Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வலைப்பதிவர்களே வாருங்கள் ஊமையன் கோட்டைக்கு..!



விடுமுறை என்றால் குடும்பங்களின் கும்மாளமும், கல்லூரி நாட்கள் என்றால் காதலர்களின் கொண்டாட்டமும் களைக்கட்டும் இடம் திருமயம் மலைக்கோட்டை. ஜோடி ஜோடியாக இளைஞர்களை பார்க்கக்கூடிய இடம். சிரிப்பாகவும், ஜாலியாகவும், வேதனையோடும், கண்ணீரோடும் பலவித உணர்ச்சிக் குவியலில் காதலர்களை இங்கு காணமுடியும்.


புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை ஏரியாகாரர்களுக்கு பொழுது போக்கவும், காதல் செய்யவும் இருக்கும் ஒரே சாய்ஸ் இந்த கோட்டைதான். திருமயம் ஒரு குட்டி ஊர்தான். ஆனால், அதற்குள் ஏகப்பட்ட பாரம்பரிய வரலாறுகளும் கலையம்சங்களும் கொட்டிக் கிடக்கின்றன.




நீங்கள் ஆன்மிகவாதி என்றால் பாக்கியவான்தான். ஒரு பக்கம் சிவனையும் ஒரு பக்கம் திருமாலையும் மலையில் குடைந்து வைத்திருக்கிறார்கள். அதுவும் பிரமாண்டமாக.. சொல்லப்போனால் ஸ்ரீரங்கரை விட இவர் பெரியவர். அளவிலும் வயதிலும். அப்புறமென்ன  திருவடியே சரணம் என்று சரணடைய வேண்டியதுதானே. 

கோட்டை முனிஸ்வரர்

நீங்கள் கலைகளில் ஆர்வம் கொண்டவர் என்றால் உங்களுக்காகவே சத்தியமூர்த்தி கோயிலில் ஏராளமான சிற்பங்கள் காத்துக் கொண்டு நிற்கின்றன. நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


நீங்கள் வரலாற்று பிரியர் என்றால் கேட்கவே வேண்டாம். கோட்டையின் ஒவ்வொரு கல்லிலும் ஓராயிரம் வரலாறு ஒளிந்து கொண்டிருக்கிறது. தோண்ட தோண்ட இன்னும் புதுப் புது சரித்திரம் வந்து கொண்டே இருக்கும்.






நீங்கள் பருவ வயதில் நிற்பவர் என்றால் உங்கள் துணையோடு தனிமையில் இருக்க, தோளில் சாய்ந்துக் கொள்ள, மடியில் முகம் புதைத்துக் கொள்ள, இண்டு இடுக்குகள் ஏராளமாய் இந்தக் கோட்டையில் உள்ளன. 




சேதுபதி மன்னர்களின் வட திசை எல்லையாக இருந்த இடம் இது. எதிரிகளின் வரவை இங்கேயே முடித்துவிட, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அமைத்ததுதான் இந்தக் கோட்டை. கி.பி.1676-ல் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி கட்டியது. காவலுக்கு கட்டிய கோட்டை இன்று காதலர்கள் இளைப்பாறும் இடமாக மாறியிருக்கிறது





குடவரை சிவலிங்கம்

நுழைவாயில்

வட்ட வடிவிலான இந்த கோட்டை மற்ற பல கோட்டைகளைப் போலவே பல அடுக்குப் பாதுகாப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. எதிரிகளை தடுக்க முதலில் ஒரு அகழி கோட்டையைச் சுற்றி அமைத்துள்ளார்கள். அந்த அகழி முற்றிலும் சிதைந்து விட்டது. சில எச்சங்கள் மட்டும் அதன் அடையாளங்களை சுமந்து நிற்கின்றன. 
மலை உச்சியில் இருக்கும் பீரங்கி
அதற்கடுத்த சுற்றுச் சுவரும் சிதைந்து போயுள்ளது. ஆனால் உட்புற சுவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. மொத்தம் இப்படி ஏழு சுற்றுச்சுவர் இருந்ததாக தொல்லியல் துறை கூறுகிறது. ஆனால், அந்த சுவர்களெல்லாம் இப்போது இல்லை. நான்கு மதில் சுவர்கள் மட்டுமே இருக்கின்றன. 


நாற்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன.   மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்கள் காலத்து பீரங்கி ஒன்று  வைக்கப்பட்டுள்ளது. 



தூரத்தில் தெரியும் ரயிலின் அழகு
கொத்தளம் மேடை
நல்ல நிலையில் இருக்கும் உட்புற மதில் சுவர்

கோட்டைக்குள்ளே பாறையைக் குடைந்து அமைத்த சிவலிங்கம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதிலுள்ள ஆவுடை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக கோட்டைக்கு வெளியே கோட்டை பைரவர் கோயிலும் உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமாக இது இருக்கிறது.

கோட்டை பைரவர் கோயில்
சத்தியமூர்த்தி கோயில்
கோட்டையின் தெற்கே உள்ள திருமால் கோயிலும் சிவன் கோயிலும் கட்டாயம் பார்க்கவேண்டிய கலைப் பொக்கிஷங்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை இங்கு சிறைவைக்கப்பட்டு புதுக்கோட்டை தொண்டைமானால் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அதனால் இந்தக் கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்று மற்றொரு பெயரும் உண்டு. 

சிவன் குடைவரை கோயில்
புதுக்கோட்டை, திருப்பத்துரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்,  காரைக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் இந்தக் கோட்டை உள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதியும் உண்டு.

சிவன் குடைவரை கோயில்
புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்புக்கு வரும் வலைப்பதிவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் திருமயம் ஊமையன் கோட்டை.


38 கருத்துகள்

  1. ஒவ்வொருவரும் இடும் பகிர்வுகளை வாசிக்கும் போது புதுக்கோட்டை விழாவை காணமுடியாத வலி அதிகமாகின்றது என்றாவது ஒருநாள் கோட்டையை நோட்டம்மிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக வாருங்கள். முடிந்தால் வலைப்பதிவர் சந்திப்புக்குக் கூட வாருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நண்பரே!

      நீக்கு
  2. கட்டாயம் வருகிறோம் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. பலநூறு முறை திருமயம் வழியாகச் சென்றிருக்கின்றேன்
    ஆனாலும் கோட்டைக்குச் சென்றதில்லை
    சென்றே ஆக வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய இடம் நண்பரே! முடிந்தால் உங்கள் மாணவர்களையும் கல்விச் சுற்றுலாவாக அழைத்து வாருங்கள். அவர்களுக்கு இதன் வரலாறையும் சிறப்பையும் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதைத்தான் மாணவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர்களாகிய நாங்கள் சொன்னால் அவர்கள் நம்புவதில்லை. உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்கள். ஆசிரியர்களுக்குத்தான் அந்த கொடுப்பினை இருக்கிறது. அதனால் முடிந்த வரை நல்ல விஷயங்களை அவர்கள் மனதில் விதைத்துவிடுங்கள்!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. பலமுறை சென்றுள்ளேன். புதுக்கோட்டைப் பகுதியில் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இக்கோட்டையின் உள்ளே சில இடங்களைப் பார்க்கும்போது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் செஞ்சிக்கோட்டையை பார்க்கவில்லை. அதனால் அந்த விவரம் தெரியவில்லை.
      தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  6. திருமயம் வழியாக காரைக்குடி சென்றபோது இந்த கோட்டையை பார்க்கவேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால் பணி நிமித்தம் காரணமாக பார்க்க இயலவில்லை. அருமையாய் தகவல்களை அழகிய படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய இடம். அருமையான விளக்கத்தோடு அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  8. புதுக்கோட்டைக்கு முதல் நாள் வருபவர்கள் கண்டிப்பாக செல்வார்கள்...

    பதிலளிநீக்கு
  9. ஆஹா படத்தோட அருமையா சுத்தி காட்டி விட்டீர்கள்.....நன்றி.

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் விவரித்த பதிவு ஆகையால் சுவையாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  11. அழகான படங்களுடன் பகிர்ந்த விதம் பதிவர் சந்திப்பை இன்னும் ஆவலுடன் எதிர்நோக்க வைக்கிறது. சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நாளில் கட்டாயம் இந்த கோட்டையை பார்த்துவிடுங்கள். பரவசமான மனநிலை கிட்டும்.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  12. எங்கள் ஊரை எங்களை விட ரசித்து ரசித்துச் சுட்டுப் போட்டுவிட்டீர்கள் நன்றி அய்யா. நிற்க.
    திருமயம் என்பது திருமெய்யம் என்பதன் திரிபு. மெய்யர் என்பதுதான் அந்த இறைவனின் பழைய பெயர். “மெய்“யை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்டு கிராமத்துச் சிறுகோவில்கள் சுற்றுவட்டாரத்தில் நிறைய உண்டு. மெய்யைச் சத்தியமாக்கி மெய்யரை சத்தியமூர்த்தியாக்கி, திருமெய்யத்தை திருமயம் ஆக்கிவிட்டார்கள் அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாக விளக்கம் தந்துவிட்டீர்கள் அய்யா! திருமெய்யத்திற்கான அர்த்தம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அய்யா!
      விழாவினை சிறப்பாக திட்டமிட்டு அழகாக கொண்டு செல்கிறீர்கள். அது பற்றிய தங்களின் பதிவுகள் பரவசம் தருகின்றன. தங்களை நேரில் பார்க்கப் போவதே பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
      வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  13. கணக்கிலடங்கத அளவு இவ்வழியில் போய் இருக்கின்றேன் இறங்க வேண்டும் என்று நினைப்பேன் சந்தர்ப்பம் இல்லை அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும்
    பீரங்கியில் நம்மவர்கள் எழுதி இருப்பது ஆபாச வார்த்தைகளாகத்தான் இருக்கும் இந்நிலை என்று மாறுமோ ?
    தமிழ் மணம் 88

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள் கில்லர்ஜி! உங்கள் பாதம் படாத இடமும் உலகில் இருக்கிறதா? ஆச்சரியம்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  14. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்..... இம்முறை சந்திப்பிற்கு வர இயலாத நிலை. அடுத்த பயணத்திலாவது இவ்விடங்களுக்குச் செல்ல வேண்டும்.

    தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  15. எங்க என்னுடைய கருத்து????
    ஆஹா அத திரும்ப சொல்ல மாட்டேன், அருமையான இடம். நல்ல பகிர்வு, புதுக்கோட்டை விழா அழைப்பும். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அகலத்திறந்த கண்களோடு வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்!

    இத்தனை சிறப்புகள் நிறைந்த ஊரை
    என்று எம் ஊனக் கண்களால் காணப் போகின்றோமோ
    என ஏங்க வைத்துவிட்டீர்கள்!..

    அருமையான படங்களும் பதிவும்!
    உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் காண வாழ்த்துக்கள்!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  17. அழகான தகவல்கள். சென்றிருக்கின்றோம். அது திருமெய்யம் என்று நினைக்கின்றோம்.
    எல்லா வைணவக் கோயில்களும் "திரு" என்றுதான் இருக்கும். வைணவத் தமிழில்தான் அந்த திரு என்று சொல்லப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது...வைணவத் தமிழில் எல்லா சொற்களிலுமே திரு என்று ஆரம்பிக்கும். பெரும்பாலும். அவர்களின் "பரிபாஷையில்" திரு என்றால் இலக்குமி. திருமாலின் மார்பில் உறைந்திருப்பவள் இலக்குமி...திரு...என்பதால் இல்லை என்றால் ஸ்ரீ என்று வரும்.

    “மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
    கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
    மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
    கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.” - பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் பாடியிருப்பது. இது திருமெய்யம் ல் உள்ள பெருமாள் பெயர் திருமெய்யன் அதனால் அப்பெயர் என்று சொல்லப்படுகின்றது. இப்போது திருமெயம்/திருமயம் என்று மருவிஉள்ளது...( டாக்டர் ர.பி.சேதுபிள்ளை, புதுகோட்டை கல்வெட்டுக்கள் எண் 340, காலம் 1256).

    படங்கள் மிக அழகு...நண்பரே!

    கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..! கல்வெட்டு ஆதாரத்தோடு அழகான கருத்து. ஆங்கிலத்தில்தான் அசத்துகிறீர்கள் என்றால் தமிழ் அதைவிட அசத்தலாக இருக்கிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை