Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கல்லூரி மாணவிகளின் கலக்கல் அப்ளிகேஷன்கள்


மொபைல் போனில் வெட்டித்தனமாக பொழுதைப் போக்குவதற்கு மட்டுமே கல்லூரி மாணவிகளுக்குத் தெரியும் என்ற மாயயை பொய்யாக்கியிருக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகள்.

தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஒவ்வொரு வருடமும் கணினி தொழிநுட்ப வளர்ச்சி சம்பந்தமாக தேசிய அளவில் போட்டி நடைபெறும். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த முறை ஐ.பி.எம். நிறுவனம் இந்த போட்டியை நடத்தியது. இந்தியாவின் பல நகரங்களில் இருந்து 108 மாணவர்கள் பங்கேற்றார்கள். மதுரையிலிருந்து 12 கல்லூரி மாணவிகள் இதில் கலந்து கொண்டார்னர்.

தற்போது பிரபலமாகிவரும் 'கிளவுட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் போனில் சாமானிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சிறந்த அப்ளிகேஷனை உருவாக்கி தரவேண்டும். இதுதான் போட்டியின் விதிமுறை.

இந்த போட்டியின் முதல் இரண்டு இடங்களை தமிழக கல்லூரி மாணவிகளே வென்றனர். அதுவும் மதுரையைச் சேர்ந்த கல்லூரிகள். முதல் பரிசை மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்.பத்மப்ரியா, என்.பி.வைஷ்ணவி வென்றனர்.

இரண்டாம் பரிசை மதுரை கல்லூரி (Madura College) மாணவிகள் எல்.கற்பகவள்ளி, பி.காயத்ரி, உமா, மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழு வென்றது.

முதல் பரிசை வென்ற ஆர்.பத்மப்ரியா, என்.பி.வைஷ்ணவி
முதல் பரிசு பெற்ற தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பத்மப்ரியவையும் வைஷ்ணவியையும் சந்தித்து அப்ளிகேஷன் குறித்து கேட்டதும், "நாங்கள் உருவாக்கிய அப்ளிகேஷனுக்கு 'ஸ்மார்ட் ஃபார்மிங் ஆப்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இது விவசாயிகளுக்கு உதவும் ஒரு அப்ளிகேஷன். இதன்மூலம் தொலை தூரத்தில் இருக்கும் தோட்டத்து பம்ப்செட்டுகளை வீட்டில் இருந்தபடியே இயக்கலாம்.

இதன் மூலம் கிணறு அல்லது போர்வெல்லில் இருக்கும் நீரின் அளவை தெரிந்து கொள்ளலாம். அங்கு வரும் மின்சாரத்தின் அளவை தெரிந்து கொள்ளலாம். வானிலை நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ப மோட்டரை இயக்கும் விதத்தில் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்தோம்.

மண்ணின் ஈரப்பதம், மழையால் தேங்கிருக்கும் நீரின் அளவையும் இதில் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். உட்கார்ந்த இடத்திலிருந்து வயலுக்கு நீர்ப் பாய்ச்சும் வேலையை செய்து முடிக்கும் எங்களின் இந்த கண்டுபிடிப்பே இந்திய அளவில் முதல் பரிசை வென்றது." பெருமையாக சொல்லி முடித்தனர், பத்மப்ரியாவும் வைஷ்ணவியும்.

 இரண்டாம் பரிசை வென்ற எல்.கற்பகவள்ளி, பி.காயத்ரி, உமா, மகாலட்சுமி
அடுத்து இரண்டாம் பரிசு பெற்ற மதுரை கல்லூரி மாணவிகள் கற்பகவல்லி, காயத்ரி, உமா, மகாலஷ்மி ஆகியோர் கொண்ட குழுவை  சந்தித்த போது, "நாங்கள்  உருவாக்கிய அப்ளிகேஷனின் பெயர் 'பார்க்கிங் ஏரியா ஆப்' இன்றைக்கு எல்லா நகரங்களிலும் வாகனங்களை பார்கிங் செய்வது மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. எங்களது அப்ளிகேஷனை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து கொண்டால் போதும் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கு வாகனங்களை பார்கிங் செய்வதற்கான இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை அடைவதற்கான ரூட் மேப் எல்லாமே வந்துவிடும்.

