• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, ஜூன் 27, 2015

  கர்ப்பப்பையை காப்பாற்றுங்கள்..!


  டுத்தர வயதுள்ள 10 பெண்களை எடுத்துக்கொண்டால், அதில் இருவருக்கு கர்ப்பப்பை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இருவர் அதை எடுத்துவிடும் முடிவில் இருப்பார்கள். 

  மனித உடலில் வேறு எந்தவொரு உறுப்பையும் இவ்வளவு சாதரணமாக யாரும் தூக்கி எறிந்து விடுவதில்லை. 

  ஆனால், பெண்களைப் பொறுத்தவரை குழந்தை பிறக்கும் வரைதான் அது முக்கியமான ஒன்று. அதன்பின் அது அவர்களுக்கு தொந்தரவும் பிரச்னையும் தரும் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் கர்ப்பப்பையை எடுத்ததை பெருமையான விஷயமாக பல பெண்களும் வெளியில் சொல்லிக்கொள்கிறார்கள்.

  இந்த பெருமையான கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அந்த பெண்களுக்கு நெடு நாட்கள் நீடிப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை என்கிறார் கர்ப்பப்பை அகற்றப்பட்ட 200 பெண்களை ஆய்வு செய்த அமிர்தம்.

  மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது ஆய்வு பட்டத்துக்காக இந்த சப்ஜெட்டை கையில் எடுத்தார், அமிர்தம். அப்போதுதான் கர்ப்பப்பையை இழந்த பெண்களின் துயரம் அவருக்கு புரிந்தது. 

  அன்று முதல் தேவையில்லாமல் கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் அறியாமையை போக்குவதையே தனது நோக்கமாகக் கொண்டார். இதற்காக கிராமங்கள் தோறும் முகாம்களை அமைத்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரை சந்தித்த போது...

  "இன்று ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது வேதனையான விஷயம். 

  கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000-ல் இருந்து 50,000 வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் பல பெண்கள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். காரணம் அவர்களில் 65 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பையை அகற்றப்படமலேயே சரி செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் என்பதுதான். 

  கர்ப்பப்பையை எடுத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் மட்டுமே அதை எடுக்க வேண்டும். (உதாரணமாக கர்ப்பப்பை புற்றுநோயை சொல்லலாம்) இல்லையென்றால் எடுக்கக் கூடாது. நிறைய பெண்கள் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, நீர்க்கட்டி போன்றவற்றிற்கு கூட எடுத்துவிடுகிறார்கள்.      

  இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை, ஜாதகம்..! வயிற்றில் கத்தி பட வேண்டும் என்று ஜாதகத்தில் உள்ளது, அதற்காக எடுத்து விட்டோம் என்பார்கள். எவ்வளவு கொடுமை! பெண்களுக்கு அவ்வளவு இம்சையையா கொடுக்கிறது உயிரை உருவாக்கும் புனிதமான அந்த கர்ப்பப்பை.


  ஒருபோதும் இல்லை. மாறாக, கர்ப்பப்பையை எடுத்தவர்களில் 60 சதவிதத்தினர் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கிறார்கள். தாங்க முடியாத தலைவலி, தூக்கமின்மை, போன்ற பல நோய்கள் அவர்களை எளிதில் தாக்குகிறது. பல பெண்கள் தங்கள் பெண்மையைத் தொலைத்து விட்டோமே என்ற மனநல பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்." என்கிறார் அமிர்தம். 

  இதை ஆமோதிக்கும் விதமாக ஒத்தக்கடையை சேர்ந்த லிங்குசாமியும் அவரது மனைவி அழகுராணியும் தொடர்கிறார்கள். 

  "உண்மைதான், என்னுடைய அம்மா, இரண்டு அக்காக்கள் என்று மூன்று பேருமே கர்ப்பப்பையை எடுத்தவர்கள் தான். அதனால் அவர்கள் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். கர்ப்பப்பை இருந்த போது அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பும் துள்ளலும் எடுத்த பின் அவர்களிடம் சுத்தமாக காணாமல் போய் விட்டது. எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்கள். அவர்களின் ஹீமோகுளோபின் குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து மாத்திரை மருந்து எடுத்தும் குணமாகவில்லை. 

  அவர்களால் தண்ணீர் குடத்தை தூக்க முடியாது. கொஞ்சம் தூரம் கூட நடக்க முடியாது. எதிப்பு சக்தியும் குறைந்தது. எப்போதும் நோயோடு வாழ்பவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். 

  இதையெல்லாம் நேரடியாக பார்த்ததால்தான் என் மனைவிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அதை தவிர்த்தேன். மாற்று மருத்துவத்திற்கு மாறினேன். இன்று என் மனைவி கர்ப்பப்பையுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்." என்று கூறுகிறார். 

  லிங்குசாமியின் மனைவி அழகுராணியிடம் பேசிய போது, "எனக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த சில நாட்களிலேயே என்னுடைய ஃபெலோபியன் டியூப்பில் கட்டி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆபரேஷன் மூலம் அதை சரி செய்தோம். 

  மறுபடியும் அடுத்த பக்கத்தில் இருக்கும் மற்றொரு டியூப்பில் கட்டி இருப்பதாக சொன்னார்கள். இந்த கட்டி தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு தீர்வு, கர்ப்பப்பையை எடுத்துவிடுவதுதான் என்றும் சொன்னார்கள். 

  கர்ப்பப்பையை எடுத்துவிட்டு தினம் தினம் செத்துப் பிழைக்கும் எனது மாமியார் மற்றும் மதினிமார்களின் அனுபவங்களை கேட்டபின் எனது கர்ப்பப்பையை இழக்க நான் விரும்பவில்லை. எனது கணவருக்கும் அதில் உடன்பாடில்லை. 

  அதனால் கட்டியை கரைக்க தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டேன். எந்தப் பலனும் இல்லை. வயிறு ஊத்தம் கொடுத்தது. கை, கால்களில் எல்லாம் தாங்க முடியாத வலி இருந்து கொண்டே இருந்தது. பீரியட்ஸும் சரியாக இல்லை. பசி எடுக்கவில்லை. 

  யாரைப் பார்த்தாலும் எரிச்சலும் கோபமும் வந்தது. அப்போதுதான் ஆங்கில மருத்துவத்தில் இருந்து விலகி வந்தோம். மாற்று மருத்துவத்தில் இதற்கான தீர்வு இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். அக்குபங்க்சர் மருத்துவம் எடுத்துக் கொண்டேன். பூரணமாக குணமானது. 

  இப்போது ஐந்து வருடம் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லா தொந்தரவுகளும் சரியாகிவிட்டது. கட்டியும் கரைந்து விட்டது. என் கர்ப்பப்பையை இழக்காமலே என் ஆரோக்கியத்தை மீட்டுவிட்டேன்." என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அழகுராணி. 

  "அவசரப்பட்டு எடுத்திருந்தால் அழகுராணியும் ஒரு நிரந்தர நோயாளியாக மாறியிருப்பார். எங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களிடம் உயிருக்கு ஆபத்து இருக்கும் பெண்களை தவிர மற்ற பெண்களை சித்தா, அக்குபங்க்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை முயற்சி செய்து பார்க்க சொன்னோம். நல்ல பலன் கிடைத்தது. இப்போது அனைவருமே நன்றாக இருக்கிறார்கள். 

  கர்ப்பப்பை பாதிப்புகளில் சில வெறும் கால்சியம் மாத்திரைக்கு கூட சரியாகிவிடும் தன்மை கொண்டது. ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்டு பல மருத்துவர்கள் ஒன்றும் இல்லாத காரணத்துக்கு கூட கர்ப்பப்பையை எடுத்துவிடுகிறார்கள். 

  ஒரு சாதாரண புடவை எடுப்பதற்கே ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கும் பெண்கள், தங்கள் உடலின் ஒரு பகுதியான பெண்மைக்கு மிக முக்கியமான கர்ப்பப்பை விஷயத்தில் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

  கர்ப்பப்பை அலட்சியமான ஒன்றல்ல, அதை எடுக்க வேண்டும் என்று ஒரு டாக்டர் சொன்னால், சரியென்று சொல்லிவிடாதீர்கள். இரண்டு, மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேளுங்கள். 

  தனியார் மருத்துவர்களை விட அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால், அங்கு வர்த்தக நோக்கம் இருக்காது. அனைத்து டாக்டர்களும் ஒரே முடிவை சொன்னால் மட்டுமே கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். அதுதான் பெண்ணுக்கும் பெண்மைக்கும் நல்லது." என்று தீர்க்கமாக சொல்லி முடிக்கிறார், அமிர்தம்.

  குழந்தையைப் பெற்றுத் தருவதோடு கர்ப்பப்பையின் வேலை முடிந்துவிடுவதில்லை. பெண்மையை வளப்படுத்துவதிலும் அது முக்கியப் பங்கு வகுக்கிறது. அதை பெண்கள் புரிந்து கொண்டு, பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.    
  30 கருத்துகள்:

  1. இயற்கையாக நம்ம உடலில் உள்ள உறுப்புகளை அகற்றினால் நிச்சயம் அதனால் பின்விளைவுகள் நிச்சயம் இருக்க செய்யும் அதனால் நாம் கர்ப்பபை தொடர்ந்து இருப்பதனால் என்ன பிரச்சனைகள் அந்த பிரச்சனையை விட கர்ப்பபை எடுப்பதினால் உள்ள பிரச்சனைகள் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் எடுக்காமல் இருப்பதே புத்திசாலிதனம்..

   நல்லதொரு பதிவு.......உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிக அருமையாக இருக்கின்றன & வருகின்றன. பாராட்டுக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதல் நபராக வந்து கருத்திட்டு பாராட்டிய நண்பருக்கு நன்றிகள்.

    நீக்கு
  2. கருவை திருவாக்கும் கர்ப்பப்பை காக்க
   உருவான உம்முணர்வு உன்னதமே - சருகா
   இதுகூட்டி குப்பையில் போட புகுமே
   புதுவருத்தம் என்றீரே நன்று !

   அருமையான விழிப்புணர்வுப் பதிவு ! மிக்க நன்றி தகவலுக்கு.! வாழ்க வளமுடன் .....!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கவிதையில் பாராட்டிய கவிதாயினிக்கு நன்றிகள் பல!

    நீக்கு
  3. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. இதிலும் ஜாதகம் சேர்ந்து விட்டதா...? கொடுமையிலும் கொடுமை...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஜாதகமும் சாமியாரும் இன்று எல்லாவற்றிலும் சேர்ந்து விட்டார்கள். வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. என் அம்மாவிற்கும் கட்டியிருந்த காரணத்தால் கர்ப்ப்பை எடுத்தார்கள் அதனால் அவர்கள் பட்ட அவஸ்தை பார்க்க சகியாது. நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வு. பெண்கள் தங்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதுபோன்ற விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒரு பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் கருப்பை எடுக்கப்பட்ட துயரம் இருக்கும். நானும் அவர்களின் வேதனையை சொல்லக் கேள்வி பட்டுள்ளேன். வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  6. சரியான விழிப்புணர்வு. பல மருத்துவர்கள் பணம் பண்ணுவதற்காக கர்ப்பப்பை எடுத்துவிடவேண்டும் என்று கூறி பயமுறுத்தி அவ்வாறு செய்துவிடுகின்றார்கள். கர்ப்பப்பை எடுக்கப்பட்டவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாவதை நான் கேள்விப்பட்டுள்ளேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!

    நீக்கு
  7. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! எனக்குத் தெரிந்து சில பெண்மணிகள் இப்படி கர்ப்பப்பையை எடுத்துவிட்டு உடல் நலம் பாதித்து இருப்பதை கண்கூடாக கண்டுள்ளேன். எதிலும் ஆலோசிக்காமல் முடிவெடுத்து கர்ப்பபையை மட்டுமல்ல ஆரோக்கியத்தையே இழந்துவிடுகின்றனர் பெண்கள். இந்த கட்டுரை அவர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாய் அமைந்தது சிறப்பு! நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அமிர்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க சொல்கிறார். இது உண்மையிலே மிக நல்ல கருத்து. நான் எனது நண்பர்களுக்கு எதாவது உடல்நல பிரச்னை என்றால் அவர்களிடம் சென்று தான் ஆலோசனை கேட்போம். ஒன்றுக்கு மூன்று மருத்துவர்கள் விவாதித்துதான் அறுவை சிகிச்சை போன்ற பெரிய முடிவுகளை எடுக்கிறார்கள். அவசியம் இருந்தால் மட்டுமே செய்வார்கள். தனியார் மருத்துவர்கள் அப்படியல்ல, காசு பண்ணும் ஆசையில் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்துவிடுகிறார்கள். நாம்தான் நமக்காக கவனமாக இருக்க வேண்டும்.
    நன்றி அய்யா!

    நீக்கு
  8. வணக்கம்,
   தகுந்த நேரத்தில் உங்கள் பதிவு, எதிர்படுவோரிடம் எல்லாம் என்னால் முடிந்த வார்த்தைகள் இவை, அவசியம் தேவை என்ற ஒன்று வேலை முடிந்த பின் ,,,,,,,,,,
   அருமையான விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துக்கள். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் எதிர்படுவோரிடம் கூறும் அறிவுரைக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  9. மிகச் சிறப்பான,அவசியமான விழிப்புணர்வுப் பகிர்வு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  10. நல்ல விழிப்புணர்வு கட்டுரை! அருமை! இயற்கைக்குப் புறம்பானது எதுவுமே நல்லதல்ல என்பது உண்மையே!

   நீங்கள் சொல்லி இருப்பது போல் தேவை இல்லாமல் , தகுந்த காரணங்கள் இல்லாமல் கர்பப்பை அகற்றப்பட்டு விட்டால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம் தான்.

   ஆனால், கர்பப்பை தகுந்த காரணங்களுக்காக அகற்றப்படுவதால் நல்லதே. டோட்டல் ஹிஸ்ட்ரக்டாமி...- கர்பப்பை, ஓவரிஸ், ஃபெலோப்பியன் குழாய்கள், செர்விக்ஸ் எல்லாமே அகற்றப்பட்டும் நல்ல நிலையில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்.

   இதில் முக்கியம் என்னவென்றால், மருத்துவர் சொல்லுவதை பலரும் அனுசரிக்காமல் இருப்பது. அதாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு. இது பெரும்பாலும் பெண்கள் செய்வதுதான். அதாவது அறுவை சிகிச்சை செய்த பிறகு, ஹார்மோனல் பிரச்ச்னைகள் வரலாம். சிலருக்கு உணர்வுகளில், மனதளவில் பாதிப்பு வரலாம். அதை நிவர்த்தி செய்யத்தான் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், மனதை நல்ல முறையில் வைத்துக் கொள்ளவும், உடல் நிலை நல்ல முறையில் இருக்கவும், பல உடற் பயிற்சிகள், நடைப் பயிற்சி, யோகா, தியானம், மனதை பல நல்ல வழிகளில் உற்சாகமாகவும், சோர்வு தரும் வேலைகள் அல்லாமல் மனதிற்குப் பிடித்த வகையிலான வேலைகளைச் செய்தல், தனக்கென நேரம் ஒதுக்கி பிடித்தவற்றைச் செய்தல், உணவுக் கட்டுப்பாடு என்று வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

   இது அறுவை சிகிச்சை என்றில்லை, 40 வயதைக் கடந்ததும் பெண்களுக்கு ஏற்படும் மெனொபாஸ் என்பதற்கும் சொல்லப்படுவதுதான்...

   ஆனால் நம் நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் மேற் சொன்னவற்றை மேற்கொள்வதில்லை. எந்த ஒரு பிரச்சனைக்கும் இரு பக்கங்கள் உண்டு. தீர்வும் உண்டு. நாம் அந்தத் தீர்வை அடைவதற்கான வழி முறைகலை அலட்சியப் படுத்துவதால் தான் பல உடல் நலக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றொம். நீக்கப்படுவதை, நீக்கப்படுவதால் பிரச்சனை என்று நோக்குவதை விட, அந்தப் பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பதை நாம் அறிந்து கடைப் பிடித்தால் தவிர்த்துவிடலாம். அலட்சியப் போக்கு, விழிப்புணர்வு இல்லாமை இவைதான் பெரும்பாலான உடல் நலக் கோளாறுகளுக்குக் காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து நண்பரே!
   --கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வழக்கம் போல் மிக விரிவான, தெளிவான, தீர்க்கமான பின்னூட்டம். பல விஷயங்களை புரிய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி கீதா மேடம்!

    நீக்கு
  11. வேதனை தரும் வழிதான் ,தவறான முடிவுக்கு வர காரணம் ,ஒரு உறுப்பை இழப்பதை விட மாற்று மருத்துவம் நல்லதே !

   பதிலளிநீக்கு
  12. மிகவும் ஆபத்தான ஒரு பதிவு இது. ஒருவரது கருப்பையை காப்பாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒருவரது உயிருக்கே அது ஆபத்து தருமானால் அதை நீக்குவது தான் மிகச் சரியானது. கருப்பை ஏன் வேண்டும் பிள்ளை பெறத் தான். ஆக, பிள்ளை பெறும் பிராயத்தில் இருக்கின்ற பெண்களுக்கு அது மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப் பிராயம் கடந்தோருக்கு அதன் தேவை இல்லாமல் போய்விடும். கருப்பை சிதைவுக்கு தற்கால வாழ்வியல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே முக்கிய காரணம் அதிக பூச்சிக்கொல்லி இடப்பட்டு விளைவிக்கப் படும் உணவுப் பொருட்கள், கொழுப்புள்ள, மாவுச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் கூடவே சரியான உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, தவறான பாலியல் பழக்க வழக்கங்கள், தொற்று நோய்கள், மற்றும் மரபியல் நோய்கள், ஒரே ரத்த உறவில் மணமாகி பிள்ளை பெறுவதால் ஏற்படும் மரபணுச் சிக்கல்கள், சுற்றுச்சூழல் கேடுகளால் உண்டாகும் சிக்கல்கள் எனப் பலவற்றால் கருப்பைச் சிதைவு ஏற்படுகின்றன.

   கருப்பைச் சிதைவு ஏற்பட்டாலோ, அதில் புற்றுநோய் உண்டாக்கும் கட்டிகள் தோன்றினாலோ அதனால் ஏனைய உறுப்புக்களோ, உயிராபத்து உண்டாகும் எனில் அதை நீக்குவது மட்டுமே சரியானது. இதனால் உடல் பக்க விளைவுகள், உளவியல் தாக்கம் ஏற்படுவது என்பது உண்மை தான். அதற்கு மருத்துவர்கள் காரணமில்லையே நமது வாழ்க்கை முறையையும், வாழ்விடங்களையும் கெடுத்துக் கொண்டே நாமே முழுப் பொறுப்பு. சில மருத்துவர்கள் கருப்பையை நீக்க நிர்பந்தித்தால் அதில் சந்தேகம் உண்டானால் மேலும் இரண்டு, மூன்று மருத்துவரிடம் அணுகி மாற்றுக் கருத்தைப் பெறுவது தான் புத்திசாலித்தனமே ஒழிய கருப்பையை நீக்க மாட்டேன் என அடம்பிடிப்பதல்ல.

   கருப்பையை உரிய காலத்தில் நீக்காமல் நோய் முற்றி மரணத்தைத் தழுவியவர்கள் ஏராளம் பேர் உண்டு. பக்க விளைவுகளோடு உயிர்வாழ்வதை விட உயிர்த்துறப்பது மேலானதாகுமா என்ன? மருத்துவம் சார்ந்த பதிவுகளில் தன்னலக் கருத்துக்களை திணித்து எழுதுவது ஆபத்தான ஒன்றாகும் சகோதரரே. ஏனெனில் ஒவ்வொரு தனிநபரது உடல்நலமும், வாழ்வியல் சூழலும் வெவ்வேறானவை. இதனால் சிலர் தவறான முடிகளை எடுத்துக் கொள்வதால் உயிராபத்துக் கூட நேரிடலாம்.

