முன் குறிப்பு- நான்காவது தூணை நாசமாக்கியவர்கள் பற்றியது. இதை படித்து
முடிக்கும் போது நான் ‘காவி சங்கியாக’ மாறியிருப்பேன். அதனால் ஒன்றும்
பிரச்சனையில்லை. தொடருங்கள்...
----------------
கேழ்வரகில் எண்ணெய் வடிகின்றது என்பதையும் நம்பி விடலாம். இந்த உடன்
பிறப்புகளும், திராவிட ‘ஆர்வலர்களும், “சேவ் ஜேர்னலிசம்” என்று
சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. இதற்கான பதில் பின் பகுதியில்
இருக்கும்.
விடயத்திற்கு நேரடியாக வருகின்றோம்.
உங்களுக்கு என்ன பிரச்சனை? ஊடகவியலாளர் ஆசீப் முகமதுவிற்கு,
‘புரட்சியாளர்’ ரேஞ்சிக்கான கூப்பாடு எதற்கு? என்ன அநீதி நடந்துவிட்டது.?
ஏதோ ஊடக ஜனநாயகம் செத்துவிட்டது போலவும், இவர்கள்தான் ‘காப்பாளர்கள்’
போலவும் விளம்பரம் எதற்கு? எதற்காக இந்த கட்டமைப்பு.?(பில்டப்பு)
இத்தனை ஆண்டுகளும் அந்த இந்துத்துவா ரிலையன்ஸ் நிறுவனத்தில்தானே வேலை
செய்துகொண்டு இருந்தீர்கள். இப்போது மட்டும் என்ன இந்துத்துவா எதிர்ப்பு
கூச்சல்.
சரி, உண்மையிலேயே நீங்கள் இந்துத்துவா எதிர்ப்பினால்தான் வெளி
வந்தீர்களா? அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டீர்களா? என்றால்
அதுவுமில்லை.
காரணம், நீங்கள் பணியில் இருந்தபோது, இந்துத்துவா- ஆர். எஸ்.எஸ்.
பார்ப்பன ‘உண்டு உரைவிடப் மடியில்தான்’ வளர்ந்தீர்கள். அதற்கேற்ப
அவர்களுக்கு விதம் விதமான பெயர்சூட்டி விவாதத்திற்குள் வைத்து வளர்த்து
விட்டிருந்தார்கள். அப்படி ஒரு ஆர்.எஸ்.எஸ் பாசக்கார பிள்ளைகளாக
இருந்துள்ளீர்கள்.
இதை நான் சொல்லவில்லை. ராமசுப்பரமணியம் என்கிற ஆர்.எஸ்.எஸ்,
பார்ப்பனர்தான் சொல்கிறார்.
ரேடியோ ஜேர்னலிஸ்ட்டான சகோதரர் ராஜவேல் நாகராஜன் ஒரு வீடியோ
வெளியிட்டிருந்தார். மதன் ரவிச்சந்திரன் ‘பெரியார் படத்தை போட்ட’ பனியனை
அணிந்துகொண்டு வேலை கேட்கவில்லை. “ஆர்.எஸ்.எஸ். காரரான ராமசுப்ரமணியம்
சொல்வதைக் கேளுங்கள் என்கிறார்.
அந்த நபரோ, ‘புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் எனக்கு நல்ல நண்பர்,
நான்தான் அவரிடம் சொல்லி மதன் ரவிச்சந்திரனை சேர்த்துவிட்டேன்’
என்கிறார். அதே போல் நியூஸ்-7- சேனலிலும் அப்படி சொல்லி சேர்த்துவிட்டேன்
என்கிறார். குணசேகரன் அவர்களின் திறமையை பாராட்டி பேசுகிறார்.
ஆக இந்த ‘திராவிட ஊடக லாபி’ குழுவினர் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க,
பார்ப்பன பிரமுகர்களின் நல்ல நட்பில்தான் இருந்து வந்துள்ளார்கள்.
அவர்கள் சொல்லி இவர்கள் வேறு யார் யாரையெல்லாம் வேலைக்கு வைத்துக்
கொண்டார்கள் எனத் தெரியாது.
ஆனால் அதே அளவிற்கு மற்ற கட்சியினருடன், குறிப்பாக தமிழ்த்தேசிய
தலைமைகளுடன் ‘நட்புறவில்’ இருந்தார்களா?’ என்ற கேள்வி உள்ளது.
எனக்குத் தெரிந்து சில காங்கிரஸ் கட்சி தலைவர்களைக்கூட குறிப்பிட்டு,
‘அவரைக் கூப்பிட வேண்டாம், இவரைக்கூப்பிட வேண்டாம்’ என தவிர்த்த
கதையெல்லாம் உண்டு. பேசியதெல்லாம் உண்டு. பல கட்சி-இயக்கத் தரப்பினரைக்
குறிப்பிட்டு தவிர்த்துள்ளார்கள். அதாவது எந்த விதத்திலும் திமுக-விற்கு
குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற திட்டமிடலில்.
ஆனால், இவர்களைத்தான் ஒரு கும்பல்,‘நடுநிலை நெடுக்குத்துகள்’ என
கட்டமைப்பு செய்து வருகிறது.
இன்று உங்களுக்கு நேர்ந்த அதே சிக்கல்தானே மதன் ரவிச்சந்திரனுக்கும்
நேர்ந்தது. தொடக்கத்தில் அவர்மீது இந்துத்துவா முத்திரை இல்லையே. ஒவ்வொரு
சேனலில் இருந்தும் நீக்கியபோது, இப்படி ‘ஜேர்னலிசத்தைக் காப்புபோம்’ என
நீங்கள் அவருக்காகவும் பேசியிருக்கவில்லையே ஏன்? அவர் எல்லா தரப்பு
தலைவரிகளிடமும் சரியான கேள்விகளைத்தானே கேட்டபடி இருந்தார்.
அதில் திமுக- சார்பு அமைப்பு, மற்றும் தலைவர்களை அப்படிக் கேட்டார்,
இப்படிக்கேட்டார் என்றுதான் ‘இந்துத்துவா முத்திரை’ குத்தி
ஒதுக்கினீர்கள்.
அந்த தம்பிக்கு செய்தது நியாயம் என்றால், உங்களை ‘திராவிடத்தின் முகமாக’
சொல்லி தனித்து, தவிர்த்து விடுவதும் நியாயம்தானே.? நீங்கள் செய்தால்
நடுநிலை போராட்டம். ஜனநாயகம்? மற்றவர்களுக்கு என்றால் ஏதோ ஒரு
முத்திரைக்குத்தி தள்ளிவிடுகிறீர்கள். இதுவா ஊடக ஜனநாயகம்? ஆனால் நீங்கள்
அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றீர்கள்!
ஆர்.எஸ்.எஸ் ராமசுப்பரமணியன் ‘திராவிட ஊடக லாபி’ தலைமைகளைப் பாராட்டியதை
நீங்கள் நொட்டம் சொல்ல முடியாது என மறுக்கிறீர்களா? எனில் அதே நியாயம்
மதன் ரவிச்சந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமல்லவா. அவரை
ஆடிட்டர் குருமூர்த்தி பாராட்டினார் என்பதற்காக, தூற்றி பேசியது என்ன
நியாயம். அது நியாயம் என்றால் ராமசுப்பரமணியன் உங்களைப் பாராட்டி
பேசியதும் நியாயம்தானே?
உங்களுக்கு உள்ள கருத்துச் சுதந்திரம் மற்ற கட்சியினருக்கும்
இருக்கும்தானே? அதை தனிமைபடுத்துவது என்ன நியதி? ஆனால் நீங்கள் அப்படி
பிரச்சாரம் செய்தீர்கள்தானே?
அடுத்து நிர்பந்தம் காரணமாக ஒரு ஊடக நிறுவனத்தில் இருந்து பணி விலகுவது,
பதவி குறைப்பு நடப்பதும் புதியதல்ல. வழக்கமான ஒன்றுதான்.
விகடன் குழுமத்தில் ஜாம்பாவனாக இருந்த ஆசிரியர் ராவ், பிரபல
கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் விலக்கப்பட்ட போது- அல்லது விலகிய போது
யாரும் இப்படி ‘சேவ் ஜேர்னலிசம்’ என்று கூப்பாடு போட்டுக்
கொண்டிருக்கவில்லை. கூப்பாடு போட்டு ஒரு ‘கட்டமைப்பை’ உருவாக்கவில்லை.
அதே போன்று புகழ்பெற்ற குமுதம் நிறுவனத்தில் இருந்து எத்தனையோ
ஜாம்பவான்கள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது நிர்வாகம்
அழுத்தம் கொடுக்க விலகியிருக்கிறார்கள். இது சமீபம்வரைகூட நடந்தது.
யாரும் ‘சேவ் ஜேர்னலிசம்’ என்று குத்தவச்சி உட்கார்ந்து கொண்டு,
கோஷ்டிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கவில்லை.
தினகரன் நாளேட்டின் திறமைமிக்க ஆசிரியர் கதிர்வேல் விலகிய போது யாரும்
இப்படி ‘சேவ் ஜேர்னலிசம்’ என பொங்கிக் கொண்டிருக்கவில்லை. புதிய
தலைமுறையிலும் பல சீனியர்கள் அப்படி வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்,
அல்லது அழுத்தத்தின் காரணமாக விலகியிருக்கிறார்கள். அவர்கள், யாரையும்
தூண்டிவிட்டு அலப்பறை செய்யவில்லை.
மேலே சொன்ன யாரும், “தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின
மக்களுக்காக எழுதியவர், போராடியவர், அதனால்தான் நீக்கப்பட்டார்’ என
பிரச்சாரப்படுத்தவில்லை. தான் ஒரு முஸ்லீம் என்பதற்காக இந்துத்துவா ஊடகம்
பழி வாங்குகிறது என பிரபலங்களிடம் சொல்லி கருத்தெழுத சொல்லவில்லை.
ஊடகத்திற்கு வந்துவிட்டால் எல்லா சமூகத்தவர்களுக்கும்தான் பேச-எழுத
முடியும். அதைச் சொல்லி அனுதாபம் தேடுவதும், பிச்சை எடுப்பதும் ஒன்று.
சரி, இப்போது மட்டும் ஏன் இந்த முழக்கம்? என்றால், அதுதான் தேர்தல்
அரசியல். PK- 380 கோடி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. இந்த பிரச்சனையை
இந்துத்துவா- திமுக ஆதாய அரசியலாக மாற்றிக்கொள்கிறார்கள். இந்த
பிரச்சாரத்தில் இருப்பவர்களை எல்லாம் நோக்கினால் அது தெரியும்.
இத்தனை ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருந்த போது அந்த நிறுவனத்திற்கு அவர்
முஸ்லீம் எனத் தெரியாதா என்ன? பச்சை மோசடி பிரச்சாரம் இது.
இப்படியான உறுப்படிகளை வைத்துக் கொண்டு, உடன் பிறப்புகளும், ‘அய்ய...கோ.
மிரட்டல், இந்த அநியாயத்தை யாருமே கேட்க மாட்டீர்களா (வருத்தப்படாத
வாலிபர் சங்கம் பட சிவகார்த்திகேயன் மாதிரி) என கதறுவதுதான் கொடுமை..
1971- 1976 காலகட்டங்களில் முதல்வராக இருந்த கலைஞரை விமர்சித்து
எழுதியதற்காகவே பல ஊடகங்கள், விதம் விதமாக மிரட்டப்பட்டது. பிரபல குமுதம்
வார இதழை மிரட்டி முடக்கினார்கள். தமிழகம் முழுதும் பறிமுதல் செய்து
எரித்தார்கள். அலுவலகம் தாக்கப்பட்டது
பிரபல விகடன் வார இதழ், கலைஞர் குறித்த கார்ட்டூன் படத்தை
வெளியிட்டதற்காகவே கடுமையாக மிரட்டப்பட்டது. அங்கும் தாக்குதல். கடைசியாக
மன்னிப்பு கேட்க வைத்தார்கள். அதே போன்று தராசு வார இதழ்மீதும்
கடுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அலை ஓசை, நவமணி, நவசக்தி, மக்கள் குரல் உள்ளிட்ட நாளேடுகள் எல்லாம்
மிரட்டப்பட்டது. அலுவலகம்- அச்சகத்திற்கு மின் துண்டிப்பெல்லாம் நடந்தது.
அலைஓசை நாளேடும் தாக்கப்பட்டது என நீண்ட வரலாறு-பட்டியல் உண்டு.
2006- 2011 காலகட்டத்திற்கு வருவோம்.
நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ். மணியை கைது செய்து கடுமையாக தாக்கி சிறையில்
அடைத்தார்கள். அப்போது ‘சேவ் ஜேனர்லிஸம்’ குரல் ஒலிக்கவில்லை.
தினகரன் நாளேடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதற்காக, ஊர்கூடி பார்க்க நாள்
முழுக்க ‘லைவ்’ கலவரம் செய்தபோதும், பத்திரிகை அலுவலகம் எரிக்க, அதில்
மூன்று பேர் கருகி இறந்தபோதும், ’சேவ் ஜேனர்லிசம்’ குரல் அரசியலாக
ஒலிக்கவில்லை?
பிறகு எரித்தவர் குடும்பமும்- எரிக்கப்பட்ட நாளேடு குடும்பமும், ‘கண்கள்
பணித்தது. இதயம் குளிர்ந்தது’ என்று கைகோர்த்துக் கொண்டபோது யாரேனும்
கண்டித்தார்களாக? என்றால் இல்லை. இவர்கள்தான் ஊடக ஜனநாயகத்தைப் பற்றி
பேசுகிறார்கள்.
ஜுனியர் விகடனின் கழுகார் பகுதியில் மதுரை அழகிரியின் கையாள் பொட்டு
சுரேஷ் பற்றி சிறிய செய்தி- நேரடியாக இல்லை, மறைமுகமா
சுட்டியிருந்தார்கள். அதற்காக எத்தனை மிரட்டல்- உருட்டல்? மதுரை
செய்தியாளர் குளசண்முகசுந்தரத்தை விரட்டி விரட்டி மிரட்டினார்கள்.
அப்போது இந்த சேவ் ஜேர்னலிசம் ‘டிரெண்ட்’ ஊருவாக்கவில்லையே ஏன்? என்றால்,
‘380 கோடி’ விளாயாட்டு.
ஆக அவர்களுக்கு ‘அரசியல் லாபம்’ என்றால் புரட்சி அவதாரம் எடுத்து
பிரச்சாரம் செய்வார்கள். தேவையில்லை என்றால் போய் பதுங்கி
படுத்துக்கொள்வார்கள். இவர்களின் போராட்டக் குரல் எல்லாம்
எதிர்க்கட்சியாக இருக்கும் வரைதான். ஆளும்கட்சியானால் மௌனமாகிக்
கிடப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு ‘கணக்கு’ வைத்திருப்பார்கள்.
சமீபத்திய ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியின் கரூர்
செய்தியாளர், ஆளும் கட்சியின் அமைச்சர் ஆட்களால் கடுமையாகத்
தாக்கப்பட்டார். மிரட்டப்பட்டார். அதற்காக இவர்களின், ‘சேவ் ஜேர்னலிசம்’
குரல் என்னவாக ஒலித்தது? இதுதான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்களின்
புரட்சி. ஒவ்வொன்றிலும் ஒரு அரசியல் கணக்கு.
ஒரு பாதிப்புமே இல்லை. ஒரு தாக்குதலும் இல்லை. ஆசிப் முகமதுவை
புரட்சியாளர் ரேஞ்சுக்கு பில்டப் செய்வதேன்? குணசேகரனுக்கு கோஷம்
போடுவதேன். சரி, விகடன் நிருபர்கள் வேலையிழப்பு சம்பவத்திற்கு கண்டனம்
தெரிவித்த இந்த ‘மாற்றத்திற்கான’ ஊடக தோழர்கள், இப்போது நியூஸ்-18 தமிழ்
சேனலுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டியதுதானே? அங்கும் பாதிப்பு
நடந்திருக்கின்றதுதானே? ஏன் செய்யவில்லை போராட்டத்தை?. அதுதான் 380 கோடி
அரசியல்.
இன்னொரு கேவலம் என்ன என்றால், ஆசிப் அளவிற்கு ஈழப்பிரச்சனை, ராஜிவ்காந்தி
படுகொலை குறித்த புரிதல் உள்ள பத்திரிகையாளர் யாருமே இல்லை என்கிறார்
அறிவாலயம் சகோதரி பனிமலர் பன்னீர்செல்வம். வருத்தப்பட்டிருக்கின்றார்.
கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்ட சில பெண்
தோழர்களை மட்டும் சுட்டுகின்றேன். தெரிந்தும் தெரியாமலும் பல களப்பணிகளை
இழப்பிற்கு மத்தியிலும் செய்துள்ளார்கள். நான் அறிவேன். அதுவும்
நெருக்கடியான காலகட்டத்தில். அப்படி பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு துளி
அளவும் செய்யாத நபரை, ‘அதைச் செய்தார்-இதைச்செய்தார்’ என முன்நிறுத்தும்
போக்கு ஒரு யோக்கியமற்றத் தனம்.
ஆனால் கடைசிவரை இந்துத்துவா மாரிதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு
பதிலையும் சொல்லாமல் உருட்டி விட்டீரகளே. அங்கேதான் உங்களின் திறமை
இருக்கின்றது. எப்படியோ, அது உங்கள் சகோதர யுத்தம், உங்கள் விவகாரம்.
---------------
குறிப்பு 1) உங்களின் நேர்மையற்ற காலத்தின் குரலை அறிவேன். நேர்பட பேசாத
உங்களை போக்கையும் அறிவேன். உங்களின் ‘தனிப்பட்ட’ விடயங்கள் தேவையற்றது.
கருத்தின் மீது மட்டுமே விமர்சனம் வைக்கின்றேன். அவ்வளவே.
வாசித்து முடித்த பின் என்னை ‘சங்கியாக்கியிருந்தால்’ மகிழ்வேன். கட்டுக்
கதைகளை கட்டினால்... நான் மதன் அல்ல.
உங்களின் முகத்திற்கு நேராக ஸ்கிரீன் ப்ளேவாக திருப்பி வந்து தாக்கும்.
-பா.ஏகலைவன்,
பத்திரிகையாளர்.
முகநூலிலும் வாசித்தேன்...
பதிலளிநீக்குபாமர மக்களின் கதி தான் தெரியவில்லை...
உண்மை. இக்காலகட்டத்திற்கான முக்கியமான கட்டுரையினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குகட்டுரையாளர் கூறுவது உண்மைதான். மேலும் இது தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியாததும் இல்லை. தி.மு.க-வினர் இந்த ஒரு விவகாரத்தில் மட்டுமில்லை, ஈழம், அணு உலை, அதிகாரப் பகிர்வு என எல்லா விவகாரங்களிலுமே அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கையில் ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாகப் பதவி நாற்காலியில் இருக்கையில் வேறு நிலைப்பாடும் கடைப்பிடித்து வருவது நாடறிந்த உண்மை. ஆனால் இற்றை நாளைப் பொறுத்த வரை, இந்திய வரலாற்றிலேயே இல்லாத இரண்டு கூறுகள் இவர்களின் இன்றைய சேவ் சர்னலிசம் முழக்கத்துக்குக் காது கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தை நடுநிலையாளர்களுக்கும் உண்டாக்கியிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஒன்று - இதுவரை இல்லாத அளவுக்குப் பேருருவெடுத்து நிற்கும் சமயவாத அரசியல். இனி பா.ச.க-வைச் சார்ந்து நில்லாமல் இந்நாட்டில் எந்த ஒரு கட்சியும் எந்த ஒரு கோட்பாடும் அரசியல் செய்ய முடியாது என்கிற அளவுக்கு நாடு தழுவிய அளவில் அவர்களின் சமயவாத அரசியல் வான் முட்டி நிற்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மக்களாட்சியின் முக்கிய தூணான ஊடகத்துறையும் அவர்கள் பக்கம் சாயத் தொடங்கியிருப்பது மக்களாட்சியின் மீதும் மக்கள் மீதும் நாட்டின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட அனைவருக்குமே பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க., மட்டுமில்லை வேறு யார் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டியது தனி மனிதர் ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடமை என்பது என் கருத்து.
இரண்டாவது, முன் எப்பொழுதும் இல்லாத அளவில் இந்நாளில் சமூக ஊடகங்களின் ஆட்சி உலகம் முழுதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதரின் கையிலும் ஒரு குட்டி ஊடகமே இருக்கிறது என்றால் அது மிகையில்லை. இதற்கு முன் ஊடகத்துறை மீது இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்தபொழுதெல்லாம் இப்படி ஒரு வசதி இருந்தது இல்லை. இப்பொழுது இருக்கவே அது பெரும்புள்ளிகள் முதல் எளிய மக்கள் வரை அந்தச் சிக்கலுக்காகத் திரட்ட வாகாக இருக்கிறது.
ஆக, இந்தச் சிக்கல் புதியதில்லை என்றாலும் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்தபொழுது ஏற்பட்டதை விடப் பன்மடங்குப் பாதிப்பை உண்டாக்கக்கூடிய சூழல், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குக் கையில் கிடைத்திருக்கும் புதிய வசதிகள் என இரண்டும் சேரும்பொழுது அந்தச் சிக்கல் தானாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது இயல்பானதே இல்லையா? அப்படி ஆகாமல் இருந்தால்தான் வியப்பு.
கருத்துரையிடுக