• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, செப்டம்பர் 23, 2016

  ரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்


  தொட்டால் கையில் பிசுபிசு வென்று ஒட்டிக் கொள்கிற ஒன்றுக்கும் உதவாத பொருள் என்று ரப்பருக்கு கெட்ட பெயர் இருந்த காலம் அது. அப்போது தான் சார்லஸ் குட்-இயர் என்பவர் சரியான விதத்தில் ரப்பரை வேதியியல் முறையில் மாற்றம் செய்தால் பல்வேறு செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்று நிரூபித்தார். 1800-ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று நியூ ஹெவன் என்ற அமெரிக்க நகரில் பிறந்தார். 


  ரப்பரை வல்கனைசிங் மூலம் தயார் செய்தால் எவ்வளவு அதிகமான வெப்பத்திலும் உருகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவரது கண்டுபிடிப்புதான் இன்று உலகில் ஓடும் அத்தனை வாகனங்களுக்கும் டயர் என்ற உன்னதத்தை உருவாக்கித் தந்தது.

  1830-களில் யாருமே ரப்பரைப்பற்றி பெரிதாக தெரிந்து வைத்திருக்கவில்லை. தண்ணீரை ஒட்ட விடாமல் பார்த்துக் கொள்ளும் பொருள் என்ற அளவிலேயே அதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள். ரப்பரில் தெரிந்துகொள்ளவேண்டிய எந்த ஒரு விஷயமும் இல்லை என்று அன்றைய கண்டுபிடிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.


  தனது தந்தையுடன் சேர்ந்து பல வேலைகளை பார்த்து வந்த சார்லசுக்கு ஏகப்பட்ட கடன் இருந்தது. அந்த காலத்தில் வாங்கிய கடனை திருப்பித் தர முடியா விட்டால் சிறை தண்டனை என்ற கடுமையான சட்டம் அமெரிக்காவில் இருந்தது. அதன்படி தனது 34 வயதில் சிறை சென்றார் சார்லஸ். 

  சிறையில் சும்மா இருந்த நேரத்தில் எல்லாம் அவரது சிந்தனை ரப்பர் பற்றியே இருந்தது. ரப்பரை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால் வேதியியல் பாடம் அத்துப்படியாக தெரிந்து இருக்க வேண்டும். சார்லசுக்கோ வேதியியலில் 'ஆ'னா 'ஆ'வன்னா கூட தெரியாது. ஆனாலும் என்னவோ அவரிடம் இருந்து ரப்பர் ஆராய்ச்சியை பிரிக்கவே முடியவில்லை. இதற்காக இந்தியாவில் இருந்து வரும் ரப்பரை வாங்கி சிறைக்கு அனுப்பி வைக்கும்படி தனது மனைவியிடம் கூறியிருந்தார். அவரும் ரப்பரை அனுப்பி வைத்தார்.


  சிறையில் இருந்து விடுதலையான பின்பும் தன் வீட்டில் ரப்பரை எரித்து, கிழித்து பல்வேறு விதமாக ஆய்வு செய்தார். ரப்பரை எரிக்கும் போது ஏற்படும் புகையையும், துர்நாற்றத்தையும் தாங்க முடியாது பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் அவரைப் பற்றி புகார் செய்து ஊரை விட்டே துரத்தினார்கள். அவரும் ஊரை வெறுத்து நியூயார்க் வந்து சேர்ந்தார். அங்கும் ஆய்வை விடவில்லை. 

  ஒரு நாள் ரப்பரோடு சல்பரையும், கந்தகத்தையும் கலந்து புதிய ஆய்வை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கரைசலில் கொஞ்சம் சூடாக இருந்த அடுப்பின்மேல் கொட்டிவிட்டது. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது தனது ஆய்வில் மும்முரமாக இருந்தார். இறுதியில் அடுப்பை சுத்தம் செய்யும் பொது சிந்திய ரப்பர் கரைசலை பெயர்த்து எடுத்தார். 


  என்ன ஆச்சரியம்..!

  ரப்பரின் பிசுபிசுப்பு இப்போது இல்லை. ஒரு உலோகம் போல கெட்டியாக மாறி இருந்தது. மிருதுவாகவும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் பெற்று இருந்தது. கடுமையான வெப்பத்திலும், கடுங்குளிரிலும் பாதிக்காத நிலையை பெற்றிருந்தது. ரப்பரை பலவிதங்களில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். அதன்பலனாக, ரப்பரை உயர்ந்த வியாபார பொருளாக மாற்றிய வித்தகர் என்ற பட்டத்தை 1844-ல் சார்லஸ் குட்-இயர் பெற்றார். இருந்தாலும் அவரது துரதிருஷ்டம் கடைசி வரை அவரை கொடுமைப் படுத்தியே வந்தது.


  அவருக்கு 'ரப்பரின் தந்தை' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏதேதோ காரணத்தை சொல்லி இவர் அந்நாடுகளில் உருவாக்கி பெரும் வருமானத்தை ஈட்டிய ரப்பர் கம்பெனிகளை பறித்து திவாலாக்கின. தொடர்ந்து இத்தகைய கொடுமைகள் சார்லசுக்கு இழைக்கப்பட்டன.

  அவர் உருவாக்கிய ரப்பர் கம்பெனிகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் பணம் சம்பாதித்தும் கூட எதுவுமே சார்லசை சென்று சேரவில்லை. கடைசியில் தனது 59-வது வயதில் 1860, ஜூலை 1-ந் தேதி இறந்தார். தெருக்கோடியில் நின்ற சார்லஸ் இறக்கும் போது 2 லட்சம் பவுண்டுகள் கடன் சுமையோடுதான் இறந்தார். கடன்காரர் என்ற பெயரோடுதான் உயிர் நீத்தார். இறுதிவரை ரப்பருக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்த அவரை அந்த ரப்பர் கடைசி வரை காப்பாற்றவேயில்லை. அதேவேளையில் அந்த ரப்பரை வைத்தே பல புதிய கோடீஸ்வரர்கள் உருவானார்கள் என்பதுதான் வியப்பான உண்மை.!

  12 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான படைப்பு.

   ‘குட்-இயர்’ என்ற பெயரிலேயே இன்றும் வாகனங்களில் உபயோகிக்கும் ரப்பர் டயர்கள் மிகப்பிரபலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

   கடந்த 150-200 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற எத்தனை வியத்தகு கண்டுபிடிப்புகள் தோன்றியுள்ளன. நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

   சார்லஸ் குட்-இயர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படிக்க மிகவும் வருத்தமாகவும், நம் கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக உள்ளது.

   அவரின் அன்றைய கண்டுபிடிப்புகளால் இன்றும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளோர் கோடிக்கணக்காகவே இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.

   அவருக்கு இதில் எந்தப்பயனும் இல்லையே .... மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது.

   பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இவரைப் போன்று இன்னும் பலர் இருக்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் தங்களின் கண்டுபிடிப்புக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்காமல் பின்னால் அதைவைத்தே மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனவர்கள் நிறைய பேர் உண்டு.

    தங்களின் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. நல்ல தகவல்கள். அவரால் பயன்பட்டவர்கள் பலர் இருக்க, அவர் கடனாளியாகவே இருந்தது/இறந்தது வேதனை.

   பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல். பாருங்கள் அவரது நன்மை இன்று உலகிற்கே பயன்பட்டும் வரும் வேளையில் அவர் கடனாளியாகவே இறந்தது வேதனையாகத்தான் இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிறைய கண்டுபிடிப்பாளர்கள் இப்படி இருக்கிறார்கள்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்