Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் தேவாலயம்


ன்னியாகுமரி மாவட்டம் எனக்கு பல அபூர்வ தகவல்களை தரும் ஓர் இடமாகவே இருக்கிறது. அங்குதான் 1300 வருடங்கள் பழமையான மசூதி உள்ளது. அதேபோல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகத்தின் முதல் தேவாலயமும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது என்று தெரிந்தபோது திக்குமுக்காடிப்போனேன். அந்த ஆலயம் இருப்பது திருவிதாங்கோட்டில்.


உடனே மதுரையிலிருந்து நாகர்கோயிலுக்கு பயணமானேன். அங்கிருந்து தக்கலை. தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்தது திருவிதாங்கோடு. இந்த ஊர் முன்னொரு காலத்தில் சேர மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது என்றால் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இன்று அதன் பெருமைகள் மங்கி சாதாரணமான சிறிய ஊராக காட்சித்தருகிறது. ஆனால் இன்றைக்கும் பெருமைப்படக்கூடிய பாரம்பரிய சின்னங்கள் இங்கு இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருவிதாங்கோடு அரப்பள்ளி தேவாலயம்.
"பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்." என்று இயேசுநாதர் கட்டளையிட்டதை ஏற்றுக்கொண்ட அவரது 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் என்ற செயின்ட் தாமஸ் கட்டிய மிகச் சிறிய ஆலயம் இது. புனிதம் அனைத்தையும் தனக்குள் அடக்கியபடி வெகு அமைதியாக காட்சியளிக்கிறது தேவாலயம். 

கி.பி. 53-ம் ஆண்டு புனித தோமையார் இந்தியாவிற்கு வந்தார். கி.பி.63-ம் ஆண்டில் திருவிதாங்கோட்டில் இந்தக் கோயிலை நிறுவினார். கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கும்போது இது தேவாலயம் போல் தெரியவில்லை. கேரள பாணியில் கட்டப்பட்ட ஓர் இந்துக் கோயில் போன்றே தெரிகிறது.


புனித தோமையார் இந்தியாவில் ஏழரை தேவாலயங்களை நிறுவினார். அது என்ன 'அரை' என்கிறீர்களா? கேரளாவில் மாலியங்கரை, பாலையூர், கோக்கமங்கலம், கொல்லம், தங்கசெரி, நிலைக்கல், சாயல் என்ற ஏழு இடங்களில் ஆலயம் அமைத்தவர், எட்டாவதாக திருவிதாங்கோட்டில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். இந்தத் திருத்தலம் மிக சிறியதாக உருவாக்கியதால் இதனை அரப்பள்ளி என்று அழைத்தார்கள். இதை முழுமையாக பெரிய ஆலயமாக உருவாக்குவதால் இதை அரை ஆலயம் என்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தை இப்பகுதியின் புனித மேரிமாதா தேவாலயம் என்றும், தோமையார் கோயில் என்றும், தரீஸா கோயில் என்றும் அழைக்கிறார்கள். இது மிகச்சிறிய கோயில். மற்ற ஆராதனை ஆலயங்களைப் போல் இது இல்லை. 25 அடி நீளமும், 16 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட ஓடுகளால் வேயப்பட்ட சிறிய கோயில். இதன் சுவர்கள் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 2.5 அடி அகலம் கொண்ட வலிமையான சுவர். இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தால் 2000-வது ஆண்டு விழா கொண்டாடப்போகிறது என்பதே இதன் பாரம்பரியத்தை சொல்கிறது.

கோவில் முன் வாசல் அருகே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட காணிக்கை உண்டியல் உள்ளது. கோவிலின் உள்ளே கருங்கல்லினால் செய்யப்பட்ட ஞானஸ்தான தொட்டி உள்ளது. அதேபோல் வெளியிலும் கல்லால் செதுக்கப்பட்ட வட்ட வடிவ கல் நீர்த் தொட்டியும் பாதங்களை கழுவுவதற்கும் பழங்கால தொட்டியும் உள்ளன.


பீடத்தின் வலது பக்க சுவரில் சிறிய சிலுவை செதுக்கப்பட்டுள்ளது. இது புனித தோமையார் தனது கைகளால் செதுக்கியது. இங்கு தோமையாரின் திரு அருளிக்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர இயேசுவின் உருவமோ மாதாவின் உருவமோ படங்களோ அங்கில்லை. அதனால் இது தற்போதைய வழிபாட்டு முறைகள் எல்லாம் தொடங்குவதற்கு முன்பே உருவான தேவாலயம் என்று தெரிய வருகிறது.

பீடத்தின் முன்னால் உள்ள மரப்பெட்டியின் ஒரு கதவில் சாவியை கையிலேந்தியபடி புனிதர் பீட்டரின் உருவமும் மறு கதவில் வாளை ஏந்தியபடி புனிதர் பாலின் உருவமும் காட்சி தருகின்றன. இந்தப் பெட்டி பிற்காலத்தில் போர்த்துக்கீசியர்கள் அன்பளிப்பாக கொடுத்தது. இது மட்டுமல்லாமல் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட சின்ன தூபகலசமும் கொடுத்திருக்கிறார்கள்.


இப்படி பல சிறப்புகள் கொண்ட அரப்பள்ளி தேவாலயம் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. ஒருமுறை திருவிதாங்கோட்டில் கொள்ளை நோய் ஒன்று பரவியது. ஏராளமான மக்கள் இறந்தனர். பலர் ஊரைக் காலி செய்தனர். இதனால் தேவாலயம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. பின்னர் 1927-ல் கவனிக்கப்பட்டு கருங்கல் கூரையைப் பிரித்து ஓடுகளால் கூரையை மேவினார்கள். கூரையின் இடுக்கில் அபாயகரமாக ஓர் ஆலமரம் வளர்ந்திருந்தது. அதன் காரணமாக தான் பழைய கல் கூரையை எடுத்துவிட்டு ஓடுகளால் ஆன கூரையை மாற்றவேண்டிய நிலை வந்தது.

சிறிது காலம் கழித்து மீண்டும் கோயில் கவனிப்பாரற்று போனது. 1941-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பலி பீடமும் மற்ற கட்டடங்களும் கட்டப்பட்டது. கொஞ்ச நாட்களுக்குத்தான் இந்த கவனிப்பெல்லாம் மீண்டும் கோயில் கவனிக்க ஆளின்றி புதர் மண்டியது. இப்படியே மாறி மாறி நடந்து கொண்டிருந்தது.

2007-ம் ஆண்டு புனித தோமையார் உருவாக்கிய ஏழரை கோயில்களும் சர்வதேசத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் உருவாக்கிய அனைத்து தேவாலயங்களும் உலக அங்கீகாரம் பெற்றன. இதனால் அரப்பள்ளி தேவாலயம் புதுப்பொலிவு பெற்றது. புனித தோமையாருடைய நற்செய்தியின் அடையாளமாக திருவிதாங்கோடு இருப்பது சர்வதேச ஆலய அறிவிப்பின் மூலம் உலகின் பார்வைக்கு வந்தது. சர்வதேச நிதி கிடைப்பதால் இன்று அரப்பள்ளி தேவாலயம் மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆன்மிக அன்பர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய பெருமைமிகு ஆலயம் இது.

இது போக கன்னியாகுமரியின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள சின்ன முட்டமும் புனிதம் மிக்கதுதான். புனித தோமையார் வந்து இறங்கிய இடம். தமிழகத்தின் புராதான துறைமுகங்களில் இதுவும் ஒன்று. 300 அடி ஆழம் கொண்ட இயற்கைத் துறைமுகம். இங்கு வந்த தோமையார் 15 அடி உயரம் கொண்ட பெரிய கல் சிலுவை ஒன்றை அமைத்தார். இதை தோமையார் சிலுவை என்கிறார்கள். இன்று பயன்படுத்தப்படும் சிலுவைக்கும் இயேசுநாதர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலுவைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த சிலுவை இயேசுநாதர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலுவையின் அமைப்பிலே உள்ளது.

இங்கு தோமையார் கிணறு இருக்கிறது. இந்தக் கிணற்றின் நீர் கலங்கலாகவும், அசுத்தமாகவும் உபயோகிக்க முடியாததாகவும் இருந்தது. மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி புனித தோமையார் ஜெபித்த போது கிணற்றின் அசுத்தம் நீங்கி சுத்தமான நீர் மக்கள் குடிக்கும் விதத்தில் கிடைத்தது என்ற வரலாறும் இருக்கிறது. அதனால் இந்த நீரை மக்கள் பயபக்தியுடன் உபயோகித்து வருகிறார்கள். இன்றிருக்கும் தேவாலயத்தை தோமையார் பள்ளி என்று வணங்கி வருகிறார்கள்.

சின்ன முட்டத்தின் தோமையார் சிலுவையும் திருவிதாங்கோட்டிலுள்ள அரப்பள்ளியையும் பார்த்தபோது இயேசு கிறிஸ்துவின் விலா எலும்பை தொட்ட கரங்களால் கட்டப்பட்ட இந்த இரண்டு உன்னதங்களும் துன்பங்களை மாற்றி அமைக்கின்ற மிக பெரிய சக்திகொண்ட புண்ணிய தலங்களாக இருக்கின்றன என்பது மட்டும் காலத்தால் மறுக்க முடியாத உண்மை.  




19 கருத்துகள்

  1. 2000 வருடங்கள் முன்பு கிறித்துவம் தமிழகம் வந்திருக்கிறதா என்ன? நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் கிபி 16ல் கட்டப்பட்டிருக்கவேண்டும். அதாவது கிறிஸ்துவின் 16ஆவது வயதில். கொஞ்சம் விவரமான ஆதாரங்கள் தந்தால் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கேள்விக்கான பதில் கட்டுரையில் இருக்கிறது. அதை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக பத்திரிகைகளில் அடுத்து வரும் பெரிய எண்ணை தலைப்பாக கொடுப்பது வழக்கம். இந்த தேவாலயம் கட்டப்பட்டது கி.பி.63-ம் ஆண்டு. இன்னும் 47 ஆண்டுகளில் இது இரண்டாயிரமாவது ஆண்டுவிழாவை கொண்டாடப்போகிறது. அதைத்தான் 2000 ஆண்டுகள் என்று சொன்னேன். சரியாக சொல்வதென்றால் இதன் வயது 1953.

      நீக்கு
    2. யேசு நாதரின் சீடர்களில் ஒருவர் தோமா கொடுங்கல்லூர் பின்பு சென்னை வந்து கிறிஸ்தவம் பரப்பினார் என்ற சான்றுகள் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் போத்திகீஸ் அரசின் நிழலில் அதிகாரத்துடன் நுழைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அதிகார நிழலில் நிலை கொண்டது. கேரளாவில் கானாய, சிரியா போன்ற நாட்டில் இருந்து யூதர்களே குடியேறியிருந்தனர்.

      நீக்கு
  2. ஒரு முறை சென்று வர வேண்டும் தோழர்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக பார்த்து வாருங்கள். ஒரு வரலாற்று ஆவணம் இது. வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. வியப்பிற்குரிய செய்திதான் நண்பரே
    இரணடாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேவாலயம்
    நம்புவதற்கு கடினமாகத்தான்இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. மிகப் பழமையானதோர் தேவாலயம் பற்றிய மிகச்சிறப்பான செய்திகளை தங்கள் பாணியில் கிறிஸ்துமஸ் தினமான இன்று இங்கு மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கட்டுரையை எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. சகோ!! ஆஹா எங்கள் ஊர்!!! சின்ன முட்டம் சென்றிருக்கிறேன்...ஆனால் கிணறு பார்த்ததில்லை...

    என்னுடன் முதுகலை வகுப்பில் திருவிதாங்கோட்டிலிருந்து சேவியர் என்பவர் படித்தார். அவர் இந்தத் தேவாலயத்தைப் பற்றிச் சொல்லி எங்களை அவரது ஊருக்கு அழைத்திருக்கிறார். ஆனால் செல்லும் வாய்ப்பு ஏற்படாமல் போனதால் பார்க்க முடியவில்லை. அப்புறம் அதைப் பற்றி மறந்தே போய்விட்டது. இப்போது தங்கள் பதிவு அதை நினைவுபடுத்தியது. மிக்க நன்றி சகோ..அருமையான பதிவு கிறித்துமஸ் தினத்தன்று. கிறித்துமஸ் வாழ்த்துக்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உங்கள் மூலம் ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன். வட கிழக்கு மாநிலங்களில் பயணித்த போது இப்படி சில பழமையான தேவாலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது.

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கட்டட அமைப்பில் காலத்திற்கேற்றவாறு பல மாறுதல்கள் பெற்று தற்போது இந்நிலைக்கு வந்திருக்கலாம் என நினைக்கிறேன். தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஒரு வரலாற்று ஆவணம்,, அருமையான தொகுப்பு சகோ,,கோயிலின் உட்புற பகுதியின் புகைப்படம் இல்லையா? தாங்கள் சொன்னது போல் கேரளா கட்டமைப்பு ,, அவர்களின் வெற்றியே இது தான் என்று படித்த நினைவு,,,
    தங்கள் பதிவு மூலம் நான் மிக விரும்பும் பயணம் இது,, நன்றி நன்றி,,

    பதிலளிநீக்கு
  10. ஒரு பழமையான தேவாலயம் குறித்த செய்திகளத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. I think this Thoms theology is base to Aseevagam and further to Saivam,?
    Plz reply

    பதிலளிநீக்கு
  12. நல்ல கட்டுரை ஐயா. குமரியில் பிறந்து வளர்ந்த எனக்கு இதைப் பற்றி பல சந்தேகங்கள் உண்டு. அதனால் இது தொடர்பான தகவல்களை தேடிப் பிடித்து வாசித்து வருகிறேன். இந்த ஆலயம் இயேசுவின் சீடரான புனித தோமையார் தான் கட்டினார் என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் இந்த கட்டுரையை எனது முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இத பார்த்த 2000 வருடம் பழமையானது போல தெரியுதா

    பதிலளிநீக்கு
  14. நம்பனும் இல்லையின்னா திட்டுவாங்க. நான் நம்பிட்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை