Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சேவை வரியா.. பெரும் சோர்வைத் தரும் வரியா?


பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாக உள்ள 2017-18 நிதியாண்டிற்கான பட்ஜெட்டின்போது சேவை வரிகளை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தற்போதுள்ள 15 சதவிகிதம் என்பதிலிருந்து 16 முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிப்பில் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுலை மாதம் முதல் புதிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அமலுக்கு வரவுள்ள காரணத்தினால், அதற்கு இசைந்தாற்போல் முன்னோட்டமாக சேவை வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் இது பல்வேறு துறைகளிலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பண வாட்டத்தின் பிடியில் இருந்து தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், சந்தையில் உற்சாகத்தை வரவழைக்க வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சேவை வரி உயர்த்தப்படுமானால் அது சங்கடங்களையே அதிகரிக்கும். விமான, ரயில் பயண டிக்கெட்டுகள், உணவகங்களில் செலவினங்கள், தொலைபேசி பில்கள், மருத்துவ வசதிகள், வங்கிக்சேவைகள், விளம்பர ஏஜென்சிகள், கமிசன் ஏஜென்டுகள் என பல்வேறு துறைகளிலும் சேவை வரி அதிகரிக்கப்படுவதன் தாக்கம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஏற்கெனவே இரண்டு முறை சேவை வரியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போதும் அது உயர்த்தப்படுமானால் 3-வது முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜுன் 1, 2015 முதல் 12.36 சதம் என்பதிலிருந்து 14 சதவிகிதமாகவும், நவம்பர் 15, 2015 முதல் ஸ்வெச் பாரத் செஸ் வரியாக 0.5 சதவிகிதம் சேர்க்கப்பட்டதும், கடைசி முறையாக கடந்த பட்ஜெட்டின் போது 'கிரி கல்யாண்' செஸ் வரியாக 0.5 சதவிகிதம் விதிக்கப்பட்டு சேவைகள் வரி 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.


புதிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு 5,12,18 மற்றும் 28 சதவிகிதம் என்கிற அளவுகளில் விதிக்கப்படும் என முடிவாகியுள்ள சூழலில், சேவைகள்வரி விதிப்பு உயர்த்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதில் குறிப்பாக விளம்பர ஏஜென்சிகள், கமிசன் ஏஜென்சிகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது. 15 சதவிகித கமிசன் அடிப்படையில் இத்தகைய நிறுவனங்களின் வருவாய் அமைந்துள்ள நிலையில், அந்த வருவாய்க்கு ஈடாக அல்லது அதற்கு மேலாக அதாவது 100 சதத்திற்கும் அதிகமான வகையில் சேவை வரி விதிக்கப்படுவது ஏற்கத்தக்கதா என்று சிந்தித்தல் நலம்.

சேவை வரி, சேவை பெறுவோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்றாலும், ஏஜென்சிகளின் கமிசனையும் தாண்டியதாக வரி விகிதம் சேவைகள் பெறுவோரை யோசிக்கவே வைக்கும் என்பதால், இந்நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பது உண்மையே.

மேலும், வருவாயைத் தாண்டியும் வரி வசூலித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யும் நிறுவனங்களாக இவை மாறும் என்பதால், அவற்றிற்கு சேவை வரி பெரும் சோர்வைத் தரும் வரியாகவே அமையும் என்பதும் நிச்சயம்.

ஏற்கெனவே நேர்மறை பொருளாதாரத்திற்கு அமைப்புசாரா வர்த்தகர்களும்கூட மாறுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வரும் வேளையில், ஏற்கனவே சேவை வரி செலுத்துவோருக்கு அதிக வரி விதிக்கப்படுவது வரி ஏய்ப்புக்கான சூழலை அதிகரித்துவிடும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. மிகப் பெரும்பாலான சேவைகள் அனைத்தும் இவ்வரியின் கீழ் வந்துவிட்டது என்பதோடு, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 65 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ள சேவைகள் துறையில் வரி உயர்வு நிகழ்வது என்பது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.

இந் நிலையில் சேவை வரி குறைந்தபட்சம் அதே நிலையில் தொடர்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது சேவைகளின் தன்மைக்கேற்ப பல்வேறு வரி விகிதங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. 


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன்


* * * * * * * * * *

தைப் புரட்சி - 2017 

மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்ட காட்சிகள்.




4 கருத்துகள்

  1. எதையும் தாங்கும் இந்திய மக்களின் இதயம் இதையும் தாங்கும்
    நங்கள் எப்போதும் சுமை தாங்கிகளே.

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை..... தொடர்ந்து வரிகள் தான் :(

    பதிலளிநீக்கு
  3. சேவை வரி கூடுதலானால் இன்னுமல்லவா எதிர்மறையில் பொருளாதாரம் திரும்பும்...பண மதிப்பிழப்பிற்குச் சொல்லப்பட்ட காரணமும் இதும் முரண்படுகிறதே...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை