•  கூட்டாஞ்சோறு

    பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

    வியாழன், டிசம்பர் 03, 2015

    சென்னை சின்னாபின்னமாக யார் காரணம்?    சென்னையில் தற்போது பெய்கின்ற பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.


    சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.


    பெருமழையா?

    நவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.


    சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.


    சென்னையின் நிலஅமைப்பு

    சென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.


    இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.


    தாக்கமும் விளைவும்

    கடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.53 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.


    அதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.


    கட்டிடக் கழிவும் குப்பையும்

    தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.


    சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.


    சென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.


    சமநிலை சீர்குலைவு

    சென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்டத்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.


    இப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.


    கூடுதல் பிரச்சினை

    சென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.


    ஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது. 


    கடும் வானிலை நிகழ்வு

    மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.


    அத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.


     இனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.

    - பானோஸ் 
    தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர்.

    ('த ஹிந்து' நாளிதழில் வெளிவந்த கட்டுரை) 

    நிவாரண முகாம்
    பயிர்கள் சேதம்

    படங்கள் : கூகுள் இமேஜ்.


    40 கருத்துகள்:

    1. சீர் படுத்தும் வேலைகள் பலதும், மழை நின்ற பின் உடனேயே செயல்படுத்த வேண்டும்...

      பதிலளிநீக்கு
    2. இதையே ஒரு எச்சரிக்கையாகவும் பாடமாகவும் எடுத்துக்கொண்டு, இனி எதிர்காலத்தில் இது போலப் பெரும்மழை பொழிந்தால் எங்குமே நீர் தேங்காதவாறு, தகுந்த வடிகால்கள் அமைக்கவும், ஒரு சொட்டு மழை நீரும் கடலில் கலந்து வீணாகாமல் சேமித்து வைக்கவும் வேண்டிய அனைத்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டால் நல்லது.

      இந்தப்பதிவும், மற்றும் அவ்வப்போது கிடைத்துவரும் செய்திகளும் மனதை கலங்கடிக்கிறது.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இனி அடிக்கடி இப்படிப்பட்ட பேரிடர் வரும் என்று வேறு பயமுறுத்துகிறார்கள். இனி அரசும் மக்களும் இந்த விஷயத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும்.

        தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

        நீக்கு
    3. அப்பா,,,,,,, தங்கள் கட்டுரை தெளிவாக காட்டுகிறது, இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்று,,,,

      இனியாவது பொது இடங்கள் நீர் வடிகால் வழித்தடங்கள் வீடுகளாகாமல் கட்டிடமாக மாறாமல் இருக்குமா சகோ,,,
      பகிர்வுக்கு நன்றி.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. பானோஸ் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்.

        இனிமேலாவது நீர் வழிகளை ஆக்கிரமிக்காமல் இருக்க வேண்டும்.

        வருகைக்கு நன்றி சகோ!

        நீக்கு
    4. மழை தந்த பாடம், மக்களுடன் சேர்ந்தே அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
      பிழை செய்யும் போது இந்த மழையை நினைத்தாலே போதும்.
      சிறப்பான பதிவு!
      த ம +
      நன்றி,
      நட்புடன்,
      புதுவை வேலு

      பதிலளிநீக்கு
    5. நீரையும் நீர் பாதையையும் அழிப்பதன் விளைவே...இத்துயரம்...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இந்தத் துயரம் நாம் தேடிக்கொண்டதுதான்.
        வருகைக்கு நன்றி சகோ!

        நீக்கு
    6. அரசுகள் மனம் வைத்தால் மட்டும் போதாது
      பொது மக்களும் நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதைத்
      நிறுத்த வேண்டும்,வடிகால் வசதிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
      தம +1

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அதற்கு இந்த வெள்ளம் ஒரு பாடமாக இருக்கட்டும்.
        வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    7. வணக்கம்
      தாங்கள் சொல்வது உண்மைதான்... நீர் இருக்கும் இடமெல்லாம் அரசு பட்டா போட்டு விற்றால் அங்கும் பல கட்டடங்கள் வந்திருக்கு நீர் போக வழி இல்லாவிட்டால் மனிதன் வாழும் இடமெல்லாம் நீர்வரும்..அரசுதான் கவனம் செலுத்த வேண்டும் த.ம 5
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அரசின் மெத்தனம் தான் எல்லாவற்றுக்கும் காரணம். நீர்நிலைகள் என்று தெரிந்தால் வீடு கட்டக்கூடாது என்ற மேன்மை மக்களுக்கு இருக்க வேண்டும். அதையும் மீறி ஒருவன் அந்த இடத்தில் வீடு கட்டினால் அரசு அனுமதியளிக்காத பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அதைவிட்டு அவர்களுக்கு வரி, ரேஷன் கார்ட், மின்சாரம் என்று எல்லாம் வழங்கி ஊக்கப்படுத்துபவர்கள் அரசியல்வாதிகள்தான். அவர்களுக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்தால் இந்த நாட்டில் எதுவும் சாதிக்கலாம் என்ற நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

        வருகைக்கு நன்றி நண்பரே!

        நீக்கு
    8. சமூகத்திற்குத் தேவையான செய்திகளைப் பகிர்வதும் ஒரு சேவையே.

      தொடர்கிறேன்.

      நன்றி.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    9. விரிவான விளக்கமான தகவல்கள் தந்துள்ளார் திரு. பானோஸ்...

      அடுத்து...
      நாம் செய்யவேண்டியது என்ன?

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. செய்ய வேண்டியது மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது நண்பரே, அதற்கு பெரும் முயற்சி அரசும் மக்களின் பொறுப்புணர்வும் தேவை.

        நீக்கு
    10. சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சொல்லும் வழிகாட்டுதல்களை அரசோ...ஆளுகின்ற ஓட்டுகட்சிகளோ... தொடரப்போவதில்லை..அவை மக்களுக்கா சேவை செய்யப்போவதில்லை...மக்கள்தான் தங்கள் அதிகாரத்தின் மூலம்தான் பாதுகாத்து கொள்ள முடியும்..

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அரசு அனுமதித்தால் கூட போதும் செய்வதற்கு நிறைய தனியார் அமைப்புகள் இருக்கின்றன. முதலில் அரசியல்வாதிகள் நாட்டின் மீது அக்கறைக் கொள்ள வேண்டும்.

        நீக்கு
    11. பருவ நிலை மாற்றம் என்பது சாதாரணமாய் படிக்கத் தோன்றியது ,அதன் வீரியம் இப்போது புரிகிறது !

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இன்னமும் இயற்கையை சீரழிக்க சீரழிக்க பாதிப்பு அதிகமாகிக் கொண்டே போகும் என்பதுதான் உண்மை.

        நீக்கு
    12. இக்கட்டுரையின் "பெருமழையா" எனும் பகுதியில் உள்ள அளவுகளில் எனக்கு சந்தேகம். இவ்வளவுகள் மிமீ ரா? செமீ ரா? - மிமீ ராவின் மிகக் குறைவாக உள்ளதே!
      இத்தனைக்கும் நம் நாடுகளில் முதற் காரணி லஞ்சலாவண்யம்- நான் வாழ்ந்தால் போதுமெனும் மனநிலை.
      இனி வரும் காலங்களில் இதை விட மோசமான அழிவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் சற்றுத் திட்டமிட்டு இயற்கையை மதித்து வாழ்ந்தால் , அழிவின் வீரியத்தைக் குறைக்கலாம். நடக்குமா? புறம்போக்கு நிலமென்பது ஆழும் கட்சியின் சொத்து என ஆகி எத்தனையோ மாமாங்கமாகி விட்டது.
      நீர் வடிகாலில் குப்பை கூளம் கிடந்தால் அதைச் சுற்றியுள்ள வீட்டாரிடம் உடன் தண்டம் அறவிடும் நடவடிக்கையை அரசு எடுக்கலாம்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இந்தக் கட்டுரை நவம்பர் 16-க்கு முன்பு வந்த மழையின் அடிப்படையில் எழுதப்பட்டது. தற்போது பெய்த பேய் மழையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் உங்களுக்கு அந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

        நீக்கு
    13. அன்புள்ள அய்யா,

      தண்ணீரில் தத்தளிக்கிறது தமிழகம்! படத்துடன் பல தகவல்களைத் தந்ததற்கு நன்றி.
      தண்ணீரில் மிதக்க வைத்தாய்... தெருக்கரைமேல் இருக்க வைத்தாய்... மழையே மக்களை கண்ணீரில் குளிக்க வைத்தாய்...மாநகரமே மழைநீர்த் தொட்டியாகி விட்டபிறகு... இனி நாடுதான் பெரிய மழைநிர்த் தொட்டிய (ஏரி குளத்தை) கட்ட வேண்டும்...!
      த.ம.8

      பதிலளிநீக்கு
    14. நல்லதொரு கட்டுரை.....

      துயரத்தில் இருக்கும் தமிழக மக்கள் விரைவில் துயரத்திலிருந்து மீளட்டும். இனிமேல் இப்படி வராமல் இருக்க போதிய நடவடிக்கைகளை மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து எடுக்க வேண்டும் - தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே....

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. கட்டாயமாக நாடு முழுமைக்குமான செயல் திட்டம்தான் தேவை.

        நீக்கு
    15. MRT Tunnel என்ன ஆனது. முற்றிலும் தண்ணீரால் நிரம்பி விட்டதா?

      பதிலளிநீக்கு
    16. தெளிவான விளக்கம். இனியேனும் மக்களும் அரசாங்கமும் சரியான முறையை செய்யவேண்டும்.

      பதிலளிநீக்கு
    17. அனைத்துக் கருத்துகளும் உண்மையே! இயற்கைச் சீற்றம் ஒன்றும் புதிதல்ல.

      சதுப்பு நிலம் எங்கள் வீட்டிலிருந்து ஒரு 6 கிமீ தூரத்தில்தான். அதைத்தூர்வாரியிருந்தால் பெருமளவு சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அதன் மீதே கட்டிடங்கள். மட்டுமல்ல பல நீர்வடிகால்கள் அருகிலும் மேலும் கட்டிடங்கள் வீடுகள்...ஹும் என்ன சொல்ல. நான் இதை எல்லாம் பார்த்து வருந்தாத நாள் இல்லை. சிட்டி ப்ளானிங்க், மேனேஜ்மென்ட் என்பது சுத்தமாக இல்லை...

      இதிலிருந்தாவது மக்களும், அரசும் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது. ஆனால் பாடம் கற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை...சந்தேகமே...கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை சகோ...கடுமையான சட்டங்கள் வந்தாலொழிய..

      அருமையான கட்டுரைப் பகிர்வு நன்றி சகோ

      கீதா

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அலட்சியமும் பணவெறியும் தான் இத்தனை பெரிய பாதிப்புக்கு காரணம்.

        நீக்கு
    18. மழையின் மீது தவறே இல்லை. மக்கள் அதைப் பழிப்பதை விட தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தாலே போதும். இது நாம் மக்கள் செய்த தவறால் வந்ததே...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இயற்கை இந்தளவிற்கு சீறியதற்கு நாமும் ஒரு காரணம்தான்.

        நீக்கு
    19. இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது எதிர்விளைவையே தரும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. யாரையும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. நம்மையே குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். இனியாவது அரசு விழித்துக்கொண்டு நீர் வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றி வெள்ளம் வரும்போது சுலபமாக கடலை அடைய வழி செய்வார்களா? அருமையான கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இயற்கை பாடம் கற்றுக்கொடுத்து விட்டது. இனியும் நாம் சுதாரிக்கவில்லை என்றால் அது இன்னமும் மோசமாக கற்றுக்கொடுக்கும்.
        வருகைக்கு நன்றி அய்யா!

        நீக்கு

    இப்போது இணையத்தில்

    பந்திக்கு வந்தவர்கள்

    நண்பர்கள்