மேலும் ஒவ்வொரு நகரிலும் வாகனம் நிறுத்துவதற்கு தங்கள் நிலத்தை வாடகைக்கு விடத் தயாராக இருக்கும் உரிமையாளர்கள், பார்கிங்கிற்கு இடம் தேடும் வாகன உரிமையாளர்களையும் இணைக்கவும் இந்த ஆப்ஸ் பயன்படும்." என்று தற்போதைய பெரும் பிரச்சனைக்கு சுமூக தீர்வு தந்துள்ளார்கள் இந்த மாணவிகள்.

பயிற்சியாளர் மணிமாலா
இவர்களுக்கெல்லாம் பயிற்சி தந்து அவர்களை பரிசு பெரும் அளவிற்கு உயர்த்தியவர் மணிமாலா. இவரும் இவரது சகோதரர் செந்தில்குமார் ஆகிய இருவரும் இணைந்து தான் இந்த பயிற்சியை கொடுத்து வருகிறார்கள். இதில் செந்தில்குமார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து metoomentor.org என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

"இன்று ஆண்ட்ராய்ட், கூகுள், பயர் பாக்ஸ் என்று பல கணினி தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இவை எதுவுமே நமது பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப்படுவதில்லை. இந்த கருத்தை எனது அண்ணன் செந்தில்குமார் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தெரிவிக்க அவர்களும் இலவசமாக பயிற்சியளிக்க முன்வந்தார்கள். அதில் முதல் கட்டமாக மதுரை போன்ற டயர் 2 வகை நகரங்களின் கல்லூரி மாணவிகளுக்கு தொழிநுட்ப மேம்பாடு பயிற்சியை இலவசமாக கொடுக்கிறோம். 2014-ல் தான் தொடங்கினோம். தொடங்கிய ஒரு வருடத்தில் 200 மாணவிகளை தொழில் நுட்ப படைப்பாற்றல் திறன் கொண்டவர்களாக உருவாக்கியுள்ளோம்." என்று பெருமிதத்தோடு கூறுகிறார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்துவரும் மணிமாலா. இவரின் முயற்சிக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கும் நமது வாழ்த்துக்களைக் கூறி விடைப்பெற்றோம்!



15 கருத்துகள்

  1. நம்ம ஊர்ப் பெண்கள். நான்கு பெண்களுக்கும் வாழ்த்துகள். எங்கள் பாஸிட்டிவ் செய்திகளுக்கு இதைக் குறித்துக் கொள்கிறேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு பேர் இல்லை நண்பரே, மொத்தம் ஆறு பேர் முதல் பரிசு பெற்ற இருவரும் மதுரைக்காரர்கள்தான். பாசிடிவ் செய்திகளில் பகிர்வதற்கு நன்றிகள்.

      நீக்கு
  2. பாராட்டிற்கு உரியோர்
    பாராட்டுவோம்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  3. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பாராட்டுகிறோம், அம்மாணவியர்களை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகளும் வாழ்த்துகளும்
    தெரிவித்துக் கொள்கிறோம்...

    பதிலளிநீக்கு

  5. போட்டியில் வென்ற மதுரை கல்லூரி மாணவிகளுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை மணிமாலா அவர்களுக்கும், அவரது சகோதரர் செந்தில்குமார் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! இந்த தகவலை பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. எங்கள் பெரிய மலர்க்கொத்து மாணவிகளுக்கு. அட! மெஜுரா கல்லூரி...நான் படித்தக் கல்லூரி ஆயிற்றே!(துளசி)

    மாணவிகளுக்கு எங்கள் வாழ்த்துகள் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. மாணவிகளின் முயற்சிக்கும்
    பயற்சி வழங்கிய பெரியோருக்கும்
    பாராட்டும் வாழ்த்தும்
    உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  8. முதலில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாணவியருக்கும், பயிற்சியாளருக்கும் வாழ்த்துகள்!

    பெண்களுக்கெதிரான வன்முறைகளை மட்டுமே கேட்டு வந்த சூழ்நிலையில், இது போன்ற நேர்மறையான கருத்துக்களைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை