• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, டிசம்பர் 04, 2015

  நீர்வழிச் சாலை அமைத்திருந்தால் சென்னை இப்படி ஆகியிருக்காது! - 1


  மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் என்பது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்ட உண்மை. மனிதர்கள் ஒற்றுமையுடன் முயற்சித்தால் இந்தப் போரை தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

  "ஒற்றுமையா..? அதுவும் தண்ணீர் விஷயத்திலா..?" என்று மீசையை முறுக்குகிறார்கள் தண்ணீர் வளம் மிக்கவர்கள். 'என்னதான் செய்வது..?' என்று எப்போதும் போல் கையை பிசைந்து நிற்கின்றன அரசாங்கங்கள். 

  இந்த நிலையில்தான், "அட.. உங்களின் தண்ணீர் உங்களுடனே இருக்கட்டும். எங்களுக்கு அது வேண்டாம். ஆற்றில் வெள்ளம் வரும்போது வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மட்டும் எங்களுக்கு கொடுங்கள். அது போதும், நாங்கள் பிழைத்துக் கிடக்க..! இல்லை, இந்தியா வல்லரசாக..!!" என்கிறார்கள், தேசிய நீர்வழிச் சாலை திட்டக்குழுவினர்.


  என்ன ஒன்றும் புரியவில்லையா..?

  சென்னை முழுவதும் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் தண்ணீர் வேண்டும் என்பது பற்றி பேசுகிறார்களே..! என்று ஆச்சரியப்படுகிறீர்களா..? கவனமாக படியுங்கள்..!

  இன்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நாளையே தாங்கமுடியாத வறட்சி ஏற்படும். பருவநிலை மாற்றத்தால் இனி இரண்டுமே கொடூரமாகத்தான் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். இரண்டையுமே தாங்க முடியாது. இதை மக்கள் தாங்கிப் பழகவேண்டும். வேறு வழியில்லை. இயற்கையை கெடுத்தது நாம்தான். அதன் பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

  ஆனால், அரசு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டால் வெள்ளம், வறட்சி என்ற இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் மக்களை காப்பாற்றலாம். அதற்கு தீர்வாக அமைவதுதான் 'தேசிய நீர்வழிச் சாலை'. இதுவொரு உன்னதமான திட்டம். இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் நதிகள் இணைப்பு பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான் இந்த திட்டம் முழுமையாக புரியும்.

  இந்திய நதிகளை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும் என்பது தலைமுறைக் கனவு. இந்தக் கனவை நனவாக்க அவ்வப்போது குரல்கள் எழும். அதுவும் வறட்சியின் போது உக்கிரமாக எழும். பின் அப்படியே அடங்கிவிடும்.

  அதேவேளையில் நதிகளை இணைக்க முடியாது. அது நடக்கும் காரியமில்லை என்று அதற்கு இணையாக சில குரல்கள் ஓங்கி ஒலிக்கும். அவர்களுக்கு தெரியாது முல்லைப் பெரியாறு அணையே ஒரு நதிநீர் இணைப்பின் அடையாளம்தான் என்று.

  முல்லைப் பெரியாறு அணை
  மேற்குத் தொடர்ச்சி மலையின் அந்தப் பக்கம் (கேரளா) இருக்கும் முல்லை என்ற சிறிய ஆறும், பெரியாறு என்ற மற்றொரு பெரிய ஆறும், ஏரளாமான நீரை வீணாக அரபிக் கடலில் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தன.

  மலையின் இந்தப் பக்கமோ (தமிழ் நாடு) மதுரை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் ஒரு சொட்டு நீருக்காக தவித்துக் கொண்டிருந்தன. இந்த இரண்டையும் ஒன்று சேர்த்தால் வறண்ட பூமியை வளமாக்கிவிடலாமே என்று யோசித்தது அன்றைய ஆங்கிலேய அரசு. பென்னிக் குயிக் என்ற உன்னதமான பொறியாளரிடம் அந்தப் பணியை ஒப்படைத்தது.

  முல்லையும் பெரியாறும் இணையும் இடத்தில் அணை கட்டப்பட்டது. எல்லா அணைகளும் நீரை நேக்கி வைத்து, வேண்டிய போது திறந்து கொள்வார்கள். அந்த நீர் ஆற்றின் பாதையிலே செல்லும். முல்லைப் பெரியாறு அணை அப்படியல்ல, அதுவொரு தடுப்பு அணைப் போலத்தான். தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளும்.

  அப்படி தேங்கிய நீரை அணையின் பின்பக்கம் வழியாக மலையைக் குடைந்து, தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி, வைகை ஆற்றோடு சேர்த்திருப்பதுதான். இதன் மிகப் பெரிய கட்டுமான சாதனை. இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பும் இதுதான்.

