Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..!



டந்த இரண்டு தலைமுறை தமிழர்களை ஆட்டிப்படைத்தது சினிமா மோகம்தான் என்றால் அது மிகையில்லை. பலருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். சிலருக்கு சினிமாவில் நடிக்க பிடிக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு சினிமா இயக்க பிடிக்கும். இந்த மூன்றில் எங்கள் நண்பர்கள் குழு மூன்றாவது ரகம். அதிலும் எனது நண்பர் ரவிபாரதிக்கு படத்தை இயக்குவதில் பேரார்வம். 

அவர்தான் இந்த குறும் படத்துக்கான முதல் விதையை விதைத்தவர். அந்த காலக்கட்டத்தில்தான் வீடியோ கேமராக்கள் பெருத்த உருவில் இருந்து கொஞ்சம் சிறியதாக வடிவம் எடுத்திருந்தன. தூக்கிச் செல்லும் பாரமும் குறைந்திருந்தது. தொழிநுட்பத்திலும் துல்லியமான படம் தருவதிலும் சிறப்பான கேமராக்கள் புது அவதாரம் எடுத்து வந்திருந்தன.  

குறைந்த பட்ஜெட்டில் ஒரு நாள் படப்பிடிப்பில் முடியும் வண்ணம் ஒரு கதையை தயார் செய்தோம். முதல் படம் என்பதால் அது தேசப்பற்று கொண்ட கதையாக இருக்க வேண்டும். மூன்று மதத்தவர்களும் ஒரே ஃபிரேமில் வரவேண்டும், என்பது போன்ற கத்துக்குட்டிகள் சிந்தனையில் தோன்றும் கருத்தாக்கம் எங்களுக்கும் தோன்றியது. அப்படியே செய்தோம். 

தில்லையாடி வள்ளியம்மை கதை கிடைத்தது. அதையே இன்றைய சிறுமி செய்தால் எப்படியிருக்கும் என்பதுதான் கதையின் 'ஒன் லைன்'. கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் தயார் செய்தவுடன், கேமரா எடுத்துக்கொண்டு  மதுரை மேலவாசலுக்கு போனோம். 


அதென்னவோ எங்களுக்கு எந்த கதையென்றாலும் ஏழைகள்தான் நினைவுக்கு வருகிறார்கள். அதிலும் சேரிவாசிகள் என்றால் தனிப்பாசம். எங்கள் கதைகள் எப்போதும் அவர்களை சுற்றித்தான் இருக்கும். இந்தக் கதையும் அப்படிதான். மேலவாசல் பகுதியில் நடப்பதாக அமைத்தோம். 

கிருதுமால் என்ற புண்ணிய நதி சாக்கடையாக மாறி கடந்து போகும் இடம் அது. அதன் கரையோரத்தில் இருக்கும் ஏராளமான குடிசைகளும், அதில் வாழும் மக்கள்தான் எங்களின் கதை மாந்தர்கள். அதை இந்தப் படத்தில் விலாவாரியாக காட்டியிருப்போம். 

கதைக்களம் சேரிப்பகுதி என்பதால் அங்கு சென்று எங்களுக்கான ஹீரோயினை தேடினோம். மண்வாசனையோடு ஒரு ஹீரோயின் கிடைத்தார். அவரையும் மற்ற குழந்தைகளையும் வைத்து ஒரு விடுமுறை நாளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். அதிகாலையிலிருந்து இரவு வரை அது நீண்டது. குழந்தைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுதார்கள். 

'போஸ்ட் புரொடக்ஷன்' என்பது மிகப் பெரிய கடல் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம். பட்ஜெட் எகிறியது இங்குதான். எடிட்டிங், டப்பிங், ரீரிக்கார்டிங் என்று தொடர்ச்சியாக வேலைகள். பின்னணி இசைக்கு பட்ஜெட் கையைக் கடித்ததால் இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் வைத்து சமாளித்தோம். 

ஒருவழியாக அத்தனை வேலைகளும் முடிந்தது. கடைசியில் மாஸ்டர் காப்பி என்று ஒரு விசிடி குறுந்தட்டை எங்களிடம் கொடுத்தார் வீடியோ எடிட்டர். அதை பிளே செய்து பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் படத்தின் தரம் சற்று குறைந்தது போல் தெரிந்தது. இதைப்பற்றி கேட்டபோது, "விசிடியில் குவாலிட்டி லாஸ் ஆகும்" என்றார். "இப்போ டிவிடி-ன்னு ஒரு புது டெக்னாலஜி வந்திருக்கிறது. அதில் பதிவு செய்தால் படம் தெளிவாக இருக்கும். தரம் குறையாது" என்று மேலும் கூறினார்.

எங்களுக்கு டிவிடி மேல் மோகம் பிறந்தது. அது எங்கு கிடைக்கும் என்று கேட்டோம். சென்னையில்தான் கிடைக்கும் மதுரையில் ஒரேயொரு கடையில் மட்டும்தான் இருக்கிறது என்றார். அந்தக் கடைக்கு போனோம். ஒரு டிவிடி-யின் விலை ரூ.200. அதை வாங்கிவந்து ரைட் செய்தோம். ரைட் செய்து கொடுப்பதற்கு ரூ.600 கட்டணம். கட்டுப்படியாகாது விலை உச்சத்தில் டிவிடி இருந்தது. சத்தியமாக டிவிடி இவ்வளவு சீப்பாக வரும் என்று அன்றைக்கு நாங்கள் யாரும் நினைத்ததில்லை.  

இதெல்லாம் நடந்தது கி.பி 2003-ம்  ஆண்டில். எப்படியாவது இந்தப்படத்தை சேட்டிலைட் சேனலில் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு நானும் இயக்குநர் ரவிபாரதியும் சென்னைக்கு ரயிலேறினோம், விஜய், ஜெயா, ராஜ் டிவி என்று ஏறி இறங்கினோம். ஒருவரும் எங்களை கண்டுகொள்ளவேயில்லை. கடைசியில் மதுரையில் மூன்று லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பு செய்தோம். ஆகஸ்ட் 15 அன்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள்.

சின்ன திரையில் மட்டுமல்லாது பெரிய திரையிலும் இந்தப் படத்தை வெளியிட்டோம் என்பதுதான் ஆச்சர்யம். அப்போது மதுரையில் சில தியேட்டர்கள் டிவிடி பிளேயர் மூலம் இடைவேளையில் விளம்பரங்களை திரையிட்டு வந்தார்கள். அப்படி திரையிட்ட தியேட்டர்களில் மதுரை அமிர்தம் தியேட்டரும் ஒன்று. அந்த தியேட்டர் மேனேஜரிடம் இந்தப் படத்தை போட்டுக் காட்டியதும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றைக்கு நான்கு காட்சிகளிலும் இடைவேளையின் போது இந்தப் படம் காண்பிக்கப்பட்டது. 

நாங்கள் எடுத்த ஒரு குறும் படம் சினிமா தியேட்டரில் அவ்வளவு பெரிய திரையில் பிரமாண்ட ஒலியில் பார்த்தபோது எங்கள்  மனம் துள்ளிக்குதித்தது. எதோ பெரிய சினிமாவே எடுத்தது போல் தோன்றியது. இதன் இயக்குநர் ரவிபாரதி பின்னாளில் ஒரு திரைப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார் என்பது தனிக்கதை. அதைப்பற்றி மற்றொரு பதிவில்.

13 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த சுதந்திரதினம் அன்று உங்கள் பார்வைக்கு 'விதை'. படத்தை தருகிறோம். படத்தைப் பாருங்கள் நிறை குறைகளை பின்னுட்டத்தில் எழுதுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே பதிவிடுங்கள். 


'விதை' குறும் படம் 



அனைவருக்கும் 

சுதந்திரதின 

நல்வாழ்த்துகள்!





33 கருத்துகள்

  1. சுதந்திரத்திற்காக நீங்க எடுத்த குறும்படத்தில் விதைகளின் செயல்களைக்கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
    சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. சிறப்பான குறும்படம். முதல் முறையாக பார்க்கிறேன். உங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. குறும்படம்....அருமை ரசித்தேன்... வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. விதைகளை வாங்குவார் இல்லை என்பது வேதனைக்குரியது !ஒளிப்பதிவாளர் பகவான் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயரை கண்டவுடன் வாழ்த்தா..! உண்மையில் வாழ்த்துக்கு உரியவர்தான். திறமையானவர் இனிமையானவர் அந்த பகவானும், இந்த பகவானும்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
    2. என் பெயர் என்பதை விட ,படத்தை பார்த்துள்ளேன் என்பதே நான் தரும் செய்தி !உங்கள் அனைவரின் உழைப்புக்கும் தகுந்த மரியாதைக் கிடைத்து இருந்தால் ,இந்நேரம் அடுத்த குறும்படம் தயாரித்து இருப்பீர்கள் என்பதை சொல்ல வந்தேன் !
      அடுத்து ,ஜனரஞ்சகமாய் படம் எடுத்து ,ஜனங்களின் மனங்களை அள்ள வாழ்த்துகள் :)

      நீக்கு
    3. கிடைத்தது. ஏராளமான பாராட்டுகளும் கிடைத்தது. வாய்ப்புகளும் வந்தன. மேலும் 5 குறும் படங்களும் எடுத்தோம். விருதுகளும் கிடைத்தன. ஆனாலும் தொடர்ந்து செய்யமுடியவில்லை. அதற்கு காரணம் எல்லோரும் வேறு வேறு வேலைகளில் இருந்ததுதான். நேரம் ஒரு தடையாக இருந்தது. அதன்பின் ஆர்வமும் குறைந்தது. இப்போது அடுத்த தலைமுறை வந்துவிட்டது. விருதுகள் குவிகின்றன. இதை பற்றியெல்லாம் பின்னொரு சமயத்தில் பதிவிடுகிறேன்.
      மீள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. விதைகளை ரசித்தேன். அனைத்தும் நிறையே. இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  6. அழகு....அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடர்க......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா !

      நீக்கு
  7. அன்புள்ள அய்யா,

    கொடிகாத்தது குமரன் மட்டுமல்ல... குழந்தைகளும்தான்...!

    யதார்த்தமாக அப்படியே குறும்படம் எடுக்கப்பட்டது அருமை!

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. நமது தேசியக் கொடியை குழந்தைகள் தரையில் விரித்து வைத்து விளையாடுவது போல் வருகிறது. இது தவறு. தேசியக் கொடி தரையிவலோ மண்ணிலோ படுவது தவறு. குற்றமாகும். மேலும் கொடியை கிழிப்பதோ கிழிந்தது போல் காட்டுவதோ குற்றமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேசியக் கொடியை கிழிப்பதாகவோ எரிப்பதாகவோ படத்தில் காட்டுவதுதான் தவறு. மேலும் இது சட்டங்கள் எதுவும் அறியாத குழந்தைகளின் நாட்டுப்பற்றாகவே காட்டப்படுகிறது.
      இதுபோக இந்த குறும் படம் மூன்று விருதுகளை வேறு வாங்கியுள்ளது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  10. அருமை அண்ணா... தங்களின் செய்தி வாசிப்பும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. விதை நன்றாக இருந்தது.
    அனைவருக்கும் நல்ல சுகாதாரமான வீடு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். சுதந்திரதின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சில காட்சிகள் எதார்த்தமாக இருக்கிறது..நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மிக மிக அழகான குறும்படம் ! அருமை. விதைகள் விதைக்கப்படட்டும்!

    வேதனை என்னவென்றால் நீங்கள் எடுத்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் இதே நிலைதான் இருக்கிறது இல்லையா.....படம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். இன்னும் எதுவும் மாறவில்லை. சமூகத்தில் சில குறிப்பிட்ட சதவீத மக்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் முன்னேறியிருக்கிறார்கள். அந்த முன்னேற்றத்தைத்தான் வளர்ச்சி என்கிறோம். எல்லோரும் ஒரே விதத்தில் வளர்ந்தால்தான் வளர்ச்சி. ஒரு பக்கம் மட்டும் வளர்ந்தால் அதன் பெயர் வீக்கம்.
      வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  14. படக்குழுவினருக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை