Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வாரி வழங்க வங்கிகள் தயார்! வாராக்கடன்களை வசூலிப்பது யார்?


ட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதிலும், கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தில் தளர்வுகளை அனுமதித்துள்ளது வங்கிகளுக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது.


சமீபத்திய டெபாசிட்டுகள் அனைத்தையும் தங்களிடம் கட்டாய ரொக்க கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென நவ.26 ஆம் தேதி அறிவித்திருந்த ரிசர்வ் வங்கி, தற்போது அதை விலக்கிக் கொண்டுள்ளது. அதன் காரணமாக வங்கிகளிடம் டெபாசிட் கையிருப்பு அபரிமிதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் வரத்தில் தொடர்ந்து சங்கடங்கள் நீடித்து வரும் நிலையில், குறிப்பிட்ட கால அளவுக்கு டெபாசிட்டுகளில் பெரும் பகுதி வங்கிகளிலேயே இருக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளது. இத்தகைய டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்பதால், அவற்றை கடன்களாக வழங்கி அதன் மூலம் சம்பாதிக்கவே வங்கிகள் விரும்பும் என்கிற நிலையில், தற்போது வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமே. ஆனால், சந்தை நுகர்வில் மெத்தனப்போக்கு ஏற்பட்டுள்ளதால், தொழில்துறை நடவடிக்கைகள் மந்தமாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.  அதாவது, கடன் வழங்க வங்கிகள் தயார் என்றாலும், வாங்குவதற்கு ஆளில்லை என்கிற  நிலைதான்.  இது ஒருபுறம் இருக்க, கடந்த ஏப்.2013 முதல் ஜூன் 2016 வரையிலான காலகட்டத்தில் ரூ.1.54 லட்சம் கோடி வாராக்கடன்களை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015-16 நிதியாண்டில் மட்டுமே ரூ.56,012 கோடி மதிப்பிலான வாராக்கடன்கள் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டுமே ரூ.15,163 கோடி தள்ளுபடி செய்துள்ளதோடு, ஒட்டுமொத்த வாராக்கடன்கள்  செப்.30 வரையிலான கால கட்டத்தில் ரூ.6,30,323 கோடியாக அதிகரித்துள்ளது.  முதலாவது காலாண்டில் இது ரூ.5,50,346 கோடியாக இருந்த நிலையில், ஒரு காலாண்டில் மட்டுமே கிட்டத்தட்ட  ரூ.80 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வாராக்கடன்கள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

இங்குதான் 2 கேள்விகள் எழுகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் திரட்டப்பட்டுள்ள டெபாசிட்டுகளின் ஒரு பகுதி, கடன் வழங்கலை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் வாராக்கடன்களாக மாறிவிடுமோ என்பது ஒன்று. இன்னொன்று, இதுவரையில் உள்ள வாராக்கடன்களையே வசூலிக்க இயலாத நிலையில், இது புதிய பிரச்சினைகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடாதா என்பது.

வாராக்கடன்களை வசூலிக்க சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எடுத்தே வந்துள்ளன என்றாலும், நிலைமையின் தீவிரத்தை சமாளிக்க அவை போதுமானதாக இல்லை. அதேநேரம், டொபாசிட்டுகளை வங்கிகள் வெறுமனே வைத்திருக்க முடியாது என்பதையும், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்குவது  அதிகரித்தால் மட்டுமே தொழில்துறை உற்பத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதையும், அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி உயர்வு ஆகியவை நிகழும் என்பதால், முற்றிலுமாக அவற்றை தவிர்க்க இயலாது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

இந்நிலையில், நாட்டின் கிராமச்சந்தைகள், அன்றாட காய்கறி, பழங்கள் விற்கின்ற சிறு வணிகர்கள் ஆகியோருக்கு மைக்ரோ பைனான்சிங் முறையிலான மிகக்குறுகிய கால, குறிப்பாக வார அடிப்படையிலான கடன்கள் வழங்குவது குறித்த அமைப்புகளை வங்கிகள் ஏற்படுத்துவது அவசியம் என்றே தோன்றுகிறது.

அடி மட்டத்தில் இத்தகைய பிரிவினரிடம் அதிக வட்டி வாங்கும் கந்து வட்டி நிறுவனங்கள் செழித்து வருகிறதே தவிர, எவையும் வாராக்கடன்களால் மூடப்பட்டதாக தெரியவில்லை.


இத்தகைய குறைந்த வட்டியிலான மைக்ரோ பைனான்சிங், கிராமப்புறத்தில் உற்பத்தி பெருக்கத்தையும், அதன் அடிப்படையில் நுகர்வையும் அதிகரிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும். அதாவது இதுவரையில் வங்கிக்கடன்களுக்குள் வராத ஒரு பிரிவை நியாயமான கடன் நடவடிக்கைகளின் கீழ்கொண்டு வருவது அவசியம்தானே.

எது எப்படியோ, வாரி வழங்க வங்கிகள் தயார். வாராக்கடன்களை வசூலிப்பது யார் என்கிற கேள்வி ஆவேசமான கேள்வியாக மாற அரசும், வங்கிகளும் அனுமதிக்கலாகாது.


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 




5 கருத்துகள்

  1. வாரா கடன்களை வசூலிக்க வங்கிகளை தடுப்பது எது ?அந்த தடைகளை மத்திய அரசுதான் நீக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  2. தெளிவைத் தரும் கட்டுரை
    ஆனால் தெளிவு வர வேண்டியவர்களுக்கு
    வராக்கடன் விஷயத்தில் வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான தெளிவான பதிவு! இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறையவே இருக்கிறது.

    வங்கிகள் கிராமப்புற மக்களுக்குக் கடன் வழங்குவதில் இன்னும் சிறப்புறச் செயலாற்ற வேண்டும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல். மட்டுமல்ல இந்த வாராக் கடன்கள் என்பது எங்கிருந்து என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஏன் அரசு/வங்கிகள் அதனைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை? கந்து வட்டிகளை ஒழிக்க வேண்டுமென்றால் அரசு/வங்கிகள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.

    நல்ல பதிவு சகோ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை