• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், நவம்பர் 30, 2016

  எழுத்துக்கள் உருவான விதம்


  பேச்சு வழக்கை மொழி என்று கூறினர். அந்த மொழியை தொடர்ந்து எழுத்து உருவானது. இந்த எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. கி.மு.4000-ம்  ஆண்டுகளிலேயே களிமண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து தனிப்படுத்தி ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

  காகிதம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக் களிமண்ணைப் பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக் களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவார்கள். அது கீழே விழுந்து உடைந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சென்று சேர்க்கவேண்டும். அதைப் பெற்றுக்கொண்டவர் லேசாக தட்டி உதிர்த்தால் போதும் உள்ளே உள்ள தகவலைப் படிப்பார்கள். 

  பாபிலோனிய களிமண் குறிப்புகள்
  ஆயிரக்கணக்கான குறியீடுகள் வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப் பட்டதால், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், அரசியல், மருத்துவம் போன்ற விஷயங்கள்  தனித்தனி பயிற்சியும் அளிக்கப்பட்டது. எழுத்து என்பது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழுவடிவம் பெற 800 ஆண்டுகள் ஆனது. 

  மொழி மனிதனின் கைவசப்பட்டவுடன் அடுத்தக் கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு.2000-ல் பாபிலோனியர்கள் எழுதிய சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர்கள் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 


  பழமொழிகளைக் கூட பாபிலோனியர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் 'அழகு நிலையம் என்று  ஒன்றிருந்தால் அங்கு கிசுகிசுவும் கூடவே இருக்கும்' என்கிற பழமொழி கிடைத்திருக்கிறது. இன்றளவும் வர்த்தகத்தில் பின்பற்றப்படும் 'வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது' என்ற பழமொழியும் கூட களிமண் குறிப்பில் இருந்து பெற்றதுதான். 

  பாபிலோனியர்களெல்லாம் அப்பவே அப்படி..!
  29 கருத்துகள்:

  1. பழங்காலத்தைப் பற்றியும், எழுத்துக்கள் உருவானது பற்றியும் மிகவும் அருமையான ஆச்சர்யமான தகவல்கள்.

   பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  2. அருமை. செய்திகளை பொறுமையுடன் உள்வாங்கி தமிழ் மக்களுக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளிர்கள்

   பதிலளிநீக்கு
  3. உங்களின் தேடல் வியப்பளிக்கிறது...

   தொடர வாழ்த்துகள்...

   பதிலளிநீக்கு
  4. பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பரே! மாற்றுக் கருத்துடன் வந்திருக்கிறேன்.

   மெசபடோமியாவின் பழமை, சுமேரிய நாகரிகத்தின் பழமை போன்றவையெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்கள். மனித நாகரிகம் மட்டுமின்றி வரலாற்று அறிவும் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. அதன்படி, அண்மைக்கால ஆராய்ச்சிகளின் கூற்று தமிழ்தான் இருப்பதிலேயே மிகவும் பழமையான மொழி என்பதைக் காட்டுகிறது!

   10,000 ஆண்டுகளுக்கு முன்பு - அதாவது மெசபடோமிய எழுத்துக்களின் காலமான கி.மு 4000-க்கு ஏறத்தாழ 4000 ஆண்டுகள் முன்பு - உலகில் பல நதிகள் வறண்டு போனதைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்பு இருப்பதாகவும் எனவே தமிழ்தான் தற்பொழுது பேசப்பட்டு வரும் மொழிகளிலேயே மிகவும் பழமையானது என்றும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற மிர்ரர் இதழில் புளோரா பால்மன் என்பவர் எழுதியுள்ளார். பார்க்க: https://www.quora.com/What-is-the-credibility-of-this-article-stating-that-Kannada-was-root-of-Sanskrit

   இதை உறுதிப்படுத்தும் வகையில், முதற் சங்கம் 4440 ஆண்டுகள், இடைச் சங்கம் 3700 ஆண்டுகள், கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் என்று மூன்று சங்கங்களின் காலத்தைக் கூட்டினால் சரியாக 9990 ஆண்டுகள் வருகிறது. அதாவது, பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி காலத்திலேயே தமிழ் இலக்கியத்தின் வயது 9990 ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றிய இந்தச் சங்கங்கள் உண்மையிலேயே இத்தனை ஆண்டுகள் நீடித்திருந்ததற்குப் போதிய ஆதாரங்களும் உள்ளன!

   ஆம்! தமிழில் சங்கம் வைத்து இலக்கியம் வளர்க்கத் தொடங்கியே பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. எனில், தமிழில் எழுத்து தோன்றிய காலம் எப்பொழுதாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! இன்றைய மீயறிவுக் கணினிகளாலும் அஃது இயலுமா என்பது ஐயத்திற்குரியதே!

   நன் உங்களைக் குற்றம் சொல்லவில்லை. பொதுவாக இருக்கிற வரலாற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். எவ்வளவுதாம் சான்றுகள் இருப்பினும் புதிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகளும் முடிவுகளும் பொது வரலாற்றில் அவ்வளவு எளிதில் இடம் பிடிப்பதில்லை. அதனால் ஏற்படுகிற கோளாறு இது. என்ன செய்ய? நம் வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்காட்டி உலக வரலாற்றில் இருக்கும் தவறுகளைத் திருத்தச் சொல்ல நமக்கு அந்தளவுக்கு ஒன்றும் பன்னாட்டுச் செல்வாக்கு இல்லை. பன்னாட்டுச் செல்வாக்கு உள்ளவர்கள் நமக்காக அவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்யச் சொல்லி வாதிட முன்வருவதில்லை! :-(

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தமிழ்தான் முதல் மொழி என்பதை வைத்து நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன் நண்பரே!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
   2. ஓ அப்படியா! மிக்க மகிழ்ச்சி! இப்பொழுதிலிருந்தே எதிர்பார்ப்புடன் உங்கள் நண்பன்.

    நீக்கு
  5. வியக்க வைக்கும் களிமண் எழுத்துகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  6. தகவல் அருமை ஐயா.இது மட்டுமல்ல மனித இனமே மெசபடோமியாவில் தான் தோன்றினர் என்பதை நான் மதன் அவர்கள் எழுதிய கி.மு,கி.பி நூலைப் படிக்க ஆரம்பித்த போது பல திடிக்கிடும் வரலாற்று உண்மையும் அதன் பின்னணியும் கண்டு வியந்தேன்.தாங்களும் இந்நூல் கிடைத்தால் படித்து பாருங்கள் தங்களுக்கு இதுப் போன்ற பல வியப்பான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

   நன்றி ஐயா.

   பதிலளிநீக்கு
  7. வியப்பான செய்திகள். புதியவை. மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு

   பதிலளிநீக்கு
  8. ஆச்சரியமூட்டும் தகவல்கள்
   அதிசயப்படவைக்கும் பழமொழிகள்
   படங்களுடன் ஒரு அற்புதமான
   பதிவினைத் தந்தமைக்கு
   மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்