• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஜனவரி 31, 2016

  இதயத்தில் ஓட்டை ஏற்படுமா?


  சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு 'கேன்சர்' இருப்பதாக சொல்வார்கள். இல்லையென்றால் 'இதயத்தில் ஓட்டை' இருப்பதாக காட்டுவார்கள். உண்மையில் இதயத்தில் ஓட்டை ஏற்படுமா? என்ற கேள்வியோடு டாக்டரிடம் சென்றால், அவர் அது ஓட்டை இல்லை. முழுமையடையாத சுவர் என்கிறார்.


  தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே குழந்தைக்கு இதயம் உருவாகிவிடுகிறது. அதுவும் முதல் மூன்று மாதங்களிலேயே இதயம் உருப்பெறும். இந்த இதயம் ஒரு அறையை கொண்டதாகவே இருக்கும். படிப்படியாக இதயம் வளர வளர தனித்தனியாக குறுக்குச் சுவர்கள் உருவாகி நான்கு அறைகளாக பிரிகின்றன. இவற்றில் இரண்டு அறைகளுக்கு இடையேயான தடுப்புச் சுவர் முழுமை பெறாமல் போய்விடுவதைத்தான் 'இதயத்தில் ஓட்டை' என்கிறார்கள்.

  இதனால் ஏற்படும் விளைவுகள் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியில் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலவே இவர்களும் செயல்படுகிறார்கள். ஆனால் 30, 40 வயது எட்டும்போது இந்த குறை தன் கைவரிசையை காட்டுகிறது. நுரையீரல் ரத்த அழுத்தம் அதிகமாவதுதான் அபாயத்தின் முதல் தொடக்கம். இந்த நுரையீரல் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை பெண்களுக்கு பிரசவம் கூட எந்த வித சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துவிடும்.

  இதயத்தில் ரத்த ஓட்டம் என்பது இதயத்தில் மேல்பக்கம் வலதுபுறத்தில் உள்ள 'ஏட்ரியம்' என்ற அறைக்கு வந்து அங்கிருந்த இதயத்தின் கீழ்பக்கம் உள்ள 'வென்ட்ரிக்கிள்' வழியாக நுரையீரலுக்கு போகிறது. நுரையீரலில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்தின் இடது பக்க ஏட்ரியம் வழியாக இடது வென்ட்ரிகளுக்கு அனுப்பப்பட்டு உடல் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதுதான் ரத்த ஓட்ட அமைப்பு.

  ஆனால் இதயத்தில் ஓட்டை உள்ளவர்களுக்கு நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு வரும் ரத்தம் இடது ஏட்ரியத்தில் இருந்து ஓட்டை வழியாக வலது ஏட்ரியத்துக்கு வந்து மீண்டும் நுரையீரலுக்கு செல்கிறது. இதனால் நுரையீரலுக்கு சுத்திகரிப்புக்காக சாதாரணமாக வரும் ரத்தத்தின் அளவைவிட அதிகமாகிறது. இதனால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அதிக அளவு ரத்தத்தை சுத்திகரித்துக் கொண்டே இருப்பதால் நுரையீரலில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அழுத்தம் 30 அல்லது 40 வயதில் உச்சத்தை அடைகிறது. ஏனெனில் நுரையீரலுக்கு ரத்த அழுத்தம் படிப்படியாக உயர்ந்து மிக அதிக அளவை எட்டும்போது ரத்தம் திருப்பி அனுப்பப்படுகிறது. அதாவது வழக்கமான திசையில் ரத்த ஓட்டம் நிகழ்வது சிரமமாகி எதிரான திசையில் ஓட ஆரம்பிக்கிறது. இதுதான் விபரீதத்தின் உச்சக்கட்டம். இதன் விளைவாக சுத்திகரிக்கப்படாத அசுத்த ரத்தம் உடலின் பாகங்களுக்கு அனுப்பப்படுவதால் பலவிதமான உடல் உபாதைகள் நேர ஆரம்பிக்கின்றன.


  இதை மூன்று வயதிலேயே எளிதான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். வயதானால் செய்வது சிரமம். வயதானவர்கள் என்றால் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்கிறார்கள். இப்போது நமது நகரங்களிலே இதுபோன்ற சிகிச்சை வந்து விட்டது, ஓர் ஆறுதலான விஷயம்.
  31 கருத்துகள்:

  1. இதயத்தில் ஓட்டை என்பார்கள் ,இல்லையென்றால் ,வாயில் நுழையாத நோயின் பெயரைச் சொல்லி ,தலையில் மிளகாய் அரைப்பதில் சினிமாவினர் கெட்டிகாரர்களாச்சே:)

   பதிலளிநீக்கு
  2. நல்லதொரு மருத்துவத் தகவல். நீங்கள் இணைத்திருக்கும் படங்களில் ஒன்றை உங்கள் அனுமதியோடு ( !! ) என்னுடைய ஃபேஸ்புக் பதிவு ஒன்றுக்கு உபயோகிக்க எடுத்துக் கொள்கிறேன்!

   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி !

    நீக்கு
  3. சிறப்பான தகவல்கள். அப்படி இருக்கும் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள்....

   பதிலளிநீக்கு
  4. எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவத் தகவல் நண்பரே! அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி!

   கீதா: Atrial Septal Defects (ASDs) and Ventricular Septal Defects (VSDs) நீங்கள் அழகாகத் தமிழில் சொல்லிவிட்டீர்கள். பிறக்கும் குழந்தைகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு பெரும்பாலும் தெரிந்துவிடுகின்றது 2 மாதங்களுக்குள். ஹார்ட் மர்மர் என்பதும் ஏற்படுவதால். இதயத் துடிப்பின் சாதாரண ஒலியுடன் கூடுதல் வித்தியாசமான ஒலியும் கேட்பது. இந்த வித்தியாசமான ஒலி இதனால் மட்டும் என்று சொல்வதற்கில்லை என்றாலும். முதல் ஏஎஸ்டியில் பெரிதாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அறுவைசிகிச்சை 3 வயதிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் இல்லையேல் பல இதயப்பிரச்சனைகள் வர வாய்ப்புண்டுதான். சிறிதாக இருந்தால் அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே தானாகவே வளர்ச்சியடைந்து சரியாகும் வாய்ப்புண்டு. அது சரியாகும் வரை, எளிதில் களைப்படைதல், விளையாடினால் அதீத மூச்சிரைப்பு, இன்னும் சில இங்கு விவரிக்கவில்லை ஏற்பட வாய்ப்புண்டு. ஹார்ட் பீட்டை வைத்துக் கண்டுபிடித்துவிடமுடியும். எங்கள் வீட்டில் உறவினரின் குழந்தைக்கு இருந்து அறுவைச்சிகிச்சை இல்லாமல் சரியாகிற்று. இது விலங்குகளிலும் ஏற்படுவதுண்டு. நல்லதகவல் சகோ. மருத்துவ வார்த்தைகளைத் தமிழில் எழுத மெனக்கெட வேண்டியுள்ளதால் பல தகவல்களை எழுத முடியாமல் போகின்றது. அவற்றை எல்லாம் நீங்கள் எழுதுவது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. வாழ்த்துகள் பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. விரிவான விளக்கமான கருத்துரைக்கு நன்றி நண்பர்களே!

    நீக்கு
  5. விளக்கமான மருத்துவப் பதிவு! அனேவரும் படிக்க வேண்டும்!

   பதிலளிநீக்கு
  6. இதயத்தைப் பற்றி பிரமிப்பான தகவல்தான் நண்பரே
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அய்யா,

   ‘இதயத்தில் ஓட்டை...’ என்று சொல்லப்படுவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படி அறிவியல் பார்வையுடன் விளக்கியதற்கு நன்றி.

   த.ம. 9

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  8. என் மகளின்இதயத்தில் ஓட்டை இருக்கிறது
   என்று ஒன்றிற்கு பல மருத்துவர்கள் கூற
   நான் அலைந்தது வேதனையான நிகழ்வு நண்பரே
   சென்னையில் ஃப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவ மனையில்
   அறுவை சிகிச்சை அரங்கிற்கும் அழைத்துச் செல்லப் பட்டு
   ஓட்டையேஇல்லை என்று திருப்பி அனுப்பப் பட்டார்
   அந்நாள் நினைவுகள் மீள எழுகின்றன நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மருத்துவர்களுக்கு முழுமையான மருத்துவ அறிவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இப்படிதான் பலருக்கும் பல அறுவை சிகிச்சைகளை தேவையில்லாமல் செய்து விடுகிறார்கள்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  9. ஒரு நல்ல, அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பகிர்வு. அறியாமல் நானும் இதயத்தில் ஓட்டை என்றே நினைத்துக்கொள்வேன். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  10. இவ்வாறு தான் எண்ணி இருந்தோம். நல்ல தகவல் சகோ நன்றி
   தம 11

   பதிலளிநீக்கு
  11. இவ்வாறு தான் எண்ணி இருந்தோம். நல்ல தகவல் சகோ நன்றி
   தம 11

   பதிலளிநீக்கு
  12. அனைவரும் அவசியம் தெரிந்துக்கொள்ள உதவும் பதிவு, நன்றி சகோ

   பதிலளிநீக்கு
  13. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல் இது. பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்