Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வந்துவிட்டது பஞ்சம் வரண்டுவிடலாகாது நெஞ்சம்!


142 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் அளவில் தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போயுள்ளதன் காரணமாக, வரும் கோடை காலத்தில் கடுமையான வறட்சியும், பஞ்சமும் ஏற்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

தமிழகத்திற்குத் தேவையான மழைப் பொழிவில் 40 சதவிகிதத்தை வழங்கும் வடகிழக்குப் பருவமழை 63 சதவிகிதம் பற்றாக் குறையாகியுள்ள நிலையில், வெளிமாநிலங்களிலிருந்தும்  தமிழகத்திற்கு நியாயமாக வந்து சேர வேண்டிய தண்ணீரும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான அணைகளும் வறண்டு போயுள்ளதும் கண்கூடு.


வறட்சியுடன் குடிநீர் தட்டுப்பாடும் கூட பூதாகரமாக வெடிக்கப்போவது நிச்சயம். இந்நிலையில், தண்ணீரிண்றி வாடும் பயிர்களை காணசகிக்காமல் விவசாயிகள் விளைநிலங்களிலேயே தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தமிழகத்தில் அதிகரித்து வருவது  மிக மிக வேதனை தரத்தக்கதாகும். ஓயாத நீதிமன்ற போராட்டத்தின் பலனாக தமிழகத்திற்கு காவிரி நீரை பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வரையில் தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் அடி திறந்துவிட  வேண்டும் என கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் மறுபடியும் உத்தரவிட்டுள்ள போதிலும், அதற்கு கர்நாடகம் செவி சாய்ப்பதற்குரிய அறிகுறிகள் இல்லை என்பதும் வருந்தத்தக்கது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டிய  தமிழக அரசு அரசியல் ரீதியான சூழல்களுக்குள் சிக்கிக்கொண்டு விட்டதோ என்கிற ஐயத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மிக மோசமான வறட்சியைத் தமிழகம் எதிர் நோக்கியுள்ள சூழலில், ஆட்சி ரீதியிலான தீவிர செயல்பாடுகள் அவசியமாகியுள்ளதை யாரும் மறுக்க இயலாது. இதனை உணர்ந்து நிவாரணப் பணிகளை முழு மூச்சாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.


குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகள், மத்திய அரசிடமிருந்து உதவி பெறுவதற்கான திட்டங்கள், வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரும் வகையில் அரசியல் ரீதியான நிர்பந்தம் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பயிரிழப்பின் காரணமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படுவதோடு, அவர்தம் குடும்பத்தில் யாருக்கேனும் அரசுப் பணி வழங்குவது குறித்தும் ஆலோசித்தல் அவசியம்.

பெரும்பாலும் வாங்கிய கடன்களை செலுத்த இயலாததன் காரணமாக ஏற்படும் நிர்பந்தங்களை சகிக்க இயலாமலேயே பெரும்பாலான விவசாய தற்கொலைகள் நிகழ்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.  சிறு விவசாயிகளுக்கு நேரடியான வங்கி கடன் வசதிகள் கிடைக்காத சூழலில், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள் பயிர் கருகிவிடும் சூழலில், கடனுக்காக நிர்பந்திக்கப்படும் சூழல் தொடர்கதையாகவே உள்ளது.


தற்போது பருவமழை பொய்த்துள்ள காரணத்தினால், இத்தகைய தாளமுடியாத கடன் பிரச்சினைகளிலிருந்து தமிழக விவசாயிகளை காப்பாற்றும் வண்ணம் கடன் நடவடிக்கைகள் தடுப்பு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்தல் அவசியம். ஏனெனில், பயிர் சாகுபடி அழிந்துவிடுவதோடு, வரும் நாட்களில் கால்நடைகளுக்கான தீவனப் பஞ்சமும் ஏற்படும் என்பதால், கிராமப்புறங்களில் நிலைமை மோசமான சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக வேனும் கடன் பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளை காக்கத்தக்க நடவடிக்கைகள் அவசியம்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசிடமிருந்து போராடிப் பெறவேண்டியதும் முக்கியமான தாகும். சுற்றுச்சூழல் மாசு காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா குறிப்பாக தமிழகம் அதன் காரணமாக மிக அதிக அளவிலான மழை அல்லது வறட்சி என்கிற தட்பவெப்ப சூழலை மாறி மாறி எதிர் நோக்க வேண்டியது கட்டாயம் என்று ஆகி விட்ட தால், அதற்கேற்ப நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு சிந்தித்தல் அவசியம்.

இச்சிந்தனைத் தவிர்த்து வேறு சிந்தனையின்றி தமிழக அரசு செயல்பட்டால் மட்டுமே வறட்சியினால் பஞ்சம் ஏற்படினும் வறண்டுவிடாத நெஞ்சங்களைக் கொண்டதாக தமிழகம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 



* * * * * * * * * * 


எனது யூ-டியூப் சேனலில் இன்று 'காவல் கோட்டம்' புத்தகம் பற்றிய அறிமுகம். பிடித்திருந்தால் லைக் செய்து சந்தாதாரராக மாறுங்கள். கருத்திடுங்கள். பகிருங்கள். 

அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார். 






13 கருத்துகள்

  1. அரசு உடனே யோசித்து செயல்பட்டால் நல்லது...

    பதிலளிநீக்கு
  2. கவனிக்க வேண்டிய உண்மை...வலியும் கூட.

    பதிலளிநீக்கு
  3. மிக மிக வருந்தமான விசயம். விவசாயம் பொய்த்துபோனாள் அழிவு நிச்சயம்தானே.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக வருந்தமான விசயம். விவசாயம் பொய்த்துபோனாள் அழிவு நிச்சயம்தானே.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக வேதனைமிக்கது மட்டுமின்றி உடனடியாகத் தீர்வு எடுக்க வேண்டிய நிலைமையும். நடுவண் அரசும், மாநில அரசும் சரி விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே தீர வேண்டும்..

    காணொளி நன்றாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. அருமையமான எச்சரிக்கை பதிவு. ஆனால் மாட்டோடு சண்டை போட்டு வீரத்தை காட்ட வேண்டும் என்பதில் தான் அரசியல் கட்சிகள், அரசு கவனம் உள்ளது

    பதிலளிநீக்கு
  7. முதலில் அணைகள் வாய்க்கால்களைக் கட்டணும்

    பதிலளிநீக்கு
  8. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  9. வேதனை சார்... அரசின் மெத்தனம் விவசாயாத்தைச் சாகடிச்சிரும்...

    பதிலளிநீக்கு
  10. எல்லாவற்றிக்கும் அரசை மட்டும் நம்பி இருக்காமல் மழைக்காலத்தில் பெய்யும் நீரை சேமித்து வைக்க பொதுமக்களாகவேனும் நடவடிக்கை எடுக்க இனியேனும் சிந்தித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை