• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், மார்ச் 06, 2017

  ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆப்பிள்கள்


  ருகாலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்வாய்ப்பட்டவர்கள் மீண்டும் பலம் பெறவும் ஆப்பிள் பரிந்துரைக்கப்பட்டது. இன்றைக்கு ஆப்பிள்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு பொருளாக வர்த்தக உலகம் மாற்றியிருக்கிறது.

  இயற்கை மெழுகுப் பூச்சு
  கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை லேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு வஸ்து திரண்டு வரும். உண்மையில் இது மெழுகுதானா என்றால் சந்தேகமே வேண்டாம். மெழுகேதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் போன்ற ஆப்பிள் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

  சென்னை கோயம்பேட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ ஆப்பிள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன. இந்த ஆப்பிள்கள் எல்லாம் பறித்த இடத்திலிருந்து இங்கு வந்து சேரவே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. ஆனால், ஆப்பிளின் இயற்கையான தன்மை 10 நாட்களில் கெட்டுப்போய்விடுவதுதான். இப்படி ஆப்பிள்கள் கெட்டுப்போகாமல் இருக்க அப்பிளின் மேல் பூசப்படும் ஒரு பூச்சுதான் மெழுகு எனப்படுகிறது. இப்படி மெழுகைப் பூசிவிட்டால் 6 மாதத்திற்கு கவலையில்லை. ஆப்பிள் அப்படியே கெடாமல் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் இஷ்டப்படி விற்றுக்கொள்ளலாம்.

  பொதுவாகவே ஆப்பிள்களில் ஒரு இயற்கை மெழுகுப் பூச்சு இருக்கும். இது 10 நாட்களுக்கு மட்டும் ஆப்பிளுக்கு கவசமாக இருக்கும். அதற்கு மேல் தாங்காது. வியாபாரிகளுக்கு இந்த 10 நாள் கெடு போதாது. அதனால் அவர்கள் தண்ணீரில் கழுவி இயற்கை மெழுகுப் பூச்சை அகற்றிவிடுகிறார்கள். பளபளப்பாக இருக்கவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் செயற்கையான ஒரு மெழுகுப பூச்சை பூசுகிறார்கள். மெழுகில் மூழ்கி எடுக்கப்படாத ஒரு ஆப்பிள் கூட இங்கு வருவதில்லை. வெளிநாடுகளிலேயே இதை செய்துதான் அனுப்புகிறார்கள்.

  மெழுகுப் பூச்சுக்கு சில நிபந்தனைகள் இருக்கிறது. பீஸ் வேக்ஸ், கார்னோபா வேக்ஸ், ஷெல்லாக் வேக்ஸ் என்ற இந்த மூன்று வகையான மெழுகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும், ஓர் ஆப்பிளின் மேல் 3 மில்லி கிராம் என்ற அளவிலே பூசப் பயன்படுத்த வேண்டும்.  இதில் பீஸ் வேக்ஸ் என்பது தேனடையில் இருந்து கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை மெழுகு. இந்த இயற்கை மெழுகை உபயோகிக்க இந்திய உணவு கலப்பட தடுப்புச் சட்டமும் அனுமதியளிக்கிறது. ஆனால், பிரச்சனை இந்த மெழுகில் இல்லை.


  வெளிநாடுகளிலிருந்து மெழுகில் குளித்து வரும் ஆப்பிள்களை மேலும் பளபளப்பாக காட்டுவதற்காக நம்மூர் வியாபாரிகள் பெட்ரோலிய மூலப்பொருளில் இருந்து எடுக்கப்படும் நைட்ரேட் கலந்த செயற்கை மெழுகு திரவத்தில் முக்கி எடுக்கிறார்கள். அதோடு உள்நாட்டு ஆப்பிள்களை இந்த மாதிரி மெழுகில் குளிப்பாட்டி அதில் ஸ்டிக்கர் ஒட்டி, வெளிநாட்டு ஆப்பிள்கள் என்று கூறி அதிக விலைக்கு விற்கிறார்கள். மெழுகோடு நைட்ரேட் சேர்க்கப்படுவதால் பளபளப்பும் கவர்ச்சியும் கூடுகிறது. நீர்சத்து வெளியேறாமல் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கிறது.


  மெழுகில் சேர்க்கப்படும் நைட்ரேட், 'நைட்ரைஸோ மார்போலின்' என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கேன்சர் நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இப்போது ஆப்பிள் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கு, செர்ரி பழம், குடைமிளகாய் போன்றவற்றிலும் மெழுகுப் பூச்சு பூசப்படுகிறது. இந்த மெழுகு நமது உணவுக் குழாயில் செரிமானம் ஆகாமல் அப்படியே படிந்து நின்றுவிடும். இந்தப் படிமம் கேன்சரை உருவாக்கிவிடும் என்கிறது மருத்துவம்.

  தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது, இல்லையென்றால் கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவதுதான் நமக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

  ======================================================


  எனது யூடியூப் சேனல்களில்.. 

  இந்தப் பதிவை அப்படியே வீடியோ பதிவாக பார்க்கலாம். குழந்தைகளுக்கும் தமிழ் எழுத படிக்க தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும் உதவும் என்பதற்காக சில நண்பர்களின் வற்புறுத்தலால் வீடியோ பதிவாக கொண்டுவரும் முயற்சிதான். இனி வரும் பதிவுகளில் பெரும்பான்மையான பதிவுகள் காணொலி பதிவாக வரக்கூடும். நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.   ============================

  'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' 

  விஜயநகர பேராசின் தலைநகராக இருந்த ஹம்பியில் நடைப்பெற்ற 'ஹம்பி உத்சவ்' பற்றி அரிய படங்களுடன் கூடிய ஒரு காணொலி. காணுங்கள் சந்தாதாரராக இணையுங்கள். 


  16 கருத்துகள்:

  1. இப்போதெல்லாம் இந்த மெழுகுப்பூச்சு, விலை அதிகம் என்பதால், மோசமான மெழுகுப்பூச்சு (cheap variety) நடைபெறுகிறது. சில ஆப்பிள்களெல்லாம், பறித்து 1 வருடங்களுக்குப் பிறகும் கடைகளில் விற்கப்படுகிறது. இது ஆப்பிள்களுக்கு மட்டுமல்ல, எல்லாவித பழங்களுக்கும் பொருந்தும்.

   இதைப் பற்றி மேலும் நீங்கள் எழுதவேண்டும்.

   1. நம்ம ஊரில், கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை, பூச்சி இருப்பது தெரியாமல் செய்ய பெஸ்டிசைடு சேர்த்த தண்ணீரில் முக்கி எடுக்கிறார்கள்.
   2. பொதுவாகவே எல்லாப் பழங்களிலும், காம்புப்பகுதியில் இரசாயனம் மிகுதியாகச் சேர்க்கிறார்கள். (காம்பு இல்லைனா, நாம பழசு போலிருக்கு என்று நினைக்கக்கூடாது என்பதற்காக).
   3. ஊசிமூலமும் காம்புப்பகுதியில் ரசாயனம் சேர்க்கின்றனர். நான் வாங்கும் பியர் பழம் வெளியில் கட்டியாக காய் போன்று இருக்கும் ரொம்பப் பிடித்தமானது. ஆனால் உள்பகுதியில் (தண்டுப்பகுதியில்) நிறம் கொஞ்சம் மரக்கலரில் இருக்கும். அதாவது, 2-3 மாதமாயிருக்கும் மரத்திலிருந்து பறித்து.
   4. திராட்சைப் பழம்தான் மிகவும் அதிகமான ரசாயனம் சேர்க்கப்படுவது. தோட்டங்களில், பெரிய பாத்திரத்தில் கடுமையான இரசாயனக் கலவை சேர்ந்த தண்ணீரை, கொடியில் இருக்கும்போதே ஒவ்வொரு குலையாக முழுகவைத்து எடுப்பார்கள். அதனால் பூச்சி தாக்காது என்று. பறித்தபின்பும், இரசாயனப் பூச்சுள்ள பெட்டியில் (மேலும் கீழும் இரசாயனக் காகிதங்களில் அடக்கி) வருகிறது. இதனைச் சாப்பிடவேண்டுமானால், வென்னீரில் உப்பு போட்டு அதில் திராட்சையைப் போட்டுக்கொதிக்கவிட்டு, பின் நல்ல தண்ணீரில் கழுவிச் சாப்பிடணுமாம்.
   5. ஆப்பிளையோ அல்லது மற்ற பழங்களையோ, கொதிக்கும் நீரில் போட்டுச் சாப்பிட நமக்கு நேரமோ ஆசையோ இருப்பதில்லை (பழத்தின் ருசியே குளிராக இருந்தால்தான் தெரியும்). அதனால், தோலைச் சீவிவிட்டுச் சாப்பிடுவதுதான் நல்லது (ஆப்பிள் தோல் உடலுக்கு நல்லது.. ஆனால் அதை இரசாயன மெழுகிட்டுக் கெடுத்துவைத்துள்ளார்களே)
   6. நீங்கள் வாழைப்பழத்தைப் பற்றியும் எழுதலாம். இப்போதெல்லாம், நாட்டுப் பழங்களை மக்கள் புறக்கணிக்கின்றனர் (கதலி, ரஸ்தாளி, கோழிக்கோடு, நேந்திரம், நாட்டுப்பழம்-நாங்கள் வாழைக்காய்ப்பழம் என்போம். இதன் காயை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம், கற்பூரன் போன்ற பல உள்ளூர் வகைகள்). வியாபாரிகளும், இந்தப் பழங்களை விற்றால் 1 வாரத்தில் கருத்து அழுகிவிடுகிறது என்று (அனேகமாக பி.டி. வகை) மஞ்சள் பழங்களை விற்கின்றனர். இது ஒரே அளவில், தோல் கவர்ச்சியாக, கொஞ்சம்கூட விதையின் சுவடு இல்லாமல், 10-20 நாட்களுக்கும் ('நான் 1 மாதம்கூடப் பார்த்திருக்கிறேன்) வந்தமாதிரி மஞ்சளாகவே இருக்கும். இது உடம்புக்கு நல்லதல்ல.
   7. பொதுவாக, இது (ஆப்பிள், பியர் போன்ற பழவகைகள்) சைனாவிலிருந்து வருகிறது என்றால், அந்தப் பக்கமே போகாமலிருப்பது உத்தமம். உணவுப்பொருட்களின் தரம் அவ்வளவு நன்றாக இருக்காது.

   நீண்ட பின்னூட்டமாகிவிட்டது. இடுகையின் தலைப்பு முக்கியம் என்பதால் இவைகளை எழுதினேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இதுபோன்று, ஆரஞ்சுக்கும் வேக்ஸ் கோட்டிங் கொடுக்கிறார்கள். காம்புப் பகுதியில் ஊசிமூலம் மருந்து செலுத்துகிறார்கள்.

    ஆப்பிளையோ, திராட்சையையோ மேலே சொன்ன முறையில் தோலுடன் கொதிக்கவைத்து அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் கழித்துப்பார்த்தால், அதன் தோலின்மீது இன்னும் படிந்திருக்கும் கழிசடைகள் தெரியும். அதைப் பார்த்தபின்பு பழத்தின்மீதுள்ள ஆசையே போயிருக்கும்.

    நீக்கு
   2. நெல்லைத் தமிழன் மிக்க நன்றி. நான் தாமதமாகத்தான் வந்தேன்...இவை அனைத்தையும் எழுத நினைத்து பின்னூட்டமா இடுகையா என்று நினைத்து இன்னும் எழுத வேண்டிய பதிவுகளையே எழுதி முடிக்காமல் எல்லாம் கிடக்க இதுவுமா என்று நினைத்து இங்கு கருத்திடலாம் என்றால் நீங்களே சொல்லிவிட்டீர்கள்! மிக்க நன்றி...இதே இதே..

    ஆப்பிளை சுடு தண்ணீரில் போட்டு மெழுகு எடுத்தாலும் அழுக்கு படிகிறது அதன் எனவே கொஞ்சம் கத்தியால் சுரண்டடிவிட்டு சுடு நீரில் போட்டு எடுத்து என்று...நீங்கள் சொல்லுவது போல் சாப்பிடும் ஆசையே போய்விடுகிறது எனவே மெழுகு இல்லாத ஆப்பிள் மட்டுமே கிடைத்தால் வாங்குகிறேன்.

    மிக்க நன்றி

    கீதா

    நீக்கு
  2. சிறந்த உளநல வழிகாட்டல்
   பயனர் விழிப்புணர்வு தேவை

   பதிலளிநீக்கு
  3. தோலை நீக்கி சாப்பிடுவதைவிட...பேசாமல் ஆப்பிள் பக்கம் போகாமலேயே இருந்துவிடலாம்போலுள்ளது.

   பதிலளிநீக்கு
  4. நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நெல்லைத் தமிழன் அவர்களும் தனது பின்னூட்டத்தில் நிறையவே தகவல்கள் தந்து இருக்கிறார்.

   பதிலளிநீக்கு
  5. மிக நல்ல கட்டுரை! நாங்கள் நாட்டுப் பழங்களை மட்டுமே வாங்குகிறோம். ஆப்பிள் எல்லாம் நாங்கள் வாங்குவதில்லை! எங்கள் ஊரில்...தோட்டத்தில் கிடைப்பது மட்டுமே..

   பதிலளிநீக்கு
  6. Best SAP MM training and placement asssistance
   http://thecreatingexperts.com/sap-mm-training-in-chennai/
   Karthick-8122241286

   பதிலளிநீக்கு
  7. அருமையான தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
   Tamil News | Latest News | Business News

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்