Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

முதல் பதிவர் சந்திப்பு.. முதல் அனுபவம்..


விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மதுரையிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ் ஏறினேன். இரவு முழுவதும் தூறல் போட்டு ஓய்ந்ததற்கான அடையாளங்களை சாலையில் ஈரமாக விட்டுப் போயிருந்தது மழை. ஊர்முழுக்க ஏஸி போட்டதுபோல் இனிமையான குளுமை. இருளை மதுரையிலேயே விட்டுவிட்டு விடியலோடு புறப்பட்டது பேருந்து. 

சில்லென்ற காற்று ஜன்னல் வழியாக பரவிக்கொண்டிருக்க இனிமையான அந்தநாள் பயணத்தோடு தொடங்கியது. திருப்பத்தூர் வரை நன்றாக இருந்த சாலை, அதன்பின் அலுங்கி குலுங்கி செல்லும்படியாக அமைந்தது. புதிதாக பாலங்கள் கட்டுவதால் ஏற்பட்ட அலுங்கல் குலுங்கல் அது. 

சரியாக காலை 8.30 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். மதுரையிலிருந்து பலமுறை தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை என்று புதுக்கோட்டை வழியாக பயணித்திருக்கிறேன். ஆனால், ஒருமுறை கூட இங்கு இறங்கியது இல்லை. முதல் முறையாக புதுக்கோட்டையில் பாதம் பதித்தேன். 

என்னுடன் சேர்ந்து இன்னும் இருவர் இறங்கினார்கள். அவர்களும் மதுரையிலிருந்து வந்திருந்தார்கள். வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்கள். அவர்களை பதிவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் பதிவர்கள் இல்லை; வாசிப்பாளர்கள். நாம் எழுதும் பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் அவர்கள். இருவரும் நண்பர்கள். மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக வந்திருந்தார்கள். அதில் ஒருவர் 'செல்லதுரை சிவில் இன்ஜினியர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 

அவர்களிடம் என் பெயரை சொன்னதுமே, ''கூட்டாஞ்சோறு' தானே உங்களின் வலைத்தளம். நாங்கள் உங்கள் பதிவுகளை நிறைய படித்திருக்கிறோம்.' என்றார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி. பதிவர்கள் அல்லாதவர்களும் நமது பதிவுகளை தொடர்ந்து படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.


அந்த மகிழ்ச்சியோடு 'ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்' வந்து சேர்ந்தேன். விழாவுக்கான அனைத்து அலங்காரங்களுடனும் மன்றம் ஜொலித்ததுக் கொண்டிருந்தது. உள்ளுக்குள் இருக்கைகள் காலியாக  இருந்தன. தாமதமாக வந்ததாக நினைத்த என் எண்ணம் பறந்து போனது. சரியான நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டேன் என்பதை அந்த காலி இருக்கைகள் சொல்லின.


வரவேற்பாளர்களிடம் எனது பெயரை சொல்லி அடையாள அட்டையும் கைப்பையும் பெற்றுக்கொண்டேன். அதில் வலைப்பதிவர் கையேடு அசத்தலாக இருந்தது. அதன்பின் நான் கையோடு எடுத்து வந்திருந்த என்னுடைய 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகங்களை புத்தக விற்பனையகத்தில் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றேன். 

வாசலில் இருந்து சற்று உள்ளடங்கிய இடத்தில் விழாக் குழுவினரின் தலைவர் முத்து நிலவன் அய்யாவும் பாவலர் பொன் கருப்பையா அய்யாவும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். யாரையும் நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்றாலும், அனைவரையும் பார்த்தவுடனே இவர்தான் என்று சரியாக கணிக்க முடிந்தது. அதற்கு உதவியது வலைப்பூவில் அவர்கள் வைத்திருந்த படங்கள்தான். அப்படிதான் முத்து நிலவன் அய்யாவையும் அடையாளம் கண்டு கணித்திருந்தேன். 

அதற்குள் முத்து நிலவன் அய்யாவே, "வாங்க..! வாங்க..! நான்தான் முத்து நிலவன்..!" என்று மனம் குளிர வரவேற்று தன்னையும் அறிமுகம் செய்துகொண்டார். "அய்யா உங்களை தெரியாதா..?" என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "இவர்தான் பொன் கருப்பையா. வங்கிக் கணக்கு எங்கள் இருவரின் பெயரில்தான் இருக்கிறது." என்றார்.

என் பெயரை சொன்னதுமே இருவரும் இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பாவலர் அய்யா மிகவும் பாராட்டினார். இன்றைய சூழலுக்கு அவசியமான கட்டுரை என்றார். முத்து நிலவன் அய்யா, "நீங்கள் அனுப்பிய போட்டோ அவ்வளவாக நல்லாயில்லையே. அதற்கு பதிலா நீங்க வலைப்பக்கத்தில் வைத்திருக்கும் படம் நன்றாக இருந்தது. நான் கடைசி நேரத்தில்தான் அதைக் கவனித்தேன். அதனால் மாற்ற முடியவில்லை." என்றார்.

எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சரியான உறக்கம் இல்லாமல், வேளாவேளைக்கு சாப்பிடாமல் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு எப்படி இந்த சின்ன விஷயங்கள் எல்லாம் நினைவில் வைத்து செய்யமுடிகிறது. என் திகைப்பைக் கண்டுகொள்ளாத அவர் "சாப்பிட்டீங்களா..?" இல்லையென்றதும், "முதல்ல சாப்புட்டு வாங்க.. அப்புறம் பேசுவோம்..!" என்பதற்குள் தென்றல் கீதா வேகமாக அய்யாவிடம் ஏதோ கேட்க வந்து கொண்டிருந்தார்.


அந்த அவசரத்திலும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அய்யா. அந்த படபடப்பிலும் இன்முகத்தோடு வரவேற்ற கீதா அவர்களும் என்னுடைய 'இருட்டு நல்லது' கட்டுரையைப் பற்றி பாராட்ட தொடங்கி விட்டார். பரிசு பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்தார். சிறிது உரையாடலுக்குப் பிறகு சாப்பிட்டு வர மூவரும் அன்புக் கட்டளையிட்டனர்.

நானும் காலை உணவுக்காக மேலே செல்ல தயாரானேன். மாடிப் படி ஏறும்போது மன்றத்தினுள் நுழைந்தார் கரூர்பூபகீதன். பதிவுகளில்தான் முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் பதிவர் சந்திப்பிலும் முதல் ஆளாக நிற்கிறார். குறுகிய காலத்தில் அனைவருக்கும் பரிட்சயப்பட்டவர். அவரிடம் சிறிது உரையாடியப் பிறகு மாடி ஏறினேன்.

அப்போது என்னுடன் சேர்ந்து படியேறினார் ருக்மணி சேஷாயி அம்மாள். 'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகளை சொல்வதாக சொன்னார். மிக அரிய பணி அது. குழந்தைகளுக்கான இலக்கியம் நம் தமிழ் வாசிப்பு தளத்தில் மிகக் குறைவாகவே இருக்கிறது. நமது தளிர் சுரேஷ் போல் குழந்தை கதைசொல்லிகள் ஓரிருவர்தான் இருக்கிறார்கள். அந்தவகையில் ருக்மணி சேஷாயி அம்மாளை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி தந்தது.  


உணவுக் கூடம் காலியாக இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் இருகரம் கூப்பி எங்களை வரவேற்றார் ஜெயலட்சுமி. "நான்தான் உணவுக் குழுக்கு பொறுப்பு. நல்லா திருப்தியா சாப்பிடுங்க..! ஏதாவது குறையிருந்த சொல்லுங்க..!" என்றார். குறைகளை தேடிக்கொண்டே சாப்பிட்டோம் எதுவும் அகப்படவில்லை.


அப்போது வியர்த்து விறுவிறுக்க மாடியேறி வந்தார் நண்பர் தமிழ் இளங்கோ. எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமானார். கேமராவில் எங்களை சிறைப்படுத்திக் கொண்டார். அன்பான,ருசியான, நிறைகள் நிறைந்த உணவை வழங்கிய ஜெயலட்சுமி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கீழே போக எத்தனிக்கும் போது அங்கே திருப்பூர் ஜோதிஜி நின்றிருந்தார்.

அங்கு முனைவர் இரா.குணசீலனும் இருந்தார். அவரை மிக சமீபமாகத்தான் எனக்கு தெரியும். நான் போட்டிக்கு எழுதிய கட்டுரைகளில் அவரது பின்னூட்டம் இருந்தது. அதன்பின்னர் தான் தெரிந்தது அவரும் நடுவர் குழுவில் ஒருவர் என்று.

ஜோதிஜி அவருக்கு அருகில் இருந்த ஒரு இளைஞரைக் காட்டி, "இவரைத் தெரியுமா?" என்று கேட்டார். "பார்த்த முகமாக இருக்கிறது. ஆனால், தெரியவில்லை." என்றேன். "இவர்தான் நீச்சல்காரன்..!" என்றார்.

எனக்கு மீண்டும் ஆச்சரியமான ஆச்சரியம் நீச்சல்காரன் என்பவர் வயதானவராக இருப்பார். தமிழில் பிழைத் திருத்தி எழுதவேண்டும் என்றால் முதலில் தமிழில் பாண்டித்யம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின் கணினி நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒன்று சேர்ந்து பெற வயது கூடியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர் இளமையாக இருந்தார். எளிமையாகவும் இருந்தார். இளமையிலே சாதித்தவராகத்தான் நீச்சல்காரன் எனக்கு பட்டார்.

                                                                                                                                           -தொடரும்


படங்கள்: வலைப்பதிவர் நண்பர்கள்

52 கருத்துகள்

 1. மீண்டும் வலைப்பதிவர் மாநாட்டுக்குள் நுளைய வைத்து விட்டீர்கள் நண்பரே தொடர்கிறேன்..
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் முதல் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. ஒவ்வொரு நிகழ்வையும் சொன்னவிதம் மிகவும் அருமை... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. விழாவில் கலந்து கொள்ளாத குறையை போக்கி விட்டீர்கள். நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. அருமையாய் அனைத்தையும் கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. இனிமையான சந்திப்பு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 6. முடிந்துவிட்டதோ என எண்ணிகவலைப்பட்ட நேரத்தில் மீண்டும் ஆரம்பித்திலிருந்து நன்றி சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரமின்மையால் மிக தாமதமாக பதிவெழுத நேர்ந்தது. வருகைக்கு நன்றி சகோ!

   நீக்கு
  2. அதெல்லாம் ஒன்றும் தாமதமில்லை நண்பரே! (நான் கூட இப்பத்தான் வந்து பார்க்கிறேன்!) “எல்லாவற்றையும் மறந்த பின்னரும் எது நினைவிலிருக்கிறதோ, அதுதான் பாடம்“ என்பார்கள் அல்லவா? இப்போதுதான் மீள்பார்வையில் உங்களுக்கு நிற்கும் செய்திகளை எழுதமுடியும். அதுவும் ஒரு குறுநாவலுக்குரிய விவரிப்புகளோடு அருமையாக எழுதுகிறீர்கள்.. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம். தொடருங்கள். நன்றி . த.ம.கூடுதல்1

   நீக்கு
  3. உண்மைதான். இப்போது நினைவில் இருப்பது கொஞ்சமே! தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 7. அடே டே... மீண்டும் மீண்டும் பதிவுகள் வந்து பொறாமையில் நமக்கு வைக்காமால் போய்விட்டதேன்னு ஏங்கி ஏங்கி .... கடைசியில் ஒரு வழியாய் இந்த பதிவுகள் நின்று விட்டது என்று பேரு மூச்சு விடுகையில்.. வந்துட்டாங்கையா .. வந்துட்டாங்க .. என்ற பாணியில் .. மீண்டும் வந்து..
  என் வயிற்றில் பாலை வார்க்கின்றீரே.. (Jokes apart)... ரசிக்க வைத்த பதிவு...

  எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்... இந்த கால கட்டத்திலேயும் அனவைருக்கும் வெங்காய பருப்பு சாம்பார் அளித்த ஜெயலக்ஷ்மி அவர்களுக்கு " நளபாக ஜான்சி ராணி" என்ற பட்டத்தை சூட்டிவிடுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் சார்பாக பட்டத்தைக் கொடுத்துவிட்டோம். வருகைக்கு நன்றி!

   நீக்கு
 8. வணக்கம்.

  ஆஹா தங்களின் பார்வையில் பதிவர் விழா..!

  வேறெவர் பதிவிலும் கண்டிராத தாங்கள் எடுத்த படங்களுடன் தங்களின் நடையில் படிப்பவர்களுக்குச் சொல்லவா வேண்டும்......!!!

  த ம ஏழுடன்

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் நான் எடுக்கவில்லை. நமது நண்பர் தமிழ் இளங்கோ, ஜிஎம்பி அய்யா மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு தளங்களில் ஏற்கனவே வெளிவந்த படங்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வருகைக்கு நன்றி!

   நீக்கு
 9. தாமதமானாலும்கூட, நினைவடுக்குகளிலிருந்து சுவைபட தந்துவிட்டீர்கள்.
  தொடர்ச்சியையும் விரைவாக வெளியிட, கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள அய்யா,

  பதிவர் சந்திப்பு பற்றி படங்களுடன் பதிவு நன்றாக இருக்கிறது.

  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களுக்கு சொந்தக்காரர் நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள். வருகைக்கு நன்றி அய்யா!

   நீக்கு
 11. அன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட யாராலும் மறக்கவியலா விழாதான் அது என்பதில் சந்தேகமே இல்லை. இன்றைய உங்களது பதிவினில் உள்ள படங்களில், மூன்றாவது படத்தைத் தவிர மற்ற படங்களை எடுத்தது அடியேன்தான் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அந்த காலை உணவு நேரத்தில் நான் மட்டுமே படம் பிடித்தேன் என்பதில் எனக்குள் ஒரு மனநிறைவு. அதற்கு அப்புறம் என்னால் படம் எடுக்க இயலாமல் போய் விட்டது. அன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ஒரு பத்திரிகையாளர் பார்வையில், வலைப்பதிவர் நிகழ்ச்சி பற்றிய உங்களது கட்டுரை சிறப்பாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்து வரும், உங்கள் பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னடா படங்கள் மிக அழகாக தெளிவாக வேண்டிய அளவு பெரிதாக இருக்கிறதே என்று நினைத்தேன் இப்போதுதான் புரிந்தது அது இளங்கோ சாரின் கைவண்ணம் என்று... எப்போது எல்லாம் நாலுபதிவர்கள் கூடி சந்திச்சு போட்டோ எடுத்து போட்டார்கள் என்றால் முதலில் நான் பார்ப்பது இளங்கஓ சாரின் வலைத்தளத்தைதான் அவர்மட்டும்தான் படங்களை மிக தெளிவாக பதிவு செய்வார் மற்றவர்கள் எல்லாம் கஞ்சர்கள் போல மிக சிறிய அளவில் போட்டு நம்மை யார் யார் எப்படி இருப்பார்கள் என்பதை காண கஷ்டப்படுத்துவார்கள்... பாராட்டுக்கள் இளங்கோ சாருக்கு..செந்தில் குமார் உங்களுக்கும் பாராட்டுகள்தான் அவர் படத்தை பதிந்தற்கு

   நீக்கு
  2. தங்களின் விழா பதிவை பார்த்தபோதே அதில் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. எனக்கு வேண்டிய படங்களை தங்கள் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். தங்களின் கேமரா பழுதடைந்ததால் அந்த வாய்ப்பும் போனது. அழகிய படங்கள் தந்துதவிய தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
  3. @ அவர்கள் உண்மைகள்

   பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. புதுகையில் கால் தடம் பதித்த முதல் வினாடியிலிருந்து அனைத்தையும் சுவாரஸ்யமாக‌ச் சொல்லியுள்ளீர்கள்! மிகவும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 13. ஆஹா... உங்கள் பின்னே நாங்களும் பயணிக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 14. விழாவுக்கு போகமுடியாத ஏக்கத்தை ஒருபுறம் போன நீங்கள் சந்தித்த பரவசம் என பகிர்வு நெஞ்சில் ஆடும் பூப்போல தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 15. மீண்டும் ஒரு உற்சாகமான உணர்வோட்டம்.. புதுகை விழா குறித்த உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் மிக அழகாகத் தொகுத்துத்தரும் பாங்கு ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் செந்தில். தொடருங்கள். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. சுவாரஸ்யமாக அலுப்புத் தட்டாமல் விழா நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு சிறப்பு! தொடர்கிறேன்! படங்கள் அழகு! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. எழுத்துலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உங்களின் ஆசிரியர் பொறுப்பில் வரும் இதழ்கள், பத்திரிக்கைகள் அனைத்தும் வெகுஜனத்திற்குச் சென்று சேர வேண்டும். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 18. உங்கள் தொகுப்பு லேட்டா வந்தாலும் அருமை :)

  பதிலளிநீக்கு
 19. இனிய சந்திப்பின் நினைவுகள் தொடரும்!

  பதிலளிநீக்கு
 20. அழகான நடையில் நல்லதோர் பதிவு..தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. என்னவென்றால் உரையாட நேரமில்லாமல் போனது...வருத்தம்

  தொடர்கின்றோம் நண்பரே.

  பதிலளிநீக்கு
 21. அடே டே.. இப்ப தான் மீண்டும் ஒரு முறை புகை படத்தை பார்த்தேன். தலை வாழை இல்லை அதில் ஒரு வடை...
  எனக்கு இல்ல எனக்கு இல்லன்னு புலம்ப வச்சிட்டேளே ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்தியான உணவு. உங்களுக்கு இணையத்தில் அனுப்பி வைத்தோமே எடுத்துக்கிலையா?

   நீக்கு
 22. பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட உங்கள் அனுபவம் பற்றி மேலும் படிக்க தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை