Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பணச்சுருக்கமும், மனச்சுருக்கமும்



வம்பர் 8 ஆம் தேதி பிரதமரின் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர்  நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே.


கிட்டத்தட்ட 5.8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணச்சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, புழக்கத்தில் உள்ள பணம் மற்றும் வங்கிகளில் சேமிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது  கையிருப்பு ரொக்கமானது 12.4 சதவிகித சுருக்கத்தை அடைந்துள்ளதாகவும், நவம்பர் 25 ஆம் தேதி வரையில் இதன் மதிப்பு 2.3 லட்சம் கோடி ரூபாய் எனவும், தெரிய வருகிறது. புழக்கத்தில் இருக்கும் தொகை மட்டுமே 16.8 சதவிகிதம் அதாவது  2.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு சுருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கிகள் வாங்கிய டெபாசிட்டுகள் அனைத்தையும் கட்டாய ரொக்க கையிருப்பாக ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு வைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டதன் காரணமாக இந்த பணச்சுருக்கத்தின் அடிப்படையிலான எதிர்மறை விளைவுகள் பெரிதாக இருக்காது என கூறப்பட்டாலும்கூட, கரன்சி சந்தையில் புழக்கத்தைக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிதீவிரமாக முயல்வதை கண்கூடாகத் தெரிகிறது.

ஏற்கெனவே நாள்தோறும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும்  விதவிதமான அறிவிப்புகளினால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளதோடு, வங்கிகளில் பணிபுரிவோருக்கு மிகப்பெரும் அளவிலான மன இறுக்கத்தை தற்போது நாட்டில் நிலவும் பணச்சுருக்கம் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க இயலாது. 


இருந்தபோதும், அனைவரும் மின்னணு பரிவர்த்தனை முறைகளுக்கு மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. கை நிறைய பணம், மனம் நிறைய மகிழ்ச்சி என்ற நிலையிலிருந்து மாறி  வங்கி நிறைய இருப்பு, அட்டை மூலம் செலவழிப்பு என்கிற நிலைக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டியது அவசியமாகியுள்ளதை மறுக்க இயலாது. 

புழக்கத்தில் உள்ள ரூ.17.6 லட்சம் கோடி கரன்சியில் 86 சதவிகிதம் கொண்ட 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டபின் கிட்டத்தட்ட எட்டரை லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள போதிலும், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடி அளவிற்கு புதிய கரன்சியாக பணம் வங்கிகளை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் பணப்புழக்கத்தில் மாபெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவது காலதாமதமாகி வருவதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டாலும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டே இந்நிலையை தோற்றுவித்துள்ளதோ எனவும் அஞ்சப்படுகிறது. 

உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் இந்திய கரன்சி ஆகியவற்றிற்கு இடையேயான விகிதாச்சாரம் 12 சதவிகிதமாக இந்திய பொருளாதாரத்தில் உள்ளது எனவும், இது ஏற்கத்தக்கதல்ல என்றும் கருதும் ரிசர்வ் வங்கி அதனை 8 சதவிகிதத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.  அதாவது வங்கிக்குள் செலுத்தப்பட்ட தொகைக்கு ஈடான புதிய நோட்டுகள் வெளிவராது என்பதுதான் இதன் அர்த்தம். அதற்கு மாறாக மின்னணு பரிவர்த்தனை மூலம் செலவினங்களை மேற்கொள்ள நாட்டு மக்களை  தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதனை ரிசர்வ் வங்கி கருதுவதாகத் தெரிகிறது.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 




9 கருத்துகள்

  1. எந்தவித மாற்றமாயினும் மக்களை தயார்படுத்திவிட்டல்லவா
    திட்டத்தை அறிவிக்க வேண்டும்
    நம் நாட்டில் படிக்க இயலாத மக்கள்இன்றும் பெருமளவில் இருக்கிறார்கள்
    அவர்கள் எல்லாம் எப்படி மாறுவார்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை