ஞாயிறு, ஜனவரி 31, 2016

இதயத்தில் ஓட்டை ஏற்படுமா?


சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு 'கேன்சர்' இருப்பதாக சொல்வார்கள். இல்லையென்றால் 'இதயத்தில் ஓட்டை' இருப்பதாக காட்டுவார்கள். உண்மையில் இதயத்தில் ஓட்டை ஏற்படுமா? என்ற கேள்வியோடு டாக்டரிடம் சென்றால், அவர் அது ஓட்டை இல்லை. முழுமையடையாத சுவர் என்கிறார்.


தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே குழந்தைக்கு இதயம் உருவாகிவிடுகிறது. அதுவும் முதல் மூன்று மாதங்களிலேயே இதயம் உருப்பெறும். இந்த இதயம் ஒரு அறையை கொண்டதாகவே இருக்கும். படிப்படியாக இதயம் வளர வளர தனித்தனியாக குறுக்குச் சுவர்கள் உருவாகி நான்கு அறைகளாக பிரிகின்றன. இவற்றில் இரண்டு அறைகளுக்கு இடையேயான தடுப்புச் சுவர் முழுமை பெறாமல் போய்விடுவதைத்தான் 'இதயத்தில் ஓட்டை' என்கிறார்கள்.

இதனால் ஏற்படும் விளைவுகள் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியில் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலவே இவர்களும் செயல்படுகிறார்கள். ஆனால் 30, 40 வயது எட்டும்போது இந்த குறை தன் கைவரிசையை காட்டுகிறது. நுரையீரல் ரத்த அழுத்தம் அதிகமாவதுதான் அபாயத்தின் முதல் தொடக்கம். இந்த நுரையீரல் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை பெண்களுக்கு பிரசவம் கூட எந்த வித சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துவிடும்.

இதயத்தில் ரத்த ஓட்டம் என்பது இதயத்தில் மேல்பக்கம் வலதுபுறத்தில் உள்ள 'ஏட்ரியம்' என்ற அறைக்கு வந்து அங்கிருந்த இதயத்தின் கீழ்பக்கம் உள்ள 'வென்ட்ரிக்கிள்' வழியாக நுரையீரலுக்கு போகிறது. நுரையீரலில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்தின் இடது பக்க ஏட்ரியம் வழியாக இடது வென்ட்ரிகளுக்கு அனுப்பப்பட்டு உடல் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதுதான் ரத்த ஓட்ட அமைப்பு.

ஆனால் இதயத்தில் ஓட்டை உள்ளவர்களுக்கு நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு வரும் ரத்தம் இடது ஏட்ரியத்தில் இருந்து ஓட்டை வழியாக வலது ஏட்ரியத்துக்கு வந்து மீண்டும் நுரையீரலுக்கு செல்கிறது. இதனால் நுரையீரலுக்கு சுத்திகரிப்புக்காக சாதாரணமாக வரும் ரத்தத்தின் அளவைவிட அதிகமாகிறது. இதனால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அதிக அளவு ரத்தத்தை சுத்திகரித்துக் கொண்டே இருப்பதால் நுரையீரலில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அழுத்தம் 30 அல்லது 40 வயதில் உச்சத்தை அடைகிறது. ஏனெனில் நுரையீரலுக்கு ரத்த அழுத்தம் படிப்படியாக உயர்ந்து மிக அதிக அளவை எட்டும்போது ரத்தம் திருப்பி அனுப்பப்படுகிறது. அதாவது வழக்கமான திசையில் ரத்த ஓட்டம் நிகழ்வது சிரமமாகி எதிரான திசையில் ஓட ஆரம்பிக்கிறது. இதுதான் விபரீதத்தின் உச்சக்கட்டம். இதன் விளைவாக சுத்திகரிக்கப்படாத அசுத்த ரத்தம் உடலின் பாகங்களுக்கு அனுப்பப்படுவதால் பலவிதமான உடல் உபாதைகள் நேர ஆரம்பிக்கின்றன.


இதை மூன்று வயதிலேயே எளிதான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். வயதானால் செய்வது சிரமம். வயதானவர்கள் என்றால் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்கிறார்கள். இப்போது நமது நகரங்களிலே இதுபோன்ற சிகிச்சை வந்து விட்டது, ஓர் ஆறுதலான விஷயம்.
சனி, ஜனவரி 30, 2016

30 நாட்கள் நிற்காமல் ஓடும் மிக நீண்ட திரைப்படம்மூன்று மூன்றரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தை பார்ப்பதற்கே நம்மவர்களுக்கு பொறுமையில்லை. இங்கு ஒரு இயக்குனர் என்னவென்றால், 720 மணி நேரம், அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடும் ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் ஆண்டர்ஸ் வெபெர்க். ஸ்வீடன் நாட்டு இயக்குனர். குறும் படங்கள் பெரும் படங்கள் என்று மொத்தம் 300 படங்களை இந்த 20 வருடங்களில் இயக்கித் தள்ளி இருக்கிறார். இவர் ஒரு சகலகலா வித்தகர். போட்டோ எடுப்பார், வீடியோ பிடிப்பார், ஒலிக் கலவை செய்வார், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என்று வேறுபாடில்லாமல் அனைத்தையும் இயக்குவார். இவர் தனது கனவு படமாகவும் கடைசி படமாகவும் சாதனைப் படமாகவும் இந்த மிக நீண்ட படத்தைச் சொல்கிறார்.


'ஆம்பியன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம்  மனிதனின் உள்ளுணர்வை சொல்லும் படமாம். இப்படிப்பட்ட படங்களை சாதாரணமாக பார்க்கவே பொறுமை உச்சத்தில் இருக்க வேண்டும். இது வேறு உலகிலேயே மிக நீண்டப் படம். எப்படிப் பார்க்கப் போகிறார்களோ? 

இந்தப் படத்தை ஒரு நிமிடம் கூட தூங்காமல், ஓய்வின்றி பார்த்தால் கூட முழுப் படத்தையும் பார்த்து முடிக்க 30 நாட்கள் ஆகும். இந்தப் படம் 2020, டிசம்பர் 31-ல் வெளிவரவுள்ளது. மிக நீண்ட படம் என்பதால் இந்த கால அவகாசம் தேவை என்கிறார் இதன் இயக்குநர்.

ஆண்டர்ஸ் வெபெர்க்
இப்போதைக்கு உலகின் நீளமான படம் என்றால் அது  'மார்டன் டைம்ஸ் ஃபார் எவர்' என்பதுதான். இந்தப் படம் மொத்தமாக 240 மணி நேரம் ஓடும். அதாவது 10 நாட்கள் இடைவிடாமல். 'ஆம்பியன்ஸ்' படம் நான்லீனியர் என்ற முறையில் நேரடியாக கதையை சொல்லாமல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் விதமாக இருக்குமாம். அப்போ சுத்தமாக புரியாது..!

இந்த படத்தின் டீஸரை 2014-ல் வெபெர்க் வெளியிட்டார். பொதுவாக டீஸர்கள் 20 நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை ஓடக்கூடியதாக இருக்கும். ஆனால், ஆண்டர்ஸ் வெளியிட்ட 'ஆம்பியன்ஸ்' டீஸர் 72 நிமிடம் ஓடியது. அதாவது 1 மணி 12 நிமிடம். கிட்டத்தட்ட ஒரு சிறிய திரைப்படம் ஓடும் நேரம் இது.


படத்தின் சுருக்கமான ட்ரைலர் 2016-ல் வெளியிடப்பட உள்ளது. அந்த டிரைலர் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும். 2018-ல் படத்தின் மெயின் டிரைலர் ரிலீஸ் ஆகிறது. இது 72 மணி நேரம் ஓடும். அதாவது 3 நாட்கள் தொடர்ந்து டிரைலரைப் பார்க்கலாம். 