   பெண்களுக்கு கருப்பை என்பது மிகவும் உணர்வுப் பூர்வமான விடயம், இதைக் கருத்தில் கொள்வது மிக மிக அவசியம். அதே சமயம் இன்ன பிற உடல்நலத்தையும் கருத்தில் எடுப்பது மிக முக்கியம். பிள்ளை பெற்ற பின் கருப்பையை நீக்க நேரிட்டால் நீக்கிக் கொள்வது நல்லதே. பிள்ளைப் பேறு பிராயத்தில் உள்ளோர் கொஞ்சம் நிதானித்து முடிவு செய்து கொள்ளலாம். அதுவும் உடல்நலக்கேட்டை கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

   ஒருவரது உடல் மாற்றமும், உடல் உறுப்பு இழப்பும் எப்போதும் நிகழவல்லது. இயற்கை நமை படைக்கும் போது அவ்வாறன சூழலை எதிர்கொள்ளவல்ல ஒரு மனோபாவத்தை நமக்குள் விதைத்திருக்கின்றது. உடல் மாறும் தன்மையது, நெகிழ்வுத் தன்மை மிக்கது. குழந்தையாக பிறந்த எவரும் குழந்தையாக இருப்பதில்லை வளர்ந்து பருவம் எய்து மூப்படைந்து இறக்கின்றோம். ஆக, உடலியல் மாற்றமும், இழப்பும் எதார்த்தமான ஒன்றே. ஆனால் உடல் உறுப்பை நீக்கும் போது சமூக அழுத்தமும், அபரிமிதமான கருத்துத் துளைத்தலும் மன உளைச்சலை தந்துவிடுகின்றது.

   புற்றுநோயால் முடிகள் கொழிந்து மொட்டையாகிய பின்னரும் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டு மீண்டோர் பலரும் உண்டு. அதன் உளவியல் தாக்கத்தை விட கருப்பை நீக்கல் தரும் உளவியல் தாக்கம் மிகக் குறைவே. கைகால் இழந்தாலும், கண்கள் இழந்தாலும், கருப்பை இழந்தாலும் மனிதனால் வாழ இயலும். அதன் தாக்கத்தில் இருந்து மன உளைச்சலில் இருந்து உற்றார், உறவினர், சமூக அக்கறையும் கவனிப்பும் ஊக்கமும் தந்தால் அதில் இருந்து மீண்டு விடலாம் என்பதே என் கருத்து.

   நன்றிகள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நண்பரே வணக்கம்!
    தங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்ட கருத்துக்கும் முதலில் நன்றி!
    தாங்கள் எனது பதிவை முழுமையாக படிக்கவில்லை, என்றே நினைக்கிறேன். நான் எந்த இடத்திலும் உயிரை விட உறுப்பு முக்கியம் என்று சொல்லவில்லை. இது ஆபத்தான பதிவல்ல. விழிப்புணர்வு பதிவு.

    கர்ப்பப்பை எடுக்கப்பட்ட பெண்களில் 65 % பெண்கள் நல்ல நிலையில் உள்ள உறுப்பை நீக்கியிருக்கிறார்கள். அதைதான் தவறு என்று சொல்லியுள்ளார்களே தவிர, குறைபாட்டோடு உள்ளவர்களை சொல்லவில்லை. indru மருத்துவர்கள் பலர் சேவை மனப்பான்மையில் இல்லை. பணம் பண்ணும் குறிக்கோளுடன்தான் இருக்கிறார்கள். அதனால் தவறான அறிவுரைகளை தருகிறார்கள் என்று ஆதாரப்பூர்வமான அறிக்கைகள் இருந்ததாலே. இதை எழுதினேன்.

    இதில் எங்கு குற்றம் கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் இது இன்றைக்கு மிக அவசியமான பதிவு என்பதில் சந்தேகமே இல்லை. இதை பத்திரிகையில் எழுதியபோது எங்களுக்கு முன்பே இப்படி மாற்று மருத்துவம் இருப்பது தெரியாமல் போனதே. இப்போது எங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்று துயரத்தோடு எழுதியிருந்தார்கள் அதுவே இதன் வலிமையை காட்டும்.

    நன்றி!

    நீக்கு
  13. It will be great if know more details about the various treatments available without operation

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்