Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தடை செய்யப்பட்ட தஸ்லிமாவின் 'லஜ்ஜா'..!


லகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் தஸ்லிமா நஸ்ரின். வங்கதேசத்தில் ஆகஸ்ட் 25, 1962-ல் பிறந்தவர். 1984-ல் மிமென்சிங் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலைபார்த்து வந்தார். அதோடு இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளையும் புதினங்களையும் எழுதி வந்தார். இவைபோக பத்திரிக்கை நிருபராகவும் பணியாற்றினார். இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 

தஸ்லிமா நஸ்ரின்
அந்தக் காலக்கட்டத்தில்தான் அதாவது 1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் இஸ்லாமியர்களின் புனிதமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் தாக்கம் வங்கதேசத்தில் பற்றி எரிந்தது. சிறுபான்மையாக இருந்த இந்துக்கள் மதவெறியர்களால் தாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் பிடுங்கிக்கொள்ளப்பட்டன. பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். இவை எல்லாவற்றையும் வேதனையோடு கவனித்துக் கொண்டிருந்த தஸ்லிமா மூன்று மாதம் கழித்து இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும் துன்பங்களையும் அடிப்படையாக வைத்து 'லஜ்ஜா' என்ற தலைப்பில் வங்காள மொழியில் ஒரு புதினத்தை எழுதி வெளியிட்டார். வெறும் 7 நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்தார். அப்போது நஸ்ரினின் வயது 31. 


'லஜ்ஜா' என்ற வார்த்தைக்கு வெட்கம், அவமான விஷயம் என்று அர்த்தம் உண்டு. வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து, அந்த நாட்டையே தாய்நாடாக கொண்ட அந்த நாட்டு மக்களுடன் உணர்வும் சதையுமாக இணைந்து வாழ்ந்த ஒரு குடும்பம் அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழிக்கப்பட்டதை சொல்வதுதான் கதை. வங்கதேசத்தில் மட்டும் 6 மாதத்தில் 60 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியது. இதில் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக நஸ்ரினுக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

அந்த நாவலின் கதை இதுதான்.

பலதலைமுறைகளாய் பங்களாதேஷில் வாழ்ந்து வரும் ஒரு இந்து குடும்பம், சுத்தமோய் தத்தாவினுடையது. அவருக்கு கிரோன்மோயி என்ற மனைவியும், மாயா என்ற மகளும் சுரஞ்சன் என்ற மகனும் இருந்தனர். சுத்தமோய் ஒரு மருத்துவர். அங்கு வாழும் மக்களுக்காக பல கடினமான வேலைகளை செய்து உயிருக்கு போராடும் பலரையும் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். நோய்களை தீர்த்து மக்களின் இன்னல்களை போக்கியிருக்கிறார். 

அவர் வாழும் பகுதி முழுவதும் இஸ்லாமிய மக்களே நிறைந்திருந்தனர். மதபேதம் அவர்களிடம் இல்லை. முஸ்லிம்கள் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி அன்பு செலுத்தினர். 

திடீரென்று ஒரு நாள் மதக் கலவரம் வெடிக்கிறது. இஸ்லாமிய மதத் தீவிரவாதிகள் சிறுபான்மை இந்து மதத்தினரை அடித்து துன்புறுத்தினர். கொலையும் செய்தனர். ஆனாலும் சுத்தமோய் கொஞ்சமும் பயப்படவில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் தன்னை சுற்றியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் சிறிய ஆபத்து கூட நேராமல் பார்த்துக்கொள்வார்கள் என்று முழுமையாக நம்பினார். 

கலவரம் உச்சக்கட்டம் அடைந்தபோது மதத் தீவிரவாதிகள் சுத்தமோய் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவருடைய மனைவி மக்களையும் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார்கள். நடுத்தெருவில் நிற்கும்போது கூட 'இந்த நிலை நிரந்தரமானது அல்ல. இஸ்லாமிய நண்பர்கள் என்னுடைய வீட்டை மீட்டுத்தருவார்கள்' என்று அவர் நம்பிக்கையோடு இருந்தார். 

அந்த கலவரத்தின்போது அங்கு வாழ்ந்து வந்த இந்து மக்கள் வேறு வழியில்லாமல் தங்கள் நிலம், வீடு, சொத்து அனைத்தையும் விட்டுவிட்டு தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்தார்கள். கிரோன்மோயி தனது கணவரிடம் நாமும் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்று விடுவோம் என்று நச்சரித்து வந்தார்.

தத்தா அதை ஏற்கவில்லை. 

"நான் இங்கு நீண்ட காலமாக டாக்டராக பணியாற்றி வருகிறேன். இங்கு வாழ்ந்து வரும் மக்களின் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்தியிருக்கிறேன். நமக்கும் நம் குடும்பத்துக்கும் இந்த முஸ்லிம் சகோதரர்கள் கட்டாயம் பாதுகாப்பு கொடுப்பார்கள். நீ பயப்படாதே..!" என்று கூறி மனைவியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். 

அடுத்த நாள் ஏழு மதத் தீவிரவாதிகள் தத்தாவை தாக்கிவிட்டு அவருடைய 21 வயது மகள் மாயாவை பலவந்தமாக கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். அவளது அண்ணன் சுரஞ்சன் தனது நண்பன் ஹைதரை அழைத்துக்கொண்டு டாக்கா நகரம் முழுவதும் தங்கையை தேடுகிறான். அவள் கிடைக்கவேயில்லை. மாயா பலரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாள் என்று நாவல் உணர்ச்சிப்பூர்வமாக போகிறது.


நஸ்ரின் தனது புத்தகத்தில், "அவன் தன் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்தான். ஆனால், அவன் திடீரென்று வேண்டப்படாதவனாக மாறிவிட்டான். பிறந்து வளர்ந்த தன் சொந்த நாட்டிலேயே அவன் வேறு நாட்டைச் சேர்ந்தவனாக கருதப்பட்டான். அவனிடமிருந்து உதவி பெற்றவர்கள் கூட அவனை காப்பாற்ற முன்வரவில்லை. அவன் நாதியற்றவனாக சட்டென்று மாறிப்போனான்."  

"எந்த ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை நம் மதத்தை சேர்ந்த சில தீவிரவாதிகள் துன்புறுத்தி வருகிறார்கள். பெண்களை அவமானப் படுத்துகிறார்கள். இந்த அவலத்தைத் தான் என்னுடைய புத்தகம் லஜ்ஜா விவரிக்கிறது. உண்மையில் நாம் நம் செய்கைகளுக்கு வெட்கி தலை குனிய வேண்டும்." என்று நஸ்ரின் கூறினார். 

'ஸ்டேட்ஸ்மேன்' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் "குரானில் தவறுகள் நிறைந்திருக்கின்றன. அவை திருத்தப்பட வேண்டும்." என்று நஸ்ரின் பேட்டி கொடுத்தார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த பங்களாதேசமும் பற்றிக்கொண்டது. மத வெறியர்கள் நஸ்ரினை திட்டி தீர்த்தார்கள். ஃபாத்தா அறிவித்தார்கள். நஸ்ரினை கொல்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என்றார்கள்.

1993, செப்டெம்பர் 24-ந் தேதி காலை ஆங்கில செய்தித்தாளை பிரித்துப் பார்த்த நஸ்ரின் உறைந்து போய்விட்டார். அதில் நஸ்ரின் படத்தை பெரிதாக வெளியிட்டு அதன் கீழே 'இஸ்லாம் மதத்தின் கடவுளை தெய்வ நிந்தனை செய்ததற்காக நஸ்ரினை தேடிக் கண்டுபிடித்து கொன்று விடும்படி இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது.' என்றிருந்தது. 


மதத் தீவிரவாதிகளை பகைத்துக்கொள்ள விரும்பாத பங்களாதேச அரசு 'லஜ்ஜா' புத்தகத்திற்கு தடை போட்டது. நஸ்ரின் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதித்தது. 'லஜ்ஜா' புத்தகம் விற்ற புத்தகக்கடைகள் வன்முறையாளர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. டாக்கா நகர வீதிகளில் தினமும் நஸ்ரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. நஸ்ரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. 

உலக நாடுகள் நஸ்ரினுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி பங்களாதேசத்தை நிர்பந்தித்தன. நஸ்ரின் கொல்லப்பட்டால் வங்கதேசத்துடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வோம் என்றும், பொருளாதார தடை விதிப்போம் என்றும் பல நாடுகள் அறிவிப்பு செய்தன. 

1997-ல் லஜ்ஜா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1999-ல் டில்லியில் வெளியிடப்பட்டது. பின்னர் லஜ்ஜா தடை செய்யப்பட்டது. மதவெறியர்களின் தொடர் மிரட்டலாலும் அவர் தலைக்கு விலை வைத்ததாலும் தஸ்லிமா வங்கதேசத்தை விட்டு வெளியேறி சுவீடன் நாட்டுக்கு சென்றார். 2002-ல் நஸ்ரின் 'அடங்காத காற்று' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.

"குரான், பைபிள், வேதங்கள் போன்றவற்றில் தவறுகள் மிகுந்திருக்கின்றன. குர்ஆன் பெண்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை அடிமைகளைப் போன்று நடத்துவதை அனுமதிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடுகிறது. நமது மதத்தலைவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் என் பேனாவைக் கொண்டு அவர்களோடு போராடி வருகிறேன். அவர்களோ கத்தி, துப்பாக்கி போன்றவற்றைக் கொண்டு நல்லவற்றை அழித்து வருகிறார்கள். எனக்கு என் உயிர் முக்கியமானது அல்ல. என் எழுத்தைக்கொண்டு நான் இந்த அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகிறேன். எனக்கு நியாயம் என்று தோன்றுவதையே நான் எழுதி வருகிறேன். அதற்காக அவர்கள் என்னை கொலை செய்ய விரும்புகிறார்கள். யாரும் என்னை பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது." என்று அடிக்கடி கூறுவார் நஸ்ரின். 

2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் நஸ்ரின் பேசும்போது "குரான் இன்னமும் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று போதித்து வருகிறது. இப்படி தவறான உபதேசத்தை நம்பி வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட ஒரு நாடு எப்படி முன்னேற முடியும்?" என்று கேட்டார். 

வங்கதேசத்து மதத்தலைவர்கள் இவருக்கு வழங்கிய மரண தண்டனை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. நஸ்ரினை கொல்வதற்கு இப்போதும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து கொண்டேதான் இருக்கின்றன.


'லஜ்ஜா' நாவலை தமிழில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.200. விருப்பம் உள்ளவர்கள் கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம்..!

'லஜ்ஜா' தமிழ் ஆன்லைனில்..!



30 கருத்துகள்

  1. ஹிந்து மதத்துக்கு ஆதரவாக எழுதியுள்ள நஷ்ரீன் அவர்களுக்கு ,இந்தியா அடைக்கலம் தர முன் வந்ததா ?அவர் அதை ஏற்க மறுத்தாரா போன்ற விவரங்களையும் சேர்த்து ஒரு பதிவை போடுங்க ஜி ,நான் எதிர்பார்க்கிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்து மதத்துக்கு ஆதரவவாக எங்கே எழுதி உள்ளார்? உண்மையைத்தானே எழுதி உள்ளார். இந்தியா ஆதரவு தருவது போல தந்து விரட்டி விட்டார்கள்.

      நீக்கு
    2. கொஞ்ச நாட்கள் இந்தியாவில் இருந்தார். இந்தியாவும் ஆதரவளித்தது.

      நீக்கு
    3. நண்பர் கருத்து கந்தசாமி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  2. பாகிஸ்தானில் பங்களாதேசில் நடந்த ஹிந்துக்கள் மீதான் வன்முறை பற்றி ஏன் எந்த பகுத்தறிவு வாதிகளும் பேசுவதில்லை. இந்துக்கள் மற்றும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கருத்து கந்தசாமி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  3. லஜ்ஜா.... ஒரு புத்தகம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையை மாற்றிய நிறைய புத்தக ங்கள் இருக்கின்றன. வருகைக்கு நன்றி !

      நீக்கு
  4. வாசிக்க வேண்டிய நாவல்... முடிவில் கொடுத்த இணைப்பிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  5. நல்லா றிமுகம். என்னிடம் இந்தப் புத்தகம் உள்ளது. காரணம் அந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் கே ஜி ஜவர்லால். இவர் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் ஒருவரான கே ஜி கௌதமனின் தம்பி என் உறவினர்!

    இணைப்பு தரும்போது அது தனி ஜன்னலில் திறப்பது போல செட்டிங் வைத்து வெளியிட்டால் வாசிப்பவர்களுக்கு வசதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும் எதிர்ப்பையும் பாராட்டையும் பெற்ற இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் எங்கள் பிளாக் குடும்பத்தில் ஒருவர் என்று அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு கொண்டேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
    2. ஜவர்லால் பற்றி மேலும் சில தகவல்கள். அவரே "இதயம் பேத்துகிறது" என்கிற தலைப்பில் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் இருக்கிறார். தானே இசை அமைத்து, தானே பாடல்கள் புனைந்து, தானே பாடுவார். நல்ல பாடகர். மேலும் நிறைய புத்தகங்கள் அதே கிழக்குப் பதிப்பகத்திலேயே கொடுத்துள்ளார். குறள் கதைகள், ஜென் கதைகள், ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் போன்ற புத்தகங்கள் அவரின் சில படைப்புகளில் சில.

      நீக்கு
    3. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. நஸ்ரின் பிரமிப்பான பெண்புலியாக தெரிகின்றார்,
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  8. மாகத்தான பெண்மணி பற்றிய அருமையான அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  9. துணிச்சலாய் தன் மனதில் தோன்றியதை சொல்லி அதில் உறுதியாய் நின்றவரின் அருமையான அறிமுகமும் விமர்சனமும். வாய்ப்புக்கிடைத்தால் வாங்கிப்படிக்க வேண்டும்.

    நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் துணிச்சலான பெண்தான். அதுவும் மதத்திற்கு எதிராக கருத்துக் சொல்ல மிக மிக துணிவு வேண்டும். அந்த துணிவு அவரிடம் அதிகமாகவே இருக்கிறது.
      வெகுநாட்கள் கழித்து வருகை தந்ததற்கு மிக்க நன்றி நிஷா!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. ஆங்கிலத்தில் இந்நாவலை வாசித்திருக்கிறேன். மாயாவின் முடிவு தெரியாமல் அப்பெற்றோர் அனுபவிக்கும் துன்பம் மிகுந்த வேதனை தரக்கூடியது. அதன் மொழிபெயர்ப்பு வெளியாகியிருப்பதை இப்போது தான் அறிகிறேன். நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி செந்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  12. லஜ்ஜா... அவமானம்...
    அவர் வாழ்வையே மாற்றிவிட்டது... நல்ல தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  13. தஸ்லிமா நஸ்ரின் பற்றியும் அவரது புகழ் பெற்ற நாவலான ‘லஜ்ஜா’ பற்றியும் விரிவாக தந்தமைக்கு நன்றி! அவர் ஒரு மருத்துவர் என்பதை தங்கள் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை