• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், அக்டோபர் 20, 2016

  எனது 33-வது ரத்த தானம்..!  ருவர் ஒருமுறை கொடுக்கும் ரத்த தானத்தில் மூன்று நோயாளிகளை குணப்படுத்தலாம் என்று மருத்துவம் கூறுகிறது. அதனாலே ரத்த தானம் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு சின்ன வயதிலிருந்தே இருந்தது. எனது முதல் ரத்த தானம் கல்லூரி நாட்களில் தொடங்கியது. அப்போதெல்லாம் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான் படித்த மதுரைக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடத்துவார்கள். அதில் விளையாட்டாக கலந்து கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ரத்தம் கொடுத்ததுதான் முதல் அனுபவம். அப்படியே கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் 5 முறை தானம் கொடுத்துவிட்டேன்.

  அதன்பின் ரத்த தானத்தை சுத்தமாக மறந்து போனேன். ஒருமுறை தலசீமியா கட்டுரைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 124 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். தலசீமியா எனபது உயிரைப் பறிக்கும் ஒரு வியாதி. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இதனால் இரண்டு வயதை கடப்பதற்குள்ளே ரத்தசோகையால் குழந்தைகள் மரணத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும்.


  இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமானால் இரண்டு முறைகள்தான் உள்ளன. ஒன்று எலும்பு மஜ்ஜையை மாற்றம் செய்வது. இதற்கு அரசு மருத்துவமனைகளிலேயே 10 லட்சத்திற்கும் மேல் செலவாகும். தனியார் மருத்துவமனைகள் என்றால் நம் மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்..!

  இரண்டாவதாக இன்னொரு சிகிச்சை முறையம் உண்டு. அது குறைந்து வரும் சிவப்பணுக்களை ஈடுசெய்ய புதிய ரத்தம் ஏற்றுவது. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் ஏற்றினால்தான் உயிர் வாழமுடியும். அதற்காக மூன்று ரத்த கொடையாளர்கள் ஒரு குழந்தைக்கு இருப்பார்கள். ஏனென்றால் ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் ரத்த தானம் செய்யமுடியும். சுழற்சி முறையில் தன்னார்வலர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள்.

  இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ரத்தம் ஏற்றும்போது சிவப்பணுக்கள் மட்டும் கூடுவதில்லை கூடவே இரும்பு சத்தும் கூடிவிடுகிறது. வெள்ளை அணுக்களும் கூடிவிடுகிறது. இவற்றை குறைப்பதற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும் காஸ்டலியான சிகிச்சைதான்.


  அப்படியொரு தன்னார்வலராக ஒரு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று எனது பெயரையும் கொடுத்து வந்தேன். ஆனால் அவர்கள் என்னை அழைக்கவேயில்லை. பின் ரத்த தானம் வழங்குபவர்களுக்கு என்றே ஒரு கிளப் இருக்கிறது. அதில் நம் பெயரை பதிவு செய்தால் நம்மை கூப்பிடுவார்கள் என்று நினைத்து அங்கும் பதிவு செய்து வைத்தேன். சொல்லிவைத்தாற்போல் அங்கிருந்தும் யாரும் அழைக்கவேயில்லை. ஒருவேளை என் ரத்தம் யாருக்கும் தேவையில்லையோ என்னவோ..!

  என்னை மேலும் வெறுப்பேற்றும் விதமாக நான் எங்கு சென்று ரத்த பரிசோதனை செய்தாலும் அவர்கள் உங்களுக்கு ஹீமோகுளோபின் 14 இருக்கிறது. ரத்த தானத்திற்கு ஏற்ற ரத்தம். நீங்கள் ரத்த தானம் செய்யலாமே..? என்பார்கள். நான் தயாராகத்தான் இருக்கிறேன் யாரும் அழைப்பதுதான் இல்லை என்பேன். உடனே எங்களுக்கு தேவை என்றால் கூப்பிடுகிறோம் என்று எனது தொலைபேசி எண்ணை வாங்கிக்கொள்வார்கள். நானும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். அழைப்பு மட்டும் வரவே வராது.


  இப்படியே ஒருசில ஆண்டுகள் போனது. ஒருநாள் எனது அம்மா சிறிய சாலை விபத்தில் சிக்கிக்கொண்டார். கையில் எலும்பு முறிவு. அதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். எனக்கும் எனது தாய்க்கும் ஒரே ரத்த வகை 'B' Positive. முகம் தெரிந்த ஒருவருக்கு அதாவது எனது தாய்க்கு ஆறாவது முறையாக ரத்தம் கொடுத்தேன்.


  அன்றிலிருந்து ஆண்டுக்கு மூன்று முறையோ அல்லது நான்கு முறையோ தொடர்ந்து ரத்த தானம் செய்துகொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்கு தான் ரத்தம் அளித்திருக்கிறேன். அதிலும் பெண்களே அதிகம். அவர்களுக்கு ரத்தசோகை இருப்பதால் அடிக்கடி ரத்தம் தேவைப்படுகிறது. இப்படியே 28 முறை நேரடியாகவும், 5 முறை கல்லூரியில் முகாம் மூலமாக, மொத்தம் 33 முறை ரத்த தானம் செய்திருக்கிறேன்.

  ஆரம்பத்தில் தானம் என்பதால் நோயாளிகளின் குடும்பத்தார் ஒரு காபி அல்லது ஜூஸ் சாப்பிட சொன்னால் கூட சாப்பிட மாட்டேன். சில சமயங்களில் ரத்தம் கொடுத்து முடித்தபின் நாவறட்சி ஏற்படும். தாகம் எடுக்கும். அந்த நிலையில் கூட அவர்களிடம் எதுவும் வாங்கி குடிக்காமல் வெகுதூரம் வந்தபின் நானாகவே கடையில் வாங்கிக்கொள்வேன்.

  எனது சமீபத்திய ரத்த தானத்தின் ரிப்போர்ட்
  நண்பர் ஒருவர்தான் அப்படி நடந்து கொள்ளாதீர்கள். அவர்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக கொடுக்கும் ஒரு பழரசத்தை நாம் சாப்பிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. அவர்களுக்கும் மனரீதியாக ஒரு திருப்தி கிடைக்கும். அதனால் நாம் ஒன்றும் தானம் என்ற நிலையில் இருந்து நழுவிவிடுவதில்லை என்று கூறினார். அப்போதிருந்துதான் அதிகமாக வற்புறுத்துவர்களிடம் ஜூஸ் போன்று அவர்கள் வாங்கி கொடுப்பதை அருந்த தொடங்கினேன்.


  ரத்த தானத்தில் நன்மைகள் ஏராளம். முதலில் நமது ரத்தம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் புதிய ரத்தம் உருவாவதால் இதயத்துக்கு நல்லது. புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும், உடல் எடை குறையவும் உதவும் இப்படி பல நன்மைகள் இருக்கின்றன.

  நான் ஆர்வப்பட்ட நாளிலிருந்து ரத்தம் கொடுத்திருந்தால் இந்நேரம் 100 முறையை கடந்திருபேன். பல வருடங்கள் வாய்ப்பில்லாததால் இப்போதுதான் 33-யை தொட்டிருக்கிறேன்.  இன்னும் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. எப்படியும் சதமடித்து விடவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.


  25 கருத்துகள்:

  1. நல்லதொரு பழக்கம் நண்பரே எனக்கு அபுதாபி வந்து சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக இரத்தம் கொடுத்து வரும் பழக்கம் உள்ளது திடீரென ப்ளட் பேங்க் போவேன் இரத்தம் கொடுப்பேன் ஒரு ஜூஸ் மட்டும் தருவார்கள் வாங்கி குடிப்பேன் பணம் வேண்டுமா என்று கேட்பார்கள் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் எனக்கு ப்ளட் கார்டு இருக்கின்றது.
   த.ம.2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தாங்களும் ரத்த தானம் அளிப்பவர் என்ற சேதி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

    நீக்கு
  2. மிகவும் நல்ல செயல். தாங்களும் தங்களைப் போன்ற தன்னார்வம் மிக்கவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே.

   நான் BHEL இல் பணியாற்றிய போது, மூன்று முறை, மூன்று வெவ்வேறு நோயாளிகளின் அவசர அவசியத் தேவைக்காக (1985...1995) நான் என் இரத்தம் கொடுத்துள்ளேன்.

   இரத்தம் கொடுத்தவர்களுக்கு பாலோ அல்லது ஜூஸோ கொடுப்பது வழக்கம் என என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்ற நண்பர் சொன்னார். ஆனால் எனக்கு அதுபோல எதுவும் அங்கு வழங்கப்படவில்லை. நான் அதையெல்லாம் எதிர்பார்த்து அங்கு காத்திருக்கவும் இல்லை என்பது வேறு விஷயம்.

   முதல் முறை நான் இரத்தம் கொடுத்தது, மிகப்பெரிய உயரத்திலிருந்து கீழே பள்ளத்தில் தவறி விழுந்துவிட்ட 13 வயது பரம ஏழைச்சிறுமிக்கு.

   இரண்டாவது முறை கொடுத்தது, மேஜர் ஆபரேஷன் நடைபெற்ற ஒரு 50 வயது அம்மாவுக்கு. அந்த அம்மா அதே BHEL இல் மிகப்பெரிய பதிவியில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரின் மனைவி என்று என்னிடம் பிறகு வேறொருவர் சொல்லித் தெரிய வந்தது.

   மூன்றாம் முறை வேறு யாரோ ஒரு ஆணுக்கு ... அவர் பற்றிய சரியான விபரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

   தங்களுக்குக் கொடுத்துள்ளது போன்றதொரு சான்றிதழ் எனக்கும் கொடுத்திருந்தார்கள்.

   பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க மகிழ்ச்சிக்கொண்டேன், அய்யா!
    தாங்களும் தானம் அளித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.
    தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  3. உங்களின் சிந்தனைகள் போன்றே ரத்தமும் Be positive தானா ?சதம் அடிக்க வாழ்த்துகள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம் நண்பரே, சதம் அடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்..!
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  4. நல்ல செயல். ஒருமுறை ரத்த தானம் செய்ய நேரிட்டபோதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பு இருந்தது எனக்கு முதல் முதலாகத் தெரிந்தது. ஆச்சர்யம் என்ன என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பு நான் சோதனை செய்துகொண்டபோது கூட இல்லாமல் இருந்தது! தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக.. நமது உடலின் கோளாறுகளை ரத்த தானத்தின் போது தெரிந்து கொள்ள முடியும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

    நீக்கு
  5. பலருககு முன்னுதாரணமாக உள்ளீர்கள். பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கள் அய்யா!

    நீக்கு
  6. தங்களின் சீரிய செயல் கண்டு தலை வணங்குகிறேன் நண்பரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. குருதிக்கொடையால் - நமது
   குருதி சுத்தமடையும் - நாம்
   நீடூழி வாழ இடமுண்டு - இதனை
   ஏற்று - எவரும்
   குருதிக்கொடை செய்ய முன்வாருங்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  8. அருமையான பணி - தாங்கள்
   நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  9. நற்செயல் புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகளும்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்