங்குமிடங்களை உருவாக்கியுள்ளார். மேகமலை அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக மாறியதில் இவரது பங்கு ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம். மேகமலை டாட் காம் மூலம் இதை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. ‘டூரிஸம் ஃபார் டுமாரோ’ என்ற அமைப்பைத் தொடங்கி வருங்கால சந்ததியினருக்கு  இயற்கையை மாசுப் படுத்தாத சுத்தமான சுற்றுலாத் தலங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார்.

  மகாராஜா மெட்டு
  மேகமலைக்கு தற்போது ஒரேயயாரு பாதைதான் உள்ளது. இதில் பஸ்ஸோ லாரியோ பிரேக் டவுண் ஆகி பாதியில் நின்றுவிட்டால் பாதை அடைபட்டுப் போகும். இதை நிவர்த்தி செய்ய மேகமலையில் இருந்து லோயர் கேம்ப் வரை செல்லும் பாதையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஹைவேவீஸ் சேர்மன் சுரேஷ். இந்தப் பாதையை சரிசெய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்க முடியும் என்கிறார்.
  செயற்கைத்தனங்கள் நுழையாத இயற்கையை ரசிக்க விரும்புவர்களுக்கு மேகமலை மிக அற்புதமான பொக்கிஷம்!  குறிப்பு:
  இதற்கு முன்பு நானும் எனது மகனும் இரு சக்கர வாகனத்தில் மேகமலை சென்று காட்டு யானையிடம் இருந்து தப்பித்தது அடுத்த பதிவில்..  20 கருத்துகள்:

  1. படங்களை பார்க்கும்போதே மனம் அங்கு பறக்க துடிக்கிறது !

   ட்ரெக்கிங் போன்ற, மேலை நாட்டினர் மட்டுமே ஆர்வம் கொண்ட பழக்கங்கள் நம் நாட்டிலும் பரவுவது நல்ல விசயம். இதன் மூலம் பசுமை பிரதேசங்களின் தேவை மற்றும் அவசியம் தனிமனிதர்களுக்கு அனுபவபூர்வமாக புரியும் !

   இந்த பரந்த பூமியில் மனிதன் ஒரு துளியே என்ற தெளிவு பிறக்கும் !

   நன்றி
   சாமானியன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. //இந்த பரந்த பூமியில் மனிதன் ஒரு துளியே என்ற தெளிவு பிறக்கும் !//

    சத்தியமான வார்த்தை.

    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. நண்பரே! என்ன ஒரு ஒற்றுமை...நீங்கள் சென்ற/செல்லும் இடத்திற்கெல்லாம் நாங்களும்..அஹ்ஹஹ் மேகமலை. அருமையான ஒரு இடம். இயற்கை பொத்தி தனக்குள் ரகசியமாய் வைத்துப் பாதுகாக்கும் இடம். கம்பம் தேனீ , குமுளி, மூணாறு, சின்னார் என்று பெரிய ட்ரிப், நானும் எனது மகனும், இயற்கை/விலங்கு ஆர்வல உறவினர்களுடன். சுருளி ஃபால்ஸ் குளித்துவிட்டு பயணம். அங்கு பஞ்சாயத்து தங்குமிடத்தில் தங்கினோம். என் மகன் 12 ஆம் வகுப்பு முடித்து கால்நடை மருத்துவம் சேரும் முன். அங்கு சாப்பாடு வசதி என்று பெரிய இடங்கள் என்று இல்லாமல், மிகவும் சிறிய அருமையான இடங்கள் அதனால் குப்பை கூளங்கள் இல்லாமல்......என்னைக் கேட்டால், மூணாறு, சின்னார், எல்லாவற்றையும் பின் தள்ளிவிடும் இந்த மேகமலை. தேக்கடி கூட மிகவும் வணிகம் சார்ந்ததாகிவிட்டது. மேகமலை இப்போது எப்படியோ தெரியவில்லை. நாங்கள் 8 வருடத்திற்கு முன் சென்ற போது...ம்ம்ம் ட்ரெக்கிங்க், எல்லாம் சென்றோம். டாம் பார்க்கவில்லை. அருவி சென்றோம். தண்ணீர் குறைவாகத்தான் இருந்தது. கோடைகாலம் ஆனதால். பாதை கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான். 15, 16 ஹேர்பின் வளைவுகள் என்று நினைவு. நாங்கள் இறங்க மனமே இல்லை எனலாம்....இப்போது உங்கள் தகவல் திரு சிவகுமார் பற்றியது புதிது. மகன் வந்ததும் மீண்டும் போக வேண்டும். அப்போது கேமரா இல்லை. அதனால் க்ளிக்கவில்லை. மட்டுமல்ல. அப்போதெல்லாம் இப்படி நண்பருடன், இப்போது ப்ளாக் ஆரம்பித்து எழுதுவேன்/வோம் என்ற கணிப்பு எதுவும் இல்லாததால், எதையும் குறித்துக் கொள்ளவில்லை. நன்றாகக் களித்தது மட்டும் நினைவுக்குள்.

   மேகமலை.காம் பார்த்தேன். நல்ல தகவல்கள் இருக்கின்றன தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! உங்கள் குறிப்பில் சொல்லியிருக்கும் உங்கள்/மகன் அனுபவம் அறிய ஆவலாக இருக்கின்றோம்.

   நன்றி நண்பரே!