2020-ல் முழுநீள திரைப்படமும் ரிலீஸாகும் அது தொடர்ந்து 720 மணி நேரம் நிற்காமல் ஓடும். அதாவது இந்த படத்தைப் பார்க்க நாம் ஒரு மாதம் விடுமுறை எடுத்து தியேட்டரே கதியென்று கிடந்து பார்க்க வேண்டும்.


இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்று இப்போதே விமர்சனங்கள் எழுகிறது. 30 நாட்கள் தொடர்ந்து பார்த்தால்தான் படத்தைப் பார்க்க முடியும் என்றால் ரசிகர்களுக்கு ஓய்வு எப்போது? ஒரு நாளைக்கு எத்தனை இடைவேளை. அப்படி இடைவேளை விடும் நேரத்தையும் சேர்த்தால் 30 நாட்களுக்கு மேல் தியேட்டரில் இருக்க வேண்டுமே. 30 நாட்கள் தொடர்ந்து படம் பார்த்தால் கண்கள் என்னவாகும் என்ற எல்லா கேள்விகளுக்கும் "பொறுத்திருந்து பாருங்கள்!" என்ற ஒரு வரியை மட்டும் பதிலாக சொல்கிறார் இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க்.
இந்த டீஸர் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யலாம். மறந்துறாம ஆபிசுல இரண்டு மாசம் லீவும் சொல்லிருங்க..!


திங்கள், ஜனவரி 25, 2016

பயணம் முழுவதும் பரவசம்ரு பயணம் உங்கள் கண்களைக் கட்டிப்போட்டுவிடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை குழந்தையாக மாற்றி குதூகலிக்கச் செய்யும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். மல்ஷெஜ் மலைப்பாதையில் பயணித்தால் இதெல்லாம் நடக்கும். அப்படியொரு அற்புதம் அந்த இடம்!


ஒரு மலைப்பாதையே சுற்றுலாத்தலமாக உள்ளது இங்கு மட்டும்தான். மல்ஷெஜ் மலைத்தொடரின் பசுமை பாதை முழுவதும் நிறைந்திருக்கும். அதைப் பார்க்கவே கண்கள் போதாது. ஆனாலும் அந்த அழகை மேலும் பிரமிப்பாக மாற்றுகிறது ஒவ்வொரு திருப்பத்திலும் மலைமீது இருந்து கொட்டும் அருவியின் அழகும், நீரின் சலசலப்பும், இருண்ட குகைகளும், பசுமை பள்ளத்தாக்குகளும். மெய்மறக்க வைக்கிறது. இதுபோக ஐந்தரை அடி உயரம்கொண்ட ஃபிளெமிங்கோ பறவைகள் ஆங்காங்கே தென்படுவது மேலும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

ஃபிளெமிங்கோ பறவைகள்
மலையின் உயரத்தில் இருக்கும் மல்ஷேஜ், மற்ற ஹில்ஸ்டேஷன்கள் போல் புகழ் பெறவில்லை. ஆனாலும் இந்த மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவேயில்லை. இங்கு பயணிப்பவர்கள் கட்டுச்சோறுக் கட்டிக்கொண்டுதான் பயணிக்க வேண்டும். ஏனென்றால், இங்கு ஹோட்டல்கள் இல்லை. அதனால் கட்டுச்சோறுதான் பசியைப் போக்கும்.


மல்ஷெஜ் மலைத்தொடரில் பயணிக்கும்போது மறக்காமல் எடுத்துப்போகவேண்டிய சில பொருட்கள் இருக்கின்றன. இவைகள் இருந்தால்தான் உங்கள் பயணம் இன்னும் இனிதாகும். பைனாகுலர், கேமரா கட்டாயம் இருக்கவேண்டும். கூடவே எக்ஸ்ட்ரா மெமரிகார்டும், ஃபுல் பேட்டரி சார்ஜும் இருக்கட்டும். கேமராவில் படமாக்க அவ்வளவு இடங்கள் இங்கிருக்கின்றன.


சொந்தக் காரில் நீங்களே செல்ஃப் டிரைவ் செய்து போவதைவிட வாடகைக் காரில் ஜம்மென்று அமர்ந்து போவதுதான் இங்கு நல்லது. சாலையில் கவனம் வைத்து காரை ஓட்டும்போது பல இயற்கை அற்புதங்கள் உங்கள் கண்களில் படாமலே போய்விடும். இந்த பிரமாண்ட அழகாய் ரசிக்க நீங்கள் கார் ஓட்டக்கூடாது. அமர்ந்து ரசித்து வரவேண்டும்.


காரின் கண்ணாடிகளை ஏற்றிவிடுங்கள். பல இடங்களில் அருவிக்குள் புகுந்துதான் கார் போகவேண்டியிருக்கும். சாலை ஓரங்கள் முழுவதும் அருவிகள் இருப்பதால் பல அருவிகளில் ஆசைதீர குளிக்கலாம். அதுவும் ஒரு பரவசம்தான். அருவிக் குளியல் அதிகமான பசியை தூண்டிவிட கையோடு கொண்டு வந்த கட்டுச்சோற்றை சுவைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதிதான்.


மலையின் உயரே இருக்கும் மல்ஷெஜ்ஜில் தங்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறை இங்கு வருபவர்கள் தங்குவதற்காக 'ஃபிளெமிங்கோ ரிசார்ட்' என்ற ஒன்றை நடத்தி வருகிறது. முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டு போனால் இங்கு தங்கலாம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.1,100-ல் இருந்து தொடங்குகிறது. (போன்: 022-22845678, 22852182)


மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் புனே மாவட்டத்தில் மல்ஷெஜ் காட் உள்ளது. இங்கிருந்து 40 கிமீ தொலைவில் ஷிவ்னெரி கோட்டை உள்ளது. இதுதான் மராட்டிய மாவீரன் சிவாஜி பிறந்த இடம். அதனையும் பார்க்க மறவாதீர்கள்.


வாழ்வில் மறக்க முடியாத அற்புதமான அனுபத்தை இந்த பயணம் தரும். ஷிவ்னெரி கோட்டை

படங்கள்: கூகுள் இமேஜ்


ஞாயிறு, ஜனவரி 24, 2016

வானின் நிறம் கருப்புவானத்தின் நிறம் என்ன? என்று கேட்டால் சின்னக்குழந்தை கூட சரியாக சொல்லிவிடும், நீலநிறம் என்று. இதுவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அவனிடமும் இதே கேள்வியை கேட்டால் அவன் வானின் நிறம் சிவப்பு என்பான். அதே வானத்தை நிலவில் இருந்து பார்த்தால் அதன் நிறம் கருமையாக இருக்கும். அப்படியென்றால் வானின் நிறம்தான் என்ன?


பூமியில் கூட வானம் நிறம் மாறுகிறது. தெளிவான வானம் அழகான நீலநிறத்தில் ஒளிர்கிறது. மாலையில் சூரியன் மறையும் போதும் காலையில் உதிக்கும்போதும் வானம் இளஞ்சிவப்பாக மாறுகிறது. இப்போது வானின் நிறம் என்ன?

நிறத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் ஒளியின் குணாதிசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒளியானது ஒளிகடத்தல், பிரதிபலித்தல், உட்கவர்தல் என்று மூன்று வகையான வினைபுரிகிறது. ஒரு பொருளின் ஊடே ஒளி ஊடுருவிச்செல்வதை ஒளி கடத்தப்படுகிறது என்கிறோம். கண்ணாடி முதலியவை ஒளியை கடத்துகிறது.

சில பொருட்கள் ஒளியை திருப்பி அனுப்புகிறது. இதனை ஒளி பிரதிபலிப்பு என்கிறார்கள். முகம் பார்க்கும் கண்ணாடி நேர் எதிராக பிரதிபலிக்கிறது. மற்ற பொருட்கள் எல்லாத்திசைகளிலும் ஒளியை சிதறி பிரதிபலிக்கிறது.

ஒளியை உட்கவருவதால்தான் நமக்கு பொருளின் நிறம் தெரிகிறது. எல்லா நிறங்களும் பச்சை இலை மீது விழுந்தாலும் பச்சை நிறத்தை தவிர மற்ற எல்லா நிறத்தையும் இலை உட்கிரகித்துக் கொள்கிறது. பச்சை நிரத்தைமட்டும் நன்கு பிரதிபலிக்கிறது. அதனால்தான் இலை பச்சையாக தெரிகிறது.

சூரிய ஒளியும் விண்வெளியில் பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தை அடைகிறது. அங்கிருக்கும் காற்றில் ஏகப்பட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. அவை சில குறிப்பிட்ட அலைநீளங்களை மட்டும் பிரதிபலிக்கின்றன. மற்றவற்றில் தாக்கம் ஏதும் செலுத்தாது கடந்து போக அனுமதிக்கின்றன. பூமியின் வளிமண்டலம் நீலநிற அலைநீளத்தின் ஒளியை அதிகமாக சிதற செய்கிறது. அதனால் வானம் நீலநிறமாக தெரிகிறது.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் சிவப்பு நிற தூசு தும்புகள் நிரம்பியதாக உள்ளது. இவைகளின் போதிய அளவு இல்லாததால் ஒளிச்சிதறல் ஏற்படுவது இல்லை. அதனால் செவ்வாயின் வானம் இளஞ்சிவப்பாக தெரிகிறது. நிலவில் வளிமண்டலமே கிடையாது. அதனால் ஒளிச்சிதறலும் கிடையாது. அதனால் கருமையாக தெரிகிறது. 

கருமை என்பது நிறமல்ல. ஒளியின் பார்வையில் ஒளியற்ற வெற்றிடத்தையே கருமை என்று சொல்கிறார்கள். எந்த நிற அலைகளும் சிதறாத வானம் நிலவில் இருப்பதால் அங்கு வானத்தில் சூரியன் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்க்கலாம். 

உண்மையில் வானின் நிறம் ஒளியற்ற வெற்றிடமான கருமைதான். பூமியின் வளி மண்டலத்தை கடந்தால் அதை பார்க்கலாம்.வியாழன், ஜனவரி 21, 2016

'சொல்லிட்டாளே அவ காதல..!'றைந்திருந்து பார்ப்பதில் ஒரு மர்மம் இருக்கத்தான் செய்கிறது..! இலை மறைவாக இருப்பதில் இன்பம் பெருகத்தான் செய்கிறது..! ஜோக் நீர்வீழ்ச்சியை மழைக்காலங்களில் பார்ப்பவர்கள் இப்படிதான் சொல்கிறார்கள்.


மேகம் மேலிருந்து கீழிறங்கி பார்வையை மறைத்திருக்கும்போது கேட்கும் அருவி ஓசை, இனம்புரியா மர்மத்தைக் கொடுக்கும். அதே மேகம் சற்று கலைந்து விலகும்போது எதிரில் தெரியும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி கண்களை மயக்கும்.. மனதை சொக்க வைக்கும்..! மீண்டும் மேகம் மறைக்கும்.. மர்மம் கொடுக்கும். மீண்டும் விலகும்.. அருவியின் அழகு மனதை அள்ளும்..! இப்படி திரும்ப திரும்ப நடக்கும்..! ஆனால், இப்போது கொஞ்ச நாட்களாய் அருவியின் இரைச்சல் யாருக்கும் கேட்பதில்லை. பதிலாக 'சொல்லிட்டாளே அவ காதல.. சொல்லும்போதே சுகம் தால..!' என்ற இனிமைதான் எல்லோருக்கும் கேட்கிறது. 

'கும்கி' படத்தில் எம்.சுகுமார் தனது கேமராவில் பிரித்து மேய்ந்திருக்கும் அருவி இதுதான். இன்னும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கவைத்த இந்த இயற்கை பாடல் காட்சியை நேரில் பார்த்தால் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியுமா..?


கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் தான் ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தியாவின் மிக உயரமான அருவியும் இதுதான். 830 அடி உயரத்தில் இருந்து வெள்ளிக்கம்பிகளை உருக்கிவிட்டது போல, பள்ளத்தை நோக்கி பாய்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


பசுமை, குளுமை இணைந்த இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஜோக் நீர்வீழ்ச்சி சொர்க்கம். அது மட்டுமல்ல, வனவிலங்கு பிரியர்களையும் இந்த இடம் கிறங்க வைக்கும்.

மலைகள் சூழ்ந்த இடங்கள், காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் அழகு பொக்கிஷங்களை கொட்டிவைத்திருக்கும் இடம் இது. இங்கிருந்துதான் ஷராவதி, துங்கபத்ரா, காளி, கங்காவதி, தடதி என்று ஆறு நதிகள் உற்பத்தியாகின்றன.


இந்தியாவின் மிகப் பெரிய பல்லுயிர் மண்டலமும் இதுதான். இங்கு ஏழு வனவிலங்கு சரணாலயங்களும் பூங்காக்களும் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது பத்ரா வனவிலங்கு சரணாலயம்தான். நாட்டின் மிக முக்கிய புலிகள் சரணாலயத்தில் ஒன்று இது. இவைகள் எல்லாமே பசுமையும் புத்துணர்வும் தருவதாக உள்ளன.

ஜோக் நீர்வீழ்ச்சி, ஷராவதி ஆற்றின் வீழ்ச்சிதான். இது 'லிங்கன்மாக்கி' அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது. மேலிருந்து அருவி கீழே விழும்போது நான்கு பிரிவுகளாக பிரிந்து விழுகிறது. அதற்கு ராஜா, ராணி, ராக்கெட், கர்ஜனை என்று நான்கு பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.


இருப்பதிலேயே உயரமானது 'ராஜா'. உயரம், பிரமாண்டம், வேகம் என்ற குணாதிசயங்களுக்கு சொந்தக்காரன் இந்த அருவி. அடுத்து 'ராணி', புரிந்திருக்குமே..! ஆமாம் அழகுதான்! இந்த அருவி பேரழகு, அடர்த்தியான நீர்த்துளிகள் மொத்தமாக பறந்து கீழே இறங்குவதுபோல் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

'ராக்கெட்' என்பது செங்குத்தாக ராக்கெட் வேகத்தில் கொட்டும் அருவி. 'கர்ஜனை' என்பது இருப்பதிலேயே உயரம் குறைவான அருவி. உயரத்தில் குறை இருந்தாலும், இது உருவாக்கும் பேரிரைச்சல் காதை தவிடு பொடியாக்கும். அதனால்தான் இந்த அருவிக்கு அப்படியொரு பெயர்.


இந்த நான்கு அருவிகளும் நிரந்தரமானவை வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும். இதுபோக பருவமழை, கனமழை காலங்கள் வந்துவிட்டால் ஏகப்பட்ட புது அருவிகள் உருவாகிவிடும். பல அருவிகள் மொத்தமாக தண்ணீரைக் கொட்டும். அப்போது இந்த நான்கு பிரதான அருவிகள் இன்னும் அழகு பெரும்.


ஜோக் அருவியின் அழகை விட்டு பிரிந்துபோக முடியாமல் இருந்தாலும், இதன் அருகில் பார்ப்பதற்கு வேறு இடங்களும் உள்ளன. அதில் 'மந்தகட்டே பறவைகள் சரணாலயம்' சிறப்புமிக்க பொழுதுபோக்கு. இந்த சுற்றுவட்டாரங்களில் சாப்பிடுவதற்கென்று சில உணவுகளும் உண்டு.

கருணைக் கிழங்கு இலைகளை கொண்டு செய்யப்பட்ட 'ரோடு', பலாப்பழ பன், பேன் கேக்குகள், பஜியாஸ், கொழுக்கட்டை என எல்லாமே வித்தியாசமான மற்ற இடங்களில் கிடைக்காத உணவு வகைகள். அதன் ருசி அறிவது சுவையான அனுபவம்.


மழைக்காலங்களில் மேகமூட்டமாய் தெரியும் ஜோக் நீர்வீழ்ச்சி, கோடையில் சூரிய ஒளிபட்டு அதி அற்புதமான வானவில்லை உருவாக்கும்.எப்படிப் பார்த்தாலும் ஜோக் அழகுதான்.

பிரிந்துபோக முடியாமல் வசீகரத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் இந்த இயற்கை காதலனிடம் இருந்து மனதை பறிக்கொடுத்து, திரும்பும்போது நம் மனதில் மீண்டும் ஒலிக்கிறது..

'சொல்லிட்டேனே இவ காதல..!'
எப்படி போவது? 

பெங்களூரில் இருந்து 270 கி.மீ. தொலைவில் ஷிமோகா உள்ளது. பஸ், ரயில் என்று வசதிப்படி எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

எங்கு தங்குவது?

'ராயல் ஆர்கிட் ஹோட்டல்' தங்குவதற்கு ஏற்றது. சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ளது. முன்பதிவு செய்து போவது நல்லது. போன்: 08182-401999. 


ஜோக் நீர்வீழ்ச்சியை பிரமாதமாக காட்டியிருக்கும் அந்த பாடல்.. 

புதன், ஜனவரி 20, 2016

சிட்டி ஆல்பம் - கன்னியாகுமரி - 2


முந்தைய பதிவான சிட்டி ஆல்பம் - கன்னியாகுமரியின் தொடர்ச்சி..

14. திரிவேணி சங்கமம்


இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களும் ஒன்றாய் சங்கமிக்கும் இடம் இது. இங்கு நீராடுவது புண்ணியம் என்பதால் நீராடும் சுற்றுலா பயணிகள்.15. காமராஜர் மணி மண்டபம்


காந்தி மண்டபத்திற்கு அருகே காமராஜர் மணிமண்டபம் உள்ளது. இதுவும் காந்தியைப் போலவே காமராஜரின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடம். காமராஜரின் அரிய புகைப்படங்கள் இங்கு உள்ளன.


சூரிய உதயத்தை ரசனையோடு பார்ப்பதற்காக உருவாக்கிய இடம் இது.


கன்னியாகுமரியில் கடல் சார்ந்த கைவினைப் பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். கலைநயம் மிக்க இந்தப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்.


கடல் அழகைக் கரையில் அமர்ந்து கண்டு ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட பூங்கா.


அரசு அருங்காட்சியகத்தின் முன்தோற்றம்.

16. குருநாதசுவாமி கோயில்


இந்த சிறிய கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜராஜசோழன் கட்டியது என்றால் நம்ப கடினமாகத்தான் இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் என்ற பிரமாண்டத்தைக் கொடுத்த அந்த ராஜராஜனான இந்த சிறிய கோயிலை கட்டியது என்று. சோழர்களின் கட்டடக்கலையில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில் கி.பி.1038-க்கு முன்பு கட்டப்பட்டதாக இங்குள்ள 16 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையம் அருகில் இந்தக் கோயிலைக் காணலாம்.


17. சுவாமி விவேகானந்தர் பாறை18. திருவள்ளுவர் சிலை19. படகுத் துறை


கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் பாறை உள்ளது. அந்த பாறைக்கு எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை என்ற இரண்டு படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். 


புறப்படத் தயாராய் பொதிகை.


படகினுள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்.
படகு வழியாக திருவள்ளுவர் சிலை.
விவேகானந்தர் பாறையில் படகு. இறங்கும் பயணிகள்.


விவேகானந்தர் மண்டபத்தை நோக்கி..


பளிங்கு யானைகளுடன் ஒரு போட்டோ


மண்டபத்தின் முன்தோற்றம்


பக்கவாட்டுத் தோற்றம்


மண்டபத்தை கேமராவுக்குள் அடக்க முயலும் இளஞ்ஜோடி


திருவள்ளுவரை பின்புறம் பார்ப்பது அபூர்வம்தான்


காதலர்களுக்கும் இந்த இடம் சொர்கம்தான். எப்படி போஸ் கொடுக்கிறார்கள் பாருங்கள்!
ஸ்ரீபாத மண்டபம்


ஸ்ரீபாத மண்டபமும் விவேகானந்தர் மண்டபமும்

20. திருவள்ளுவரின் முழுத்தோற்றம்


திருக்குறள் தந்த தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை. 133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு கூறும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை உயரம் 95 அடி. அலங்கார மண்டபம் அதாவது பீடம் 38 அடி உயரம். மொத்தம் 133 அடி.


திருவள்ளுவர் சிலை 1283 சிறிய மற்றும் பெரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்த எடை 7,000 டன். முகத்தின் உயரம் மட்டும் 10 அடி. தோள்பட்டை அகலம் 30 அடி. 


சிலை மட்டும் 2000 டன் எடைக் கொண்டது. திருவள்ளுவரின் காலடியில் நின்று கடலைக் கண்டுகளிப்பது தனி சுகம்.


திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகனந்தர் பாறையைப் பார்ப்பது தனியழகு. 

22. அலையும் துறவி கண்காட்சி


விவேகானந்தர் உலகம் முழுவதும் அலைந்து ஆன்மிகப் பணியாற்றிய நிகழ்வுகளை அற்புதமாக சொல்கிறது இந்த அலையும் துறவி கண்காட்சி. இந்தக் கட்டடம் ஆன்மிக வடிவமைப்பில் மேரு கலையை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

23. வேக்ஸ் மியூசியம்


இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வேக்ஸ் மியூசியம் இதுதான். இங்கு தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவது வித்தியாசமான அனுபவம்.


ஜெயலலிதா மெழுகுச்சிலையாக


24. இயந்திரத்துடன் கிரிக்கெட்


வேக்ஸ் மியூசியத்தில் பவுலிங் இயந்திரம் போடும் பந்துகளுக்கு கிரிக்கெட் விளையாடி மகிழலாம்.

24. குமரி வரலாற்றுக் கூடம்


கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், உலகத்தின் தோற்றம், அன்னை தேவி குமரியின் அவதாரம், விவேகானந்தரின் வரலாறு, அய்யா வைகுண்டரின் வரலாறு, புனித தாமஸ், மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.

25. கலங்கரை விளக்கம் 


பழமையான இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாவாசிகள் பார்வையிடலாம். தினமும் மாலை 3 முதல் 5 மணி வரை அனுமதிக்கிறார்கள். அதற்கு கட்டணமும் உண்டு. 

26. விவேகானந்தபுரம்


விவேகானந்த கேந்த்ராவின் தலைமையிடம் இது. கன்னியாகுமரி நகரின் நுழைவிடத்தில் அமைந்திருக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இடம் யோகா, தியானம், ஆன்மிகம், தேசிய ஒருமைப்பாடு போன்ற முகாம்களுக்கு பெயர்பெற்றது.

27. ஏக்நாத் ராணாடே சமாதி


கன்னியாகுமரியில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் ஒரு தியான மண்டபத்தை அமைக்க வேண்டும் என்று முயற்சித்து, அந்த முயற்சியை செயல்படுத்தியவர் ஏக்நாத் ராணாடே. அவரின் சமாதி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது.


முகாமில் பங்குபெறுபவர்கள் தங்கும் இடம்.

27. சன்செட் பாயிண்ட்


சூரியன் அஸ்தமனமாவதை இங்கிருந்து கண்டு களிக்கலாம். அதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த இடம்.
குடும்பத்துடன் சுற்றி வர கன்னியாகுமரி ஏற்ற இடம். இரண்டு நாட்கள் திட்டமிட்டால் எல்லா இடங்களையும் தவறாமல் பார்த்துவிடலாம்.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...