• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், ஆகஸ்ட் 19, 2015

  இனி படுத்துக்கொண்டே தியேட்டரில் படம் பார்க்கலாம் ..!

  'அட போங்கப்பா, தியேட்டர்ல போய் யார் இரண்டரை மணி நேரம் உக்காந்து படம் பார்க்கறது. கொஞ்சம் ரிலாக்ஸா படுத்துட்டு பார்த்த எப்படியிருக்கும்.' நாம இப்படி யோசிக்கும் போது தியேட்டர்காரங்க யோசிக்க மாட்டாங்களா! யோசிச்சுட்டாங்க

  வீட்டுக்குள் தொலைக்காட்சி வந்தபின் நம் மக்கள் மனதில் தோன்றிய எண்ணம் இது. மேலும் நமது உடலும் சொகுசுக்கு பழகிவிட்டதன் வெளிப்பாடு.  இந்த மக்களின் பழக்கத்தை காசாக்க தியேட்டர்களும் முடிவு செய்துவிட்டன. உலகம் முழுவதும் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. கீழே படத்தில் உள்ளது லண்டனில் உள்ள எலக்ட்ரிக் தியேட்டர். எப்படியொரு வசதி பாருங்கள்.

  எலக்ட்ரிக் தியேட்டர் லண்டன்
  இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துக்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள 'பிரசாத் ஐமாக்ஸ்' ஏற்கனவே ஐந்து தியேட்டர்களை வைத்திருக்கிறது. இப்போது ஆறாவதாக ஸ்க்ரீன் 6 ஐமாக்ஸ் என்ற தியேட்டரின் முன் பாதி படுத்துக் கொண்டே படம் பார்க்கும் விதமாக அமைக்கப் படவுள்ளது. இப்படி படுத்துக்கொண்டு படம் பார்க்க கொஞ்சம் கட்டணம் அதிகம். அதாவது ரூ.1,500. 

  இந்த பிரசாத் ஐமாக்ஸ் தியேட்டர் ஒன்றில் நான் படம் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அதன் பெயர் 'பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன்'. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய திரை கொண்ட வரிசையில் இரண்டாவது தியேட்டர். இந்த ஸ்க்ரீனின் உயரம் 72 அடி அகலம் 95 அடி. பிரமாண்டமான திரையில் படம் பார்க்கவேண்டும் என்பதற்காகவே படத்திற்கு போனேன். அது ஒரு ஆங்கிலப் படம். டிக்கெட் விலையோ ரூ.450. 

  பிரசாத்ஸ் லார்ஜ் ஸ்க்ரீன்
  சில படங்கள் மட்டும்தான் திரை முழுவதும் தெரியும். மற்ற படங்கள் நாம் சாதரணமாக பார்க்கும் அளவிலே திரைக்கு நடுவே சற்று சிறியதாக தெரியும். ஆனால், நான் பார்த்த படம் திரை முழுவதும் தெரிந்தது. அதுவும் 12,000 வாட்ஸ் பவர் கொண்ட சக்தி வாய்ந்த ஒலியமைப்பு என்று படம் பார்ப்பதே மிகப் பிரமாண்டமான அனுபவமாக இருந்தது. 

  சிட்னி ஐமாக்ஸ் தியேட்டர்
  சரி, அப்படியென்றால் பெரிய திரை கொண்ட உலகின் முதல் தியேட்டர் எங்கிருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். அது இருப்பது ஆஸ்திரேலியா சிட்னியில். 97 அடி உயரமும் 123 அடி அகலமும் கொண்ட அந்த திரையில் படம் பார்ப்பதே தனி அனுபவம்தான். அதில் படம் பார்ப்பது இன்னும் பிரமாண்டமாக இருக்கும்.  

  படுத்துக்கொண்டே படம் பார்க்கக்கூடிய மேலும் சில தியேட்டர்கள்.  

  வெல்வெட் கிளாஸ் சினிமா, இந்தோனேஷியா 
  ரூப்டாப் சினிமா, லாஸ் ஏஞ்சலீஸ்
  பில்லோ சினிமா, லண்டன்
  பர்சியன் மியூசிக் ஹால், ஒலிம்பியா
  உலகில் உள்ள வேறு சில வித்தியசமான தியேட்டர்களுக்கும் நாம் போய் வருவோம். 

  ஜெர்மனியில் உள்ள இந்த தியேட்டர் சினிமாவுக்கும் நாடகத்திற்கும் பெயர் பெற்றது. பெரிய ஸ்டேடியத்தில் அமர்ந்து பெரும் கூட்டத்துடன் படம் பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கும். மொத்தம் 2,600 இருக்கைகள்.  உள் அலங்காரத்தில் சிறப்பான இடத்தில் இருக்கும் தியேட்டர்களில் இதுவும் ஒன்று.
  ஹாட்டப் சினிமா, மான்செஸ்டர் 

  நம்மூரில் ரூப்டாப் ரெஸ்டாரன்ட் பற்றிதான் தெரியும். ஆனால் இங்கு ரூப்டாப் சினிமாவே உள்ளது, மொட்டை மாடியில் வட்ட வடிவத்தில் தொட்டிகள் நிறைய இருக்கும். அதில் கதகதப்பான வெந்நீர் நிரப்பப்பட்டிருக்கும். அதற்குள் அமர்ந்தபடி, மது அருந்திக்கொண்டே, பிடித்த துணையோடு படம் பார்க்காலாம். நீச்சல் உடை மட்டுமே அனுமதி. அதுவும் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவரவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். 

  ஹாட்டப் சினிமா, மான்செஸ்டர் 
  மனிதனின் சொகுசும் ரசனையும் எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது. ஆனால், இதில் எங்கு சென்றாலும் நம் பர்ஸ் பெரும் வீக்கமாக இருக்க வேண்டும். 

  * * * * *

  24 கருத்துகள்:

  1. போகும்போது பர்ஸ் பெரும் வீக்கமாக இருக்கும்;
   வரும்போது இளைத்துப் போய் பெரும் ஏக்கமாக இருக்கும்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மையாக சொன்னீர்கள் வீக்கமும் ஏக்கமும் தவிர்க்கமுடியாதது. வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  2. நல்ல ஐடியா கொடுத்தீர்கள் நண்பரே பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் உடனே தேவகோட்டையில் வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்
   தமிழ் மணம் 2
   நண்பரே நலம்தானே....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்படின்னா இப்பவே எனக்கொரு டிக்கெட், அட்வான்ஸ் புக்கிங்கா..!
    நலமே நண்பரே! வருகைக்கு நன்றி!

    நீக்கு
  3. ஆகா
   இப்படியும் தியேட்டர்கள் உண்டா?
   வியப்பாக இருக்கிறது நண்பரே
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இப்படி பல அதிசயங்கள் உலகில் இருக்கிறது நண்பரே!

    நீக்கு
  4. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பிரமான்டமான அரங்குகளின் அணிவகுப்பு தங்களின் தேடல் ரசனைமிகுந்தது.
   ஆனாலும் இறுதியாக சொன்னது போல காசை விரயமாக்கும் முயற்சி இதெல்லாம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான், காசை என்ன செய்வது என்று தெரியாதவர்கள்தான் (நம்ம கில்லர்ஜி மாதிரி) இங்கெல்லாம் சென்று செலவழிக்க முடியும்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  5. படுத்துக்கொண்டே திரைப்படம் பார்க்கும் வசதிகள் கொண்ட திரை அரங்குகள் பற்றிய தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  6. இதனை அறிவியல் வளர்ச்சி என்பதா, பொழுதுபோக்கின் மாறுபட்ட கோணம் என்பதா, மனிதனின் அதீத சிந்தனை என்பதா எனத் தெரியவில்லை. எது எப்படியாயினும் இச்செய்தி அதிசயமாக உள்ளது. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எக்கச்சக்கமாக பணம் வந்தபின்னே தோன்றும் சிந்தனை என்று சொல்லலாம்.
    வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  7. துளசிதரன்: அட எப்படி எல்லாம் தியேட்டர்கள் வருகின்றன மக்களைக் கவர....ம்ம்ம் நம்ம பர்சில் கவனம் தேவைதான்....

   கீதா : ஆம்! நண்பரே! இவை எல்லாம் நேரில் பார்த்ததில்லை ஆனால் விவரங்கள் நம்ம மக்கள் அங்கங்க இருக்கறதுனால தெரியவரும்...ஹைதராபாத் தியேட்டர் பற்றி மகனின் நண்பர் சொல்ல ஆசைதான் ஆனால் டிக்கெட் விலை கேட்டதும் பல ஸ்டெப்புகள் பேக் அடித்துவிட்டோம்..

   கலிஃபோர்னியாவில் இருந்த போதும்..லாஸெஞ்சல்ஸ் தியேட்டர் பார்த்ததில்லை....ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் டெக் ம்யூசியத்தில் இருந்த ஐமாக்ஸில் 3 டி எஃபக்டுடன் படம் பார்த்தோம் நல்ல அனுபவம்...அதே போல சென்னையில் ப்ரார்த்தனா தியேட்டர் திறந்தவெளி அரங்கம்தான்...உங்களுக்கும் தெரிந்திருக்கும்....அதுவும் நல்ல அனுபவம்...விரலுக்கு ஏத்த வீக்கம் என்பதால் ஹஹஹ்

   பலதகவல்களை அழகாகப் பகிர்கின்றீர்கள்...அருமையான பத்திரிகையாளர்...நீங்கள்...
   அறிந்தாலும் எங்களுக்கு அதைப் பகிரத் தோன்றவில்லை பாருங்கள்.....ஹஹஹ்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இந்த தியேட்டரில் ஒரு பார்ப்பதற்கு என் ஒருவனுக்கு மட்டும் மொத்தமாக ஆயிரம் ரூபாய் செலவானது. எப்படி என்கிறீர்களா? படத்துக்கான டிக்கெட் விலை ரூ.450, இடைவேளையில் சாப்பிட்ட ஐஸ்கிரீம் 150, (அதுதான் அங்கு குறைந்த விலை) படம் முடிந்த பின் பஸ் கிடைக்கவில்லை. அங்கிருந்து நான் தங்கியிருந்த ஹோட்டல் மிகத் தொலைவு. டாக்ஸிக்கு கட்டணம் ஒரு 400 ரூபாய். ஒரு படம் பார்க்க ஆயிரம் ரூபாய் என்பது அதிகம் தான். இப்படிதான் நம்மை கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் இங்கு வரும் மக்கள் யாரும் அதைப் பற்றி கவலைபடுவதில்லை. வளைத்து வாங்குகிறார்கள். எல்லோரும் பணம் அச்சடிக்கும் மெஷின் வைத்திருப்பார்கள் போல.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   2. யம்மாடியோவ்! ம்ம்ம் ஆனால் ஒரு முறையேனும் அது போன்ற தியேட்டர் அனுபவம் பெற ஆசைதான்...ம்ம்ம்ம்

    நீக்கு
   3. கட்டாயம் அது தரும் பரவசம் தனிதான். என்ன இது எல்லாமே சாமானிய மக்களுக்கு எட்டாத இடத்தில் இருக்கிறது என்பதுதான் வேதனை!

    நீக்கு
  8. மிக சுவாரஸ்யமான தகவல்கள். நான் படம் பார்க்கத் தியேட்டருக்குச் சென்று பதினைந்து வருடங்களாகின்றன.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்போது கட்டாயம் போய் பாருங்கள் நண்பரே! அன்றைக்கும் இன்றைக்கும் தியேட்டர்கள் நிறைய மாறியிருக்கின்றன. தெளிவான படம், துல்லியமான ஒலி, தூய்மையான பராமரிப்பு, அசத்தலான அலங்காரம் என்று தியேட்டர்கள் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவமும் கட்டாயம் வேண்டும். இப்போதைக்கு 'பாகுபலி' தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். அந்த பிரமாண்டத்தை டி.வி.யில் பார்த்தால் நன்றாக இருக்காது. இந்த படம் கமல்ஹாசனின் மனதைக்கூட மாற்றியிருக்கிறது. சரித்திரப் படங்கள் வெற்றியடையாது என்ற கூற்றை உடைத்தெறிந்திருக்கிறது. கமலின் 'மருதநாயகம்' கூட மீண்டும் பிறப்பெடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

    நீக்கு
  9. சில படத்துக்குப் போய் மாட்டிக்கொண்டால் சுகமாகத் தூங்கி விடலாம்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதற்காகத்தான் இப்படியொரு ஏற்பாடு போலும்..
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  10. இத்தனை வித்தியாசமாக சிந்தித்து ரசனையுடன் வடிவமைத்தவர்களை பாராட்ட வேண்டும்! சொகுசு தேவைப்படின் விலை அதிகம் கொடுக்கத்தான் நேரிடும்! அழகிய படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மனிதனின் ரசனைதான் பல அழகிய கலைகளுக்கு காரணம். வழிபாட்டு தளங்கள் எல்லாம் கலைகளின் பொக்கிஷமாக திகழ்வதற்கும் இந்த ரசனைதான் காரணம்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்