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுதானே என்ன ஒரு ஒற்றுமை..! நான் செல்லும் இடத்திற்கெல்லாம் எனக்கு முன்பாகவே நீங்கள் சென்று விடுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
    இப்போது போய்பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும். சுற்றுலா பயணிகள் அதிகம் வர வர இதுவும் வர்த்தக மையமாக மாறிவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. அதற்குள் பார்த்து வந்துவிட வேண்டும்.

    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    நீக்கு
  3. உங்களின் பசுமையான படங்கள் ,மேகமலையை அவசியம் பார்க்க வேண்டுமென்ற மோகத்தை உண்டாக்கி விட்டது :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கட்டாயம் போய் வாருங்கள். நண்பர் சிவகுமார் உங்களுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்து தருவார். மேகமலையில் பி.எஸ்.என்.எல். மொபைல் சிக்னல் மட்டுமே கிடைப்பதால். மற்ற நெட்வொர்க் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு அன்றாட வாழ்வியலில் இருந்து முழு விடுதலை கிடைக்கும். அந்த மகிழ்ச்சியே அலாதிதான்.

    நீக்கு
  4. புகைப்படங்கள் அருமை நண்பரே மனிதனின் காலடி பதிந்து விட்டதா இது இயற்கைக்கு அழிவு நண்பரே...
   தமிழ் மணம் விழுந்து கொண்டே இருக்கும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம் நண்பரே, மனிதர்கள் அதிகம் வர தொடங்கிவிட்டாலே இயற்கை அழகு அழிந்து விடும். சாலை வசதி சரியில்லததால் தான் இந்த பகுதி மனிதர்கள் காலடியில் இருந்து தப்பித்து வருகிறது.

    நீக்கு
  5. இந்த வருட விடுமுறைக்கு செல்ல வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக சென்று வாருங்கள். நான்கு நாட்கள் இயற்கையோடு இயற்கையாக வாழுங்கள். எங்களுக்குத்தான் வருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த நான்கு நாட்களும் தங்களின் கருத்துக்கள் எதுவும் எங்கள் பதிவுக்கு வராதே அதுதான்!

    கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி டிடி சார்!

    நீக்கு
  6. ஆகா
   ஆகா
   படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் நண்பரே
   வாய்ப்புகிடைக்கும் பொழுது அவசியம் காண வேண்டும்
   நன்றிநண்பரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அவசியம் காண வேண்டிய இடம்தான் நண்பரே, சென்று வந்து பதிவிடுங்கள்.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி !

    நீக்கு
  7. அய்யா வணக்கம்.
   வழக்கம் போலவே எங்களையும் கூட்டிக் கொண்டு ஒரு மலைப்பயணம்.
   புகைப்படங்களின் துல்லியம் வியக்க வைக்கிறது.
   மனச்சோர்வுறும் நேரத்தில் உங்களின் எழுத்துகளைப் பார்ப்பது என்பது எனக்கு உற்சாக டானிக்.
   த ம 7
   தமிழ்மணத்தில் நுழைய.

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் அய்யா!
    தங்களின் பின்னூட்டமும் கருத்தும் என்னை உற்சாகப் படுத்தும் டானிக்!
    டானிக்குக்கும் வாக்குக்கும் நன்றி!

    நீக்கு
  8. நேரில் சென்று பார்க்கத் தூண்டும் அழகான படங்கள். பகிர்விற்கு நன்றிகள் பல.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீண்ட இடைவேளைக்கு பின் வருகை புரிந்த கருத்திட்ட நண்பருக்கு நன்றிகள்.

    நீக்கு
  9. மேகமலைப் பகுதி, எனது பெற்றோர், கைக்குழந்தையாயிருந்த எங்கள் தங்கையுடன், தமிழ்நாடு மின்சாரிய வாரியத்தின் அணைக்கட்டுமானப் பணிகளுக்காக 1970, 80களில் வாழ்ந்த இடம். அஸ்பெஸ்ட்டாஸ் ஓட்டில் சுவரும், கூரையும் அமைத்து கட்டப்பட்ட வரிசைவீடுகளில் தொழிலாளர்கள் குடியிருப்புகள். பலத்த காற்றில் கூரைகள் பறந்துவிடாமல் இருக்க மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி இருப்பார்கள். நானும் எனது தம்பியும் பள்ளி ஆண்டு விடுமுறைக்கு மட்டும் சென்று வருவோம். குறுகிய மலைப்பாதையில் பயணம் ஒவ்வொருமுறையும் சாகசம் நிரைந்து இருக்கும், பேருந்து பயணிகள் பலரின் வயிற்றை புரட்டி பயண முடிவில் குற்றுயிரோடு இறக்கிவிடும். எங்களைப்போல தாத்தா பாட்டி வீடுகளில் இருந்து நல்ல பள்ளிகளில் படிக்க வாய்ப்பில்லாத மற்ற குழந்தைகளுடன் தேயிலைக்காயில் நொங்கு எடுத்து தின்பதும், காட்டுசெடிகளில் பழங்கள் பறித்து தின்பதும் விளையாட்டு. பேரீச்சம்பழம் போல ருசியுடைய செடியில் வளரும் ஈச்சம்பழங்கள் கிடைத்தால் சுவைத்துப்பாருங்கள். எனது தாயாரை வசதியாகக்கூட்டிக்கொண்டு போய் காட்ட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. உங்கள் விவரமான பதிவிலிருந்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்கிறேன் நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க மகிழ்ச்சி நண்பரே,
    இயற்கை வளம் நிறைந்த இந்த பகுதிகளில் வாழ்வது ஒரு தவம், என்றாலும் அது கடினமானது. உங்களுக்கு இரண்டுமே கிடைத்திருக்கிறது.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்