  இன்றைக்கு மதுரை பகுதியில் விவசாயம் நடைபெறுவதற்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கும் முக்கிய காரணமே இந்த அணைதான். இதுமட்டும் இல்லையென்றால் மதுரை மாவட்டம் தமிழகத்தின் மிக வறண்ட மாவட்டமாக மாறியிருக்கும்.

  முல்லை, பெரியாறு நதிகளை வைகை நதியோடு இணைத்ததால்தான் மதுரை ஓரளவுக்கு வளமாக இருக்கிறது. மக்கள் குடிநீர் பிரச்சனையின்றி இருக்கிறார்கள். அதனால் நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமே..!  

  அது பற்றி நாளை பார்ப்போம்.

                                                                                                                                                                                                                                                                                  தொடரும்.


  தொடர்புடைய பதிவுகள்
  30 கருத்துகள்:

  1. தவறு செய்த நாம் தண்டனையை அடைந்தே தீரவேண்டும் நண்பரே...
   தொடர்கிறேன்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம்மை விட நமது சந்ததிகள் கொடுமையை அனுபவிப்பார்கள். தங்கள் வாரிசுகளுக்கு மாய்ந்து மாய்ந்து சொத்து சேர்பவர்கள் அவர்களுக்கு நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை.

    நீக்கு
  2. ஐயகோ.. மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோமே என்ற ஒரு வலி .அடுத்த பதிவுக்காக காத்துகொண்டு ..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தொழில் புரட்சி வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை நிறைய கெடுத்து விட்டோம். இனிமேலாவது விழித்துக் கொள்வோம். நமது சந்ததிகளுக்கு வளமான பூமியை கொடுத்து செல்வோம்.

    நீக்கு
  3. நல்லதொரு எடுத்துக்காட்டுடன் ஆரம்பம்... தொடருங்கள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிறையப் பேர் நெகட்டீவாக பேசுவதற்குத்தான் இருக்கிறார்கள். அதற்காகத்தான் அந்த உதாரணத்தை கொடுத்தேன்.

    நீக்கு
  4. நதி நீர் இணைப்புத் திட்ட்ம் வாஜ்பாய் அரசு காலத்திலேயே கிடப்பில் போடப்பட்ட விசயம். இதற்கு எதிர் நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி வாயிலாக கருத்து வெளீயிட்டது.

   நதிகள் இணைப்பு முயறிசியாக வீணாய்ப் போன திருப்பூர்,பாலாறு போன்றவைகளை இணைத்து 10 ஆண்டுகால விளைவுகளை,பருவ நிலைகளை கணிப்பு செய்யலாம். இதை செய்யா விட்டாலும் பரவாயில்லை நாறும் கூவத்தை நந்தவனமாக்குவோமென்ற பிரச்சாரங்கள் முதலில் செயல்படட்டும். பக்கத்தில் கடலை வைத்துக்கொண்டு நகரை நாற வைத்துக்கொண்டிருக்கிறோம்.

   தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்கிறோமே என பார்க்கலாம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாஜ்பாய் தீவிரமாக முயற்சி எடுத்தார். அதன்பின் வந்த காங்கிரஸ் கிடப்பில் போட்டது. மேலும் நீங்கள் திருப்பூர் நொய்யல் ஆற்றையும் பாலாறையும் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது வேண்டாம். கோதாவரியை கொண்டு வந்து பாலாற்றில் இணைப்பதாக சந்திராபாபு நாயுடு சொல்லியிருக்கிறார். பார்ப்போம். விளைவுகளையும் கணிப்புகளையும் 120 ஆண்டுகளுக்கு முன்பே இணைத்த முல்லைப் பெரியாரையும் வைகையையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

    நீக்கு
  5. தொலை நோக்கு பார்வை கொண்ட ஆட்சியாளர்கள் இல்லையே ,நதிநீர் இணைப்பு எப்படி சாத்தியம் ?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சாத்தியம் நண்பரே, இப்போது கூட ஆந்திராவும், கர்நாடகாவும் தீவிரமாக இருக்கும் அளவிற்கு தமிழ்நாடு தீவிரமாக இல்லை. இத்தனைக்கும் நமக்குதான் தண்ணீர் தேவை. தொடர் முழுவதும் படித்து விட்டு சொல்லுங்கள். முடியுமா, முடியாதா என்று.

    நீக்கு
  6. காவிரியில் நூறு தடுப்பு அணைகள் கட்டினாலே போதும். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. அரசிடம் பணம் உண்டு. நாட்டில் திறமை உண்டு. மனம் இல்லை, தானும் செய்ய திறமை இல்லாமல், செய்தவற்றை உடைத்தும் ஒழித்தும் இருக்கிறார்கள். அறிவிப்பு மட்டும் செய்து ஒன்றும் செய்வதில்லை.எப்போதும் உறக்கம்..இப்போது கிடைக்கும் உதவிகளும் அடுத்த தேர்தலுக்கு போகும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தடுப்பணைகள் மட்டும் போதாது. நிறைய மாற்றங்கள் தேவை.

    நீக்கு
  7. வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் ஏனைய நீர் மேலாண்மைக்கும் தீர்வாக அமையக்கூடிய தேசீய நீர் வழிச்சாலை திட்டம் மதுரையில் உள்ள ஒரு பொறியாளர் குழு மூத்த பொறியாளர் திரு ஏ.சி.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலினால் முழு உருப்பெற்று அரசாங்கங்களின் காதுகளுக்கும் மக்களின் செவிகளுக்கும் சென்றடைய படாத பாடு பட்டுக்கொண்டுள்ளது. மறைந்த குடியரசுத்தலைவர் திரு கலாம் அவர்களின் ஆசி பெற்ற இத்திட்டத்தினை பல்வேறு உத்திகளைக் கையாண்டு பரப்புரை செய்து ஒரு மக்கள் இயக்கமாக உருப்பெற பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது மதுரைக்காரர்களாகிய நமக்கு ஒரு பெருமையே. இந்தச் செய்தி பரவலான மக்களுக்குச் சென்றடைய நம் பதிவர் பெருமக்கள் முயற்சி செய்தால் அது அரசாங்கங்களின் காதுகளுக்கும் எட்டும் என்பது உறுதி. இது குறித்த யூடியூப் லிங்குகள் பின் வருமாறு:

   https://www.youtube.com/watch?v=1tBycYx7pqY

   https://www.youtube.com/watch?v=nlOJ-YrsyhE&spfreload=10

   https://www.youtube.com/watch?v=wQf2Gp1VZo4&spfreload=10

   படித்த மக்கள் இது குறித்து தெளிவு பெற்று இத்திட்டம் நடைமுறைக்குவர பரப்புரை செய்து அனைத்து மக்களுக்கும் சென்றடைய ஒத்துழைக்குமாறு தங்கள் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நான் இங்கு குறிப்பிடும் நீர் வழிச் சாலையும் அதுதான். தொடர்ந்து படித்து வாருங்கள்.

    நீக்கு
  8. முல்லை பெரியார் அணை என்கிற முன்னுதாரணத்துடன் கருத்துகளை கூற ஆரம்பித்துள்ளீர்கள். வரவேற்கிறேன். தொடர்கிறேன். பாராட்டுகள் நண்பரே!

   பதிலளிநீக்கு
  9. வணக்கம்

   எல்லாம் அரசியல் வாதிகள் செய்த தப்பால் நடுத்தர மக்கள் இன்று வீதியில்... நன்றாக சொல்லியுள்ளீர்கள்.த.ம 6
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  10. தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லாவிடில் சோதனையை எதிர்கொள்ளவேண்டிய சூழலே. வேதனைதான்.
   சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
   பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை அய்யா, தங்கள் பதிவையும் வாசித்தேன். அருமை அய்யா!

    நீக்கு
  11. தொழிற்புரட்சி என்று சொல்லிக் கொண்டு நாம் சுதந்திரம் பெற்றவுடன் ஐந்தாட்டுத் திட்டங்களில் காந்தியின் பொருளாதாரத்தை மறந்ததன் விளைவு எனலாம்...இப்படிப் பல நம் ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்றப்பார்வை திட்டமிடுதலில் பிறழ்வு, பொருளாதாரக் கொள்கைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்

   நல்ல பதிவு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஏனோ இயற்கையை நாம் கிள்ளுக் கீரையாக நினைத்துவிட்டோம். இயற்கை வலிமையானது என்பத்தை மீண்டும் மீண்டும் நிருபித்து கொண்டே இருக்கிறது.

    நீக்கு
  12. சகோ நான் பக்கின்காம் கனால் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதில் இந்தச் சுட்டியைக் கொடுக்கலாம் அல்லவா..உங்கள் அனுமதியுடன்....அடுத்த வாரம் வரும் அந்தக் கட்டுரை..

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தாரளமாக கொடுங்கள். தங்கள் பதிவை எதிர் நோக்குகிறேன்.

    நீக்கு
  13. இன்றுதான் இப்பதிவை படிக்க நேரம் கிடைத்தது. (இங்கு எங்கள் பக்கம் இண்டர்நெட் இணைப்பு விட்டு விட்டு கிடைப்பதுதான் காரணம்) இதன் தொடர்ச்சிக்கு செல்கிறேன்.

   பதிலளிநீக்கு
  14. வணக்கம்
   தவறுக்கு மேல் தவறு நிச்சயம் பலனை நாம் அடைய வேண்டியதுதான்...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்