இந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இதை படித்தால் புரிதலுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்..
ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எப்படி கருப்புப்பணத்தின் முதுகெலும்பாக உள்ளது என்பதை அந்தப் பதிவில் படித்திருப்பீர்கள். அதில் கூறப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் 60.74 % கள்ள நோட்டுகள் என்பதும், 1,000 ரூபாய் நோட்டுகளில் 25 % கள்ள நோட்டு என்பதும் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சொன்ன புள்ளிவிவரங்கள். இப்போது அதன் அளவு இன்னும் கூடுதல்.
பாகிஸ்தானில் இருந்தும் பங்களாதேசத்தில் இருந்தும் தொடர்ந்து கள்ள நோட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த கள்ள நோட்டின் புழக்கம் வட இந்தியாவில் அதிகம். ஒரிஜினல் பணத்தைவிட கள்ளப்பணம் தரமாக இருப்பதே அது சுலபமாக மக்கள் மத்தியில் பரவி விட காரணமாக இருக்கிறது. இதை அரசால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்தநிலையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கள்ளப்பணம் இந்தியாவுக்குள் மீண்டும் புகுந்திருக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு சரியத் தொடங்கிவிடும் என்பதை உணர்ந்தே இந்த அதிரடி அறிவிப்பை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க அற்புதமான நடவடிக்கை.
பெரும்பாலும் இப்படி மக்களிடம் இருந்த பணத்தை அரசு திரும்ப பெறும்போது கள்ளப்பணமும் கருப்புப்பணமும் அப்படியே முடங்கிப்போய்விடும். வெளிவருவதற்கே வாய்ப்பில்லை. இதுவொரு பொருளாதார களையெடுப்புதான். சில அரசியல்வாதிகள் சொல்வதுபோல் கறுப்புப்பணம் ஒழியாது என்பது உண்மையில்லை. கட்டாயம் ஒழிந்திருக்கிறது. ஒரு வருடத்தில் 800 கோடி லட்சம் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் 20 சதவீத வர்த்தகம் மட்டுமே வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. மற்றவை எல்லாமே கருப்பு வர்த்தகம்தான். அப்படியிருக்கும்போது இவ்வளவு பெரிய நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பவர்கள் பொருளாதாரத்தை பற்றி கொஞ்சமும் தெரியாதவர்களாகவே இருப்பார்கள்.
பழைய சினிமாவில் வருவதுபோல் இப்போது யாரும் மெத்தைக்கடியில் கள்ளப்பணத்தை மறைத்து வைப்பதில்லை, என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். பதுக்கும் இடம் வேண்டுமானால் மாறியிருக்கலாம். பதுக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், பதுக்கல் மாறவில்லை.
தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கும் இப்போது பான் எண் கேட்கிறார்கள். அதற்கு அடுத்து நிலங்களில் முதலீடு செய்கிறார்கள். அதுவும் கறுப்புப்பணம் என்கிறார்கள். பத்திரப்பதிவின் போதே அது கணக்கில் வந்துவிடுகிறது. அதில் ஓரளவுக்கு மேல் பதுக்க முடியாது. அப்போது பணமாகத்தான் பதுக்க முடியும்.
நான் ஒரு சாமானியன். எனது வட்டத்துக்குள்ளே மூன்று நபர்கள் பணத்தை வைத்துக்கொண்டு திண்டாடுகிறார்கள். ஒருவர் 25 கோடி, மற்றொருவர் 5 கோடி, இன்னுமொருவர் 1 கோடி. இவர்கள் அந்த பணத்தை மாற்ற என்னென்னவோ முயற்சி செய்கிறார்கள். அவையெல்லாமே தோல்விதான். இதுவே நிறைய கால அவகாசம் கொடுத்திருந்தால் இவர்களும் ஏதாவது ஒரு வழியில் அவற்றை மாற்றியிருப்பார்கள். அதிரடியாக அறிவிப்பதற்கு அதுதான் காரணம். சாமானிய மக்களுக்கு இரண்டு நாட்கள் ஏற்பட்ட இன்னல்களும் மறக்கமுடியாதவைதான்.
ஆனாலும் அரசு முழுமையாக களையெடுக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. பெரும் மதிப்பு கொண்ட பணத்தை முழுமையாக அழிப்பதன் மூலமே கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிக்க முடியும். அதை ஒழிக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மீண்டும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி கறுப்புப் பணத்திற்கும் ஹவாலா மோசடிக்கும் எளிமையான பாதையை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
ஆக, நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன் எனது முந்தைய பதிவில் பின்னூட்டம் இட்டதுபோல் மோடிக்கு பெரும் பணக்காரர்களையும் பகைத்துக்கொள்ள விருப்பமில்லை. அதேவேளையில் சாமானிய மக்களிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையாக தான் இது இருக்கிறது.
இனி ஒரு கோடி பணத்தை பதுக்கிய இடத்தில் இரண்டு கோடியை பதுக்கி வைக்கலாம். 1,000 கோடி இருந்த இடத்தில் இனி 2,000 கோடியை தாராளமாக வைக்கலாம். கறுப்புப்பணம் இனி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. வருங்காலத்தில் மிகப் பெரிய கருப்புப்பண சாம்ராஜ்யம் மீண்டும் உருவாகும். இன்னுமொரு 20 வருடத்தில் மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகளை மக்களிடமிருந்து அரசு திரும்ப பெரும்.
பரிவர்த்தனை அட்டைகள் மூலம் பண பரிமாற்றம் நடந்தால் மட்டுமே கருப்புப்பணத்தை குறைக்க முடியும்.
தற்போது சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடும்
'பிச்சைக்காரன்'
படத்தின் வசனம்
அட்டைகள் அவசியம் ...
பதிலளிநீக்குஒரே பிரச்னை தினக் கூலிகள் எப்படி அந்த ஊதியத்தை பெறுவார்கள்..
ஒரு பண மாற்று எந்திரம் அவசியம்
எல்லோருமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு சென்றுவிட்டால் அட்டைகள் ஓரளவுக்கு பணத்தை கட்டுப் படுத்தும்
தம +
1,000 ரூபாய்க்கு கீழான மதிப்பு கொண்ட பொருட்களை ரொக்கமாகவே வாங்கலாம். இது சிறு வியாபாரிகளை பாதிக்காது. அதற்கு மேல் மதிப்பு கொண்ட பொருட்கள், கூலி போன்றவற்றை கார்டு மூலமே தரவேண்டும் என்ற நடைமுறை வந்தால் கறுப்புப்பணம் கண்டிப்பாக குறையும்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
அட்டைகள் வந்துவிட்டால் எல்லாமே கணக்கிற்குள் வந்துவிடும். சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்தான். ஆனால் இப்போது சிறு மளிகைக்கடைக்காரர்கள், பல்பொருள் விற்கும் கடைக்காரர்கள் கூட அட்டை தேய்க்கும் முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். கஸ்தூரி அவர்கள் சொல்லியிருப்பது போல் தினக்கூலிகளுக்குக் கொடுக்கப்படும் ஊதியம்...தினக்கூலிகளும் கூட வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை கூடிய சீக்கிரம் வந்துவிடும். மட்டுமல்ல ஸ்மார்ட் கார்ட் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதே. அமெரிக்காவில் இருக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணைப் போல வந்துவிட்டால் அந்த எண்ணைப் போட்டாலே நம் வரலாறு வந்து விடும்!!!! ஆதார், ரேஷன் என்பதற்குப் பதிலாக எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு எண் அட்டை - ஸ்மார்ட் கார்ட் வந்துவிட்டால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஆனால் எல்லாமே கணினி வழியாகத்தான் என்பதால் நம்மூரில் கொஞ்சம் கால அவகாசம் வேண்டிவரும். ஏழை எளியோர் அதிகம் என்பதால்...
நீக்குகீதா
அருமையான பதிவு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்கு2000 ரூபாய் நோட்டை புதிதாக அறிமுகபடுத்துவது ஏமாற்றமே.
வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குரூ.2000 அறிமுகம் என்பதே நினைத்தேன். தற்போது தங்கள் பதிவு மூலம் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
நீக்கு2000 ரூபாய் நோட்டு தேவையில்லை என்றே தோன்றுகிறது...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குநல்ல அலசல்..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ!
நீக்குவிரிவான விளக்கம் அருமை நண்பரே முடிவில் சொன்னீர்களே அதுதான் ஸூப்பர் இதைத்தான் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்த ''கனவில் வந்த காந்தி'' பதிவில் சொல்லி இருந்தேன் பரிவர்த்தன அட்டைகள் அவசியமே பாமரனுக்கும்.
பதிலளிநீக்குத.ம.
நீங்கள் தீர்க்கதரிசி நண்பரே!
நீக்குசுவிஸ் வங்கி பணத்தை கண்டுகொள்ளாமல்
பதிலளிநீக்குசுரக்கு பைல கை வைத்த கொடுமை.
இதுக்கு இவ்வளவு பில்டப் தேவையா.....
இது கறுப்புப் பணத்தைவிட கள்ளப்பணம் ஒழிப்பதற்கான நடவடிக்கையே, அதில் அரசு வெற்றி கண்டிருக்கிறது.
நீக்குவருகைக்கு நன்றி!
கள்ளப்பணம் ஒழியும் என்ற உங்கள் கூற்று ஏற்க்கதக்கது தான். ஆனால் 2௦௦௦ ரூபாய் வெளியான அன்றே போலி 2௦௦௦ நோட்டுகள் பிடிபட்டதாக நாளேடுகளில் செய்தி வாசித்தோமே...! அது எப்படி சாத்தியம்....! இனிமேல் 2௦௦௦ ரூபாய் கள்ள நோட்டுகள் அடிக்கப்பட்டால் , பெரும் பண மதிப்பால் பாதிக்கப்படுவது நாம் தானே....விசேசித்த எந்த பாதுகாப்பு அம்சமும் புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டில் இல்லை என்று மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் தெரிவித்து உள்ளார்கள். மொத்தத்தில் இது பெயர் வாங்குவதற்காக நடத்தப்பட்ட அரசியல் நாடகமே....
நீக்குநீங்கள் சொல்வது சரியே. 2000 ஆம் ரூபாய் தாளை திரும்பவும் வெளியிடுவதன் மூலம் கருப்புப் பணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா!
நீக்குவருகைக்கு நன்றி!
இது வீட்டைச் சுத்தப்படுத்துவது போன்றது. இன்னும் 5 வருடத்தில் மீண்டும் ஒருமுறை எல்லா 500, 1000, 2000 நோட்டுக்கள் செல்லாது என்று திடுதிப்பென்று செய்யவேண்டும். 95%க்குமேல் பணப்பரிவர்த்தனைகள் வங்கிகளின்மூலம் செய்யப்படும்வரை இது நடக்கவேண்டும். ஆயுதபூஜைக்கு வண்டியைச் சுத்தப்படுத்துவது ஆயுளுக்கும் வண்டியில் குப்பை சேராது என்பதற்கல்ல.
பதிலளிநீக்குஅவ்வப்போது சுத்தப்படுத்தினால் தான் வீடும் நன்றாக இருக்கும் நாடும் நன்றாக இருக்கும்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
கருப்பு பணம் மீண்டும் வருமா? பயமுறுத்துகிறீர்களே..?
பதிலளிநீக்குகண்டிப்பாக வரும். அதில் சந்தேகமே இல்லை. அதற்குத்தான் அரசும் வழிவகுத்திருக்கிறது.
நீக்குவருகைக்கு நன்றி சகோ!
அருமையான கட்டுரை! நன்றி!
பதிலளிநீக்குபணத்துக்குள்ள gps tracking இருக்காமே
பதிலளிநீக்குஉண்மையா
அதெல்லாம் சுத்தப் பொய். ஒரு 2,000 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு வெறும் ரூ.3.11. மிக மலிவு. இதில் எப்படி ஜிபிஎஸ் வைக்க முடியும். எல்லாம் நமது சமூக இணையதள நண்பர்கள் பரப்பிவிட்ட வதந்தி. அவ்வளவுதான்.
நீக்குஇணைய தள நண்பர்கள் இல்லை ஐயா...! தமிழக பிஜேபி கொள்கை பரப்பு செயலாளர் திரு எஸ்வி சேகர் பேசியதை நீங்கள் கேட்கவில்லையா...? சிப் ஆனால் கிடையாது...
நீக்குபணத்துக்குள்ள gps tracking இருக்காமே
பதிலளிநீக்குஉண்மையா
அதெல்லாம் சுத்தப் பொய். ஒரு 2,000 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு வெறும் ரூ.3.11. மிக மலிவு. இதில் எப்படி ஜிபிஎஸ் வைக்க முடியும். எல்லாம் நமது சமூக இணையதள நண்பர்கள் பரப்பிவிட்ட வதந்தி. அவ்வளவுதான்.
நீக்குஇதையேதான் நானும் கேட்டேன்!2000ம் நோட்டு எதற்கு!?
பதிலளிநீக்குஉண்மைதான் அய்யா!
நீக்குபுதிய 2000 ரூபாய் நோட்டுகளில் மைக்ரோ நானோ சிப் பொருத்தியிருக்கிறார்கள் என்ற தகவல் பரவலகவே பலரால் இன்று பேசபடுகிறது. அது உண்மையல்ல என்பதை அரசு தெளிவாக சொல்ல வேண்டும். கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் புதிதாக 2000 பெரிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்வது சரியல்ல.
பதிலளிநீக்குஅரசு எங்கேயும் அப்படியொரு அறிவிப்பை வெளியிடவேயில்லை. நம் மக்கள் அவர்கள் பங்குக்கு கட்டிவிட்ட கதை. சக்திகாந்த தாஸ் கூட இதை மறுத்திருக்கிறார். எந்த சிப்பும் 2000 ரூபாய் நோட்டில் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
நீக்குநண்பரே! நாட்டு நடப்பு, பொருளாதாரம் போன்ற பலவற்றைப் பற்றியும் என்னை விடப் பன்மடங்கு அறிந்த நீங்கள் என்னுடைய ஒரு கருத்தைத் தங்கள் கட்டுரையில் மேற்கோள் காட்டி எழுதியிருப்பதைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி!
பதிலளிநீக்குஆனால் இதே கருத்தை, என் தம்பி தன் அலுவலக நண்பர்களிடம் (பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள்) கேட்டதில் வேறுவிதமான பதில் கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தாள் சிறிதளவுதான் வெளியிடப்பட்டுள்ளதாம். இனி அதை வெளியிடும் எண்ணம் அரசுக்கு இல்லையாம். அதாவது, வெறும் 1000, 500, 100 பணத்தாள்களால் இத்தனை இலட்சம் 500, 1000 ரூபாய்ப் பணத்தாள்கள் இருந்த இடத்தை நிரப்புவது கடினம் என்பதால், மக்கள் திரும்பக் கொடுக்கும் பணம் உடனே அவர்களுக்குத் திருப்பிக் கிடைக்க வேண்டும் என்பதால் தற்காலிகமாக 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்பது போல அவர்கள் கூறுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை? இதுவும் மீநுண் தொழில்நுட்பச் சில்லு பற்றிய தகவல் போலத்தானா? அப்படியே இஃது உண்மையாக இருந்தாலும், ஆக மொத்தம் 2000 எனும் மதிப்பில் பணத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது எனும்பொழுது தற்பொழுதைய அரசு இனி 2000 ரூபாய்த் தாள்களை அச்சிடாவிட்டாலும், இனி வரும் அரசுகள் அவற்றை அச்சிடாமல் இருக்கும் என்பது என்ன உறுதி? எனில், இந்தப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன் 2000 ரூபாய்ப் பணத்தாள்களையும் திரும்பப் பெறப் போகிறதா மோடி அரசு? கேள்விகள் நிறைய...
Modi must address the oppsitions grievances to avoid further political escalation of an
பதிலளிநீக்குeconomic policy shift
Otherwise it it indeed takes another six months for the situation to normalise then the govts declared zeal to battle corruption will only be remembered for PUBLIC FURY and crippling INDIAS ECONOMIC GROWTH.
நண்பரே/சகோ நல்ல முயற்சி. பார்க்கப் போனால் முடக்கப்பட்டவை வெளியில் வந்துள்ளன என்பது உண்மையே. அதில் வெற்றிதான்!
பதிலளிநீக்குஇனியும் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்க வேணுட்ம் அப்படியானால்தான் இந்த முயற்சி இன்னும் வெற்றி பெறும். அவ்வப்போது பணத்தைத் திரும்பப்பெற்றுச் சுத்தப்படுத்தல் அவசியமே. ஆனால் இந்த அரசிற்குப் பிறகு அது வரும் அரசைப் பொறுய்த்தது இல்லையா....
துளசி, கீதா
கருத்துரையிடுக