• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், பிப்ரவரி 17, 2016

  கடல் நடுவே ஒரு செயற்கை விமான நிலையம்


  தையுமே துணிந்து செய்வதில் ஜப்பானியர்களை அடித்துக்கொள்ள முடியாது. மிகச்சிறிய நாடான அங்கு எப்போதுமே மக்கள் நெருக்கம் நிறைந்தே இருக்கும். நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு கட்டடத்தைக் கட்டி விடுவார்கள். விளைவு புதிதாக ஏதாவது திட்டங்களை செயல்படுத்துவது என்றால் காலி இடம் எங்கும் இல்லை. 

  ஜப்பான் நாட்டிலுள்ள ஒசாகா என்ற இடத்தில் விமான நிலையம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அங்கு நிலம் இல்லை. அதனால், கடலுக்கு நடுவில் விமான நிலையம் அமைக்க முடிவெடுத்தார்கள்.

  கான்சாய் விமான நிலையம்
  உலகில் கடலில் உருவாக்கிய முதல் செயற்கை விமான நிலையம் இதுதான். நிலவில் இருந்து பூமியைப் பார்த்தால் மனிதனால் உருவாக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவர் தெளிவாக ஒரு கோடு போல் தெரியும். அதற்கடுத்து தெரிவது கான்சாய் ஏர்போர்டுதான்.

  இந்த விமான நிலையத்திற்கான திட்டம் 1960-ல் தொடங்கியது. ஆனால், திட்டம் செயல்பட தொடங்கியது மிக தாமதமாக தான். 1987-ல் விமான நிலைய கட்டுமானம் தொடங்கப்பட்டது. முதலில் கடலுக்கு நடுவே 4 கி.மீ. நீளமும் ஒரு கி.மீ. அகலமும் கொண்ட மிகப் பெரிய சுற்றுச்சுவரை எழுப்பினார்கள். அந்த சுவற்றுக்கு நடுவே இதற்கென்று தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான 48,000 கான்கிரீட் செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இடையிடையே பாறைகளையும் போட்டு நிரப்பினார்கள்.


  இதற்காக மூன்று மலைகளை தரைமட்டாமாக்கி 2.10 கோடி கியூபிக் மீட்டர் பாறைகளை 80 கப்பல்களில் டிரிப் அடித்து கொண்டு வந்து சேர்த்தார்கள். புயலும் பூகம்பமும் ஒன்று கூடி கும்மாளம் போடும் இந்தக் கடலில் இப்படியொரு பிரமாண்டமான விமானநிலையம் கட்டுவது சாதாரண விஷயமில்லை. ஆனாலும் கட்டி முடித்தார்கள்.


  ஜப்பானியர்கள் 10,000 பேரின் கடின உழைப்பில், 3 வருட காலக்கட்டத்தில், 1,300 ஏக்கர் நிலப்பரப்பை கடலில் செயற்கையாக உருவாக்கி வியக்க வைத்தார்கள். அதன் மீது 4 கி.மீ. நீளத்துக்கு ரன்வே அமைத்தார்கள்.


  அதோடு நின்றுவிட வில்லை. உலகில் மிக நீளமான டெர்மினல் கட்டடத்தையும் உருவாக்கினார்கள். 4 மாடி கொண்ட இந்தக் கட்டடம் 1.7 கி.மீ. நீளம் கொண்டது. இதில்தான் டிக்கெட் கொடுக்கும் இடம், இமிகிரேஷன் சென்டர் எல்லாம் உள்ளது.


  கடற்கரையில் இருந்து 3.7 கி.மீ. தூரத்தில் கடலில் இருக்கும் இந்த செயற்கைத் தீவிற்கு கரையில் இருந்து ரயில் பாதையும் அதற்கு மேலே நான்குவழிச் சாலையும் கொண்ட பாலமாக அமைத்திருக்கிறார்கள்.

  1994, செப்டம்பர் 4-ல் கான்சாய் விமான நிலையம் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டது. திறந்த நான்கு மாதத்தில் 6.7 ரிக்டர் அளவில் பதிவான மிகப் பெரிய பூகம்பம் வந்து இந்த விமான நிலையத்தை அசைத்துப் பார்த்தது. அதில் கொஞ்சம் சேதமானது. 5,000 மக்களைக் கொன்றது. 1998-ல் ஒரு புயல் 200 கி.மீ. வேகத்தில் வந்து இந்த விமான நிலையத்தை உரசிப் போனது. அப்போதும் அதை தாங்கிக் கொண்டு கம்பீரமாக நின்றது இந்த விமான நிலையம்.

  கான்சாய் ரயில் நிலையம்
  இப்படி பல பெருமைகள் இருந்தாலும் ஜப்பானியர்கள் இதை 'அழகான நஷ்டம்' என்றே அழைக்கிறார்கள். இதைக் கட்டி முடிக்க 72,000 கோடி ரூபாய் செலவானது. வருடத்திற்கு 30 கோடி ரூபாய் வெறும் வட்டியாக மட்டும் போகிறது. இதனை ஈடு கட்டுவதற்காக விமானங்களின் இறங்குவதற்கான கட்டணங்களை மிக அதிகமாக வைத்திருக்கிறது.

  ஒரு போயிங் 737 விமானம் இங்கு வந்து இறங்கி ஏற 3,37,500 ரூபாயை கட்டணமாக கொடுக்க வேண்டும். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையங்களின் வரிசையில் கான்சாய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.


  இதில் பெரிய சோகம் என்னவென்றால் கான்சாய் விமான நிலையம் வருடத்திற்கு 2 செ.மீ. முதல் 4 செ.மீ. வரை கடலில் தொடர்ந்து மூழ்கிக்கொண்டே இருக்கிறது. விமான நிலையம் தொடங்கி இதுவரை 30 செ.மீ. மேல் கடலில் மூழ்கியுள்ளது.


  எத்தனை இன்னல்கள் வந்தாலும் இயற்கைக்கு கொஞ்சமும் சலிக்காமல் ஈடுகொடுப்பவர்கள் ஜப்பானியர்கள் எனபதை இதில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கான்சாய் ரன்வேக்கு அருகே இன்னொரு இரண்டாவது ரன்வேயையும் இதைப் போலவே அமைத்து விட்டார்கள்.

  துணிவோடு இயற்கையோடு போட்டி போடுபவர்களில் ஜப்பானியர்களுக்கு இணையாக வேறு யாரையும் சொல்லமுடியாது என்பது நிதர்சனமான உண்மை!
  21 கருத்துகள்:

  1. ஜப்பானியரின் கடும் உழைப்பு பற்றி அசர வைக்கும் மிக அருமையான தகவல்கள். :) பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. ன்ன பிரமாண்டம் ....அவர்களின் முயற்சி வியக்க வைக்கிறது ....

   பதிலளிநீக்கு
  3. திறக்கப் பட்டு இத்தனை ஆண்டுகளாகியும் ,இந்த பிரமாண்டம் என் அதிகம் பேசப் படவில்லை ?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இதுபோன்ற பிரமாண்டங்கள் பல இருக்கின்றன. பழைய பிரமாண்டங்கள் தெரிந்த அளவுக்கு புதியவைகள் தெரிவதில்லை.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  4. மிகவும் பிரமிப்பான தகவல் நண்பரே அதுவும் இது 1960 ஏற்பட்ட எண்ணம் அபூர்வமே...
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக நீண்ட திட்டம்தான். ஆனால், கட்டுமானம் ஆரம்பித்தவுடன் மளமளவென்று முடித்துவிட்டார்கள்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. அசர வைக்கும் உழைப்பு. தகவலுக்கு நன்றி செந்தில்.

   பதிலளிநீக்கு
  6. அந்த வாமனர்கள் இன்னும் சாதிப்பார்கள்...உங்கள் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன...வாழ்த்துகள்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. அன்புள்ள அய்யா,

   ஜப்பானியர்களின் அசாத்திய துணிச்சலால் எதையும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டும் ஈடுஇணையில்லா உழைப்பு, இடர் வந்த போதும் இடைவிடாது முயற்சியைக் கைவிடாது முடிக்கும் ஆற்றல் நமக்கும் வந்தால் நல்லது.

   நன்றி.

   த.ம.6

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  8. இயற்கையுடன் அவர்கள் போட்டி போடுகின்றார்கள்தான். அவர்களது உழைப்பைப் பாராட்டலாம். ஆனால் அந்த உழைப்பும், பணமும் வீணாகிவிடும் அபாயம் உள்ளது என்பதை மறக்கலாகாது. பூகம்பத்திற்கும், சுனாமிக்கும், புயலுக்கும் பேர்போன கடலில் இத்தனை ரிஸ்க் அவசியமா என்பதே கேள்வி. என்னதான் பாராட்டினாலும் இது முட்டாள்தனமோ அதுவும் தெரிந்தே செய்யும் முட்டாள்தனம் என்றே தோன்றுகின்றது. இயற்கையோடு மோதிவிளையாட முடியாது. இயற்கை என்றுமே வெற்றிபெரும்!! நம்மை ஆட்சி புரியும். அதற்கு எதிராக நாம் என்ன செய்தாலும் சாதித்தாலும் அழிவில்தான் முடியும் என்பதில் துளியும் ஐயமில்லை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான். சரியாக சொன்னீர்கள்! ஆனாலும் அவர்கள் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும்.

    நீக்கு
  9. இதை ஏனோ சாதனையாகவோ, துணிச்சலாகவோ கொள்ள முடியவில்லை...

   பதிலளிநீக்கு
  10. ஜப்பானியர்களின் பண்புக்கு இது ஒரு சான்று

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்