Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..!

ரு பத்திரிக்கை நடத்துவது எத்தனை கஷ்டமானது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகைக்கான தகவல்களை திரட்டுவதிலிருந்து, அச்சிட்டு வெளிவந்து அது கடைகளுக்கு சென்ற சேர்ந்து, அதன்பின் வாசகர்களை அடைவது வரை பல நிலைகளை கடந்து வரவேண்டும். இதில் ஏதாவது ஒன்று குறைப்பட்டாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும். அதிலும் ஏஜெண்டுகள் கைகொடுக்கவில்லை என்றால் மொத்த முதலுக்குமே மோசம் ஏற்படும். அப்படியொரு நிலைதான் எங்களுக்கும் ஏற்பட்டது.

இதழின் அட்டை
பொதுவாக சிறு பத்திரிகைகளுக்கு ஏற்படும் நிலைதான் அது. அந்த பத்திரிக்கைகளை பெரிய ஏஜண்டுகள் எப்போதும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்படியே கண்டு கொண்டு சிறு பத்திரிகைகளுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்தாலும், அவர்கள் ஏற்கனவே ஏஜெண்டு எடுத்திருக்கும் பெரும் பத்திரிகைகள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். அந்த சிறு பத்திரிக்கை ஒருவேளை பெரிதாக வளர்ந்துவிடும் என்ற நிலை அல்லது சந்தேகம் பெரிய பத்திரிகைக்கு ஏற்பட்டால், அந்த சிறு பத்திரிகையை கடைகளில் மக்கள் பார்வைக்கு தெரியும்படி 'டிஸ்ப்ளே' செய்யக்கூடாது என்று முதலில் கட்டளை இடும்.


அப்போதே சிறு பத்திரிகைக்கான வீழ்ச்சி தொடங்கிவிடும். கடையில் ஏதோவொரு மூலையில் பத்திரிக்கை வைக்கப்படும். விரும்பி கேட்கும் வாசகர்களுக்கு மட்டுமே கடைக்காரர் எடுத்து தருவார். ஏஜெண்டு என்ன சொல்கிறாரோ அதைதான் கடைக்காரர் கேட்பார். 5 அல்லது 10 புத்தகம் விற்கும் சிறு பத்திரிகைக்காக 100 - 150 பிரதிகள் விற்கும் பெரும் பத்திரிகையை யாரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு நகரில் இருக்கும் பெரும் ஏஜெண்டு ஒருவர் இப்படி செய்தால் அந்த நகரில் இருக்கும் அத்தனை கடைகளிலும் அந்த சிறு பத்திரிக்கை ஒளிந்து கொண்டேதான் இருக்கும்.

எனது கட்டுரை 
சரி, பெரிய ஏஜெண்டுகள்தான் இப்படி என்றால், சிறு ஏஜண்டுகள் எப்படி?
சிறு ஏஜெண்டுகளில் மிகப் பொறுப்பாக இருப்பவர்கள் மிகக் குறைவே. அதற்கு காரணமும் இருக்கிறது. பெரிய பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு எடுக்க லட்சக்கணக்கில் 'டெபாசிட்' கட்டவேண்டும். சிறு பத்திரிக்கை ஏஜெண்டுகள் அப்படி எதுவும் கட்டவேண்டியதில்லை. விற்றால் கமிஷன், இல்லையென்றால் ரிட்டர்ன் என்ற இரண்டு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கடைகளுக்கே புத்தகங்களை கொண்டு போய் சேர்ப்பதில்லை.

பதிவர் கடற்பயணங்கள் சுரேஷ்குமார் கட்டுரை
ஆக, கைக் காசைப்போட்டு உயர்ந்த தரத்தில் புத்தகத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் அனுப்பியும், அதை வாங்க வாசகர்கள் தயாராக இருந்தும், மக்களுக்கு புத்தகமோ, உரிமையாளருக்கு பணமோ சென்று சேரவேயில்லை. இந்தநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் 'பிரேக்கிங் பாய்ண்டு'க்கு அந்த சிறு பத்திரிக்கை வந்தது. மூன்றாண்டுகளாக வந்து கொண்டிருந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது. இவ்வளவு நேரம் இங்கு சிறு பத்திரிக்கை என்று நான் குறிப்பிட்டது நான் பணியாற்றும் 'ஹாலிடே நியூஸ்' என்ற சுற்றுலா மாத இதழை பற்றிதான். சில மாதங்களுக்கு முன்பு அது நிறுத்தப்பட்டது.

எனது தொடர்
அப்படி நிறுத்தப்பட்ட பிறகுதான் வாசகர்கள் மத்தியில் அந்த சிறு பத்திரிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. தினமும் ஏராளமான அழைப்புகள். இதழ் நிறுத்தப்பட்டது என்ற உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட சொந்த இழப்பு போல் வருந்தினார்கள்.

கோவையில் இருந்து பேசிய ஒரு பெண் வாசகர் அழுதேவிட்டார். ஒரு வாசகர் ஈரோட்டில் உங்கள் பத்திரிக்கை கிடைக்கவில்லை என்பதற்காக கோயம்புத்தூர் சென்று வாங்கி வருகிறேன் சார் என்றார். நிறைய வாசகர்கள் விலையை உயர்த்திக் கொள்ளுங்கள். 100 ரூபாய் என்றாலும் இந்த பத்திரிகையை வாங்குவோம். தயவு செய்து மீண்டும் தொடங்குங்கள் என்றார்கள். இதழுக்காக நன்கொடை தருகிறோம் என்ற வாசகர்களும் உண்டு. எப்படி ஒரு சிறு பத்திரிகைக்கு இப்படி உணர்வுப்பூர்வமான வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது எங்களுக்கு இன்னமும் மீள முடியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.


ஏன் ஒரு பத்திரிகை வாங்குவதற்காக 100 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்? எங்களுக்கு புரியவில்லை. அந்தப் பெண்ணின் அழுகுரல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நிறைய உணர்ச்சிப் போராட்டங்கள். எங்களை நெகிழ வைத்துவிட்டது. வாசகர்களின் இந்த மறைமுகமான உணர்வுப் போராட்டம் மட்டுமே மீண்டும் இதழ் வெளிவர முக்கிய காரணம்.

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் 'ஹாலிடே நியூஸ்' வருகிறது.இந்த முறை வாசகர்களாகிய உங்களை மட்டுமே நம்பி வருகிறது என்று அவர்களுக்கு தெரிவித்ததும், அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தினமும் வாழ்த்து மழையில் நனைந்து  கொண்டிருக்கிறோம்.

பதிவர் வெங்கட் நாகராஜ் கட்டுரை
ஏஜெண்டுகள் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக  புத்தகத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். சந்தா மூலம் அதிகமான வாசகர்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இதுபோக ஒரு ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடைகளில் மட்டுமே எங்களின் நேரடி கண்காணிப்பில் விற்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் பிரீமியம் புக் ஸ்டால் என்கிற அனைத்துவகையான வார, மாத இதழ்கள் விற்கும் கடைகள் நான்கைந்து மட்டுமே இருக்கும். அவற்றில் மட்டுமே 'ஹாலிடே நியூஸ்' புத்தகம் கிடைக்கும். விரும்பும் வாசகர்கள் அங்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.

தமிழகம் பற்றிய எனது தொடர்
வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து 'ஹாலிடே நியூஸ்' தொடர்ந்து வெளிவருகிறது. ஏப்ரல் மாத இதழில் இடம் பெற்றுள்ள சில பக்கங்களைத்தான் இந்தப் பதிவில் கொடுத்துள்ளேன். வடக்கு கர்நாடகாவில் இருக்கும் 'பட்டதக்கல்' என்ற இடத்தில் சாளுக்கிய மன்னர்கள் உருவாக்கிய அற்புதமான கலைப்படைப்புகள்தான் இம் மாத இதழின் முகப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது. யாத்ரிகன் என்ற புனைப் பெயரில் நான் எழுதியது.

இதுபோக வடகிழக்கு மாநிலங்கள் பற்றி 'நார்த் ஈஸ்ட்' எனும் கட்டுரைத் தொடரும். 'பயணம்' என்ற கட்டுரைத் தொடரும் நான் எழுதியிருக்கிறேன். நமது பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது. கடல் பயணங்கள் சுரேஷ் குமார் ஆஸ்திரேலியாவின் பெங்குயின்கள் பற்றி எழுதியிருக்கிறார். நமது பயணப் பதிவர் வெங்கட் நாகராஜ் எழுதிய 'முதுகு சுமையோடு ஒரு பயணம்' கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் நமது பதிவர்கள் வை.கோபாலகிருஷ்ணன், டாக்டர் பி.ஜம்புலிங்கம், சுபாஷினி டெர்மல் ஆகியோரும் பங்களிக்க இருக்கிறார்கள்.

வாசகர் அனுபவம்
மேலும் வாசகர்களும் தாங்கள் சென்றுவந்த சுற்றுலா தளங்களை படங்களுடன் எழுதி அனுப்பலாம். அதற்கு senthil.msp@gmail.com என்ற என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம். எனக்கு எழுத வராது ஆனால் நாங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்ற படங்கள் இருக்கின்றன என்பவர்களுக்காகவே ஒரு பக்கம் இருக்கிறது. அதில் வாசகர்களின் சுற்றுலா படங்கள் இடம்பெறும். அதற்கான படங்களை myholidayphoto@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பிரசுரிக்க காத்திருக்கிறோம். இதழ் வேண்டும் என்கிறவர்கள் 94435-71391 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாசகர்களின் சுற்றுலா படங்கள்
உலகத் தரத்தில் ஒரு தமிழ் இதழை தரவேண்டும் என்ற எங்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த 'ஹாலிடே நியூஸ்'. இதைப் படிக்கும்போது ஆங்கிலத்தில் வரும் 'டிராவலர்' புத்தகங்களை படிக்கும் உணர்வு ஏற்படும். உங்களின் இல்லம், அலுவலக வரவேற்பறை, மருத்துவமனை, சலூன், நூலகம் என்ற மக்கள் கூடும் இடங்களில் பெருமையாக அந்த இடத்தை அலங்கரிக்கும் ஓர் இதழ். உங்கள் ஆதரவோடு சிகரம் தொடுவோம்..!

வாசித்துப் பாருங்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள்..!


56 கருத்துகள்

  1. சிகரம் தொட வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி வாழ்த்துகள் நிச்சயம் வெற்றி கிட்டும். ஏஜெண்ட்களுக்கும் பெரும் பத்திரிகைகளும் செய்யும் சதிகள் புரிந்தது.

    பதிலளிநீக்கு
  3. வெற்றி பெற எமது வாழ்த்துகளும் நண்பரே
    த.ம+1

    பதிலளிநீக்கு
  4. அந்த 3 டி வண்ண அட்டை அலங்கரிக்கும் மாதிரி புத்தகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அசந்து போனோம்..
    உங்கள் கட்டுரைகளும் ...படங்களும் மனசுக்குள் நிற்கின்றன.
    வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதழைப் படித்து பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. பார்க்கும்பொழுதே தெரிகிறது எவ்வளவு அசத்தலான வடிவமைப்பைக் கொண்ட இதழ் என்பது. நான் பல ஆண்டுகளாக விகடனை விரும்பிப் படிப்பவன். விகடன் அளவுக்கு வடிவமைப்பு நேர்த்தியை நான் இதுவரை வேறெந்தத் தமிழ் இதழிலும் கண்டதில்லை. ஆனால், உங்களுடைய இதழ் அந்த நினைப்பை முறியடித்து விட்டது! அமர்க்களம்!!

    இதழ் விற்பனையில் இவ்வளவு உள்ளடி அரசியலா! அறிய வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களது வாசகர்கள் சொல்லும் அதே வார்த்தைகளை புத்தகத்தை பார்க்காமலே தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி அய்யா!
      வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. பெரும் பத்திரிகைகளின் சதிகள் தெரிந்தது. தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் புத்தம் புது பொலிவில் வளர்வதற்கு ....மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    நானும் பங்கு பெற முயற்சிக்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்குபெறுங்கள் உங்கள் சுற்றுலா சம்பந்தமான படைப்புகளை அனுப்பிவையுங்கள். எதிர்பார்க்கிறோம்.

      நீக்கு
  8. புத்தக வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஜொலிக்கும் 3D அட்டைப்படம் சும்மா கண்ணைப்பறித்து மகிழ்ச்சியளிக்கிறது. உள்ளே வழவழப்பான தரமான தாள்கள். ஒவ்வொன்றிலும் கலர் கலரான படங்கள். இது போன்றவை அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    சுற்றுலா செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகும் இந்த இதழ் மேலும் மேலும் வெற்றிபெற்று பிரபலமாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  9. இதழை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். தமிழில் இவ்வாறாக ஒரு அருமையான இதழைக் கண்டதில் மகிழ்ச்சி. தமிழகத்தின் பெருமை பெற்ற கோயிலிலிருந்து உலகத்தின் மறுமுனையில் காணப்படுகின்ற கலையின் பெருமையைப் பேசும் விழா வரை அனைத்து தலைப்பிலும், அழகான புகைப்படங்களைக் கண்டு வியந்தேன். எனது கடிதத்தில் தெரிவித்திருந்தபடி இதழின் வடிவமைப்பு, எழுத்துருத் தேர்வு, பக்க நேர்த்தி, புகைப்பட அமைப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் கவனம் செலுத்தப்பட்டதைக் காணமுடிந்தது. என்னால் ஆன பங்களிப்பினை அவசியம் செய்வேன். இதழ் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள், தங்களுக்கும் இதழ் குழுவினருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் பங்களிப்புக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  10. தங்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் நண்பரே
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  11. நேரில் பார்த்து, கையில் தழுவியெடுத்து, கண்களால் பார்த்து மகிழ்ந்து, இரண்டு இதழ்களை உடனே -காசுகொடுத்து- வாங்கிக்கொண்டேன். பார்க்கப்பார்க்க பிரமிப்பாக இருக்கிறது! வழவழவென்ற -3டி- அட்டை, வண்ணத்தில் குழைத்த ஏனைய படங்களுடன் எண்ணத்தைச் சிறகடிக்க வைத்து ஏங்கவைக்கும் சுற்றுலாத் தகவல்கள்! எங்கள் வீதி விழாவில் நண்பர்களிடம் அவசியம் அறிமுகப்படுத்துவோம். உண்மையில் தமிழில் சுற்றுலாவுக்கென்று இதுபோல் ஒரு சிறப்பான இதழ் வந்ததில்லை. தாங்கள் பணியாற்றும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கிறீர்கள். தங்களுக்கும் இந்த இதழின் ஆசிரியர்குழு, மற்றும் புகைப்பட நண்பர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றியும். நான் இதழைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வேன், அதுதானே சரியான பாராட்டு? நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுக்கும் புகழுரைக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  12. என்ன? ஒரே ஒரு குறை... தற்காலத் தமிழ்ச்சூழல் முறைப்படி ஒரு நல்ல தமிழ் இதழுக்கு ஆங்கிலத்தில் பேர் வைத்துவிட்டீர்களே என்றுதான்.. ஏகே செட்டியார், ராகுல்ஜி, சாமிநாத சர்மா மற்றும் இதயம் மணியன் போன்றோர் தாம் சென்றுவந்த சுற்றுலாப் பற்றி அழகுத்தமிழில் எழுதியிருக்கிறார்கள்..“ஊர்சுற்றி..” எப்படீ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு இந்த இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் கொண்டு வருவதாக திட்டம் இருந்தது. அதற்காக இரண்டு மொழிக்கும் பொதுவான பெயராக இப்படி ஒரு பெயர் வைத்தோம். பின்னர் ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டத்தை கைவிட்டோம். இதுதான் இதழுக்கு ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணம்.
      கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அய்யா!
      வீதி விழாவிலும் நண்பர்களிடமும் இதழை அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
    2. ஐயா அவர்கள் கூறிய இதே குறை எனக்கும் இருந்தது. ஆனால், சொல்லத் தயக்கம். உங்கள் நிலை புரிந்தது.

      நீக்கு
    3. தங்களின் மீள் வரவுக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  13. வாசகர் விருப்பில் வெற்றி நடைபோடும் ஏடுகள் வரிசையில் தங்கள் ஏடும் மின்னட்டும்!

    இதனை என் தளத்திலும் விரைவில் அறிமுகம் செய்கிறேன்.

    தங்கள் ஏடு வெற்றி நடைபோட எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  14. ‘முயற்சி திருவினையாக்கும்’. தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. எனது வாழ்த்துக்கள்! அந்தந்த துறையில் அவரவர் துறையினரே போட்டியாளார்கள் என்பதற்கு உங்களின் இந்த அனுபவப் பகிர்வே சாட்சி. வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, எல்லாத்துறைகளிலும் இப்படிப்பட்ட போட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  16. Sorry sir just now I saw
    It costs 50 rupees. I'm from dharmapuri. How can I purchase the April edition ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அலைப்பேசி எண்ணில் (94435 71391) தொடர்பு கொண்டு உங்கள் முகவரியைக் கொடுக்கவும். இதழ் உங்கள் இல்லம் தேடி வரும்.

      நீக்கு
  17. பாஸ் இப்போத்தான் இப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதை கேள்விப் படுகிறேன் ...
    எனக்கு ஒரு சந்தா செலுத்த வேண்டும் மேல் விவரங்கள் தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அலைப்பேசி எண்ணில் (94435 71391) தொடர்பு கொண்டு உங்கள் முகவரியைக் கொடுக்கவும். இதழ் உங்கள் இல்லம் தேடி வரும்.

      நீக்கு
  18. இதழ் வரவும் வளரவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  19. எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ. இமயமலைச் சிகரம் எவரெஸ்டை மட்டுமல்ல ஆல்ப்ஸ் சிகரத்தையும், உலகச் சிகரங்கள் பலவும் தொட எங்கள் வாழ்த்துகள்!

    கீதா: ஆஹா! வருகிறது!!! கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..ஹாலிடே நியூஸ். அன்று நீங்கள் கொடுத்த இதழே அட்டகாசமாக இருந்தது. அதே வடிவம்தானே சகோ...நல்ல புகைப்படங்கள். அருமை அருமை..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. தமிழில் முதல் சுற்றுலா பத்திரிக்கை என்றறிய மகிழ்ச்சி. ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிக்கைகள் போன்று படங்களும், செய்திகளும் தரமாய் இருக்கும் என்று வாசித்தவர்கள் சொல்லியதில் இருந்து தெரிகிறது. முயற்சி தொடர்ந்து வெற்றி பெற்று சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகிறேன்! என் கட்டுரையின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்:- வாசித்துப்பார்த்துக் கருத்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்:- http://unjal.blogspot.com/2011/12/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  21. அற்புத இதழுக்கு அமோக வரவேற்பு, தொடரட்டும் இனிதே

    பதிலளிநீக்கு
  22. ஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்?

    தங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா? சுட்டி தரவும். நன்றி

    பதிலளிநீக்கு
  23. ஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்?

    தங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா? சுட்டி தரவும். நன்றி

    பதிலளிநீக்கு
  24. ஹாலிடே நியூஸ்- வெற்றிபெற வாழ்த்துகள். சென்னையில் எங்கு கிடைக்கும்?

    தங்களின் காஷ்மீர் பயணம் ஏதேனும் பதிவு இட்டுள்ளீர்களா? சுட்டி தரவும். நன்றி

    பதிலளிநீக்கு
  25. என் தங்கை வீட்டுக்கு (திருமங்கலம்) செல்லும் போதெல்லாம் பழைய பிரதிகளைப் படிப்பது வழக்கம். இடையில் நிறுத்தப் பட்டதை அறிந்து வருந்தினேன். நீங்கள் சொல்வது போல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்குமென நினைக்கிறேன். இரண்டு மூன்று இதழ்களாவது கடைகளில் நேரடியாக வாங்க முடிந்தால், அதன் நீட்சியாக சந்தாதாரர் பெருக வாய்ப்புள்ளது. சிற்றிதழ்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்ய முடியாதுதான். முடிந்த அளவு இணையத்தில் எழுதுங்கள். இந்த ஒரு கட்டுரையுடன் நிற்க வேண்டாம், எளிமையாய் இந்த புத்தகத்தைப் பெறுவது என்பதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதுங்கள். அது மேலும் பலரை சென்றடையும். பெரு நகரங்கள் வாரியாக இந்த புத்தகம் கிடைக்கும் கடைகள் பட்டியலை வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். தனிப் பிரதிகளை வாசகர்கள் எங்கு வாங்கினார்கள் என்பதையும் அவர்களைத் தெரிவிக்கச் சொல்லி பதிவிடுங்கள், இன்னொருவருக்கு அந்தத் தகவல் உதவும்.

    தமிழ் இதழ்கள் என்றாலே சென்னைதான் என்பதை மாற்றி, மதுரைக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். விரைவில் எங்கள் அலுவலகத்திற்கு சந்தா செலுத்துவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை