• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், அக்டோபர் 19, 2016

  தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 2


  முந்தைய பதிவை படித்துவிட்டு, இந்த பதிவை தொடரவும்.. படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்..

  முழுமையாக குட்டிகளுக்கு 6 மாதம் முடித்த பின்தான் வெடிகுண்டு பிரிவு, கிரைம் பிரிவு, கஞ்சா பிரிவு என்று பிரிக்கிறார்கள். பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு அததற்கான பயிற்சிகளை தனித்தனியாக கொடுக்கிறார்கள்.

  ராணுவத்தில் நாய்ப்படை
  இப்படி பிரிப்பதற்கு முன்பே மோப்ப சக்தியை அதிகப்படுத்தும் திறனை இந்த குட்டிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். வெகு தூரத்தில் இறைச்சியை ஒரு தட்டில் வைத்துவிட்டு குழம்பு சாறை நெடுக தரையில் ஊற்றிக்கொண்டே வருவார்கள். இதுதான் முதல் பயிற்சி. இந்த குழம்பு சாற்றின் மறுமுனையில் குட்டி நாயை விடுவார்கள். அது அந்த குழம்பு வாசத்தில் நேராக சென்று வெகு தூரத்தில் இருக்கும் தனது உணவை சாப்பிடும்.


  மோப்பம் பிடித்து சென்றால் தனக்கு உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தை இந்தக் குட்டிகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். பயிற்சியின் இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக குழம்பை ஊற்றாமல் இடைவெளி விட்டு விட்டு ஊற்றுகிறார்கள். இதிலும் கொஞ்ச நாட்களில் தேர்ச்சி பெற்றுவிடுகின்றன நாய்கள். இப்படியே இடைவெளியை அதிகரித்துக் கொண்டே போவார்கள். இறுதியாக குழம்பு சாறு எதுவும் ஊற்றாமல் உணவை மட்டும் வெகு தொலைவில் வைத்து விடுவார்கள். உணவு எடுத்துச் செல்லப்பட்ட பாதையில் உணவின் வாசனை இருக்கும். அந்த வாசனையை கொண்டே உணவிற்கும் சரியான இடத்தை கண்டுபிடித்துவிடும்.

  வெடிகுண்டு பயிற்சி
  இது அடிப்படை பயிற்சிகளில் ஒன்று. ஆறு மாதத்திற்குள் குட்டிகள் இதில் நல்ல தேர்ச்சி அடைந்துவிடும். இதன்பின்னர்தான் குட்டிகளை பிரிப்பார்கள். கஞ்சாவுக்கு என்று தேர்ந்து எடுக்கப்பட்ட குட்டிகளுக்கு கஞ்சாவின் வாசனையை முழுமையாக அறிமுகப்படுத்துகிறார்கள். இப்போது சிக்கனுக்கு பதில் அங்கு கஞ்சா இருக்கும். இந்த கஞ்சாவை சரியாக கண்டுபிடித்து எடுத்தவுடன் அந்த குட்டிக்கு விருப்பமான உணவு கொடுக்கப்படும். முகரும் சக்தி அதிகம் பெற்ற குட்டி கண்டுபிடித்தால் நமக்கு பிடித்தமான உணவு கிடைக்கும் என்ற உணர்வில் கண்டுபிடித்தலை அதிகப்படுத்துகிறது.  கஞ்சா எங்கு எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அளவுக்கு அதன் நுகரும் தன்மை அதிகமாகிறது.


  இதேபோல் வெடிகுண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு வெடியுடன் சம்பந்தப்பட்ட பொருட்கள், கெமிக்கல்கள், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரேட், கருமருந்து போன்றவற்றின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள். 

  இதைப்போலவே கிரைம் என்ற குற்றப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிமுகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான பிரத்யேக மனம் உண்டு. அதைக் கொண்டுதான் குற்றவாளிகளை மோப்பநாய்கள் கண்டுபிடிக்க முடிகிறது.

  இப்படியாக ஒரு வயது முடியும்போது குட்டிகள் நன்கு பயிற்சி எடுத்த குற்றங்களை துப்பறியும் திறமைக்கு வந்துவிடுகின்றன. ஒரு வயதில் துப்பறியும் வேலையில் சேரும் நாய்கள் 8 முதல் 10 வயது வரை துப்பறிய பயன்படுகின்றன. அதன்பின் அவற்றின் பார்வை திறன், கேட்கும் திறன், மோப்பத் திறன் குறையத் தொடங்கும். அதனால் அவற்றிற்கு ஓய்வு கொடுத்து விடுகிறார்கள்.


  தினமும் காலை 2 மணி நேரம் இவற்றுக்கு பயிற்சி உண்டு. பயிற்சியில் நாய்களை ஓடவிடுவது, தடைகளை தாண்டுவது போன்றவை கொடுக்கப்படுகிறது. அப்போது கஞ்சா, வெடிமருந்து எங்காவது ஒளித்துவைத்து அதை கண்டுபிடிக்க சொல்கிறார்கள். சரியாக கண்டுபிடித்த நாய்க்கு அது விரும்பும் உணவுப் பொருளை கொடுக்கிறார்கள். தட்டிக்கொடுக்கிறார்கள். பாராட்டுகிறார்கள், கொஞ்சுகிறார்கள். இவற்றில் மதிமயங்கிய நாய் மீண்டும் மீண்டும் இந்தப் பாராட்டுக்காக நன்றாக கடமையை செய்கிறது. எவ்வளவு ஆழத்தில் பொருளை புதைத்து இருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறது.

  கஞ்சா, வெடிமருந்துகள் ஒரே இடத்தில் இருக்கும் பொருட்கள். அதனால் அவற்றை சுலபமாக நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. ஆனால், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளி அங்கே இருப்பதில்லை. குற்றம் செய்துவிட்டு எங்காவது தப்பி ஓடிவிடுவான். அவனை கண்டுபிடிப்பது கிரைம் பிரிவு மோப்ப நாய்களுக்கு சவாலான ஒன்று.


  குற்றவாளி அங்கில்லாவிட்டாலும் அவனது பிரத்யேக வாசனை மட்டும் அங்கே இருந்து கொண்டே இருக்கும். அவன் சென்ற இடமெல்லாம் அந்த வாசனையும் இருக்கும். குற்றவாளியின் வாசனை, அவன் விட்டுச்சென்ற பொருட்கள், கையால் தொட்ட இடம் போன்றவற்றில் இருக்கும். அந்த வாசனையை நன்றாக நுகர்ந்த பின் வேறு எந்த வாசனையாலும் மோப்ப நாயின் வாசனைத் திறன் தடைபடாது. அந்த வாசனையை தொடர்ந்து கொண்டே நாய் செல்லும்.

  சம்பவ இடத்தில் குற்றவாளியின் வாசனை நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. தட்பவெப்ப நிலையைப் பொறுத்து மாறும். வெயில் நிறைந்த கோடைகாலமாக இருந்தால் இரண்டு நாட்கள் வரை இருக்கும். மழைக்காலம், குளிர் காலம் என்றால் வாசனை நான்கு நாட்கள் வரை இருக்கும். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் மோப்ப சக்தியால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது. கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசம் என்றால் குற்றவாளியின் வாசனை ஒரு வாரத்துக்கு இருக்கும். அதனால்தான் குற்றம் பற்றிய தகவல் தெரிந்தவுடன் முதலில் அந்த இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்படுகின்றன.


  பொதுவாக மோப்பநாய்கள் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டால் போதும் அவனை கடித்து பிடிக்கத்தான் முயற்சிக்கும். அப்படி கடித்து, காயம் ஏற்பட்டுவிட்டால் அதுவே காவல்துறைக்கு எதிரான தனி வழக்காக மாறிவிடும். அதனால் குற்றவாளியை நாய் கடிக்க செல்லும்போது காவலர்கள் "ஸ்டே..!" என்று உரக்க கட்டளையிடுவார்கள். அடுத்த நொடியே நாய் குற்றவாளியை கடிக்காமல் கவ்வியபடி அப்படியே நின்றுவிடும். இந்த கீழ்ப்படிதல் நிரம்ப இருப்பதால்தான் குற்றவாளி காயம் எதுவும் இல்லாமல் பிடிபடுகிறார்கள்.


  பல குற்றங்களில் மோப்பநாய்களின் செயல்பாடுகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. மோப்பநாய்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவிலும் வருடந்தோறும் போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரை மாநகர காவலிலுள்ள அழகர் என்ற துப்பறியும் நாய் இந்தப் போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் முதலாவது இடத்தில் வந்து சாதனை படைத்துள்ளது. கண்ணகியும் தொடர்ந்து ஐந்து முறையாக மாநில அளவில் பரிசை பெற்றுள்ளது.


  இந்த நாய்களுக்கு காலையிலும் இரவிலும் அரை லிட்டர் பாலும், டானிக்கும் கொடுக்கப்படுகிறது. மதிய வேளையில் அரை கிலோ இறைச்சியும் சாதமும் சேர்ந்து கொடுக்கிறார்கள். இதுதான் இவற்றின் உணவு. சின்ன உடல் நலக்குறை என்றாலும் இதற்கென்று சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

  துப்பறிவதில் மட்டுமல்ல, வளர்ப்பவர்களின் மன உணர்வை புரிந்து கொள்வதிலும் இந்த நாய்கள் கில்லாடிகள். வீட்டில் இருந்து ஏதோ மனவருத்தத்திலோ கோபத்திலோ வந்திருந்தால் இவைகள் அமைதியாக இருக்கும். அதுவே சந்தோஷமான மனநிலையில் இருந்தால் நாய்களும் மகிழ்ச்சியாக விளையாடும்.


  "வேலையின் காரணமாகத்தான் இந்த நாய்களை நாங்கள் வளர்க்கிறோம். ஆனால், ஒருநிலையில் எங்களைவிட்டு அவைகளோ அல்லது அவைகளை விட்டு நாங்களோ பிரிந்திருக்க முடிவதில்லை. ஓரிரு நாட்கள் விடுமுறையில் சென்றால் கூட எப்போது நாயை பார்ப்போம் என்ற ஏக்கம் ஏற்படும். எங்களை காணாது அவைகளும் உற்சாகம் இழந்து காணப்படும். இந்த நாய்கள் எங்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டது." என்கிறார்கள் இவற்றை கவனித்து வளர்க்கும் காவலர்கள். 

  இந்த நாய்கள் மூப்பின் காரணமாக மோப்பத்திறன் குறைந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும். அவைகள் தொடர்ந்து இங்கு பராமரிக்கப்படுகின்றன. அதன் மரணம் வரை அவற்றுக்கான எல்லா தேவைகளும் இங்கு நிவர்த்தி செய்யப்படுகின்றன. இது கிட்டத்தட்ட ஓய்வூதியம் போல அதன் வாழ்நாள் முழுவதும் நல்ல உணவும் நல்ல மருத்துவமும் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதுதான் அந்த மோப்பநாய்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் கூட..!


  34 கருத்துகள்:

  1. உண்மைதான் சேவை செய்வதிலும் கடித்து குதறுவதிலும்........இவர்களிடமிருந்து தப்ப முடியாததான்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  2. மனிதன்தான் வயிறுக்காக எதைஎதையோ செய்கிறான் என்றால் ,நாய்களும் அப்படித்தானா :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எல்லாமே வயிற்றுப பொழைப்புக்குத்தானே அது மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  3. அருமை ஐயா.வார்த்தைகளே இல்லை.நானும் ஒன்றை வளர்கிறேன்.ஆனால் அது திருட யாராவது வந்தால் இது இங்க தான் இருக்கு என்று காட்டிக் கொடுத்துவிடும் ஐயா.அவள் பெயர் ஹனி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. திருடனுக்கு உதவும் அந்த ஹனிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.
    வருகைக்கு நன்றி வைசாலி!

    நீக்கு
  4. மோப்ப நாய்கள் + அவற்றிற்கான பயிற்சிகள் பற்றி மிகச்சரியான அலசல் கட்டுரை. படித்து வியந்து போனேன். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  5. சுவையான தகவல்கள்! ஒளித்து வைக்கப்பட்ட பொருட்களை மோப்ப நாய் கண்டுபிடித்தவுடன் அதற்கு விருப்பமான உணவை அளிப்பதன் மூலம் தொடர்ந்து இப்படிக் கண்டுபிடிக்கப் பழக்குகிறார்கள் என்பது மட்டும்தான் இதுவரை தெரியும். ஆனால், குழம்புச் சாற்றை ஊற்றி முகர்ந்து பார்க்கச் சொல்லிப் பயிற்சி அளிக்கும் முறையெல்லாம் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.

   கடைசிப் பத்தி நெகிழ வைத்தது! மனிதர்களும் நன்றியுடையவர்களே இல்லையா!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  6. முடிவில் சொன்ன விடயத்தில் மனிதன் உயர்ந்து நிற்கின்றான் வேலை முடிந்து விட்டதென்று அதை வெளியேற்றி விடாமல் இருக்கும் காவல்துறைக்கு ஒரு சபாஷ்
   த.ம.5

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுதான். நன்றிக்கடன்!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. “ஐந்து பெரிது, ஆறு சிறிது” எனும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவில் வருகிறது...த.ம.6

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஐந்து தான் பெரிதென்று இங்கு நிரூபணமாகியிருக்கிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  8. வணக்கம்.

   கற்பித்தலில் முறையில் மாணவர்களை ஊக்கப்படுத்துவற்குப் பாவ்லோவ் என்றொருவர் நடத்திய சோதனைக் குறிப்பிடுவர்.

   அதையொத்த பயிற்சி முறைகள்.

   த ம 7

   தங்களின் உழைப்பையும் தேடலையும் எண்ணி வியந்து தொடர்கிறேன்.

   நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !

    நீக்கு
  9. துப்பறியும் நாய்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை விளக்கமாக தந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

    நீக்கு
  10. முழுமையாக விவரங்களைத் திரட்டி நுணுக்கமாகத் தந்தமைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

    நீக்கு
  11. புதுப் புது செய்திகள் கொடுத்து அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள் செந்தில்! வேலை முடிந்தவுடன் நாய்களை வெளியேற்றாமல், முதுமையில் கவனிப்பது சிறப்பு!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம், அது மிகவும் நல்ல விஷயம்..!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  12. இவர்களை " நாய் " என்று கூறுவதை விரும்பாதவன் நான் -- பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் -- தோழமை மிக்கவர்கள் -- நன்றி மறக்காத அவர்களை -- இறுதிவரை பராமரிப்பது தான் -- நாம் அவர்களுக்கு காட்டும் -- நன்றி ... !!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  13. பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  14. இரண்டு பகுதிகளையும் இன்று தான் படிக்க முடிந்தது. சிறப்பான ஒரு கட்டுரை. பாராட்டுகள் செந்தில்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்