Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மலிவான இந்திய சினிமா


சினிமாவையும் நம் இந்தியாவையும் பிரித்துப்பார்ப்பது கஷ்டமான காரியம். அந்த அளவிற்கு இந்தியர்களின் உணர்வோடு கலந்து நிற்கிறது இந்த கனவுத் தொழிற்சாலை. ஆனால், இங்கு தியேட்டர்களில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்றொரு புகார் உண்டு. இந்த புகார் உண்மையில்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு. 

அந்த ஆய்வின்படி, உலகிலேயே மிகக் குறைவான சினிமா கட்டணம் உள்ள நாடு இந்தியாதான். நமது இந்தியாவிற்கு அடுத்து குறைந்த சினிமா கட்டணம் உள்ள நாடு உலகின் மாபெரும் வல்லரசு நாடான அமெரிக்கா. 


இதெல்லாம் சரி, குறைந்த கட்டணம் என்று எதை வைத்து நிர்ணயிக்கிறார்கள். என்று கேட்டால். அதற்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள். அதன்படி சினிமா டிக்கெட் விலை மற்றும் அந்த நாட்டின் மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவற்றை அடிப்படையாக கொண்டு அந்த குறியீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.


அதன்படி இந்தியாவில் ஒருவர் தியேட்டரில் சென்று சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடங்கள் உழைத்தால் போதும். மற்ற எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவை பார்த்துவிட முடியாது. அந்த வகையில் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். 

இந்திய தியேட்டர்களின் சராசரி டிக்கெட் விலை இப்போதும் கூட 0.20 டாலர் என்ற கணக்கில்தான் இருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு டிக்கெட் ரூ.13.60. இந்தியாவில் ஒரு மணி நேர உழைப்பிற்கு சராசரியாக 0.70 டாலர் சம்பளமாக கிடைக்கிறது. அதாவது ரூ.47.60 வரை சம்பளம். இந்த கணக்கைக் கொண்டு தான் ஒரு படம் பார்க்க 16 நிமிடங்கள் உழைத்தால் போதும் என்கிறது அந்த ஆய்வு.


இதே விகிதப்படிப் பார்த்தால் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா வருகிறது. அங்கு ஒரு அமெரிக்கர் படம் பார்க்க 24 நிமிடங்கள் உழைக்க வேண்டும். இதுவே சீனா என்றால் 26 நிமிடங்களும், லக்சம்பர்க்கில் 28 நிமிடங்களும், அயர்லாந்தில் 30 நிமிடங்களும் உழைக்க வேண்டும். இவைகள் எல்லாம் குறைந்த சினிமா கட்டணம் கொண்ட நாடுகள். 


அதிக சினிமா கட்டணம் கொண்ட நாடுகள் என்று பார்க்கும்போது பல்கேரியா முதலில் வருகிறது. அங்கு ஒருவர் ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால் 123 நிமிடங்கள் உழைத்தாக வேண்டும். இதற்கடுத்தப்படியாக எஸ்தோனியா 118 நிமிடங்களும், தாய்லாந்து 109 நிமிடங்களும், லித்துவேனியா 106 நிமிடங்களும்,, ரஷ்யா 104 நிமிடங்களும் உழைக்க வேண்டும். 

மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்தியர்கள் சினிமா பார்க்கும் விஷயத்தில் கொடுத்து வைத்தவர்களே. இந்த ஆய்வில் ஷாப்பிங் மால்களில் ரூ.150, ரூ.300 என்று கட்டணக் கொள்ளை நடக்கும் தியேட்டர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றையும் சேர்த்திருந்தால் ஒருவேளை முடிவுகள் மாறியிருக்குமோ என்னவோ..!





13 கருத்துகள்

  1. ஆந்திராவில் வேணா மலிவா இருக்க வாய்ப்பிருக்கு. தமிழ்நாட்டில்?? நீங்க சென்னையை விட்டுவிட்டு தென் தமிழ்நாடு பக்கம் போனீங்க என்றால் கொஞ்சம் சுமாரான "ஸ்டார் வால்யு" உள்ள "ஹீரோக்கள்' பட டிக்கட் விலை ரூ 150-200 தான். கொள்ளை அடிக்கிறாங்க. ஆனால் என்ன? மக்கள் இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி திருட்டு வி சி டி யை எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மலிவு விலையில் பார்க்கிறாங்க. அந்த வகையில் பார்த்தால் சினிமா நம்ம ஊரில் மலிவுதான்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நிமிடங்கள் உழைத்தால் மலிவான படமா..??நண்பர் கூறிய படி நம்ம தமிழ் நாட்டை பொறுத்தவரை ரூ.150 முதல் 200 தான் ஐயா.இதில் மலிவான விலை வருவதை விட விலைவாசி மலிவாக இருந்தால் நல்லாருக்கும் ஐயா.

    நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல கணக்கீடு போங்க.. ம எண். விலை, காய்கறி, பருப்பு விலையெல்லாம் ஒப்பிடும்போது அரசியல்வியாதிகள் அந்த மாநிலத்தைப் பார்... இந்த மாநிலத்தைப் பார் என்பார்கள். அது போல இருக்கு!

    என்ன சொன்னாலும், தமிழ் நாட்டில் இப்போது சினிமாவுக்குச் செலவழிக்கும் காசு அதிகம்தான். இதில் சில தியேட்டர்களில் 'நீங்கள் உள்ளே இதைக் கொண்டு வரக் கூடாது, அதிக கொண்டு வரக்கூடாது' என்று கட்டுப்பாடுகளை விதித்து, அங்குள்ள அவர்களின் கடைகளிலேயே வாங்க வைப்பார்கள். அதுவுமே அதிக விலையாகத்தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஒப்பீடு. நான் இதுவரை அதிகமாக கட்டணம் நாம்தான் தருகிறோம் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. இப்படித்தான் ...சில மாதம் முன்னால்.மத்திய திட்டக் கமிஷன்..ரூபாய் 27.20 சம்பாதிப்பவர் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர் என்று உளறிக் கொட்டி ,கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தது :)

    பதிலளிநீக்கு
  6. சரியான ஆய்வு...ஆனால் நான் அரங்கினில் சினிமா பார்ப்பதை விட்டு பலகாலம் ஆச்சு... புள்ளி விவரங்களில் அத்தனை நம்பிக்கையா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  7. இந்தியர்களையும், சினிமாவையும் பிரிக்க முடியும் நண்பரே இந்திய சினிமா பைத்தியங்களுக்கு துபாய் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் விசா கொடுத்து 6 மாத வெயில் காலத்தில் வேலைக்கு விட வேண்டும் பணம் என்றால் என்ன 80 விளஙகி விடும்.
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் ஆனால் என்ன ஒருவர் இருபங்காக உழைப்பதும் மற்றொருவர் அதை எந்த உழைப்புமின்றி செலவிடுவதும் என உழைப்புக்கு மட்டும் ஊதியம் என்ற நிலை அற்ற தன்மையால் யார் உழைப்பால் யார் பயன்பெருகிறார்கள் என்பது இங்கு கேள்விக் குறி

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் ஆனால் என்ன ஒருவர் இருபங்காக உழைப்பதும் மற்றொருவர் அதை எந்த உழைப்புமின்றி செலவிடுவதும் என உழைப்புக்கு மட்டும் ஊதியம் என்ற நிலை அற்ற தன்மையால் யார் உழைப்பால் யார் பயன்பெருகிறார்கள் என்பது இங்கு கேள்விக் குறி

    பதிலளிநீக்கு

  10. தலைப்பைப் பார்த்து வேறு விதமாக நினைத்துவிட்டேன். தற்போது வணிக வளாகங்களில் உள்ள திரை அரங்குகள் வசூலிக்கும் கட்டணத்தை (கொள்ளையை) கணக்கில் எடுத்துக்கொண்டால் நீங்கள் கூறியது போல் முடிவுகள் நிச்சயம் வேறு விதமாக இருந்திருக்கும்.தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. செந்தில் நண்பரே!/சகோ.உழைப்பு எப்படி எல்லாம் வீணாகின்றது இல்லையா? உழைப்பிற்கு ஒரு வடிகால் தேவைதான். ஆனால் நம்மூரில் இப்போது அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகின்றது. தியேட்டருக்குள் எதுவும் கொண்டு வரக்கூடாது என்று குறிப்பாக வணிக வளாகங்கள் சொல்லுவதால் அவர்கள் கடையிலேயேதான் எல்லாம் வாங்க வேண்டும். இப்படியும் கொள்ளை. பகற்கொள்ளை..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை