இயற்கை பேரிடர்களின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாத ஒரு பூகோள அமைப்பிற்குள் தமிழகத்தின் தலைநகர் சென்னை சிக்கியுள்ளது யாவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உலக வெப்பமயமாக்கலுக்கு பின்னர் சூறாவளி புயல், பெரு வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்களின் காரணமாக சென்னையில் இயல்புவாழ்க்கை முடங்கி விடுவது தற்போது வருடாவருடம் நிகழும் நிகழ்வாக மாறியுள்ளது.
வார்தா புயல் 192 கிமீ வேகத்தில் வீசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பயணிகள் பேருந்து கூட காற்றினால் கவிழ்க்கப்படும் காட்சிகளை
காணும் போது புயலின் தாக்கத்தை கண்கூடாக உணரமுடிகிறது. ஆனால் கடந்தாண்டை போல் இல்லாது இந்தாண்டு கடுமையான சூழல்களை எதிர்பார்த்து அரசு காத்திருந்ததாகவே தோன்றுகிறது. உடனடியாக முடுக்கிவிடப்பட்ட நிர்வாகத்தின் கரங்களை காணமுடிந்தது என்பதோடு ஆங்காங்கே சாலைகளை சீர்செய்யும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள முடிந்தது. சுதந்திரமாக செயல்பட்ட முதல்வரும், அமைச்சர்களும் சுற்றிச்சுழன்று சேதங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்ததும், அவ்வப்போது தொலைக் காட்சிகளில் தோன்றி தேவையான விளக்கங்களை அளித்ததும், சமீபத்தில் தமிழகம் காணாத ஒன்று. இயல்பு வாழ்க்கையை பாதித்த வார்தா புயல் கிட்டத்தட்ட 4000 மரங்களை வேரோடு வீழ்த்தி உள்ள தென்றும் எண்ணற்ற மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புயல் காற்று கரை கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே மாநகராட்சி உள்ளிட்ட அரசு அமைப்புகள் உடனடியாக களத்தில் இறங்கி சாலைகளை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது வரவேற்கத்தக்கது. அதேநேரம் மின் விநியோகத்தில் உடனடியாக நிலைமைகளை சீர் செய்யும் வாய்ப்பு குறைவே என்றாலும் கூட, அதிலும் வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை உணர முடிகிறது. கடந்த ஆண்டு அபரிமிதமான வெள்ளம், இந்த ஆண்டு கடுமையான புயல் என இயற்கையின் சீற்றத்தை மாறிமாறி சென்னை சந்தித்து வருவது தவிர்க்க இயலாது என் றாலும் கூட இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை குறைப்பதன் மூலம் தாக்கம் அதிகமாகி விடாது தடுக்க முடியும் என்பதை உணர்தல் அவசியம்.
அதேநேரம் 'கார்டன் சிட்டி' என அழைக்கப்படும் பெங்களூரை போல் சென்னையையும் அழைக்க முடியாது என்றாலும் கூட அது ஒரு முழுமையான கான்கிரிட் காடு என்றும் சொல்ல இயலாது. இந்நிலையில் கிட்டத்தட்ட 4000 மரங்கள் சாய்க்கப்பட்டுள்ளது, இயற்கை ஆர்வலர்களின் கவலையை அதிகமாக்கி உள்ளது. அதிலும் குறிப்பாக வேம்பு, புங்கை, பூவரசு, புன்னை போன்ற நமது மண்ணை சேர்ந்த மரங்கள் அதிக சேதமின்றி தப்பி உள்ள நிலையில் உள்முகர் போன்ற நமது சுற்றுச்சூழலுக்கு சற்றும் பொருத்தமில்லாத மர வகைகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதை காணமுடிகிறது. இதை கருத்தில் கொண்டு புயலின் தாக்கம் குறைந்த பின்னர் பெரிய அளவில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு இந்திய கடற்கரையோர தரைச்சூழல்களை தாங்கி நிற்கும் திறன் கொண்ட மர வகைகளை நிறுவுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். மிகப்பெரும் அளவில் உயிர் சேதம் இல்லையென்றாலும் இந்த
புயலின் காரணமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் சேதங்களை சரி செய்வதோடு, நீண்டகால அடிப்படையிலான இயற்கை பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளையும் விரைந்து நிர்மாணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன்
இதுவும் ஒரு பாடம்...!
பதிலளிநீக்குஇம்முறை அரசு ஆர்ப்பாட்டமில்லாமல்
பதிலளிநீக்குஅமைதியாக அருமையாகச் செயல்படுவதைப்
போலத்தான் உள்ளது
சூழலை படங்களுடன் விவரித்தவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கடந்த வருட இயற்கைப் பேரிடரோடு ஒத்துநோக்கும்போது இம்முறை இதனை கையாண்டவிதம் பாராட்டுக்குரியதாகும்.
பதிலளிநீக்குஅரசுக்குபாராட்டுபதிவுநன்கு
பதிலளிநீக்குஅருயைான பதிவு.நன்று... மரங்லெல்லாம் உதிர்ந்து..ஏதாே இருண்ட காட்டுக்குள் உலவுவதைப்பாேல நடமாடிக்ணெ்டிருக்கிறாேம்...
பதிலளிநீக்குஇயற்கையின் சீற்றம்..... :(
பதிலளிநீக்குகருத்துரையிடுக