• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், மார்ச் 02, 2016

  பாம்புக்கு பால் வார்ப்போம்..!


  பொதுவாக உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களால்தான் நீர் போன்ற திரவ உணவுகளை உறிஞ்சி குடிக்க முடியும். பாம்புக்கு திரவத்தை உறிஞ்சும் அமைப்பு அதன் வாயில் இல்லை. அப்படியிருக்கும் போது நமது பெண்கள் தொடர்ந்து பாம்புக்கு பாலையும் முட்டையையும் படைக்கிறார்களே இது என்னவொரு மடத்தனம் என்று பகுத்தறிவாளர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். 

    
  இந்த ஆன்மிக நடைமுறைக்குப் பின் ஒரு பாரம்பரிய தத்துவார்த்தம் ஒளிந்திருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன், காடுகளை மனிதன் அழிக்காத அந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் மரங்களும் புதர்களும் மண்டிக்கிடந்தன. இயற்கை செழித்திருந்த காலம். இந்த இயற்கை சூழல் பாம்புகளுக்கு ஏற்றது. அதனால் பாம்புகளின் எண்ணிக்கை மளமளவென்று பெருகியது. 


  அன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள்தான். அந்த பாம்புகளை ஒழித்தால்தான் நிம்மதியாக இருக்கமுடியும். ஆனால், உயிரினங்களை கொல்வது அவர்கள் பின்பற்றிய இந்து மதத்தில் பாவமாக கருதப்பட்டது. பாம்புகளையும் கொல்லக்கூடாது. அதன் எண்ணிக்கையையும் குறைக்கவேண்டும். அது எப்படி முடியும்? அப்போதுதான் அவர்கள் எண்ணத்தில் உருவானது பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது என்ற யுக்தி.


  பாம்புகளின் இனப்பெருக்க காலத்தில் பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவத்தை வெளிப்படுத்தும். அந்த வாசனை தொலைவில் இருக்கும் ஆண் பாம்புகளுக்கு பாலியல் இச்சையை தோற்றுவிக்கும். உடனே பெண் பாம்பு இருக்கும் இடத்தை வாசனையை வைத்தே கண்டுபிடித்து வந்துவிடும். இப்படிதான் பாம்புகளின் இனப்பெருக்கம் நடக்கிறது. 

  பெண் பாம்பு வெளிப்படுத்தும் இந்த வாசனை ஆண் பாம்புகளை சென்று சேராமல் பார்த்துக் கொண்டால் பாம்புகளின் உறவு நிகழாது. இனப்பெருக்கமும் கட்டுப்படுத்தப்படும் என்று அன்றைய மக்கள் நினைத்தார்கள். அதற்காக அவர்கள் கடைபிடித்ததுதான் பாலும் முட்டையும். இந்த பாலையும் முட்டையையும் பாம்பு புற்றுகளின் அருகில் வைத்துவிட்டால் அவற்றில் இருந்து வெளிப்படும் வாசனை, பெண் பாம்பு வெளியிடும் வாசனையை விட கூடுதலாக இருந்ததால் பாம்புகளின் எண்ணிக்கை விரைவாக குறைந்தது. 


  இந்த உண்மையை சொன்னால் யாரும் புற்றுக்கு பாலையும் முட்டையையும் வைக்க மாட்டார்கள். அதனால் அதை ஆன்மிகத்தோடு கலந்து விட்டார்கள். பாம்பை நாகக்கன்னியாகவும், நாகதேவதையாகவும் மாற்றினார்கள். அவர்களுக்கு பாலும் முட்டையும் கொடுத்தால் வேண்டியது கிட்டும் என்றார்கள். நம் பெண்களும் பாம்புக்கு பால் வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 


  18 கருத்துகள்:

  1. பாலுறவு வேட்கையை பாலைக் கொண்டு அடக்கி விடலாம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை !சமீப காலமாக ,பகுத்தறிவுக்கு ஒவ்வாத இப்படிப்பட்ட காரியங்களுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் அளிக்கும் போக்கு திட்டமிட்டு நடத்தப் படுகிறது .இன்னொரு உதாரணம் ...நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு என்று சில வருடங்களுக்கு முன் ஒரு 'புரூடா' செய்தி வலம் வந்தது .அதுவும் உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன் !

   பதிலளிநீக்கு
  2. பால்புக்கு பால் வார்க்கும் அறிவியல் உண்மை என நானும் இதைக்குறித்து அறிந்திருக்கின்றேன்.இதற்கு முன் உங்கள் பதிவொன்றில் இதைக்குறித்து பகிர்ந்ததாய் நினைவும் கூட! பாம்புக்கு பால் வார்ப்பதுடன்,கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என முன்னோரில் பல பழக்க வழக்கங்கள் இன்றைய அரிவியல் ரிதியில் ஆச்சரியம் தருவதே!முடி வெட்டுவதற்கு கூட தேய் பிறை நாட்களில் வெட்டாமல் வளர் பிறை நாளில் வெட்ட வேண்டும் என்பதும் வடக்கில் தலை வைத்து படுப்பதுமாய் இன்னும் பல விடயங்கள் இதே போல் உண்டு!

   உங்கள் பதிவுகளை தொடருங்கள்.
   த.ம

   பதிலளிநீக்கு
  3. இந்தச் செய்தி நானும் அறிந்திருக்கிறேன்.
   தம +1

   பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு செயலுக்கும் பின்னே ஏதோ ஒரு காரணம் உண்டு.

   பதிலளிநீக்கு
  5. பாம்புக்கு பால் வார்ப்பது இதனால்தானோ
   அறியாத செய்தி நண்பரே
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  6. நண்பரே,

   இந்தியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரியில் தலை சிறந்து விளங்கினார்கள் என்று சொல்லி அதற்கு இந்து மதப் புராணங்களை உதாரணம் காட்டுவது, விமானங்களும் ஏவுகணைகளும் அணுகுண்டுகளும் நம்மிடம் இருந்தது என்று புராணக் கற்பனைகளை அறிவியல் என்று சொல்வது இப்படி நம்முடைய மூடத்தனங்களை அறிவியல் கொண்டு என்று நியாயப் படுத்துவது நம்மை இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்லும்.

   உலகின் அனைத்து சமூகங்களிலும் காணப்படும் மூட நம்பிக்கைகளுக்குப் பின்னேயும் அறிவியல் இருக்கிறது என்பதும் உண்மையே. அப்படியானால் எதுதான் மூடநம்பிக்கை?

   பதிலளிநீக்கு
  7. இந்தத் தகவலை அறிவோம். இப்படி எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் இல்லையா?!!!

   ஒவ்வொரு விலங்கினத்திலும் இனப்பெருக்கக் காலத்தில் பெண் இனத்தின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகையான மணம் தான் ஆண் இனத்தை ஈக்கின்றது. பாம்புகளின் பெருக்கத்தைத் தடுக்க இதுதான் வழியா என்ன நாம் தான் கான்க்ரீட் காடுகளை வளர்த்து வருகின்றோமே அதுவே போதும் பாம்புகளை அழிக்க. இயற்கைச் சுழற்சியில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆயின், மனிதனின் அறிவியல் முன்னேற்றத்தினால் பல பாம்பினங்கள் குறைந்து வருகின்றன என்பதுதான் உண்மை.

   பதிலளிநீக்கு
  8. பாம்புக்குப் பால் பின்னால் இப்படி ஒரு கதையா? இவ்வளவு நாள் எங்களுக்குத் தெரியாது. தற்போது தெரிந்துகொண்டோம்.

   பதிலளிநீக்கு
  9. பாம்புக்கு பால் வார்ப்பது என்பது மூட நம்பிக்கை அன்றி வேறு எதுவும் இல்லை.இது ஆதியில் இருந்து மனிதனுக்கு பாம்பின் மீதுள்ள மரணபயம் காரணமாக வந்த வழக்கம். படத்தில் உள்ள பாம்பின் பல்லை பிடுங்கி இருப்பார்கள். மற்றும் பாம்பின் வாயையும் தைத்து இருப்பார்கள்.

   பதிலளிநீக்கு
  10. அறிஞர் தி.தமிழ் இளங்கோ அவர்களின் கருத்தை நானும் பகிருகிறேன்.

   பதிலளிநீக்கு
  11. பாம்பு ஊர்வன (Reptile) வகையை சேர்ந்தது. பாலூட்டி(Mammal) வகையை சேர்ந்தது அல்ல. எனவே அதனால் பாலை செரிமானம் செய்ய இயலாது. மேலும் பாம்புக்கு பாலின் ருசி தெரியாது. எனவே பாம்பு தண்ணீர் என நினைத்து பாலைக்குடித்தால் அது இறந்துவிடும். இதுதான் உண்மை. ஆனால் நாமோ இன்னும் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றிக்கொண்டு இருக்கிறோம்!

   நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  12. நண்பரே! "பாம்புக்கு திரவத்தை உறுஞ்சும் அமைப்பு வாயில் இல்லை" - தவறு. சில வகைப் பாம்புகள் அருமையாக உறுஞ்சி நீர் அருந்தும். இதே விடயத்தை வௌவால் எனும் பதிவரும் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதபோது, அவருக்கு நான் யூரியூப்பில் இருந்து ஆதாரம் காட்டினேன். நான் பல விபரணச் சித்திரங்களில் பாம்பு நீர் அருந்துவது பார்த்துள்ளேன். அத்துடன் பாம்பு காட்சியகங்களில் நீர்த் தொட்டி வைத்து நீர் நிரப்புவதையும் அவதானித்துள்ளேன். இன்று உலகில் பல நாடுகளில் பாம்பை வளர்ப்பு பிராணியாக வளர்க்கிறார்கள், அந்த கூடுகள் நீர் வைக்கும் அமைப்புடனே உள்ளன. அதனால் பாம்புகளில் பெரும்பான்மையானவை நீரருந்தும். பாம்புக்கு நீர்நிலைகளால் இயற்கையில் நீர் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் பால் அருந்த இயற்கையில் வாய்ப்பேயில்லை. மிருகங்களின் மடியில் அருந்தவா? முடியும்.
   பாலும் நீர் போல் இயற்கையில் பரவிக் கிடந்திருந்தால், பாம்பும் பால் அருந்தியிருக்கலாம். ஆனால் முட்டை பாம்பு விழுங்குவது (குடிப்பதல்ல) இயல்பு. தரையிலோ, மரத்திலோ பாம்பு இலகுவாக வாழும் இயல்புடையதால், முட்டையை அடைவதில் அதற்கு எந்தச் சிரமமும் இல்லை. பாம்பில் வாய் அமைப்பில் விரிந்து கொடுக்கும் தன்மையுள்ளதால் பல பறவைகளின் முட்டைகளை இயல்பாக விழுங்கி உணவுப் பாதையயில் முட்டையை உடைத்துப் பின் கோதை உமிழ்ந்து விடும்,பாம்புகளும் உண்டு. சில வகைப்பாம்புகளுக்கு ஓடுகளையும் செமிபாடடையச் செய்யும் இயல்பு இயற்கையில் உண்டு.
   ஆனால் நீங்கள் கூறுவது போல் பால்,முட்டை வாசனை பாம்பின் இனப்பெருக்க கால வாசனையை முறியடித்ததால் ,புற்றுக்கு ஊற்றினார்கள் என்பதை ஏற்பது கடினமாக உள்ளது. அத்துடன் பாம்புகள் புற்றுக்களினுள்ளே புணரும் என்பதே அறியாமை. ஆண்பாம்பு மாத்திரம் தேடிவருவதில்லை. பெண்பாம்புகளும் நாடிப் போகும் அதனால் புற்றுக்கு பாலூற்றி ஆவதேதுமில்லை. நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் உலகெங்கும் பாம்பின் தொகை, குறிப்பாக பூமத்திய ரேகையை அண்டிய நாடுகளில் கணிசமாக இருந்துள்ளன. ஆபிரிக்கா, அவுஸ்ரேலியாவில் உலகில் கொடிய விடம் கொண்ட மாம்மா(Mamba),தைபோன்(Taipan) இனப் பாம்புகள் பெருவாரியாக இருந்தன. நம் இந்துநாகரீகத் தழுவலுள்ள நாடுகள் தவிர எங்குமே இந்த பால், முட்டை ,சமாச்சாரம் கிடையாது. அதே காலக்கட்டத்தில் தான் பாம்புகளின் எதிரியான கீரி, மயில், கழுகு, கினிக்கோழி என்பனவும் இவற்றை இயற்கையில் சமநிலைப்படுத்திக் கொண்டு உலகெங்கிலும் தொகையாக இருந்தன. இதையும் மறந்து விடக்கூடாது.
   ஆனாலும் இந்துக்களே,இந்தியக்கலாச்சாரச் சார்புள்ளவர்களே! பால்வார்த்துள்ளார்கள்.
   ஏனெனின் பாம்புகடித்தால் மரணம். அந்த பயத்தால் கடவுள் அந்தஸ்துக் கொடுத்து,சிவனுக்கு முடியிலும்,கழுத்திலும் சூட்டி மரியாதை செய்தார்கள்.பால் வார்த்துப் பிரியப்படுத்தினார்கள்.
   சீனர் கொன்று குழம்புவைத்தார்கள்.கட்டுக்குள் வைத்தார்கள்.
   இணைய வருகைக்குப் பின் பல பழமையான புரையோடிய சம்பிரதாயங்களுக்கு , அறிவியல் முலாம் பூசுதல் இலகுவாக நடக்கிறது.
   எது எப்படியானாலும் துளசிதரன் ஐயா கூறுவது போல் இயற்கைச் சுழற்சியில் பாம்பின் பங்கும் மிக உண்டு. ஒருவகையில் பாம்பு , எலியைக் கொல்வதால் மனிதனின் நண்பனே! அதற்கான பால்,முட்டை உபசரிப்போ தெரியவில்லை.
   இந்த படத்துள் உள்ள பாம்புகள், பாவங்கள். இளங்கோ ஐயா சொல்லுவதுபோல் பல்லுப்பிடுங்கியோ, வாயைத் தைத்தோ உள்ளார்கள். விரும்பினாலும் பாலைக் குடிக்கமுடியாது. இப்படிக் குளித்து திருப்தியடைய வேண்டியதே! ஆனால் இந்த கூத்தெல்லாம் நம் நாடுகளில் அழிய இன்னுமொரு நூற்றாண்டாகலாம். அப்போ பாம்பைத் தேட வைத்துவிடுவான் மனிதன்.
   https://www.youtube.com/watch?v=T78MljX8NxE
   www.youtube.com/watch?v=LLk4rsCNFFU இத் தொடுப்பில் பாம்பு நீரருந்துவதையும், முட்டை விழுங்குவதையும் பார்க்கவும்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்